மலரே மௌனமா (நேரிசை வெண்பாக்கள்)

 மலரே மௌனமா:

(நேரிசை வெண்பாக்கள்)


1. மலர்ந்தே யிருப்பினும் மாசிவன் பாதம்

கலக்க முடியாமற் காய்ந்து - நிலத்தில்

விழுந்து கிடந்திடும் வேதனை தன்னால்

அழுந்தி வருந்தும் அறி.


- செல்வராஜா சுதாகரன்.


2. வலம்புரிச் சங்கே வலவன் மகளே

மலர்வா யழகே மனத்தில் - இலகாய்

இலகட மேறி இதய மலர்ந்தாய்

அலத்தியே பேசாம லன்று.


- தமிழுறவன்.


3. மல்லிகைப் பூவும் மணமுமே வீசிடும்

நல்லிதயம் காண நலமாக - நல்கிடும்

மெல்லிய காற்றுந்தான் மேனியைத் தொட்டுமே

சொல்லிச் சுவைக்குது சொல்.


- கலா கணேசன்.


4. மலரே வருவாய் மனத்தைத் தொடுவாய்

நிலவி னொளியில் நிழலாய் - உலவும்

புலவர் வரியில் புதுமை படைப்பாய்

மலரே மலர்வாய் மலர்ந்து.


- ஜெ.வசந்தி, பளை.


5. செவ்விதழ் நீதிறந்து செப்பிடுவா யோர்வார்த்தைக்

கொவ்வைப் பழவழகாய்க் கோமகள் -  அவ்விதம்   

பவ்விய மானநடை பைங்கிளியே யென்மார்பில்

திவ்விய மாயிருக்கத் தேன்.


- மணி தியாகேஸ்.


6. எண்ணத்தில் எப்போதும் இன்பத்தைத் தந்திடுதே 

மண்மேல் முகிழ்த்த மலரதுவும் - வண்டினத்தை 

வண்ணம் பலகாட்டி வாவென் றழைத்துமே 

பண்ணிசைக்க வைக்கிற தே.


- மஞ்சுளா ரமேஷ்.


7. மலர்வாய் திருவாய் மனத்தில் மகிழ்வாய்

உலவும் குளிரில் உளமாய் - இலகாய்

உலகில் நலமாய் உயர்வாய் மலரே

புலரும் பொழுதினில் பூத்து.


- நிறைமதி நீலமேகம், பெண்ணாடம்.


8. மலரேநீ மெளனம் மணம்தான் மொழியோ

புலரும் விடியலும் பூவோ - உலகில்

இயற்கை யனைத்தும் இதமா யுணர்த்தும்

உயர்வின் மொழியை உணர்.


- ஓசூர் மணிமேகலை.


9. நாதம் இயற்றுமுன் நாமொழி  சொல்கேட்டால்

ஓதமுறு தென்றலுக்கே போதைவரும் - சீத

நிலவொளியும் சொக்கிவிழும்; நித்திலமே  காதல்

நிலவுமொழி நான்வாழச் செப்பு.


- கருமலைத் தமிழாழன்.


10. என்னவளே என்னுயிரே என்னில் கலந்தவளே

மன்னவனை மாய்ப்பதேன் மௌனத்தால் - என்னுதிரம்

நின்றொளிரும் நேயமிகு நித்திலமே நீள்மலரே 

அன்பால் அணைப்பாயே ஆண்டு.


- கவிஞர் முகிலை பாஸ்ரீ.


11. மலரே மவுனம் மனத்தினில் ஏனோ?

மலர்ந்த நினைவை மதிப்பாய்க் - கலந்து

நிலவின் ஒளியாய் நிறைவாய் அகத்தில்

நலமாய் இசைந்தென்னில் நன்கு.


- கவிஞர்.தா. தமிழ் தங்கராஜ்.


12. காதல் கணைதனையே கண்ணால் விடுத்தவளே 

மோதல் நமக்கில்லை மௌனமேன் - சாதல் 

வழியின்றி நானும் விழிக்கின்றேன் பெண்ணே 

பழியேது கண்டாய் பகர்.

                     

- ந. முருகன்.


13. வாசனை வீசியே எண்ணத்தைச் சொல்வாயே

நேசமாய் பார்த்திடு நோக்கத்தைக் - கூசாது

வீசியதால் தாக்கிடும் போக்கால் தவிக்கிறேன்

வாசிக்க வந்தேனே பேசு.


- வேங்கடலட்சுமி ராமர்.


14. எனக்குள் இருந்தே எழுந்த உயிரே

உனக்குள் வளரும் உணர்வாம் - எனக்குள்

கனவாய் தினமும் கருவாய்  மலரும்

மனத்தினைப் பூட்டுவது மேன்.

      

- நா. பாண்டியராஜா.


15. பாடுமென் வாய்மொழி பேடுகுயில் தான்சேர

வாடுமவள் நெஞ்சகத்தில் வாடையால் - கூடுகுயில்

தேகத்தைச் சீண்டிடவே தூவளைப்  போன்றதொரு

பாகமாய்  நாணியதே காண்.


- கனகசபாபதி செல்வநேசன், அல்வாய்.


16. மலர்களும் பூத்து மணமுந்தான் வீச

நிலவும் வரவும் நினைவில் - அலர்ந்து 

விழுந்து கிடந்தாலோ வேதனை கூட்டும் 

எழுந்து நடந்திட என்று.


- தஞ்சை கோ. பாலசுப்ரமணியன்.


17. அந்திமாலை நேரத்தில் ஆத்தோர  நாமுந்தான் 

சந்தித்த வேளையில் சந்தோச - செந்தமிழ்ச்

சிந்தை பரவிட செவ்வாய் திறந்துமே 

சுந்தரியே மௌனம் கலை.


- முருகன் ஊர்க்காவலன்.


18. தேனின் இருப்பினைத் தேடுகின்ற வண்டினை

மானினது ஓட்டம் மலைத்திடும் - ஞானம் 

மணமே பரப்பும் மலரும் மலர்கள்

குணமேதான் மௌனத்தைக் கூட்டு.


- பாக்கியலட்சுமி சத்தியநாராயணன்.


19. மலரது கொண்ட மணமே பரவ

நலமேதான் எங்கும் நயந்தே - குலமகளாய்

நாணமே கொண்டிடும் நாயகிதான் புன்முறுவல்

காணமல் ஏற்றுமௌனம் கொள்.


- வினோ பிரகாஸ்.


20. கண்ணுள் மணியாய் கலந்திட்ட  காரிகையே

எண்ணில் அடங்காத எண்ணங்கள் - விண்மீது

வண்ணமாய் நெஞ்சில் வளைய

வருகிறதே

மண்ணுள் புதைவேன் மலர்.


- ரேணுபாலு.


21. வண்டு வருமாம் வழிமேல் விழிவைத்து 

நின்றாள் மலரும் நெடுநாளாய் - வண்டுந்தான்

பக்கத்து பூவினில் பக்குவமாய்த் தேனுண்ண

துக்கத்தில் மூழ்கினாள் துன்பு.


- இந்திரகுமார் ஜமுனாமலர்.


22. மலரேநீ மௌனம் மலர்ந்து மகிழ்வாய்

அலரி மலரும் அழகில் - உலவும்

சிவனுக்குச் சூடும் சிவப்பு மலரே

புவனத்தில் பூத்திடும் பூ.


- அங்கயற்கண்ணி செல்வக்குமார்.


23. மலர்களின் மௌனமதில் மாலையும்  மயங்கும் 

மலர்ந்த சிரிப்பில் மகிழ்வே - புலரும் 

பொழுதில் புதுமை புகுத்தும் மனத்தில் 

விழுதாய் நலமே விளைந்து.


- சாத்தூர். கிருஷ்ணதாசன், கோவை.


24. மலரேநீ மௌனமா மாலையில் பேச

அலர்ந்திட தொல்லை அருந்தும் - பலனாய்

உலர்ந்திடும் முன்னே உரிமை மதுவும்

நலமாக சேர்ந்திட நாடு.


- குயில்.மு. இரசியா பேகம்.


25. சோலை மலரெல்லாம் சொந்தம தாகியே

காலை முதலே களிப்புடனே - வாலைக்

குமரிகள்போல் வந்தன கூட்டுச் சிரிப்பில்

குமரிநீயேன் மௌனமானாய்க் கூறு.


- செண்பக ஜெகதீசன்.


26. மலரேநீ மௌனம் மலர்ந்து மகிழ்வாய் 

தலமதைத் தேடித் தனித்தே - உலவும்                                    

கலகமும் இன்றிக் கனிவாக வாழ

விலகும் இருளும் விரைந்து.


- றூபா அன்ரன்.


27. கண்ணே கலைமானே காலைக் கதிரவனே                                                                     

பெண்ணிற் சிறந்தவளே பேரழகே - பண்பின்                                                                    

மருவு ருவேமலரே மௌனம் கலைத்தே                                                                             

ஒருவார்த்தைக் கூறிடுவாய் ஓர்ந்து.


- செல்லமுத்து பெரியசாமி.


28. மாந்தளிர் மேனியே மாரன் மழையென

ஏந்திழை உன்னிடம் எண்ணங்கள் - ஏந்தியே

நீந்தும் மனமது நீரிடை மீனென

காந்தளே காதலைச் சொல்.


- கவிஞர் கேசவ தாஸ்.


29. அருவிக் கரையோரம் அந்திமாலை  நேரம் 

பருக அதரமது பாவம் - உருகியுந்தான்  

நான்குடித்த போதினில் தேன்கொடுத்த தேகமதும் 

ஊன்போன்றே ஆன உவப்பு. 


- கவியோகி கருணாகரன். 


30. மலரேநீ மௌனமா மல்லிகை வெண்மை 

சலனந்தான் ஏனோ சகிப்பில் - நிலவில் 

இலையும் உதிர்த்தே இறக்கையும் கொண்டே

உலவுகின்ற தென்றல் உறவு.


- இராசையா கௌரிபாலா.


மலரே மௌனமா - 2



31. மலரே மவுனமா மென்மையாய்ப் பேசி(டு)

உலராத வார்த்தை உதிர்க்க - நிலமே

அதிரட்டும் உன்மொழி ஆழமாய்ப் போக

புதியதாய்ச் சொற்சிலம்பம் பூட்டு.


- மு.வா‌. பாலாஜி.


32. அந்திப் பொழுதில் அவளைநான்  தேடிட

வந்தனம் செய்தே வரவேற்ற - நந்தவனம்

சாந்துடைய பொட்டழகி சந்தனம் பூசிய 

மாந்தரிவள் மௌனமாய் மாண்பு.

   

- கு. மலர் செல்வி.


33. மலரது பேச மனமே மகிழ

கலக்கமும் வேண்டாம் கனியும் - உலர

பலரும் வருவாரே பாசமாய் வாழ

பலவாய்ப் பிறந்திடவே பார்.


- இரா.கி. இராமகிருஷ்ணன்.


34. காலைக் கதிரோனின் கண்கள் திறக்கவும்

மாலை வரையும் மலர்ந்தும்தான் -

சோலையில்

வாலைக் குமரியொடு கூடிக் களித்திட

வேலை தனிலே வியப்பு.


- அன்ரேன் றோமன்.


35. மரத்தினிற் பூக்கா மலரே அழகே

பிரமன் படைத்த பிணையே - மரகதமே

மெல்லிதழ் மூடி மொழியா திருப்பதேன்?

பல்லவியே மென்சொற் பகர்.


- த.கி. ஷர்மிதன்.


36. பெண்களின் கூந்தலுக்குப் பேரெழில் தந்திடும் 

கண்ணைக் கவர்ந்திடும் காட்சியாம் - மண்ணில் 

இறைவன் திருமுடியில் என்றும் உனக்குக் 

குறைகள் இருக்குமா கூறு.


- ஆ.த. குணத்திலகம். 


37. மாதுறவு நெஞ்சம் மகிழ்வோடு தந்தவளும்

மாதுறவு தந்தே மறைந்திட்டாள் - யாதுறவும்

மாதுறவால் தீதுறவாய் மண்ணுலகில் ஆனதிங்கே

மாதுறவு வேண்டாம் மனம்.


- புதுவைத் தமிழ்நெஞ்சம்.


38. செந்நிற மேனி செழுமை மிகையெனச்

சுந்தர தாய்மொழியைச் சூழ்நிலையால் - அந்தமிலா 

உந்துகின்ற கண்ணால் உவகை பொழிந்துமே 

வந்தனை செய்வாயா சொல்.


- பிரபு ஐயாத்துரை.


39. நீரூற்றிக் காத்தனன் நீண்டநாள்

பூங்கொடியை

வேரிற்று வீழ்ந்திடாது வாஞ்சையுடன் - நேருற்றுச் 

சீருற்றுச் செம்மையாய்ச் சார்ந்திட்டும்   பூத்திடாது 

மாறுற்ற மௌனமும் ஏன்?.


- வில்லவன் கோதை.


40. விழியாலே பேசி விருப்பத்தைக் காட்டும்

அழியாத காதலில் அன்னம் - விழியோர

அன்பும் விளங்குதே அங்கத்தில் ஏனிந்தப்

புன்னகை சிந்தினாய் பூ.


- தங்கை பாலா ஆசினி, சேந்தன்குடி.


41. காலைப் பொழுதினில் காற்றாய் மலர்ந்திடச்

சோலை தனிலுன் சுகவாசம் - சோலையில் 

மாலை அணிந்தவர் மார்பும் நெகிழ்ந்திட

ஆலையில் மௌனமாய் ஆய்ந்து.


- பழனியாண்டி கனகராஜா.


42. என்னவளே என்னுயிரே எந்நாளும் என்னுள்ளில்

இன்பத்தின் ஊற்றாய் இருப்பவளே - உன்னை

புலரும் பொழுதெல்லாம் போற்றும் எனக்கும்

மலரே மவுனம்ஏன் மா.


- கவியழகன்.


43. மகத்துவம் பெற்றிட்ட மானிட ரெல்லாம்

அகத்துள்ளே உள்ளார் அடங்கி - இகத்தில்

நிலவிடும் சூழலோ நிதமும் கலையும்

மலரேஉன் மௌனத்தை மாற்று.


- முனைவர்.கா. இரசகுமாரன்.

 

44. இதழ்கள் விரித்தே இதமளித்த பூவின் 

வதனத்தைக் காட்டியே வாட்ட - எதனால் 

மதமாய்க் களிறாய் மயங்கிக் கிடக்க

பதமாகச் சொல்வாய் பதில்.


- நா. அருண் பிரசாத், திருச்சி.


45. சித்திரமே எந்தனின் சிந்தையாய் நிற்பவளே

நித்திலமே எந்தன் நினைவெலாம் - முத்தாய்ப்

பதிந்தவளே என்பால் பரிவுடனே ஆசை

யுதித்திடக் காதலைக் கூறு.


- கவிஞர். கேசவ தாஸ்.


46. உள்ளோடும் எண்ணம் உரைக்காமல் போகாதே 

கள்வடியும் பூக்கள் கதவடைத்தால் - துள்ளிவரும்

சில்வண்டு வாடுமே சிந்திப்பாய் என்னவளே

நல்வாக்கை இன்றேனும் நல்கு.


- மீனா கோபி.


47. நந்தவன பூக்கள் நறுமணத்தைக் கொண்டுநிதம் 

வந்தவள் என்னுடைய வஞ்சியாய் - சந்தனம் 

சிந்திட மௌனமே பூவாய் 

மிளிர்ந்திட்ட 

அந்தளமாய் வெட்கம் அணி.


- தமிழூராள் அனுஷ்திக்கா.


48. கங்கை நதியாய் கடவுளாய் காக்கிறாய்

மங்கை மனத்தில் மவுனமேன் - நங்கையே

துங்கை நதியாய் தொடர்ந்தே அளித்திடும்

தங்கை தளராது தா.


- கண்ணன் நடராஜன்.


49. வண்ண மலரே வருந்தாதே வீணிலே

எண்ணமே நீயடி என்னவளே - கண்ணாலே

சொல்லடி காதலைச் சோகம் விலகிடும் 

இல்லறம் சீராம் இனிது.


- எம்.ஐ.எம். அஷ்ரப்.


50. மலரே மனத்தால் மரணத் துளியின் 

அலராத காலையின்பை அள்ளி - உலவும்

நிலவுந்தான் தந்திட்ட நித்தியத் தீபம் 

உலராத உள்ளத்தின் ஊற்று.


- நகுலா சிவநாதன்.


52. காலைப் பனிகூட காதலில் வீழ்ந்ததோ

வாலைக் குமரியுன் வாசனையால் - வேலையில் 

மாலைப் பொழுதுகள் மாசிலாப்  பாங்கினில் 

சோலை மலரெனது சொத்து.


- இந்திராணிதங்கவேல்.


53. அன்பும் இனித்தும் ஒருமித்தும் ஈருயிர் 

பன்முக நெஞ்சம் பகிர்ந்திட - இன்பம் 

பலவாகி, துன்பமே பின்னிய ஊடல் 

மலரேநீ மௌனமா சொல்.


- இரா மீனாட்சி சுந்தரம், கோவை.


54. நாடு வளம்பெறும் நன்னெய் தரும்பூவால்

வீடு மணமேற்கும் வெண்பூவால் - ஆடுமலர்

கூடுமந்த வண்டுகள் மௌனம் கலைத்திடும்

ஏடும் உரைக்குமதன் இன்பு.


- கலாராஜன்.


55. ஒட்டிய தொற்றினை ஓட்டி விரட்டியே

கொட்டிய செந்தேள் மருண்டுனை - விட்டிட

ஈட்டிய தேட்டையும் வெண்டிரை வீழுமுன்

வாட்டிய மௌனம் உடை.


- இராம.அழ. கார்த்திகேயன், மதுரை.


56. மலரேநீ உன்றனின் மௌனம் தொடர்ந்தால்

பலவீனம் கொள்ளுமே பெண்மை - பலமாய்

எழுந்திட பாய்ந்திட என்று முமக்கு

விழுந்திடுமே வெற்றியின் வித்து.


- வ. இராமதாஸ், திண்டிவனம்.

   

    




Comments

Popular posts from this blog

விருத்தம் எழுதுவது எப்படி (இரா.மீனாட்சிசுந்தரம்)

2.ஹைக்கூ கவிதைகள் (சூழல் - இரவில் உலகம்)

16.வெண்பா இலக்கணம்(அகன்)