தாய்மையைப் போற்றுவோம் (நேரிசை வெண்பாக்கள்)

 தாய்மையைப் போற்றுவோம்

(நேரிசை வெண்பாக்கள்)


1. அன்னையவள் காட்டுகின்ற அன்பிற்கே ஈடில்லை/

கண்ணைப்போல் காப்பாள் கனிவுடனே - தன்னன்பில்/

ஓய்வறியா மாதரசி உண்மை ஒளிவிளக்காம்

தாய்மையைப் போற்றுத் தணிந்து ./


- கவியழகன், திருவொற்றியூர்.


2. அன்பை விதைத்தே அறிவை வளர்க்கின்ற/

அன்னையின் தொண்டு சிறப்பாகும் - என்றும்/

அவளைநீ நெஞ்சிலே அன்புருக வேண்ட/

கவலைகள் தீர்ந்திடும் காண்./


- நா.பாண்டியராஜா, இராசசிங்கமங்கலம்.


3. அன்பினாலே உண்டான அன்னையவள் மட்டுந்தான்/

தன்னுயிரை நோக்காது தந்திடுவாள் - மன்னிப்பும்/

நல்கிடுவாள் பிள்ளைகள் நல்வழியில் வாழ்ந்திடவே/

பல்வகையில் நிற்பவளே தாய்.


- க. லட்சுமி ராம்பிரசாத், திருச்சிராப்பள்ளி.


4. தாயவளை நித்தம் தயவுடன் காத்திட /

நேயமுடன் தந்திடுவாள் நேசத்தை - மாயங்கள் /

செய்து மதிப்புறவும் செய்திடுவாள் எந்நாளும் /

உய்யும் வழியிதுவே உன்னு /


- மஞ்சுளா ரமேஷ் , காஞ்சிபுரம்.


5. தினமும் அமுதாய்த் தருபவள் அன்னை/

மனமும் கலங்கா மகிழ்வாய் - தினமே/

அருளும் துணையாய் அணைத்திட வேண்டும்/

பெருமைகள் போற்றிடப் பேறு./


- நிறைமதி நீலமேகம், பெண்ணாடம்.


6. அன்னையின் பார்வை அருள்மழை ஆனதே/

என்னயிது விந்தை இறைவனே - என்னையிந்த/

மண்ணில் உலவ மறுபிறவி பெற்றவளை/

விண்ணின்று காப்பாய் விரைந்து./


- கவிஞர் முகிலை பாஸ்ரீ.


7. அன்னை கருணையும் அன்புமான பார்வையால்/

முன்னையுயிர் ஓங்கி முனைப்பாலே - என்றென்றும் /

மண்ணுலகில் வாழ்கின்ற மாந்தர்க்கே யெல்லாமே /

விண்ணிகர் தாய்மை விளக்கு./


- அருச்சுணன் கோவிந்தராஜா.


8. உயிரினையும் தந்த உயிரேதான் ஆன/

பயிராக காத்தேநல் பாசம் - உயிராய்/

உடலாக ஈந்தே உருவம் கொடுத்த/

கடவுளை நாள்தோறும் போற்று./


- இந்திராணி தங்கவேல்.


9. தாய்மை உலகின் தனித்துவ விந்தையடா/

சேய்க்கோ அவளென்றும் செம்மலடா - தூய்மையோ/

தாய்மையின் உள்ளமெனத் தோன்றுமின்பக் கோயிலடா/

தேயுமோ தாயன்பு தான்./


- வில்லூர் பாரதி.


10. அழகிய பூவதாய் அண்டம் நிறைந்தே/

நிழலெனத் தூரத்தில் நின்றே - மழையாய்ப்/

பொழிந்த அகமதைப் போற்றியே வாழ்த்தி/

விழைந்திடவே வந்த வரம்./


- அ. சுதாமோகன்.


11. பத்துமாத பந்தத்தில் பாத்து ரசிச்சவ/

சித்தமே நானாக சீராட்டி - முத்தமே/

பட்டாகச் சேர்தணைத்துப் பாசமழை யாகிடவே/

கட்டாகச் சேர்த்துக் களி./


- வாசன் சாவி.


12. தன்னலம் இல்லாத தாய்மையின் அன்பினில்/

கன்னலாய் இன்பத்தின் காலங்கள் - என்றும்/

பயணம் இலக்கினைப் பாங்காய் அடைய/

உயர்ந்திடும் வாழ்வினில் உண்டு./


- கா.ந. கல்யாணசுந்தரம்.


13. அம்மா அடித்த அடியும் அரும்பாடம் /

சும்மா வராதிந்தச் சொர்க்கந்தான் - நம்பிடு /

தும்பைப்பூ வானவள் தூயத்தா யேயறிவாய் /

நம்மின் வரமாக நின்று./


- குயில். மு. இரசியா பேகம்.


14. பெற்றெடுக்கச் சேய்க்குப் பெருந்துன்பம் தான்தாங்கிப் /

பொற்பதத்தாள் போய்வீழ்ந்தாள் பேரிடியுள் - கற்புநெறி /

உற்றவள்தான் ஓர்மகவாய் உன்னைத்தான் ஈன்றெடுத்தாள் /

பற்றுடனே போற்றிடுவாய் தாய்./


- வில்லவன் கோதை, அண்ணாமலைப்புதூர்.


15. பட்டினியாய்த் தான்கிடந்து பாலூட்டித் தாலாட்டிக்/

கட்டி யணைத்தெமைக் கண்மணியாய் - இட்டமுடன்/

தட்டிக் கொடுக்குமெந் தாயவள் பொற்பாதந்/

தொட்டு வணங்கித் தொடங்கு./


- மணி தியாகேஸ், ஈழம்.


16. வாய்விட்டுப் போற்றியே வாழ்நாள் முழுவதும்/

தாய்மையைப் போற்றுவோம் தாங்கியே - சேய்மையின்றிச்/

சேய்நலன் காக்கின்றச் சேவக மாண்புடை/

தூய்மையைக் கும்பிட்டே தூக்கு./


- கவிஞர் தா. தமிழ் தங்கராஜ்.


17. பாசத்தைக் காட்டிப் பழமொழிகள் தான்கூறி /

நேசத்தில் நல்ல நினைவுறுத்தி - தேசத்தில்/

கண்கண்ட ஆசான் கருயேந்திக் காத்தவளாம்/

மண்ணில் அவரேதான் மாண்பு./


- தனம் மீனாட்சிநாதன்.


18. பாடிப் பரவியே பார்தனி லன்னையைக்/

கூடிப் பணிந்துமே கும்பிட்டு - நாடியே/

ஈடின்றி யென்று மிருந்துமே போற்றிடக்/

கேடின்றி வாழலாம் கேள்./


- செல்வராஜா சுதாகரன் 


19. முன்னறி தெய்வமாம் முத்தான தாயவள்

என்னையு மிவ்வுலகி லீன்றெடுத்தே - என்றுமென்

துன்பங்கள் நீக்கித் துயரங்கள் போக்கியே

அன்புடன் காப்பா ளவள்.


- ஆ.த. குணத்திலகம்.


20. கருவினில் நம்மைக் கருத்தாய்ச் சுமந்தே /

உருவம் தருவாள் உணர்வாய் - செருக்கின்றி /

வாய்மை நெறிப்படி வாழ்ந்திடும் தெய்வமாம் /

தாய்மையைப் போற்றுத் தனித்து. /


- ந. முருகன்.


21. தந்தை யவனைத் தரணித் துணையாக்கித்/

தந்திட்டாள் நம்மை தரணிக்கு - வெந்தனலில்/

வெந்திட நாம்தான் விடலாமோ அன்னையைச்/

சிந்தனைசெய் மேதினிற்கு சீர்.


- தி. இராஜபிரபா, தேனி.


22. கருவினிற் றாங்கிக் கலையாது காத்துக்/

குருதியைப் பாலாய்க் கொடுக்கும் - திருவினைத்/

தாழ்வது வின்றித் தரணியில் நன்றுற/

வாழ்வுள் ளவரையில் வாழ்த்து./


- த.கி.ஷர்மிதன், மட்டக்களப்பு.


23. கருவோடு தாங்கி கருணையில் ஓங்கி/

உருவாக்கி நின்றிடுவார் உண்மை - தருவாரே/

ஊக்கம் பெரிதென ஊன்றுகோலும் ஆவாரே/

ஆக்கம் அவரே அறி./


- மு.வா.பாலாஜி.


24. நெஞ்சகத் தூய்மையின் நேசமது தாய்மையே /

சஞ்சலத்தை மாற்றியும் சாதிக்கும் - அஞ்சுகமே/

கொஞ்சும் குழவியும் கேண்மையும் ஊக்கிடும்/

அஞ்சாமை அன்புடைத் தாய்./


- கனகசபாபதி செல்வநேசன், அல்வாய்.


25. உடலால் மெலிந்தே உணர்வால் உருகி/

திடமாய் வளர்க்கும் திருவே - கடக்கும்/

தடத்தில் பதித்த தனிமைத் துணிவால்/

மடமை யொழிந்த மலர்./


- தங்கை பாலா ஆசினி, சேந்தன்குடி.


26. தாய்மையைப் போற்றி தவிப்பினை வென்றிட/

சேய்மையும் தானென்றும் செக்கெனவே - வாய்மையுடன்/

தூய்மையின் உள்ளமெனத் தாய்மையைப் பாராட்டி/

மாய்கின்ற வேளையிலும் மாண்பு./


- ஜெயார்.


27. தூய்மை மனமுள்ள திங்களாம் தம்மனையாள்/

தாய்மையில் ஈடில்லா தாரகையாம் - காய்மகாரம்/

இல்லாத பெண்ணவளின் இல்லாண்மைக் கண்டுநாளும்/

பல்லாண்டு வாழ்கவெனப் போற்று./


- தமிழுறவன்.


28. தன்னலம் இல்லாத் தனித்துவம் பெற்றவள்/

அன்பை விதைத்தே அகிலத்தில் - இன்னல்கள்/

போக்கி இனிமை பகர்பவள் அன்னைதான்/

காக்கும் கடவுள் கருது./


- காரைக்குடி கிருஷ்ணா.


29. கருவினைத் தாங்கி கனவினை ஊட்டி/

உருவேற்றி வைத்தாள் உமையாள் - வருவாய்/

திருவாய் அறங்கள் தழைத்திடச் செய்வாய்/

தருவாய் அவளுக்குச் சான்று./


- வேங்கடலட்சுமி ராமர்.


30. ஐயிரண்டுத் திங்களோ(டு) அப்பாரம் தீராமல்/

கையிரண்டில் தாங்கிடுமென் தேவதையே - தையிருகை/

தாங்கியே உன்னிரு சீறடிப் போற்றியே/

பாங்குடன் பாடுவதே நேர்./


- முனைவர். பாரதி சிவசங்கரி.


31. தாயவள் அன்பில் தரணியை வெல்லலாம்/

சேயவள் செய்யும் செயல்களின் - மாயவளாய்த்/

தூயவள் தோன்றியும் துஞ்சும் பொழுதினில்/

தாயவள் நம்மருகே தான்./


- பாக்கியலட்சுமி சத்தியநாராயணன்.


32. புதுவுறவைத் தாரணிக்குப் புன்னகையால் தந்தே/

மதுவருந்தும் தன்கணவன் மாண்டால் - ஒதுங்கி/

குதூகலம் குன்றிக் குழவிதனைப் பாராள்/

சதுப்புயனின் சக்தி யவள்./


- முருகன் ஊர்க்காவலன்.


33. உலக உறவில் உயர்ந்தது தாய்மை/

கலப்பில்லாப் பாசம் கனியும் - நலமாய்/

வழிந்திடும் காவிரி வெள்ளமாய் கண்ணில்/

அழியாத அன்பை அளித்து./


- கண்ணன் நடராஜன்.


34. கருவில் எனைத்தாங்கிக் கண்ணாகக் காத்த/

உருவினில் உன்போலே என்னை - அருமை/

உலகத்தில் என்றனையும் ஈன்றே எடுத்தாய்/

கலகத்தில் கைவிடேன் காண்./


- சிங்கை கார்முகிலன்.


35. தன்னல மில்லாத தாயவள் தெய்வமே/

தன்னலம் பிளைக்காய் நாளுமே - உன்றனையே/

கண்ணும் கருத்துமாய்க் காப்பாள் கருணையால்/

எண்ணுக தெய்வமே என்று./


- கவிஞர். கேசவ தாஸ்.


36. அன்பாய் அணைத்திடுவாள் அன்றாடம் நம்மையே/

தன்னல மின்றியே தந்திடுவாள் - தன்னுயிரை/

என்றைக்கும் தெய்வமாய் எண்ணி வணங்குவோம்/

அன்னை வடிவமே அன்பு./


- கவிஞர். மீராஸ்ரீ.


37. அன்புகோர்த்த அன்னையே ஆன்றபெரும் தெய்வமாகி 

என்றுமே தாய்மையை ஏற்றமொடு - நன்றுடனே /

போற்றிடு பூவுலகில் பேர்புகழ் பெற்றிடுவாய், /

கற்றிடுவாய் அன்னையைக் காத்து./


- இரா. மீனாட்சி சுந்தரம்.


38. அன்பை அளித்தே அகிலத்தை ஆண்டேதான்/

இன்னல் களைந்தே இதயத்தினில் - தன்னலம்/

இன்றியே தாயாகி ஈங்கே நடமாடும்/

அன்னை கடவுளுக்கு நேர்./


- கிருஷ்ணலதா வசீகரன்.


39. குற்றங் களைந்து குறைகளும் நீங்கவே/

பெற்று வளர்க்கப் பெருமையாய் - உற்றவர்/

சுற்றங்கள் எல்லாம் சிறக்கவே கூறிட/

பற்றைத் தருவாளே தாய்./


- சோ. சுந்தரேசுவரி.


40. சித்துருவாய்க் காத்துச் சிலையெனச் சீராக்கி/

வித்தாய் நமையீன்ற வித்தகி - முத்தெனப்/

பத்துத்திங் கள்சுமந்து பத்திரமாய்ப் பாதுகாக்கும்/

இத்தாய்மை போற்றுதல் நன்று./


- ம பழனிச்சாமி.


41. தாய்மொழி யானத் தமிழினை யூட்டியே //

சேய்களைக் காத்துச் சிறப்புடன் - வாய்மை //

இணையிலா தென்றே இயம்பி வளர்த்துத் //

துணையென் றறிந்தே தொடங்கு.//


- சரஸ்வதிராசேந்திரன்.


42. அண்டம் படைத்தவனென்(று) ஆண்டவனைப் போற்றும்முன் /

பிண்டம் சுமந்தவளைப் போற்றிடு - கண்ணெதிரே /

கண்டமெய்யாய்க் கொண்ட கருணைக்கீ டில்லையறி/

அண்டகம்தாய் வைத்துச்செய் அன்பு./


- பொதியன் செல்வம், அய்யாபுரம்.


43. அன்பெனும் சொல்லின் அகராதி தாய்மையே/

பின்னு மொருதெய்வம் பூவுலகில் - அன்னையன்றி/

இன்னும் உளதோ?... இதையுணர்ந்து வாழ்ந்திடில்/

மண்ணுலகம் வாழ்த்தும் மகிழ்ந்து./


- ந. மீனாகோபி, சென்னை.


44. அன்புடன் நாளும் அழிவினில் காத்திட/

நன்மை உருகொண்டு நானிலம் - தன்னிலே/

என்றும் இனியவை எல்லோர்க்கும் சேர்த்திட்ட/

அன்னையைப் போற்றல் அழகு./


- இர. அரவிந்த் கார்த்திக், காஞ்சிபுரம்.


45. பெண்மையது கொண்ட பெருமையும் ஓங்கிட/

பண்பதை ஊட்டிப் பணிவுடன் - வெண்மையாய்/

வாய்மை உரைத்திடும் வாழ்வது வாழவே/

தாய்மையை வாழ்த்திநீ போற்று./


- வினோதாயினி ஜெகப்பிரதாஸ், சுவிற்சலாந்து.


46. அன்பிற்கே ஆரம்பம் அன்னை யவள்தானே /

அன்னை உறவுதான் ஆறுதல் - தன்னை  /

அகிலத்தை ஆளும் அதுவேதான் போதும் /

மகிமை உணர்ந்திடின் நன்று./


- இந்திரகுமார் ஜமுனாமலர், ஜெனீவா. 


47. உதிரமதை ஊட்டி உணர்வதை ஏற்றி /

மதியாய் முகத்தில் மலர்வாள் - மதியில் /

கதிரவன் நோக்கும் கமலமாய்ப் பூக்கும் /

புதிரோ புவியும் பணிந்து. //


- இரா பாலா, சென்னை.


48. அன்னை உருவத்தை ஆண்டவன் தோற்றத்தில்/

இன்முகம் ஈட்டுகின்ற ஈடில்லா - இன்பத்தால்/                              

பண்பாய் அரவணைத்துப் பாசமாய் ஊட்டுவாள்/

ஆண்டவன் போல அருள்./


- அங்கயற்கண்ணி செல்வக்குமார், சுவிற்சர்லாந்து.


49. அன்பின் மறுவடிவம் அன்னையே ஆகிடுவாள்/

தன்னையே ஈவாளே தன்மகவு - மன்னுபுகழ்/

நல்லன வெல்லாம் நலமோடு பெற்றுவாழ/

இல்லை அவளுக்கோர் ஈடு.


- செல்லமுத்து பெரியசாமி.


50. தன்னலம் இல்லாத தாய்மை உயர்ந்ததே/

மென்மையின் உள்ளமது மாண்புற - தன்னுள்/

உதித்திட்ட சேயை உயிராய் நலமாய்/

கதியாகக் காத்திடுவாள் காண்./


- இராசையா கௌரிபாலா, இலண்டன்.



51. கருவறைக் கூட்டில் கருத்தாய் சுமந்தே /                                         உருவம் பெறவும் உதிரம் - தருவாள் /                                        பருவம் கடந்தும் பரிவுடன் தாயும் /                                            அருகில் இருந்திட வாழ் ./


- கு. மலர் செல்வி, மதுரை.


52. தன்னலம் பேணாத தாயே உயிரேதான் //

மன்றினில் காத்திட மாவீரன் - என்றென்றும் //

தந்து மிளிர்ந்தாய் தரணியைக் காத்துநீயும் //

முந்தியே நின்றாய் தனித்து./


- ஐயாத்துரை. பிரபு, வேம்படி.


53. வரமென்று வந்தவளை வாழ்வில் வசந்த/

மரமொன்று தந்தவளை மண்ணில் - சருகாய்/

மதிப்போர்க்கு வாழ்விலை மங்காத் தமிழாய்த்/

துதிப்போர்க்குத் துன்பம் தொலை.//


- ஆனந்த் சுந்தரராமன், மேட்டூர்.


54. தாய்மையே தாரணியில் தன்னிக ரற்றது/

வாய்மையும் கூறிடுமே வாணாளில் - பொய்யென/

யாவரும் கூறுவரோ யாங்கனும் கண்டோமோ/

பாவலரும் போற்றுவார் பார்./


- சாத்தூர் கிருஷ்ணதாசன், கோவை.


55. தாய்மையின் அன்பு தரணியில் ஓங்கிடும் /

வாய்மை யவளது வற்றாத - தூய்மை /

பனிதனின் சாரல் பொழியும் கருணைக் /

கனிவினைக் காட்டும் கடல்./ 


- சியாமளா ரகுநாதன்.


56. பெற்ற குழந்தை பெருமைப் படவேதான் /

உற்ற முயற்சி உருவாக்கிக் - கற்றிட /

மற்ற விடயமெல் லாம்நமக்குக் கற்பித்தே/

பற்றிட வைப்பவள் பார்./


- கவி. செங்குட்டுவன்.


57. அன்பான உள்ளத்தில் அன்னையைக் கொண்டேநாம் /

பண்பை வளர்க்கின்ற பாங்கினில் - அன்பாலே /

இன்பமும் துள்ளிட தன்பாலே மெல்லமெல்ல /

அன்பைத் தருவார் அகம்./


- க. குணசேகரன்.


58. அம்மாவே என்றே அழைப்பேன் உலகினில்/

சும்மா அவளைச் சுமப்பேனே - தம்மை/

அருமருந் தாக்கிய அன்னை யவளே/

கருவினில் தாங்கியவள் காண்./


- ஏஞ்சல் சோபியா.


59. தாய்மை நிலையைப் பெறுகிற நாள்முதல்//

சேய்தன் நலமும் சிறப்புற - தூய்மை//

அறிந்தும்தன் தொப்புள் அறுபடும் முன்னர் //

நெறிவழி நிற்க நினை./


- முனைவர். இரா. வரதராசன்.


60. அன்னையின் அன்பில் அகமும் மகிழ்ந்திட//

குன்றாத அன்பால் குணத்துடன் - பன்மடங்கு //

வாய்மை கலந்தேதான் நம்வாழ்வில் ஊட்டிடும்//

தாய்மையைப் போற்றுத் தணிந்து./


- மா. பிரேமாவதி, ஊரப்பாக்கம்.


61. பொதுநலம் போற்றும் பொதுமையைக் கற்றிட /

ஒதுங்காது கல்வியில் ஒன்றாய் - அதுவாய் /

தீது கலவாத தீந்தமிழ்ப் பண்பினை/

மூதுரையாய் வீசுபவள் தாய்./


- கா. சரவணன்.


62. அன்னையாய் வந்திங் கணைத்துமிகத் தாலாட்டி/

என்னை வளர்த்தேதான் ஏற்றமுடன் - தன்னை/

வருத்தியும் தக்கவனாய் வாழ்வதற்கே என்றும்/

உருப்படவே வைத்தாய் உவந்து./


- யதன் கணேஸ்.


63. வாய்மையும் தூய்மையும் வாழ்வெனக் கொண்டிங்குத்/

தாய்மையைப் போற்றித் தொழுவீரே - நோய்மாற்றி/

வாழ்வினைப் போற்றியே வாழ்கின்ற காலத்தே/

வாழ்கவெனப் போற்றும் வரம்./


- வ. இராமதாஸ்.


64. அன்பில் நிறைந்தே அகிலமும் போற்றிட /

இன்பம் தருவார் இறைவியும் - அன்பினால்/

துன்பம் மறந்தும்தான் தன்னை வருத்தியே /

அன்பைப் பொழிவார் அகம்./


- விஷ்வசீதா அட்சரநாதன், சுவிற்சர்லாந்து.


65. கருதந்து காத்திருந்து காலம்பத் தாக /

உருதந்தே இவ்வுல கீந்து - தருமம் /

பலதந்து தன்மையாய் பேணி வளர்த்தே /

உலவவிட்ட தாய்தனைப் போற்று./


- மீ.மு. இஸ்மாயில், குளச்சல்.


Comments

Popular posts from this blog

விருத்தம் எழுதுவது எப்படி (இரா.மீனாட்சிசுந்தரம்)

2.ஹைக்கூ கவிதைகள் (சூழல் - இரவில் உலகம்)

16.வெண்பா இலக்கணம்(அகன்)