கவிகளில் பூப்போம் (நேரிசை வெண்பாக்கள்)
கவிகளில் பூப்போம்
(நேரிசை வெண்பாக்கள்)
1. விடுதலை தந்திடும் வீறுடைய மாந்தர்
தொடுத்திடும் ஆய்தம்தாம் நம்மின் - அடுத்த
கெடுதல் அழித்திட கொள்கையை ஏந்தி
எடுக்க விரைந்து எழு.
- புதுவைத் தமிழ்நெஞ்சன்
2. புதுப்பூ வெழில்தான் புனைவோம் கவிதான்
மதுவினைக் கொண்ட மலர்தான் - புதுமுகம்
நாங்கள் மரபில் நனிதமிழ்ப் பாட்டெழுதி
பாங்காய்ப் படிக்கும் பதிவு.
- தனராஜ் பாப்பணன், கோவை.
3. சிந்தையில் தோன்றும் சிறந்தக் கருத்துதனை
விந்தை எனவே விளம்பு - கந்தையில்
உள்ளம் சிதைந்தே உலவும் மனத்திலே
கள்ளம் இருக்குமோ காண்.
- ந. முருகன்.
4. கன்னித் தமிழைக் கவினுறக் கற்றிட
என்றும் புனைவோம் இனிமையாய் – கன்னலின்
இன்பம் கவிகளில் ஏற்றிடக் காவியம்
மன்றினில் பூத்திடு மே.
- மஞ்சுளா ரமேஷ்.
5. புவியில் புலமை புகழாய்த் திகழ
சிவிகையில் நாளும் சிறப்பாய் − கவியால்
கவினுற இன்பம் கவிஞர் தழுவ
கவிகளில் பூப்போம் களித்து.
- தா. தமிழ் தங்கராஜ்.
6. நேரத்தை வீணாக்கி நிம்மதியைத் தூரமாக்கி
பாரஞ் சுமக்காதே பாடியும் - தாரணியில்
நற்றமிழ்ப் பாக்களை நன்றா யியற்றியே
கற்கத் தருவோம் கவி.
- எம்.ஆர். ஜெயந்தி.
7. கன்னி மனமும் கவியாகப் பூத்திட
மின்னல்தான் எம்மருங்கும் மின்னவே - கன்னலாய்
காதல் கலந்திடும் காமந்தான் கொண்டிட
மோதலும் இல்லாக் கவி.
- வினோ பிரகாஸ்.
8. உள்ளத்துச் சிந்தனையை ஒப்பிலாத் தாய்மொழியில்
துள்ளிடும் உன்னெழுத்தில் தோரணமாய் - அள்ளிவரக்
கொள்ளைகொள்ளு மென்னுள்ளம் கோடியின்பம் தான்காணும்
கள்ளிலும் பாலுண்டு காண்.
- மணி தியாகேஸ்.
9. பல்வண்ணப் பூவாம் புனைந்த புதுக்கவிதை
நல்வண்ணம் தீட்டிட நல்கிய - வல்லதொரு
கல்வண்ணச் சிற்பம் கலைமிளிரும் நாட்டியம்
பல்கிக் கமழ்ந்திடும் பார்.
- இரா மீனாட்சி சுந்தரம், கோவை.
10. அதிசயப் பாட்டில் அமைந்தது யாவும்
துதிபட உள்ள பதிவு - அதிலே
விதிகள் அமைத்து வழிமுறை காட்டி
பதிவுற நிற்கும் தமிழ்.
- சரஸ்வதிராசேந்திரன்.
11. செற்ற லுடனே செழுமையும் கூடிடவே
பொற்புடன் இன்னிசைத்து பொற்குடம் - ஊற்றிடுவோம்
நற்றமிழ்க் காவியங்கள் நாவினிலே முத்தெடுக்க
கற்றுத்தான் பூத்திடுவோம் காண்.
- ஜெ. வசந்தி, பளை.
12. உள்ளக் கிடக்கையை உண்மையாய்ச் சொல்லிடும்
துள்ளும் மனத்தை அழகழகா(ய்) - அள்ளும்
கவியினில் பூக்க மொழியினை ஊற்றுப்
புவியை எழுத்தால் புனை.
- மு.வா.பாலாஜி.
13. காலங்கள் உள்ளவரை காத்திடுவோம் முத்தமிழைக்
காலக் கவிதைகள் கற்பிப்போம் - ஞாலத்தில்
பாவங்கள் நீக்கியே பரவசம் கொள்ளவே
ஆவலாய் கற்றுக்கொள் நன்று.
- ம. பழனிச்சாமி.
14. ஆண்மயிலாம் தூவலின் ஆசையும் கூடிடவே
பெண்மயிலாம் காகிதமும் பெற்றெடுத்தாள் - தண்ணீரில்
தண்டுயர்ந்து மொட்டவிழும் தாமரையாய் என்னுள்ளே
எண்ணத்தில் பூத்திடுமே எண்ணு.
- தமிழுறவன், கருவூர்.
15. அகிலங்கள் போற்ற அனைவர் விரும்ப
மகிமைகள் பெற்று மகத்தாய் - மகிழ்வாய்
உலகில் கவிகொடுப்போம் உண்மை நிலைக்க
நலன்கள் நினைத்திடா நன்று.
- பிரபு ஐயாத்துரை.
16. வண்ண மலராக வார்த்தைத் தொடுத்திட்டேன்
எண்ணிடும் கற்பனையில் என்றென்றும் - திண்ணமாய்
கண்ணின் இமையாய் கவிதை வடித்திட்டேன்
மண்ணின் பெருமை மலர்ந்து.
- கோ. பாலசுப்ரமணியன்.
17. தமிழே அழகாம் தழுவிட நன்றாம்
அமிழ்தே இனிதாம் அறிவாய் - தமிழை
மனமே உருகி மகிழ்ந்திட நாளும்
தினமுந்தான் போற்றி மகிழ்.!
- நிறைமதி நீலமேகம், பெண்ணாடம்.
18. பூக்கள் விரிந்து புலரும் புதினமாய்
பாக்கள் தரமாய்ப் புனைந்திட - நோக்கமாய்
வாக்கில் அமைப்பதற்கு வாய்மை தகிப்பதற்(கு)
ஆக்கம் அணியாய் அமைத்து.
- குயில்மு இரசியா பேகம்.
19. இயற்கை யழித்திட்டே இவ்வுலகம் எங்கும்
செயற்கைகள் சேர்ந்திடச் செய்தால் - வயல்கள்
பயக்குமோ பாரெங்கும் பன்மலர் பூத்துத்
தயங்கா தளிக்குமோ தார்.
- கண்ணன் நடராஜன்.
20. கொங்கும் மலரும் குவளை இரவது
தங்கிட நீரும் துளியாகும் - மங்கா
விடியல் எழும்பும் வடியல் தொடங்கும்
வடிநீர் மறைவாய் விரை.
- இரா.பாலா, சென்னை.
21. காலம் கடக்குமுன் காவியம் யாத்திடு
ஞாலம் வளைத்திடும் ஞாயிறென - பாலம்
புதியதை வார்த்திடு பூபாளம் பாடு
நதியினில் நீரென நீ.
- வேங்கடலட்சுமி ராமர்.
22. உள்ளத்து நல்இருப்பை உள்ளபடி தானுரைத்துத்
தெள்ளத் தெளிந்தும்தான் தேமதுர - கள்ளமில்லாப்
பிள்ளைத் தமிழோடு பாடுகவி யாத்திட
பள்ளி எழுந்தன புள்.
- கனகசபாபதி செல்வநேசன், அல்வாய்.
23. பாவில் பலதைப் படித்தநன் மாந்தர்கள்
நாவினில் சந்தமும் நாளுந்தான் - தாவிடவே
தூவிய பாக்கள் தொடராகக் கற்றேதான்
தாமினிச் செப்புவோம் தான்.
- வதிரி சி. ரவீந்திரன்.
24. பாக்கள் தொடுத்தேதான் பாதை அமைத்திடுவோம்
பூக்களாய் நாளும்நாம் பூமியில் - பூக்கும்
கருத்தில் உருவாய் கருவை வடிப்போம்
தருவோமே நாளும் சிறந்து.
- கவிஞர் முத்து. பரமசிவம்.
25. தமிழை வளர்த்திடுவோம் தாரணி போற்றிட
சேமித்துக் காத்திடுவோம் சேர்ந்தே - குமிழ்போல்
அமிழ்தாய் பருகி அகிலம் பரப்ப
கமிழும் மனதைக் கவர்ந்து.
- இரா.கி. இராமகிருஷ்ணன்.
26. கவிமலர் பூத்துக் கடிமணஞ் சூழ்ந்து
செவிகளி லின்பமே சேரப் - புவியிற்
குவிந்துளச் சொற்களைக் கூட்டி எடுத்துக்
கவிகள் படைப்போமே காண்.
- செல்வராஜா சுதாகரன்.
27. வெண்பா எழுதும் விதியை அறிந்திட
நண்பா தினமும்நீ நூலினைப் - பண்புடன்
கண்டு நயமும் கவர்ந்து தெளிந்திட
செண்டாய் கவியைச் செதுக்கு.
- நா. மூதூரான்.
28. தமிழ்மொழி எம்மவர் தாய்மொழி யன்றோ
அமிழ்தாய் இனியதாம் அஃதே - துமியும்
பிறமொழிக ளில்லாது பேரும் தமிழில்
கறந்திடுவோ மென்றும் கவி.
- ஆ.த. குணத்திலகம்.
29. நற்றமிழ்த் தாய்மொழியால் நாவாரப் பாடியும்
முற்றமிழால் மூவுலகும் முத்தாய்ப்பாய் - கற்றிட்ட
பெற்ற அறிவாலே பேறுகள் பெற்றும்தான்
சுற்றம் சிறந்திட பூத்து.
- நகுலா சிவநாதன்.
30. பள்ளியில் கற்ற பொருளினை ஏற்றிடுவோம்
தெள்ளிய நீதி தெளித்திட - உள்ளத்தில்
அள்ளும் கருவை அமுதாக ஊட்டவே
வள்ளியோன் வந்தால் வரம்.
- த யாசகன்.
31. எதுகையும் மோனையும் எண்ணத்தில் ஏற்றி
புதுமையும் கற்பனையும் பூத்துத் - ததும்ப
புவிதனைக் காப்போம் புகழ்தனைச் சேர்ப்போம்
கவிகளில் பூப்போம் களி.
- பொன்னம்பலவாணன்
32. பாரதி நல்கிய பாக்கள் தமிழினில்
பாரினில் பாட்டனின் பாடலாம் - சீரிளமை
பாக்கள் வடித்தே பசுமை நினைவினை
பூக்கும் கவிதையாய் பூ.
- இந்திராணிதங்கவேல்.
33. கற்பனை பூக்க கவிதைகள் ஊற்றெடுக்கும்
விற்பனை செய்ய விலைபேச - கற்றிட்ட
சொற்பனை கொண்டுநாம் சொற்கள் கொடுத்திடுவோம்
அற்பனும் பற்றிடுவா னாங்கு.
- ரேணு பாலு.
34. கருவை அளித்துக் கவிதை இயற்றித்
திருவை அடைய தினமும் - குருவாக
நின்றுதுணை செய்ய நடுவரை வேண்டுகின்றேன்
என்றும் கவிதை எனக்கு.
- தனம் மீனாட்சிநாதன்.
35. சிந்தையிலே தோன்றிடும் சிந்தனையைச் செம்மையாக்கி செந்தமிழ்ப் பாக்களாய்ச் செய்குவோம் – முந்தையோர் கற்பித்த நல்ல கருத்துகளைச் சொல்லிடுவோம் கற்பனை கொஞ்சம் கலந்து.
- செல்லமுத்து பெரியசாமி.
36. நெற்றிக்கண் கண்டும் நிலைதவறி வீழ்ந்திடாமல்
பற்றுடன் நக்கீரன் பாதுகாத்த - பொற்றமிழில்
பாவாய் இசைக்கும் பாவலனின் வாய்மொழிக்கு
காவலனும் காட்டுவான் கண்.
- அலியார்.
37. கவிமலர் சேர்த்துக் கவினுற நாளுங்
கவியாரம் நற்றமிழிற் கட்டிப் - புவியிற்
பழுதற மக்களும் பண்புடன் வாழ
வழுவில்லாத் தூக்கு வழங்கு.
- த.கி.ஷர்மிதன்.
38. மழலை மொழியில் மயங்கும் மனத்தில்
குழலும் இனிதெனக் கூறல் - அழகோ
கழலணி தெய்வ கவியில் மகிழ்ந்து
பழந்தமிழ்ப் பண்பினைப் பார்.
- ஆனந்த் சுந்தரராமன்.
39. கவிதைகளின் இன்பம் கருத்தால் மொழிதல்
செவிகளின் இன்பந்தான் செப்பும் - கவிதனில்
உண்மையே எங்கும் உயர்வாக நிற்கவே
உண்டாக்கும் பாவில் உலகு.
- க. விஜயபாஸ்கர்.
40. செந்தமிழ்ச் சீரருவி சிந்தை நிறைந்திட
செந்நிற சோலை செழிப்புற - அந்தமிலாச்
சந்தங்கள் ஓங்கி சரித்திரம் கண்டிட
சொந்தமாய் பாக்களின் சொத்து.
- விஷ்வசீதா அட்சரநாதன்.
Comments
Post a Comment