ஆசானை மதிப்போம் (நேரிசை வெண்பாக்கள்)

 ஆசானை மதிப்போம் - 1



1. ஆசானும் சொல்லும் அறவுரைக் கேட்டுநிதம்

நாசங்கள் செய்யாத நற்குணத்தால் - தேசத்தில்

பாசங்கள் பூத்திடவே பார்த்திருப்போம் தீஞ்செயலின்

தோசங்கள் நீக்கச்செய்த் தொண்டு.


- தங்கை பாலா ஆசினி, சேந்தன்குடி.


2. ஆசானைப் போற்றி அறிவே துணையாக 

பேசா திருந்து பெறுவாயே - கூசாது

நேசமாய் நன்னெறி நேர்மையாய்ப்  பெற்றுமே 

பாசமாய் கல்வியைக் காண்.


- பா. இந்திரன்.


3. துன்பமிகு வாழ்க்கை துடைத்திடும் நோக்கிலே

இன்பமிகு கல்விதரும் இன்முகனார் - என்றென்றும் 

தன்னலம் பேணாத தெய்வத்தைத் தாள்பணிந்தே

உன்னல் மதிக்கும் உலகு

     

- தமிழுறவன்.


4. அகர எழுத்தை அழகுடன் ஓதி 

சிகரம் தொடவே சிறப்புப் - பகர்ந்திட 

குற்றம் களையும் குருவை மதித்திடு 

சுற்றம் பெருகும் சுழன்று.

                   

 - ந. முருகன்.


5. எழுத்தறி வித்தவன் ஈசனுக் கீடாம்

பழுதிலாக் கல்வியைப் பற்றி - விழுதென

ஆசான வர்தம் அறிவுரை கேட்கநிதம் 

பேசாத வாயில்லைப் பின்பு. 


- மணி தியாகேஸ்.


6. நெஞ்சின் பழுதகற்றி நேர்மைத் திறன்களெல்லாம் 

அஞ்சா துரைப்போனே ஆசானாம் - எஞ்ஞான்றும் 

வஞ்சமிலா வாழ்வுக்கு வாட்டமின்றி வித்திடும் 

நெஞ்சரை நெஞ்சுள் நிறை.


- கவிஞர் முகிலை பாஸ்ரீ.


7. அவனியில் ஆசான் அறிவுரை யேற்றுக் 

கவனமாய் வாழ்வில் கருத்தாய்த் - தவமாய்

மதிப்போம் குருவை மனநிறை வோடு

துதிப்போம் அகம்பெறும் தூ.


- தா. தமிழ் தங்கராஜ்.


8. அறிவகலை ஏற்றும் குருவை மதிப்பாய்

நெறிகளைக் கற்பித்தே நிற்பார் - செறிவுடன்

ஏணியாய் நின்றிங்கே ஏற்றிடச் செய்வாரே

தோணியாய்க் காப்பார் தொழு.


- மு.வா.பாலாஜி.


9. அறிவைத் தருகின்ற ஆசிரியச்  சான்றோர் 

செறிவைத் திறனுடன் சேர்க்கும் - நெறியாளர் 

வாழ்வில் வணங்கியவர் வாழ்த்துகளைப் பெற்றுவிட்டால் 

தாழ்வெல்லாம் நீங்கும் தணிந்து.


- கவியழகன்.


10. அறிவார்ந்த சிந்தனையில் ஆட்படுத்தி நாளும்

செறிவாக வாழ்க்கை செழிக்க - குறியாக  

ஆசிரியர் என்னுமோர் அம்மையப்பன் வந்தாரே 

காசினியில் தெய்வந்தான் காண்.


- ஞால ரவிச்சந்திரன்.


11. அறிவின்கண் ஊற்றாய் அமர்ந்தவர்  ஆசான் 

நெறியினைத் தந்துமே நெஞ்சில் - செறிவாய்  

குருவே நமது குறைகள் களைவார்  

தருகின்ற இன்பம் தரம்.


- கோ பாலசுப்ரமணியன்.


12. எண்ணும் எழுத்தும் எமக்கே யறிவித்துக்

கண்ணா யெமையுமே காத்திடும் - எண்ணிலா

ஆசான்கள் தம்மையே அன்புடன் போற்றிடப்

பேசாமற் பெற்றிடலாம் பேறு.


- செல்வராஜா சுதாகரன்.


13. போதிக்கும் ஆசானைப் போற்றினால் வாழ்வினில்

சாதிப்போம் நாளும்நற் சாதனைகள் - மேதினியில்

வாதிட்டால் வன்மம் வளர்ந்திடு மென்பதால்

கோதில்லா கொள்கையைக் கொள்.


- கண்ணன் நடராஜன்.


14. பற்பல முன்னேற்றம் பாரினில் ஏற்பட

நற்பயன் செய்வார் நயமாக - பற்றுடன் 

ஆள்கின்ற ஆசானை ஆட்பட்டு நின்றிடின்

மீள்கின்ற மேன்மைப் பயன்.


- சரஸ்வதிராசேந்திரன்.


15. எழுத்தறி வித்தவன் என்றும் இறைவன் 

முழுவதும் வாழ்வின் முதலே - பழுத்த 

அறிவினைப் பண்பாய் பகிர்பவன் ஆசான் 

நெறியுடன் போற்று நினைந்து.


- ஆ.த. குணத்திலகம்.


16. கற்றிடல் வேண்டுமாம் கல்வியை யாண்டுமே

பெற்றிட ஆசானின் பேற்றினால் - பற்றிடப்

பற்றாய் அறிந்துமே பண்பில் தெளிவாக

முற்றாய் சிறந்து முடி.


- கோ. அருச்சுணன்.


17. வாழ்வினில் நாமும் வளமையைப் பெற்றிட 

ஊழ்வினை மாற்றி உவப்புற - வாழ்ந்திட 

ஏணிப் படியாய் இருந்திடும் ஆசானை 

மாணிக் கமாக மதி.


- மஞ்சுளா ரமேஷ்.


18. அகரம் துவங்கி அரிதாரம் ஈறாய்

ககரம் முதலாகக் கல்வி - பகவன்

அகமகிழ நாளுமே அன்பைப் பொழிந்தே

இகத்தினில் வாழ்தல் இனிது.


- கவி. செங்குட்டுவன்.


19. தன்னல மின்றியே தாரணியில்  சான்றோனாய்

உன்னலம் போற்றியும் ஊக்குவித்தே - நன்னெறி

கன்னலிடை தேன்சிந்தும் கல்வியறி வூட்டியநல்

மேன்மைகொள் ஆசானே மேல்.


- க. செல்வநேசன்.


20. அறிவைப் புகட்டிடும் ஆசான் கடவுள் 

நெறியினை நீதியை நேர்மை - மறையைக் 

குறிப்பால் உணர்த்திடும் கொள்கையின் குன்று 

மறவோம் மதிப்போம் மனத்து.


- தளவை. வில்லவன் கோதை.


21. மண்ணாய்க் கிடப்பவரை மாமனித ரென்றாக்கிக்

கண்ணாய் கருத்தாய்நற் கல்வியொடு - பண்பையும்

போதிக்கும் ஆசானைப் போற்றுவோம்  சாற்றுவோம்

மேதினியில் ஆசானே மேல்.


- மீனா கோபி.


22. எண்ணம் எழுத்தோடும் ஏற்றமுறக் கற்பித்துக்

கண்ணென மாணவரைக் காத்திடுவார் - பண்போடும்

அன்பையும் ஊட்டுகிற அற்புத ஆசானின்

இன்மு கமதே இனிது.


- எம்.ஆர். ஜெயந்தி.


23. அன்புடன் ஆசான் அறிவுரை கேட்டிட

இன்னல் களைந்திங்(கு) இனியவை -  என்றென்றும் 

நன்மை பலபெற்று நாளும் உயர்ந்தினி

என்றும் மகிழ்வாய் இனி. 


- றூபா அன்ரன்.


24. நெறியினைக் கற்பித்து நேர்வழி காட்டும்

அறிவார்ந்த சான்றோராம் ஆசான் - செறிவாய்த்

திறனுடன் கற்றறிந்து தீரமுடன் வாழ

மறவாமல் போற்றுதல் மாண்பு.


- ஓசூர் மணிமேகலை.


25. கற்றிட நன்றெனக் கல்வியைத் தந்திடும்

சிற்பிதான் ஆசானின் சேவையும் - பற்றிட

பொற்பதம் போற்றியும்நல் பைந்தமிழால் வாழ்த்திடுவேன்

சொற்பித்த பாடம் சிறந்து.


- நிறைமதி நீலமேகம், பெண்ணாடம்.


ஆசானை மதிப்போம் - 2


26. நெற்றினிலே திட்டதுபோல் நீற்றதுவாய் கொண்டிறையோ

பெற்றதுபோல் கொண்டிடுதே பற்றதுவாய் - பெற்றிட்ட

வெற்றியெல்லாம் கற்றிடுதே வெற்றிடுவே வித்திடுதே 

மற்றெதுவும் பெற்றிடுமோ மாற்று.


- இரா பாலா, சென்னை.


27. நோற்றவர்கள் பெற்றவர்கள் நோற்றதின் நற்பயனே

ஊற்றாக தோற்றமான உற்றாரே - சாற்றுகின்றேன்

நூற்பலவே கற்றவர்கள் நற்சான்றோர் கற்பிப்போர்

போற்றிடவே வெற்றிவரும் பார்.


- குயில்.மு இரசியா பேகம்.


28. அறிவை யடைய அருகி லமர்ந்து

நெறியினைக் கற்றுமே நேர்மை - செறிவில்

வறியவர்கள் மாந்தர் வழங்கி யுயர்த்தி

அறியவும் வைக்க குரு.


- பிரபு ஐயாத்துரை.


29. அறிவைத் தருமுன(து) ஆசானைப் போற்றி

திறமை அளவைத் தினமும் - அறிந்தே

உலகம் வியக்கும் உயிரென உன்னைப்

பலருமே பாராட்டப் பார்த்து.

    

- நா.பாண்டியராஜா.


30. ஞானமே போதித்து நானிலத்து வெற்றியே

ஊனமின்றிப் பெற்றேனே ஓங்கிட - மானமென 

நானும் மதித்திட ஞானமும் பெற்றிட 

வானுலகே ஆசானை வாழ்த்து.


- இரா. மீனாட்சி சுந்தரம், கோவை.


31. கற்றுத் தெரிந்தவர் கல்வியில்  செம்மலாய்ப்

பெற்றுமே வாழும்நற் பேரறிவு - கற்பித்தல்

போற்றும் பெருந்தகையின் பேராற்றல் மாணாக்கர் 

ஏற்றிட ஆசான் எரு.


- பாக்கியலட்சுமி சத்தியநாராயணன்.


32. ஆசானைப் போற்றி அனுதினம் நீயுந்தான்                                                                   

பூசனைகள் செய்து புகழ்ந்திடுக - கூசாமல்                                                                  

அன்னைதந்தை யர்க்குப்பின் னாசிகள் பெற்றிடுக                                                               

அன்னாரின் பாதம் பணிந்து.

                      

- செல்லமுத்து பெரியசாமி.


33. எழுமையும் பின்வரும் ஏற்புடை கல்வி

வழுவிலா வாழ்வில் வளமாய் - பழுதிலா

யோசித்து நீநடக்க புத்தாக்கம் செய்கின்ற

ஆசிகள் என்றென்றும் அன்பு.


- வேங்கடலட்சுமி ராமர்.           


34. அறியாமை போக்குகின்ற ஆசானைப் போற்றித் 

தெறிக்கின்ற எம்மருங்கும் தேசம் - செறியாய்ப்

பெருக்கெடுத் தூற்றாகப் பாய்கின்ற நல்ல 

பெருமையான வாழ்வைப் பெறு.


- அ. அகிலன்.


35. கற்பிக்கும் ஆசான் கடவுளைப் போன்றவர் 

பெற்றோராய் மாறி பெருமைதரும் - உற்ற 

உறவை மதித்தும் உயர்த்தியும் போற்றிச்

சிறப்பைத் தருவது சீர்.       


- மாலதி திரு.


36. நற்றமிழ்க் கற்றிடு நன்மை விளைந்திட

நற்குணம் காட்டிடு நாற்றிசை - போற்றிட

இற்றிசை எங்குமே இன்பம் பெருகிட

பொற்பாதம் தொட்டே பழகு.


- ம பழனிச்சாமி.


37. ஆசு களைந்தே அறியாமை நீக்கியே

மாசுகள் இல்லா மனங்களாக - வீசும்

பசும்பொழில் சூழுலகில் பேசுகின்ற  ஆக்கும்

விசும்பில் நலத்தால் வியந்து.

 

- கு.மலர் செல்வி.


38. குற்றங் களைந்து குணமீந்து நன்றாகச்

சுற்ற மனைத்துஞ் சுகம்பெறச் - சற்றும்

பழுதிலாக் கல்வி புகட்டுங் குருவை

வழுவாது நீயுமே வாழ்த்து.


- த.கி.ஷர்மிதன், இலங்கை.


39. கற்கக் கனிந்திடும் கல்விதான் மாந்தரும் 

பெற்றிட நின்று குருவினது - சொற்படி 

பற்றிடும் நற்பண்பால் பாதம் பணிந்துநீ 

பாரிற் சிறந்து படி. 


- விஷ்வசீதா அட்ரநாதன், சுவிற்சர்லாந்து.


40. பொதிந்தபண்பின் ஆசானைப் போற்றி மகிழ

புதிதாக்கும் சிந்தை புகுத்த - கதியாய்

மதிக்கும் உணர்வை மனத்துள் நிறைத்தே

உதிக்கின்ற ஆற்றல் உணர்.


- கா. சரவணன்.


41. மதிப்போமே ஆசானை மண்ணின் திருவைத் 

துதிப்போம் மனத்தால் துயரின் - விதிமாறும் 

உள்ளத்தில் தெய்வமாக உள்ளளவும் ஊழ்வினை

வெள்ளத்தில் போய்விடும் வென்று


- ஆனந்த் சுந்தரராமன்.


42. ஆயகலை கற்கவல்ல ஆசானைப் போற்றியே

தூய மனத்தில் துணைநிற்க - பாயும் 

செயல்கள் வழிதனில் சீரிய சிந்தை

உயர்வினைப் பெற்றே உணர்.


- இராசையா கௌரிபாலா.


43. நல்லாசான் கற்றறிந்து நல்கிடா ஞானமது

இல்லாதான் வாழ்வு இனிதாமோ - கல்லாத

மாந்தர்க்கும் சேருமோ மாண்பதுவும், நன்றெனவே

வேந்தருக்கு வேண்டுமே கல்


- சாத்தூர் கிருஷ்ணதாசன், கோவை.


44. வெறுப்பை உடைத்துக் கறுப்பை அறுத்துப்

பொறுப்பைப் புரிந்து பொருப்பாய் -  சிறப்பாய்

இரவகம் மாய்த்தே அறிவகம் கூட்டி

வரமாய் முகிழ்த்த வரம்.


- இராம.அழ. கார்த்திகேயன், மதுரை.


45. பண்பது கொண்டு பணிவாய்  உயர்ந்திட 

மண்ணதும் எங்கும் மதிப்புடன் - புண்ணாக

மாசதைக் கொண்டிடா மாநிலம் போற்றிட

ஆசானைப் போற்றியே வாழ்த்து.


- வினோ பிரகாஸ்.


46. அகரம் தொடங்கும் அறிவினைப் பெற்றே

சிகரத்தைத் தொட்டேன் சிறப்பாய் - இகத்தில்

சிறந்திட நின்றிட சிந்தை முழுதும்

மறந்திட மாட்டேன் உனை.


- கவிஞர். முத்து. பரமசிவம்.


47. ஞானமே போதித்து ஞாலமும் வென்றிட

ஊனமின்றிக் கற்றேநாம் ஓங்கிட -

வானமாய் 

ஆசு களைந்தே அறியாமை போக்கிய

ஆசானைப் போற்றியே வாழ்த்து.


- தனம் மீனாட்சிநாதன்.


48. விடியலை தந்த விளக்காக ஆசான்

கடிதாய் உரைத்துக் கவலை - நொடியில் 

மிடிமையைப் போக்கி மடிமையை நீக்கிப் 

படியாய் உயர்த்துவார் பார்த்து.


- நகுலா சிவநாதன்.


Comments

Popular posts from this blog

விருத்தம் எழுதுவது எப்படி (இரா.மீனாட்சிசுந்தரம்)

2.ஹைக்கூ கவிதைகள் (சூழல் - இரவில் உலகம்)

16.வெண்பா இலக்கணம்(அகன்)