வகையுளி என்றால் என்ன(அகன்)




’வகையுளி’ என்றால் என்ன…

☆♡☆♡☆♡☆♡☆♡☆♡☆♡☆♡☆♡☆♡


இலக்கியங்களில் பேசப் படும் இலக்கணச் சொற்களில் ஒன்று ‘வகையுளி’ ஆகும்.


அஃதென்ன ‘வகையுளி….?’


#வகையுளி என்றால் என்ன என்று இன்று பார்க்கலாம்.


அதற்கு முன் குறள் வெண்பாவுக்கும், குறள் வெண்பாவின் இனமான குறள் தாழிசை(குறட்டாழிசை)க்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைக் காண்போம்.


#ஒற்றுமை:


குறள் வெண்பாவைப் போலவே முதல் அடி நான்கு சீர்களுடன் அளவடியாகவும் இரண்டாம் அடி மூன்று சீர்களாகச் சிந்தடியாகவும் பார்ப்பதற்கு குறள் வெண்பா போலவே இருக்கும்.


#வேற்றுமை:


குறள் தாழிசை குறள் வெண்பாவைப் போலன்றி முதல் அடி நான்கு சீர்களுக்கு மேலும் நெடிலடி, கழிநெடிலடியாகவும் வரும்.

இரண்டாம் அடி முதலடியை விடவும் அளவில் குறைந்த சீர்களைப் பெற்று வரும்.

குறள் வெண்பாவில் வெண்டளை மட்டுமே பயின்று வரும்.

குறள் தாழிசையில் தளை குறள் வெண்பாவைப் போலன்றி வெண்டளைச் சிதைந்தும், கலித் தளை பெற்றும், செப்பலோசைச் சிதைந்தும் வரும்.


சுருக்கமாகச் சொல்வதெனில்,


#குறள்_வெண்பாவில்_கலித்தளை_கலந்து

#செப்பலோசைச்_சிதைந்து_வருவது

#குறள்_தாழிசை(குறட்டாழிசை) எனப் படும்.

★ ★ ★ ★ ★ ★ ★


இனி கீழே படிப்போமா...?


#வகை என்றால் #வகுப்பு அல்லது #பிரிப்பு என்று பொருள்.


#உளி என்றால் #உள்ளிருப்பது அல்லது #வகை_பிரிப்பதற்கு_உதவுவது என்று பொருள்.


பாடலின் ஓசை ஒழுக்குக்காக ஒரு சொல்லை இரண்டாகப் பிரித்து முன் சீரிலும் பின் சீரிலும் சேர்ப்பது தான் ‘வகையுளி’ ஆகும்.


பாட எளிமை கருதி இங்கு குறள் வெண்பாக்களை எடுத்துக் காட்டுப் பாடல்களாகக் கொடுத்துள்ளேன்.


இவற்றைக் கூறாய்வு செய்து “வகையுளி” என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்வோம்.


முதல் குறள் - 004

- - - - - - - - - - - - - - - -

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல.


இந்தத் திருக்குறளில்

வேண்டாமை - தேமாங்காய்ச் சீர்.

இலானடி - கருவிளம் சீர்.

வேண்டாமை இலானடி - காய் முன் நிரை.

காய் முன் நிரை எனில் அது கலித் தளை ஆகும்.


இந்தக் குறள் வெண்பாவில் ஒரு கலித் தளை வருகிறது.

★ ★ ★ ★ ★ ★ ★


இரண்டாம் குறள் – 314.

- - - - - - - - - - - - - - - - - - - - -

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்.


இந்தத் திருக்குறளில்

இன்னா - தேமாச் சீர்.

செய்தாரை - தேமாங்காய்ச் சீர்.

இன்னா செய்தாரை - மா முன் நேர்.

மா முன் நேர் வந்தால் அது நேரொன்றிய ஆசிரியத் தளை ஆகும்.


ஒரு நேரொன்றிய ஆசிரியத் தளை வருகிறது.


செய்தாரை - தேமாங்காய்ச் சீர்.

ஒறுத்தல் - புளிமாச் சீர்.

செய்தாரை ஒறுத்தல் - காய் முன் நிரை.

காய் முன் நிரை எனில் கலித் தளை என்று முன்பே பார்த்தோம்.


இங்கு ஒரு கலித் தளை வருகிறது.


ஆக, இந்தக் குறள் வெண்பாவில் இரண்டு இடங்களில் தளை தட்டுகிறது.

★ ★ ★ ★ ★ ★ ★


மூன்றாவது குறள் - 339.

- - - - - - - - - - - - - - - - - - - - - -

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி

 விழிப்பது போலும் பிறப்பு.


இந்தத் திருக்குறளில்

போலும் - தேமாச் சீர்.

சாக்காடு – தேமாங்காய்ச் சீர்.

போலும் – சாக்காடு – மாமுன் நேர்.

ஒரு நேரொன்றிய ஆசிரியத் தளை வருகிறது.


சாக்காடு – தேமாங்காய்ச் சீர்.

உறங்கி – புளிமாச் சீர்.

சாக்காடு – உறங்கி – காய் முன் நிரை.

ஒரு கலித் தளை வருகிறது.


இந்தக் குறள் வெண்பாவில் இரண்டு இடங்களில் தளை தட்டுகிறது.


ஆக, இப்படியாக பல திருக்குறள்கள் ஆசிரியத் தளையுடன், கலித் தளையுடன் ''குறள் தாழிசை''யாகத் தான் அமைந்திருக்கின்றன என்றார் என் நண்பர்.

★ ★ ★ ★ ★ ★ ★


ஆஹா… இன்றைக்கு ஓர் ஆள் கிடைத்து விட்டார் என்ற மகிழ்வில் அவரை இழுத்துத் திண்ணையில் உட்கார வைத்தேன்.

★ ★ ★ ★ ★ ★ ★


நண்பரே, மரபுக் கவிதையில் #கச்சிதமாக_அசை_பிரிக்கத்_தெரிந்திருக்க_வேண்டும். அதனால், “#கற்க_கசடற” என்றேன்.


‘’அப்ப சரி, நீங்க அசைப் பிரித்துக் காட்டுங்களேன். நீங்க சொல்றதை நானும் கொஞ்சம் அசை போட்டுப் பார்க்கிறேன்…’’ என்று சொல்லி விட்டு நக்கலாகச் சிரித்தார் நண்பர்.


இப்படி ஆட்கள் தான் எனக்கு வேண்டும். அப்போது தான் நானும் கொஞ்சம் தமிழ் இலக்கணம் கற்றுக் கொள்ள முடியும்.

★ ★ ★ ★ ★ ★ ★


சரி, இந்த மூன்று திருக்குறளையும் பாருங்கள்.


வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல.


வேண்டாமை - வேண் என்ற முதல் இரண்டெழுத்துகள் வேண்டுதல் - உடன் சேர்ந்து வேண்டுதல்வேண் - கூவிளங்காய்ச் சீராகும்.


டாமை – தேமாச் சீர் ஆகும்.


வேண்டுதல்வேண் டாமை – காய் முன் நேர் – வெண்சீர் வெண்டளை ஆகும்.


இலானடி – கருவிளம் சீர் ஆகும்.


டாமை இலானடி – மா முன் நிரை – இயற்சீர் வெண்டளை ஆகும்.

★ ★ ★ ★ ★ ★ ★


அடுத்த குறளைப் பார்ப்போம்.


இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்.


செய்தாரை - செய் என்ற முதல் இரண்டெழுத்துகள் இன்னா - வுடன் சேர்ந்து இன்னாசெய் - தேமாங்காய்ச் சீராகும்.


தாரை – தேமாச் சீர்.


இன்னாசெய் தாரை – காய் முன் நேர் – வெண்சீர் வெண்டளை ஆகும்.


ஒறுத்தல் – புளிமாச் சீர்.


தாரை ஒறுத்தல் – மா முன் நிரை – இயற்சீர் வெண்டளை ஆகும்.

★ ★ ★ ★ ★ ★ ★


மூன்றாவது குறளைப் பார்ப்போம்.


உறங்கு வதுபோலும் சாக்கா(டு) உறங்கி

 விழிப்பது போலும் பிறப்பு.


உறங்குவது – வது என்ற பின் இரண்டெழுத்துகள் போலும் – உடன் சேர்ந்து வதுபோலும் – புளிமாங்காய்ச் சீராகும்.


இப்போது தளை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.


வேண் - டாமை என்றும், செய் - தாரை என்றும், ஒரு சொல் உடைந்து முன் பாதி முதல் சொல்லுடன் சேர்ந்து தனிச் சீராகிறது. உறங்கு – வது என்ற சொல் உடைந்து பின் பாதி அடுத்த சொல்லுடன் சேர்ந்து தனிச் சீராகிறது.


இப்படி, சீர் ஓசைக்காக ஒரு சொல் உடைந்து முன் பின் உள்ள சீர்களிடன் சேர்ந்து ஒலிப்பதை 'வகையுளி’ என்கிறது இலக்கணம்.


சாக்காடு – உறங்கி என்ற சீர்களில் சொற்புணர்ச்சியைப் பார்க்க வேண்டும்.

 

நிலைச் சீரில் சாக்காடு ‘டு’ குற்றியலுகரம்.


வரும் சீரில் – உறங்கி – முதல் எழுத்து உயிரெழுத்து ‘உ’


குற்றியலுகரச் சொற்புணர்ச்சிக்குப் பிறகு தான் சீர் பிரிக்க வேண்டும்.


சாக்கா – டுறங்கி என்று குற்றியலுகரப் புணர்ச்சிக்குப் பின்

சாக்கா – தேமாச் சீர் ஆகிறது.


டுறங்கி – புளிமாச் சீர் ஆகிறது.


சாக்கா - டுறங்கி – மாமுன் நிரை – இயற்சீர் வெண்டளை. வெண்பாவுக்கு உரியது.


என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ‘’எனக்குப் பசிக்கிறது நண்பரே… பிறகு வருகிறேன்’’ என்று சொல்லியபடி நடையைக் கட்டினார் நண்பர்.


வரும் போது திருக்குறளில் இருக்கும் மற்ற 'குறள் தாழிசை'களையும் கொண்டு வாருங்கள் நண்பரே…’’ என்று சத்தமாகச் சொன்னேன்.


வீதியில் போன இரண்டொருவர் என்னைத் திரும்பிப் பார்த்தனர்.


நண்பர் மட்டும் நான் சொன்னதைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.


வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு, ‘விறுவிறு’வெனத் திரும்பிப் பார்க்காமல் நடந்து என் பார்வையில் இருந்து விலகிப் போனார் அவர்.


…......................................- ‘‘அகன்'' @ அனுராதா கட்டபொம்மன்.

...........................................................................


Comments

Popular posts from this blog

விருத்தம் எழுதுவது எப்படி (இரா.மீனாட்சிசுந்தரம்)

2.ஹைக்கூ கவிதைகள் (சூழல் - இரவில் உலகம்)

16.வெண்பா இலக்கணம்(அகன்)