16.வெண்பா இலக்கணம்(அகன்)
.வெண்பா இலக்கணம் பாடம் - 16.
🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀
இருகுறள் நேரிசை வெண்பா தொடங்கி இதழகல் வெண்பா வரை 16 வகை வெண்பாக்களைப் பார்த்தோம். அடுத்ததாக காலில்லா வெண்பாவைப் பார்க்கலாம்.
★17. காலில்லா வெண்பா.
அஃதென்ன காலில்லா வெண்பா என்று தானே கேட்கிறீர்கள்….
கா, கொ, கோ, சா, சொ, சோ, தா, தொ, தோ, பா, பொ, போ, மா, மொ மோ போன்ற குறில், நெடில் எழுத்துகளில் வருகின்ற #துணைக்கால்எழுத்துஇல்லாமல் ( ா) எழுதும் வெண்பாக்களையே காலில்லா வெண்பா என்கிறோம்.
அந்த வகையில், 18 மெய்யெழுத்துகளிலும் உருவாகும் 54 எழுத்துகளை வெண்பாவில் தவிர்க்க வேண்டும்.
உ - ம்:
- - - - - -
கனியும் கனவில் கனிவினைத் தேக்கி
இனிய முகத்தினை யேந்தி - வனிதை
உனக்கென(து) அன்பினை ஒப்படைத் தேனே
மனச்சுழி வீணே மதி.
……………- ''அகன்’’ @ அனுராதா கட்டபொம்மன்.
காலில்லா எழுத்துகளால் உருவான நேரிசை வெண்பா இது.
அடுத்து, கொம்பில்லா வெண்பாவைப் பார்ப்போம்.
★18. கொம்பில்லா வெண்பா.
கெ, கே, கொ, கோ, கெள என 18 மெய்யெழுத்துகளாலும் ஆன 90 கொம்புள்ள எழுத்துகளை வெண்பாவில் தவிர்க்க வேண்டும்.
உ - ம்:
- - - - - - -
கனக்கும் மனத்தின் கதவைத் திறந்து
தினமும் குலுங்கிச் சிரிக்கும் - இனந்தான்
மனித இனமாம் மதிப்ப தறிவாய்
புனிதம் அதுதான் புதிது.
………- ‘’அகன்’’ @ அனுராதா கட்டபொம்மன்.
கொம்புள்ள எழுத்துகள் இந்த நேரிசை வெண்பாவில் வரவில்லை என்பதைக் கவனியுங்கள்.
அடுத்து, இனக் குறள் வெண்பாவைப் பார்ப்போம். இஃது அளவியல் வெண்பா அல்ல. ஐந்து குறள் வெண்பாக்களின் சேர்க்கையே ஆகும்.
★19. இனக்குறள் வெண்பா.
இது குறள் வெண்பாக்களில் ஒரு வகையாகும்.
இதை குறள் வெண்பா பகுதியில் சொல்லி இருக்க வேண்டும். விடு பட்டுப் போய் விட்டது. இங்கு சொல்லுகிறேன்.
இது கொஞ்சம் வித்தியாசமான குறள் வெண்பா ஆகும். இப்படி ஒரு வகை குறள் வெண்பா இருக்கிறது என அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த வகை குறள் வெண்பாவையும் இங்கு குறிப்பிட்டுள்ளேன்.
01. மோனை, 02. எதுகை, 03. முரண், 04. இயைபு, 05. அளபெடை என்னும் ஐந்து தொடைகளால் வரும் ஐந்து குறட் பாக்களின் தொகுப்பே, சேர்க்கையே இனக்குறள் வெண்பா எனப் படும்.
இவ்விலக்கணம் அமைய இயைபுத் தொடை அமையப் பெற்ற குறள் வெண்பாவைத் தவிர மற்ற நான்கு வெண்பாக்களிலும் இரு அடிகளின் முதற் சீரையே பார்க்க வேண்டும்.
இயைபுத் தொடை அமையப் பெற்ற வெண்பாவில் . இயைபு இரு அடிகளின் இறுதிச் சீரிலேயே அமையும் படி எழுத வேண்டும்.
19. 01. மோனைத் தொடை அமைந்த குறள் வெண்பா.
சங்கத் தமிழாய்ந்த சாந்தகுணம் கொண்டவர்கள்
சந்தம் இசைக்குமெழில் பார்.
இந்தக் குறள் வெண்பாவில், சங்கத் - சந்தம் - ‘ச - ச’ என மோனைத் தொடை அமைந்துள்ளது.
19. 02. எதுகைத் தொடை அமைந்த குறள் வெண்பா.
வெல்லும் மொழியெங்கள் வெற்றித் தமிழறிவாய்
அல்லும் பகலே(து) அதற்கு.
இந்தக் குறள் வெண்பாவில், ‘வெல்லும் - அல்லும்’ என எதுகைத் தொடை அமைந்துள்ளது.
19. 03. முரண் தொடை அமைந்த குறள் வெண்பா.
வாழும் வகையறிந்தார் வாடி நலிந்துநிலை
தாழும் பொழுதும்வாழ் வார்.
இந்தக் குறள் வெண்பாவில், ‘வாழும் X தாழும்’ என முரண் தொடை அமைந்துள்ளது.
19. 04. இயைபுத் தொடை அமைந்த குறள் வெண்பா.
மேன்மக்கள் கெட்டாலும் மேலோர் கடற்சங்கு
தான்சுடினும் வெண்மைதரும் இங்கு.
இந்தக் குறள் வெண்பாவில், ‘சங்கு - இங்கு’ என இயைபுத் தொடை அமைந்துள்ளது.
19. 05. அளபெடைத் தொடை அமைந்த குறள் வெண்பா.
நாஅதன் தாள்வாழ்க நம்பிவந்தோ ரைக்காக்கும்
ஆஅதன் வேல்வாழ்க ஆண்டு.
இந்தக் குறள் வெண்பாவில், ‘நாஅதன் - ஆஅதன்’ என நாஅ - ஆஅ என அளபெடுத்து அளபெடைத் தொடை அமைந்துள்ளது.
இப்போது இனக்குறள் வெண்பாவைத் தொகுத்து காண்போம்.
சங்கத் தமிழாய்ந்த சாந்தகுணம் கொண்டவர்கள்
சந்தம் இசைக்குமெழில் பார்.
வெல்லும் மொழியெங்கள் வெற்றித் தமிழறிவாய்
அல்லும் பகலே(து) அதற்கு.
வாழும் வகையறிந்தார் வாடி நலிந்துநிலை
தாழும் பொழுதும்வாழ் வார்.
மேன்மக்கள் கெட்டாலும் மேலோர் கடற்சங்கு
தான்சுடினும் வெண்மைதரும் இங்கு.
நாஅதன் தாள்வாழ்க நம்பிவந்தோ ரைக்காக்கும்
ஆஅதன் வேல்வாழ்க ஆண்டு.
அடுத்து, வெண்பா இலக்கணத்திலிருந்து சற்றே மாறுபட்ட சவலை வெண்பாவைக் காண்போம்.
★20. சவலை வெண்பா.
வெண்பா முதல் மூன்றடிகளில் நான்கு சீர்களும்(அளவடி), ஈற்றடியில் மூன்று சீர்களும்(சிந்தடி) பெற்று மொத்தம் 15 சீர்கள் பெற்று வரும் என்பது இலக்கணம் அல்லவா…
சவலை வெண்பா அவ்வாறில்லாமல் இரண்டாம் அடியில் ஒரு சீர் குறைந்து மூன்று சீர்கள் மட்டுமே பெற்று மொத்தம் 14 சீர்கள் மட்டுமே பெற்று வரும்.
அதாவது, இரு குறள் இணைந்து தனிச் சீரின்றி பாக்களில் பயின்று வந்தால் அது சவலை வெண்பா எனப் படும்.
உ - ம்:
- - - - - - - - -
அட்டாலும் பால்சுவையில் குன்றா(து) அளவளாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.
……………………………….மூதுரை - 04 ஆம் பாடல்.
தனிச் சீர் #பட்டழிந்து என இரண்டாம் அடியில் நான்காவது சீராகச் சேர்த்தால் இந்த வெண்பா நேரிசை வெண்பா ஆகி விடும். மூதுரையை நாம் திருத்தக் கூடாது.
அளவியல் வெண்பாவைப் பொறுத்தவரை 15 சீர்கள் அமைந்திருக்க வேண்டும். பதினைந்து சீர்களுக்குப் பதிலாக வெண்பாவில் பதினான்கு சீர்கள் பயின்றுவரின் அவ்வெண்பா சவலை வெண்பாவாகக் கருதப் படும்.
★21. மண்டில வெண்பா.
இரண்டாவது அடியில் ஒரு சீர் குறைந்து வருவது சவலை வெண்பா ஆனது போல, வெண்பா இலக்கணத் தளை பிறழாது ஈற்றடியில் நான்கு சீர்கள் வர ஈற்றுச் சீர் ‘நாள், மலர், காசு, பிறப்பு’ எனும் ஏதாவதொரு வாய்பாடில் முடியும் வெண்பா மண்டில வெண்பா என சமீபத்தில் படித்தேன்.
இந்த வெண்பாவின் நான்கு அடிகளும் அளவடிகளால் ஆனது. 16 சீர்களால் ஆனது.
இதற்கு இலக்கண நூல்களில் ஆதாரம் இல்லாத போதும் புதிதாகப் புனையப் பட்ட வெண்பாவாகக் கருதலாம். ஒருவகையில் 'நாள், மலர்' வாய்பாடுக்குப் பதிலாக ‘காசு, பிறப்பு’ எனும் வாய்பாடில் இந்தப் பாடல் நிறைவு பெற்றால் #கலி_விருத்தத்திற்கும் பொருந்தி வருவதைக் காணலாம்.
உ - ம்:
- - - - - - - -
உருவில் அறிவில் உயர்ந்தோன் முதியன்
தருவ தனைத்தும் தருமக் - குரலே
கருவில் இளையன் கவியில் இளைஞன்
திருவில் மலர்ந்தேன் தெரிந்தால் தெளிவு.
…………....- ‘‘அகன்’’ @ அனுராதா கட்டபொம்மன்.
சவலை வெண்பா, மண்டில வெண்பா இரண்டுமே புழக்கத்தில் இல்லை. இவற்றை யாரும் எழுதுவதில்லை.
Comments
Post a Comment