அன்பினால் ஆள்வோம் (நேரிசை வெண்பாக்கள்)
அன்பினால் ஆள்வோம்
1.வன்மங்கள் விட்டோட வாழ்வே நலமாக /
இன்பங்கள் வந்தாட இன்றேதான் - இன்னலின்றி /
நன்னெஞ்சில் என்றென்றும் நட்புகள் கொண்டாட /
அன்பினால் ஆள்வோம் அரசு./
- கவிஞர்.தா. தமிழ் தங்கராஜ்.
2. அன்பான நெஞ்சின் அழகு முகத்தினில்/
இன்னல் மறைந்திடுமாம் இவ்வுலகில் - என்றென்றும்/
மன்னுயிர் வாழ்ந்திட மாந்தர் மகிழ்ந்திட/
தன்னுயிராய்க் காண்ப தழகு./
- நிறைமதி நீலமேகம், பெண்ணாடம்.
3. இணையாய்ப் புறாக்கள் இருப்பது போலத்/
துணையுடன் வாழ்வாய்த் துணிந்தே - அணையிலா/
வெள்ளமாய் அன்பது வேகமாய் ஓடிடக் /
கொள்ளையாய் இன்பமே கொள்./
- செண்பக ஜெகதீசன்.
4. அன்றிலாய் அன்பை அனுதினம் நல்கிய/
இன்பமாய் என்றும் இணைந்திடு - வன்மமின்றி/
வாழ்க்கை வழியிலே வாழ்வாய், வசந்தமும்
வாழ்த்திடும் வந்துனை யே./
- சாத்தூர். கிருஷ்ணதாசன், கோவை.
5. விருப்புடன் செய்தல் விருந்தாகும் நன்மை /
பெருகிடச் செய்யும் பெருமை - அருகில்/
அரும்பதம் ஆனதோர் அன்பினால் ஆள்வோம்/
பெரும்பத மான தருள்./
- சரஸ்வதி ராசேந்திரன்.
6. உலகம் முழுதும் உலவும் மனிதா /
கலகம் அகற்றிடக் கற்றே - பலத்துடன் /
அன்பினால் ஆள்வோம் அகில உலகினில் /
இன்பம் பெருகும் இயம்பு. /
- ந.முருகன்.
7. துன்பம் தினந்தோறும் தூரத்தில் சென்றுவிட்டால்/
இன்பம் ஒளியாய் இருப்பதுபோல் - அன்பினால் /
வாழ்க்கையில் ஒன்றாகி வாழ்வோர்க்கு நன்மை/
உழைப்பினால் கிட்டும் உயர்வு./
- கரவையூர்.அ. அகிலன்.
8. எல்லோர் மனத்திலும் இன்புறு வார்த்தையால்/
பல்வித மாகவே பாசத்தை - நல்கிட/
எல்லையிலா வானந்தம் இப்பிறப்பி லுண்டுகாண் /
சொல்லா லணைக்கச் சுகம். /
- மணி தியாகேஸ்.
9. அன்பினால் என்றுமே ஆள்வோந் தரணியை/
அன்பினால் ஆகும் அமரநிலை - என்றதனால்/
கூடிக் களிப்போம் கொடுத்துண்டு வாழ்ந்திடுவோம்/
நாடி யவரை நயந்து./
- சி. உமாபாலன்.
10. அன்பான நெஞ்சம் அமைதியான வாழ்க்கையில் /
இன்னல் மறைத்திடும் இன்பமும் - பொன்னாகும் /
நன்மைகள் செய்திட்டால் நட்பும் வளர்ந்திடும் /
வன்மம் விலகும் உணர்./
- தஞ்சை கோ. பாலசுப்ரமணியன்.
11. அன்பேதான் மன்பதையை ஆளும் மனிதனே/
வன்முறைக்கு இச்சகத்தில் வாழ்விலை - நன்னெறி/
சிந்தையில் ஏற்றிட சீராகும் நாடிதுவும்/
குந்தகமும் வந்திடுமோ கூறு./
- கவிஞர் கேசவ தாஸ்.
12. அன்பினால் ஆள்வோம் அகிலத்தில் எஞ்ஞான்றும்/
இன்பம் கொடுத்தே இதயத்தை - வென்றேதான்/
துன்பத்தை நீக்கி துயரதைப் போக்குதல்/
நன்றாம் நலத்தினைப் பெற்று./
- ஏஞ்சல்சோபிதா.
13. அன்பினால் ஆள்வோம் அகிலம் முழுவதும்/
அன்பே உறவின் அடைக்கலமாம் - அன்புள்ளம்/
கொண்டாரின் வாழ்வும் களிப்பாகும் எந்நாளும்/
தொண்டாக அன்பைத் தொடு./
- தமிழுறவன்.
14. அன்பே அகிலத்தின் ஆதார மாகிடும்
என்பதை நீயுமே எண்ணுக - நன்றுற
அன்பு பெருகி அனைத்துஞ் சிறந்திட
இன்பம் நிறையும் இகம்.
- த.கி.ஷர்மிதன், இலங்கை.
15. பாங்குடனே நல்லுரைகள் பாரினில் கற்றுணர்ந்தே /
ஈங்கவர் துன்பநிலை ஈதொழிய - ஏங்குங்கால்/
கண்ணீர்மை நீங்கும் கருணை மொழியினால் /
உண்மையாய் வெல்வாய் உலகு./
- க. செல்வநேசன், இலங்கை.
16. அன்பால் உலகையே ஆளலாம் உண்மையாய்/
என்றும் செலுத்தினா லேற்றந்தான் - மென்மையாய்/
வாழும் முறையறிந்து வாழ்ந்திடுவோம் நன்மையாய்/
சூழு முலகிற்குச் சொல்./
- மு.வா.பாலாஜி.
17. அன்பே அகிலத்தில் ஆயுதம் ஆகிடின்/
துன்பம் அகன்றிடும் தூய்மையாம் - அன்பினால்/
இன்பமே கண்டிடும் இவ்வையகம் எந்நாளும்/
அன்பே அகத்தினை ஆள்./
- கலாராஜன்.
18. நெஞ்சினில் இன்பம் நிறைவாய் தவழவே/
வஞ்சம் மறந்துயிர் வாழ்ந்திடவே - தஞ்சமென/
உன்னிடம் வந்திடும் உண்மை உறவினை/
அன்பினால் ஆள்க அறம்./
- நா. பாண்டியராஜா.
19. அன்பே வலியதாம் ஆற்றலும் மிக்கதாம்/
தன்னல மில்லாத அன்பினால் - மன்பதையில்/
இன்பமும் கூடுமே இன்னுயிர் போற்றிட/
அன்பினால் ஆள்வோம் அறிந்து./
- ஓசூர் மணிமேகலை.
20. அன்பிலா மாந்தர் அனேகம்பேர் உள்ளதால் /
இன்னலால் சூழ்ந்ததே இப்பூமி - அன்பினால்/
தன்பலம் கூட்டுமேல் தாரணிவாழ் மக்களினம்/
இன்பத்தால் நன்கியங்கும் ஈங்கு./
- கவிஞர் முகிலை பாஸ்ரீ.
21. இல்லறம் அன்போடும் இன்பம் அமைந்திட/
நல்லறம் கொண்டே நடந்திட - நல்லோரின்/
வார்த்தைகள் கேட்டேநாம் வாழ்வில் நலம்பெற்றே/
ஊர்மெச்ச வாழ்வில் உயர்வு./
- தனம் மீனாட்சிநாதன்.
22. ஆகுமந்த இன்பமே அன்பால் உருகிட/
வேகுமந்த உச்சியில் வெந்திட - வாகுமே /
நோகுமோ யானுமே நோக்காதி ருந்திட /
பாகெனக் கண்டு பணி./
- வாசன் சாவி.
23. மண்மீது மக்கள் மகிழ்வாக வாழ்ந்திட.
கண்ணின் எதிரினில் காண்கின்ற - பெண்களை/
எண்ணத்தில் சீர்மையுடன் ஏற்றமுற வைத்திட/
விண்புகழ் எட்டும் விரைந்து./
- க. லட்சுமி ராம்பிரசாத், திருச்சிராப்பள்ளி.
24. அன்பினும் அற்புத ஆயுதம் இல்லையே/
அன்பிலார் நெஞ்சையும் ஆள்வதற்கு - அன்பினால்/
ஆகாத தேதுமில்லை அன்பெனும் ஈர்ப்பின்றி /
ஏகா துலகு சுழன்று./
- ஞால ரவிச்சந்திரன்.
25. அன்பின் இனியதோர் ஆரம்பம் புன்னகை/
அன்பே அகிலத்தின் ஆண்டவன் - என்றென்றும் /
இன்பமாய் ஒன்றை இனிக்கவே தந்திட /
என்றும் மனத்தினில் ஏற்று./
- இந்திராணிதங்கவேல்.
26. துன்பம் தொலைந்து துயரற்று வாழ்ந்திட
அன்புடன் ஆளும் அகிலத்தை - என்றுமே
இன்பம் பெருகியும் இன்னல் அழித்திட
அன்பால் அறத்தினால் ஆள்.
- கிருஷ்ணலதா வசீகரன், சுவிஸ்.
27. அறிவுரை சொல்லிடின் ஆகா தெனினும்/
மறித்திடல் செய்யாதே மாற்றாய் - நிறையே/
சிறப்பும் நிறைந்திடும் சிந்தனை ஓங்கிப்/
பிறப்பதுவும் அன்பால் புகும்./
- அ.சுதாமோகன், கோவை.
28. சாதனைகள் செய்திடவும் சண்டையின்றி வாழ்ந்திடவும்
போதனைகள் செய்திடுமன் பொன்றுகொள் - வேதனைதான்
சோதனைசெய் வேளையதில் சேர்வைக்கால் போல்வருமோர்
மாதவநட் பாகவாழ்தல் மோடு.
- பொதியன் செல்வம், அய்யாபுரம்.
29. அன்பினால் ஆள்வோமே அன்னத்தைத் தந்துமே /
அன்னையை நேசி அனைவரையும் - தன்னுறவாய் /
விண்ணில் நிலவாக வீணை இசையாக /
மண்ணுலகில் வாழ்ந்து மலர்./
- பிரபு ஐயாத்துரை.
30. இன்பமும் பொங்கிட இன்னிசை ஓங்கிட /
துன்பம் துடைத்துத் துணிந்துமே - நின்றிட /
என்னிலை வந்தும் எழுந்துமே நின்றிட/
அன்பினால் ஆள்வோம் அகல்./
- றூபா அன்ரன்.
31. வாழும் உலகிலே வண்மையைக் காட்டிடப்/
பாழும் வயிற்றின் பசிப்பிணி - வீழுமே/
வாழுமோர் உள்ளத்தில் வாழ்வாங்கு வாழுமாம்/
ஏழுலகத் தையுமாளும் அன்பு./
- ம பழனிச்சாமி.
32. அன்பே உலகினில் அன்னை வரமதாய்
என்றும் நிலையாகும் என்பேன்நான் - தன்னிலை
நின்று வளர்த்தேதான் அன்பினால் வாழ்த்திடும்
துன்பமிலா அன்பின் தொடர்.
- விஷ்வசீதா அட்சரநாதன்.
Comments
Post a Comment