ஆண்டவனைத் தொழுவோம் (நேரிசை வெண்பாக்கள்)
(நேரிசை வெண்பாக்கள்)
1. அன்பே உலகத்தின் ஆண்டவன் என்பதை /
அன்றே உரைத்தனர் ஆன்றோர்கள் - நன்றிதை /
இன்றே உணர்வாய் இனிதாக வாழ்ந்திட /
நன்றே நடந்திடும் நம்பு./
- முகிலை பாஸ்ரீ.
2. உயிரும் உறவும் உலகில் உயர்வு /
பயிரும் கதிரும் உறவாம் -உயிராம் /
இயற்கை சிறக்க இனிமேல் செழிக்க /
இயல்பாய்த் தொழுவாய் இறை./
- பொன்னம்பலவாணன்.
3. மறையு மவலம் மலரு மருளும்/
குறையு மகன்று குருடும் - நிறைந்த/
பழுதும் பணியும் பகடும் பெருகும்/
வழுவா திறையை வழுத்து./
- த.கி.ஷர்மிதன்.
4. இடர்கள் களைந்திங்(கு) கினியவை மல்கத்/
தொடரும் பிணியினித் தொல்லை - கடந்து/
தடங்கள் பதிக்கத் தரணி செழிக்க/
சுடரா லணைத்திடு தொற்று./
- மணி தியாகேஸ், இலங்கை.
5. முருகா மருகா முழுமுதற் தேவா/
வருவாய் தருவாய் வளமும் -அருள்வாய்/
கருணை புரிவாய் கலியுக மைந்தா/
இருளைக் களைவாய் விரைந்து./
- காரைக்குடி கிருஷ்ணா.
6. அலைகடல் மேலே அமர்ந்த இறையே/
கலைமகள் நீயே கருத்தாய் - கலையே/
விலையது பேசிடா வித்தையைக் கற்றேன்/
சிலையும் வடித்து சிற./
- வாசன் சாவி.
7. அன்பேதான் தெய்வம் அருள்கின்ற தாயேநீ /
இன்றேநாம் போற்றி இதயத்தில் - பொன்போலே/
நன்றேநாம் செய்ய நலமிகு நன்மையை/
என்றும் எழிலான ஏற்று ./
- நகுலா சிவநாதன்.
8. நீண்ட அறிவுடையான் நெஞ்சில் மறந்திடாது/
வேண்டி வழிபடுவோம் வீழ்ந்துமே - ஆண்டுமே/
மாண்டுமே போயினும் மண்ணில் நிலைத்திருக்க/
யாண்டுமே ஈகையும் செய்./
- வில்லவன் கோதை, அண்ணாமலைப்புதூர்.
9. அழித்திடுவாய் நுண்ணுயிரை ஆண்டவனே மண்ணில்/
விழிகளை வாட்டும் வினையின் - அழிவும்/
மறைந்திட வேண்டும் மனிதனி லின்றே/
இறைவா அருள்வாய் இரங்கு./
- ஜெ.வசந்தி, இலங்கை.
10. மண்ணில் கொரோனா மடிந்ததுப் போகவும்/
எண்ணிடும் எண்ணங்கள் ஏற்றமாகி − பண்ணியப்/
புண்ணியம் கூவில் புலரத் தொழுவோமே/
ஆண்டவனை நாளும் அணைத்து./
- தா. தமிழ் தங்கராஜ்.
11. தொல்லை கொடுக்கின்ற தொற்றினைப் போக்கியும்/
அல்லவை நீங்க அகமகிழ்ந்தும் - நல்வாழ்வை/
எல்லோரும் பெற்று யதார்த்தம் நிலைக்குமாற/
இல்லம் தொழுவோம் இயைந்து./
- மாலதி திரு.
12. அண்டமெல்லாம் காட்சிதரும் ஆலகண்ட ஈசனே/
கண்டத்தில் தாங்கியெமைக் காத்திடும் - நண்பனே/
உண்டவிடம் தானோங்கி ஊணுடம்பு சோருமுன்/
பிண்டத்தில் நீக்கு பிணி./
- பழனியாண்டி கனகராஜா, இலங்கை.
13. ஆண்டவனைக் கைதொழவே அன்னியமா யாகிடுமே/
வேண்டுவோம் இன்பம் விரைவாக - காண்போம்நாம்/
சேர்ந்து புகழுந்தான் சேர்ந்திடு முன்வாழ்வில்/
ஓர்ந்து தினம்நீ ஒழுகு./
- செல்லமுத்து பெரியசாமி.
14. மண்ணில் உயிர்களும் மாய கொரோனாவால்/
எண்ணில்லா மக்களின் ஏற்றமிகு - எண்ணத்தால்/
ஆண்டவனின் நற்கிருபை அன்பும் கிடைத்திட/
வேண்டுவோம் போற்றும் வியந்து./
- பரமராஜ்.
15. கூற்றும் குணமும் குறையாத நன்மைகள்/
போற்றும் மனிதம் பொலிந்திட - தூற்றாத/
மாற்றம் எழுந்தே மனத்தில் புகுந்திட/
ஏற்றந்தான் காண எழு./
- மாதனூர் ஜெயராமன்.
16. நெஞ்சு கொதிக்கிறது நேர்வருவாய் அம்பிகையே/
அஞ்சுகிறோம் தொற்றை அடக்கியாள் - மிஞ்சிடும்/
நஞ்சாய்ப் பரவாமல் நற்றுணையாய் நின்றிடுவாய்/
தஞ்சமருள் தாயே சரண்./
- சரஸ்வதி ராசேந்திரன்.
17. தீயாய்ப் பரவுகின்ற தீநுண்மி நோயது/
போயகல வென்றும் பொறுப்புடன் - ஓயாது/
ஆண்டவன் தன்னை அனுதினமும் போற்றியே/
மாண்பைப் பெறுவோம் மகிழ்ந்து./
- செல்வராஜா சுதாகரன்.
18. தொற்றுநோயும் நாளும் தொடரும் மனிதனில்/
பற்றுதனைக் கொண்டு பரப்புதே - இற்றைக்குப்/
பெற்ற மனத்தில் பெருகுதே துன்பமுந்தான்/
கற்றவரும் காணலையே காண்./
- கோ. பாலசுப்பிரமணியன்.
19. இன்னல் உலகத்தில் இன்றியும் வாழ்ந்திட/
அன்பே உருவான ஆண்டவனை - நன்றென/
இன்றே தொழுவாய் இனிதாகப் போற்றியும்/
நன்றே பெருகிடும் நன்று./
- நிறைமதி நீலமேகம், பெண்ணாடம்.
20. உலகத்தை யிப்போ துலுக்கும் கொரோனா/
இலகுவி லெம்மைவிட் டேகா - புலமே/
கலங்காதே யென்றுமெமைக் காத்திட வேண்டி/
நலமோ டிறைவனை நாடு./
- த. குணத்திலகம்.
21. கன்னல் மொழியான கன்னித் தமிழினால்/
சன்னல் வழியாக தென்னீசன் - என்றென்றும்/
மின்னலாய் தோன்றி மறைகின்றான் போற்றியே/
நன்னெறி வாழ்வினை நாடு./
- சாக்கை.பொன்னழகு.
22. ஆண்டவனை வேண்டிநாம் ஆலயம் சென்றுந்தான்/
நீண்டதொரு இன்ப நிலையினைத் - தூண்ட/
துலங்கு மொளியினில் தூய மறையும்/
இலங்கு மருளின் இறை./
- கலா கணேசன்.
23. மருந்தில்லா நோயாலே மக்க ளவதி/
அருள்வாயே ஆண்டவனே அச்சம் - கருதி/
திருநாமத் தைத்தேடி திக்கெட்டும் நாடி/
திருநாட்டில் நாங்கள் தவிப்பு./
- பி.ச.கோபால்குமார்.
24. துன்பம் விலகி தொலைந்து மறையவே/
இன்பம் பெருகி இனிதுவாழ - என்றும்/
இழிவான எண்ணமது இல்லாமல் போக/
வழிதேடி ஆண்டவனை வேண்டு./
- ந.முருகன்.
25. தெய்வம் தொழுதிட தேனாகும் நம்வாழ்வும்/
உய்த்திடும் நல்வரம் ஊக்கத்தை - எய்திட/
மாசற்ற உள்ளத்தை மாண்புடன் தந்திடும்/
நேசமாய் வாழ்ந்திடுவோம் நேர்ந்து./
- மஞ்சுளா ரமேஷ்.
26. ஆண்டவனை வேண்டுவோம் அண்டத்தைக் காக்கவே/
மாண்டது போதும் மனிதர்கள் - யாண்டுமினிக்/
காண்பவர் எல்லோரும் காப்பாற்ற வேண்டும்நாம்/
தோண்டும் சவக்குழியைத் தாண்டு./
- பிரபு ஐயாத்துரை.
27. தினங்கள் மறந்திட தீண்டல் துறந்தோம்/
மனத்தில் தயக்கமும் மாற - இனமாய்/
இணக்கம் இழந்தும் இறையை மறந்தோம்/
கணக்கினைத் தீர்க்கவே காண்./
- திருமலை கேஷிஹன்.
28. நெஞ்சம் முழுதும் நிறைத்த இறைவனே/
வஞ்சியே பாட விரைந்துவா - துஞ்சாது/
பஞ்சமும் நோயும் பறந்திட வேண்டினோம்/
தஞ்சம் தருவாய் திரு./
- மு. இரசியா பேகம்.
29. காண்பவை எல்லாமும் கானலாய் மாறிட/
ஆண்டவன் எங்கும் அகத்தினில் - மாண்புடன்/
பெண்மையும் என்றும் பெருமைதான் கொண்டிட/
பண்போடு வேண்டித் தொழு./
- வினோ பிரகாஸ்.
30. புற்றீச லாகவே பல்கிப் பெருகிட/
கற்றீசன் தன்னைக் கனிந்துநாம் - நற்றீசன்/
நற்சேவை நல்கிட நற்தவம் நாடிட/
பற்றற்ற ஈசனைப் பற்று./
- இரா மீனாட்சி சுந்தரம்.
31. இன்னலைக் கண்டே இடிந்த இதயமோ/
தன்னிலை தன்னால் தவித்திட - அன்பினால்/
கன்னல் மொழியால் கரைந்து தொழுதிட/
நன்னிலை நல்குமே நாள்./
- ஆனந்த் சுந்தரராமன்.
32. ஆண்டவனை அன்புடன் அன்றாடம் வாழ்த்தியே/
மாண்டவரை போற்றிடு மாண்புடன் - நீண்ட/
நிலவுலகில் நீள்நேரம் நின்றவன் காக்க/
குலமுந்தான் கிட்டலையே கூறு./
- கண்ணன் நடராஜன்
33. அன்பே அகிலத்தை ஆளும் அறிவாக/
பன்முறை பண்பும் பகிர்ந்திட - என்றும்/
மனமும் மகிழும் மலரும் தெளிவாய்/
கனமேனும் ஆண்டவனைக் காண்./
- மகேஸ்வரி கிருஷ்ணசாமி.
34. மண்ணிலே வாழும் மனிதரே கேட்டிடுவாய்/
விண்ணிலே தேடினால் வீணாகும் - மண்ணிலே/
கண்முன் உதவும் கடவுளைக் கண்டிடுவாய்/
கண்டுடனே கூப்பிடுவாய் காப்பு./
- தமிழுறவன்.
35. தீக்கிருமி பாரெங்கும் தீண்டிய கோரமிது/
காக்க வருவாய் கனிவுடன் - ஏக்கமுடன்/
வேண்டு முயிர்களின் வேதனை கேளாயோ/
ஆண்டவனே வந்துநீ ஆற்று./
- ஓசூர் மணிமேகலை.
36. அகந்தை உணர்வா லனைத்தையும் வீழ்த்தி/
முகத்தை மறைத்து முடங்கி - அகத்தில்/
அடைபட்(டு) உழலுமெமை அன்பாய் பொறுத்தே/
விடைகொடு நோய்க்கு விரைந்து./
- எம்.ஆர். ஜெயந்தி.
37. மனிதத்தைப் போற்றும் மனிதம் வளர்ப்பாய்/
புனிதம் இதுவெனல் பொய்யே - கனிந்து/
மனிதத்தைப் போற்றுவோர் மாண்புகள் வாழ்த்தி(டு)/
இனிய மனத்துடன் இன்று./
- வெங்கடாசலம் இராமசாமி.
38. நல்லவை நிம்மதியை நாளும் பெருக்கிடவே
அல்லலும் நீங்கிட அன்புள்ளம் - தொல்லுலகில்
தொல்லை யடங்கித் தொடர்ந்திட வாராயோ
வல்ல இறையேநீ வந்து.
- அன்ரன் றோமன்.
39. உள்ள முருகி உளமார வேண்டுகிறோம்/
கொள்ளைக் கொரோனாவைக் கொன்றழிக்க - துள்ளும்/
மகிழ்ச்சி நிறையட்டும் மண்ணில் நமக்கு/
சகிக்காமல் ஆண்டவனைச் சாற்று./
- மு.வா.பாலாஜி.
40. ஆண்டின்று சார்வாரி ஆனந்தச் சித்திரையில்/
ஆண்டவன் பாத அடியினை - வேண்டுவோம்/
நீண்ட புகழும் நிலைத்திட காலமும்/
தூண்டவே தெய்வம் துணை./
- யதன் கணேஸ்.
41. இன்பமாய் நாளும் இறையடி சேர்ந்திட/
துன்பம் அழிந்திடும் தூய்மையும் - நின்றிடும்/
என்றும் இனிப்பாய் இறைவனை நாடிட/
அன்பும் பெருகும் அழகு./
- இர. அரவிந்த் கார்த்திக்.
42. தொழுதல் ஒருவர்க்குத் தொல்லை விரட்டும்/
அழுகை மனத்தி லமைதி - பழுதிலா/
வாழ்வினுக் கென்றும் வளம்கூட்டும்; ஆதலினால்/
தாழ்விலா தோங்கும் தலை./
- தனராஜ் பாப்பணன்
43. மண்ணுலகில் வாழ்ந்து மடியும் உயிரெல்லாம்/
விண்ணுலகம் சேரும் விரைந்தேதான் - வண்ணமாகப்/
பண்ணில் உருகிநாம் பாடக் கழல்பணிந்து/
கண்ணில் இறையினைக் காண்./
- த.யாசகன்.
......நன்றி....
Comments
Post a Comment