விருத்தம் எழுதுவது எப்படி (இரா.மீனாட்சிசுந்தரம்)

 

விருத்தம்  எழுதுவது  எப்படி?

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

இவ்வினாவிற்கான  விடை,  இந்த கொரோனா   காலத்திற்கு முன் எனக்குத் தெரியாத  இரகசியமே!

ஏப்ரல்  2020க்குப்  பின்தான்  இன்தமிழ்க்  கவிதைகள்  எழுத ஆரம்பித்தேன்.

முதன் முதலில்  #கவியுலகப்_பூஞ்சோலை  குழுமம்தான்  என்னை  புதுக்கவிதையில் அறிமுகப்படுத்தியது.

இப்பொழுது  மரபுக் கவிதைகள்   ( #நேரிசை_வெண்பாக்கள்,   #இன்னிசை_வெண்பாக்கள், முதலியன)  எழுத  முழுமுதற்  காரணமும்   #பூஞ்சோலை_குழுமம்தான்  என்றால்  மிகையாகாது.


#விருத்தம்  எழுத ஆரம்பித்ததும்  பூஞ்சோலை  குழுமத்தில்தான்.


நிற்க, விருத்தம் என்னும் மரபுக் கவிதை  எழுதத்  தமிழார்வம்  உந்துதல்  அளித்தது.


யாப்பிலக்கணம்  கற்பது சுலபமே! 


தமிழின் மரபுக் கவிதைகள் ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, மற்றும் வஞ்சிப்பா தமிழுக்கு மிகஉயரிய மதிப்பை கொடுக்கின்றன, - மற்ற உலக மொழிகளுடன் சீர்தூக்கிப் பார்க்கையில்!


யாப்பில் முக்கியமானது: 

4 + 4 வாய்பாடு தான்!

தேமா, புளிமா, கூவிளம் மற்றும் கருவிளம் முதல் நான்கு: இவை நான்கும் ஈரசைச்சீரில் (இரு பாகமாகப் பிரியும் ஒரு சொல்லில்) மட்டுமே வரும்.

இரண்டாம் நான்கு காய்ச்சீர்கள் நான்கு, - தேமாங்காய், புளிமாங்காய்,  கூவிளங்காய் மற்றும் கருவிளங்காய் சீர்கள், - இவை மூவசைச் சீரில் (ஒரு சொல்லை மூன்று பாகமாகப் பிரிக்கலாம், - இதையே ஆங்கிலத்தில் "சிலபுள்" - Syllable என்கிறார்கள்) மட்டுமே வரும்.


மேற்குறிப்பிட்ட சீர்களையே சுருக்கமாக மாச்சீர்கள் இரண்டு, விளச்சீர்கள் இரண்டு, காய்ச்சீர்கள் நான்கு எனக் குறிப்பிடுகிறோம்.


எத்தனையோ வாய்பாடுகள் நாம் சிறுவயதில் மனனம் செய்திருக்கிறோம், - ஆனால் இந்த யாப்பு வாய்பாடு மிகமிகக் குறைவே: (மொத்த வாய்பாடும் இவ்வளவே:  எட்டேஎட்டுயாப்புவாய்பாடுகள்தான்!!! ):


1. நேர் நேர்   = தேமா

2. நிரை நேர் = புளிமா

3. நேர் நிரை = கூவிளம்

4. நிரை நிரை = கருவிளம்

இவை நான்கும் ஈரசைச் சீர்களில் மட்டுமே வரும்.


1. நேர் நேர் நேர் = தேமாங்காய்

2. நிரை நேர் நேர் = புளிமாங்காய்

3. நேர் நிரை நேர் = கூவிளங்காய்

4. நிரை நிரை நேர் = கருவிளங்காய்

இவை நான்குமே, காய்ச்சீர்கள், - இவை நான்கும் மூவசைச் சீர்களில் மட்டுமே வரும்!

இந்த 8 வாய்பாடும் தெரிந்தால் #விருத்தம்_எழுதிவிடலாம்!!! 

(ஆனால் வெண்பாவோ பிற மரபுப் பாக்களோ எழுத #தளைகள்_தெரிவது_அவசியம் ). ஆனால் விருத்தம் எழுத ஆரம்பத்தில் தளைகளைப் பார்க்கத் தேவையில்லை.


நேர்நிரை என்பது கணிணி மொழிக்கான "பைனரி"க்கு சமமானது, - அதாவது நேர் என்பது 0 எனவும், நிரை என்பது 1 எனவும் எண்ணிப் புரிந்து கொண்டால் விருத்தம் எழுதுவது மிகமிகச் சுலபமே!!! 

கணிணியின் பைனரியில் (பைனரி என்பது இரண்டு விதமான குறியீடுகள் என்பதைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்) "01, 10, 01, 11, 00, என இரகசிய குறியீடுகள் உள்ளன என்பது கணிணி படித்த  அனைவருக்கும் தெரியும். அதேபோல் "நேர் என்பது என்ன என்றும், நிரை என்பது என்ன என்றும்" தெரிந்து கொண்டால் போதுமானது, - நீங்கள் விருத்தம் எழுத ஆரம்பிக்கலாம், - நான் இங்கு சான்றாகக் கொடுத்துள்ள எடுத்துக்காட்டுகளைப் பார்த்துப் புரிந்து கொண்டால் போதும்.


ஆமாம், நேர் என்பதையும் நிரை என்பதையும் உங்களைப் படித்துக் கொள்ளச் சொன்னால், உங்களுக்கு நேரம் கிடைக்காது என நான் அறிவேன்; அதனால் இங்கேயே அதைப் பற்றியும் கூறி  விடுகிறேன்:


ஒரு சொல்லை (சீர்) இரண்டாகப் பிரிக்க முடிந்தால் அது ஈரசைச்சீர் எனப்படும்.

உ-ம்: பந்து = பந்+து (நேர், நேர்) (தேமா) ; 

கரும்பு = கரும்+பு (நிரை நேர்) (புளிமா)

மாமனார்= மா + மனார் (நேர்+நிரை) (கூவிளம்);

மருமகன் = மரு+மகன் (நிரை நிரை) (கருவிளம்)


ஒரு சொல்லை மூன்றாகப் பிரிக்க முடிந்தால் அது மூவசைச்சீர் எனப்படும். 

உ-ம்: 

கண்ணாம்பாள்= கண்+ணாம்+பாள் (நேர் நேர் நேர்) (தேமாங்காய்)

வருகின்றான் = வரு +கின் +றான் (நிரை நேர் நேர்) (புளிமாங்காய்)

பூமியின்தாய்= பூ+மியின்+தாய் = (நேர்,நிரை, நேர்) (கூவிளங்காய்)

சிவபெருமான்= சிவ+பெரு+மான் (நிரை நிரை நேர்) (கருவிளங்காய்)

எனமூன்றாக (யாப்பில்) பிரியும்.


இது ஒவ்வொன்றும்ஓர்அசை. இப்பொழுதுநேரசை மற்றும்நிரையசையைப்பார்ப்போம்:


நேர்அசை: 

தனிக் குறில் அல்லது தனிக் குறிலுடன் ஒற்றெழுத்து (தனிக் குறிலுடன் மெய்யெழுத்து) அல்லது தனிநெடில் அல்லது தனிநெடிலுடன் ஒற்றெழுத்து. இவை அனைத்தும் நேர் அசையே!


நிரை அசை: 

இருகுறில் (இணைகுறில்), அல்லது இருகுறிலுடன் ஒற்றெழுத்து அல்லது ஒரு குறில் ஒரு நெடில் இணைந்து வருவது அல்லது ஒரு குறில் ஒரு நெடிலுடன் ஒற்றெழுத்து, இவை ஒவ்வொன்றும் நிரை அசை என்பதாகும்.


உ-ம்: மேலேகூறிய   “பந்து” எனும் சொல்லில் வரும் 

பந் + து, - இதில் “பந்” என்பது நேர் அசை; 

“து” என்பதும் நேரசை. எனவே “பந்து”  எனும் சொல் , - “நேர்+நேர்” என்றாகி “தேமா” ஆகிறது.

தருமம் = தரு+மம்: இச்சொல் “நிரை+நேர்” என்றாகி “புளிமா” ஆகிறது.

தாகமும்: தா+கமும் எனப் பிரிந்து “நேர் +நிரை” என்றாகி, வாய்பாடு மூலம் “கூவிளம்” ஆகிறது.

வதந்திகள் = வதந் + திகள் எனப் பிரிந்து “நிரை + நிரை”  என்றாகி, வாய்பாடு மூலம் “கருவிளம்” என்று ஆகிறது.


இவ்வளவுதான் நீங்கள் கற்க வேண்டியது: 

இப்பொழுது நேரடியாக கற்பனை வளத்துடன் (தமிழில் நிறைய சொற் கோவைகளை, -பல வகையான தமிழ்ச் சொற்களை) சேர்த்து உங்கள் விரல் நுனியில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.


இப்பொழுது நீங்கள் தாராளமாக விருத்தம் எழுத ஆரம்பிக்கலாம்.


நான் கீழே குறிப்பிட்டுள்ள விருத்த வாய்பாடுகளையும் சான்றாகக் கொடுத்துள்ள “விருத்தப் பாக்களையும்” ஒரு முறைக்குப் பலமுறை. #விளம்_மா_காய் முதலிய வாய்பாடு சரியாக உள்ளனவா என சரி பார்த்தால் உங்களுக்கு எளிதாக விளங்கிவிடும்.


இப்பொழுது நாம் மரபுக் கவிதைகள் குறித்த சிறு குறிப்புக்குப் பின் விருத்தம் கவிதைகளை சான்றுடன் பார்ப்போம்:


மரபுப் பாக்கள் குறித்த சிறுகுறிப்பு:

மரபுக் கவிதைகளான ஆசிரியப்பா,   வெண்பா,  கலிப்பா, மற்றும் வஞ்சிப்பா இவை அனைத்திலும் மாச்சீர்களும் விளஞ்சீர்களும் காய்ச்சீர்களும் வருவதல்லாமல், -ஒரு முக்கியமான கட்டுப்பாடு தீவிரமாய்க் கடைப்பிடிக்கப் படுகிறது, - அதுதான் #தளைஎன்பது. 

தளை சரியாக இல்லாமல், மேற்குறிப்பிட்ட மரபுப் பாக்கள் எழுத இயலாது.

“ஆசிரியத்தளை”  (ஆசிரியப்பாவிற்கே உரித்தானது), இயற்சீர்  வெண்டளை மற்றும் வெண்சீர் வெண்டளை (வெண்பாவிற்கே உரித்தானது), கலித் தளை (கலிப் பாவிற்கே உரித்தானது), வஞ்சித் தளை (வஞ்சிப் பாவிற்கே உரித்தானது) என யாப்பிலக்கணக் கோட்பாடுகள் தமிழுக்கே ஓர் உயரிய பெருமிதத்தை அளித்துள்ளன!!!

இப்பொழுது விருத்தம் குறித்துப் பார்ப்போம்:


இந்தத் தளைகள் பற்றி நீங்கள்  #விருத்தத்தில் கவலையுற வேண்டாம், - அவ்வளவே!!! 


இந்த சந்த ஒழுங்கு (வாய்பாடு) கடைப் பிடித்தால் போதுமானது; 

இனி யாரும்  #தளை தட்டுது  எனச் சொல்ல மாட்டார்கள் அல்லவா!


இப்பொழுது நாம் விருத்தப் பாடல்கள் பாடுவது எப்படி, - அதாவது இயற்றுவது எப்படி எனப் பார்ப்போம், வாருங்கள்!


விருத்தங்களில் பலவகைகள் உண்டு. அதில் முக்கியமானது #ஆசிரிய_விருத்தம். அதுபற்றிப் பார்ப்போம்:


ஆசிரிய விருத்தம்  என்பது  தமிழின்  பாவகைகளுள் ஒன்றான ஆசிரியப்பாவின் இனங்களில் ஒன்று. 


இது அளவொத்த நான்கடிகளில் அமையும். ஒவ்வொரு அடியும் அறுசீர் முதல் பல சீர்கள் கொண்டுஅமையும். ஒவ்வொரு விருத்தத்திலும் ஓரேஎதுகை (ஒருவிகற்பம்) கொண்டுவர வேண்டும்.

 மோனை சிறப்பாக வெளித் தெரியுமாறு அடிகள் இரண்டாக மடக்கி எழுதப்படும்.


எடுத்துக்காட்டு:

(அறுசீர் விருத்தம் எனில் ஒவ்வொரு அடியிலும் 1-ம் மற்றும் 4-ம் சீரின் முதலெழுத்து மோனை பெற்று வர வேண்டும்.)


(விளம் மா தேமா, விளம் மா தேமா)

சந்த ஒழுங்கு (வாய்பாடு):


இதந்தரு மனையின் நீங்கி

 … ...  இடர்மிகு சிறைப்பட் டாலும்


பதந்திரு இரண்டும் மாறிப்

 … ... பழிமிகுந் திடருற் றாலும்


விதந்தரு கோடி இன்னல்

 … ... விளைந்தெனை அழித்திட் டாலும்


சுதந்தர தேவி நின்னைத்

 .. ...  தொழுதிடல் மறக்கி லேனே!


- சுப்ரமண்ய பாரதியார் (சுதந்திரதேவியின் துதி)


ஆசிரிய விருத்தத்தின் இலக்கணம்:


நான்கு #கழிநெடிலடிகளால் (5க்கு மேற்பட்ட சீர்கள் கொண்ட அடிகளைக் கழிநெடிலடி என்பர்) ஆகி, நான்கடியும் அளவொத்து வருவது #ஆசிரிய_விருத்தம். (யாப்பெருங்கலக் காரிகை - 30)


நான்கடியும் ஒரே எதுகை அமைப்பைப் பெற்றிருக்க வேண்டும்.

நான்கடியும் ஒரே வகையான சந்த ஒழுங்கைப் (வாய்பாடு) பெற்றிருக்க வேண்டும். அதாவது முதலாம் அடி‘விளம் மா தேமா விளம் மா தேமா’எனும் சீர் அமைப்பைப் பெற்றிருந்தால் எஞ்சிய மூன்றடிகளும் அதே விதமான சீர் அமைப்பையே பெற்று வரவேண்டும். இதுவே சந்த ஒழுங்கு எனப்படுவது.

கழிநெடிலடிகள் என்பதனால் ஓர் அடியில் ஆறுசீர்களும் ஆறுக்கு மேற்பட்ட எத்தனை சீர்களும் வரலாம். ஆயினும் ஓர் அடியில் எட்டுச்சீர் வரை வருவது சிறப்பான ஆசிரிய விருத்தம் எனவும்,அதற்கு மேல் வருவன சிறப்பில்லாதவை எனவும் கூறுவர்.

வகைகள்:

சீர்கள் எண்ணிக்கையைப் பொறுத்து அறுசீர் விருத்தம், எழுசீர் விருத்தம், எண்சீர் விருத்தம், பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் எனப் பலவகைப்படும்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்:

அறுசீர் அடிகள் நான்கும் ஒரே எதுகைஅமைப்பில் வருவது.

 முதலடியின் சந்த ஒழுங்கு (வாய்பாடு) ஏனைய அடிகளிலும் வரும்.

 சந்த ஒழுங்குகள் பலவகையாக அமையும். 

அவற்றுள் குறிப்பிடத்தக்கவை மூன்று. அவை,

விளம் மா தேமா விளம் மா தேமா

மா மா காய் மா மா காய்

காய் காய் காய் காய் மா தேமா

என்பன. 

சில இடங்களில் மாங்காய்ச்சீர் வரும்.


சான்று:


 (விளம் மா தேமா, விளம் மா தேமா)


போற்றிடும் மொழியின் மேன்மை

… … பொன்றிடா அழகே சேர்க்கும்! 


தேற்றிடும் வளமே நன்றாய்

… … திகட்டிடும் இனிப்பே வார்க்கும்!


ஏற்றிடும் களிப்பின் வித்தே!

… … எங்குமே மகிழ்ச்சி கோர்க்கும்! 


ஊற்றிடும் ஓடை நீராய், 

… … உவந்துமே தமிழாய் ஈர்க்கும்!  



நனிதமிழ் மங்கை மையல், 

… … நவில்ந்திடும் தமிழால் வாழும்! 


பனித்துளி மொட்டும் ஓடும்!

… … பைந்தமிழ் அமிழ்தாய்ப் பூக்கும்!


புனிதமும் மெச்சு முய்வு!

… … போற்றிடும் அன்னை பாசம்! 


இனிமையாம் தமிழில்  கற்றல்!

… … இன்னுயிர் சிறக்க வாழ்க!



- இரா. மீனாட்சிசுந்தரம்


மேற்காட்டிய அறுசீர் ஆசிரிய விருத்தம், “விளம்மா தேமா, விளம் மா தேமா” எனும் சந்த ஒழுங்கை எல்லா அடிகளிலும் கொண்டு அமைந்துள்ளது.


சான்று:

அறுசீர்_ஆசிரிய_விருத்தம்

‘மா மா காய் மா மா காய்’ 


வெய்யிற் கேற்ற நிழலுண்டு

…    வீசும் தென்றற் காற்றுண்டு


கையில் கம்பன் கவியுண்டு

  …  கலசம் நிறைய மதுவுண்டு


தெய்வ கீதம் பலவுண்டு

 …   தெரிந்து பாட நீயுண்டு


வையம் தருமிவ் வளமன்றி

 …  வாழும் சொர்க்கம் வேறுண்டோ?


- கவிமணி உமர்கய்யாம் பாடல்


மேற்காட்டிய #அறுசீர்_ஆசிரிய_விருத்தம் ‘மா மா காய் மா மா காய்’ எனும் சந்த ஒழுங்கை எல்லா அடிகளிலும் கொண்டு அமைந்துள்ளது.


சான்று:

அறுசீர்விருத்தம்


(மாமாகாய், மாமாகாய்)


மேன்மை  காண்பாய்  பேரின்பம்! 

 ... .மேவும்  துன்பம் வீழ்ந்திடவே! /


கேண்மை  போற்றி  நட்பினராய்க்

... ... கீர்த்தி காண்பாய்  வாழ்வினிலே! /


பாண்மை காத்துப் பேணிடுவாய்

... ... பாதை மாறும் போழ்தினிலே! /


கோன்மை பெற்றே ஆண்டிடுவாய்,

... குன்றாப் பேறு பெற்றிடவே! /



- இராமீனாட்சிசுந்தரம்



எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்:


எழுசீரடிகள் நான்கு ஒரே எதுகை அமைப்பில் வருவது.


#எழுசீர்_விருத்தச்_சந்தங்களுள்சிறப்பானது

.‘விளம் மா விளம் மா விளம் விளம் மா’ என்னும் சந்தமாகும்.


விளச்சீருக்குப் பதில் சில இடங்களில் மாங்காய்ச்சீரும் வரலாம்.

(எழுசீர் விருத்தம் எனில் ஒவ்வொரு அடியிலும் 1-ம் மற்றும்  5-ம் சீரின் முதலெழுத்து மோனை பெற்று வர வேண்டும்.)


சான்று:


தடித்தவோர் மகனைத் தந்தையீண் டடித்தால்

 …    தாயுடன் அணைப்பள்தாய் அடித்தால்


பிடித்தொரு தந்தை அணைப்பனிங் கெனக்குப்

  …   பேசிய தந்தையும் தாயும்


பொடித்திரு மேனி அம்பலத் தாடும்

…    புனிதநீ ஆதலால் என்னை


அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும்

…   அம்மையப் பாவினி ஆற்றேன்.

 

- திருவருட்பா (3386)

-

மேற்காட்டிய  #எழுசீர்_ஆசிரிய_விருத்தத்தில்  ‘விளம் மா விளம் மா  விளம் விளம் மா’  எனும்  சந்தம்  எல்லா அடிகளிலும் வந்துள்ளது. 


‘அணைப்பள்தாய்’  என ஒரு சீர் மட்டும் புளிமாங்காய்ச்சீர் விளச்சீருக்குப் பதிலாக வந்துள்ளது.

 (இது போல்  விளச்சீருக்குப் பதில் “மாங்காய்ச்சீர்” வரும்  என்பது ஒரு விதி விலக்கு ஆகும்)



எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்:


(எண்சீர்  விருத்தம்  எனில் ஒவ்வொரு அடியிலும் 1-ம் மற்றும்   5-ம்சீரின் முதலெழுத்து மோனை பெற்று வர வேண்டும்.)


எண்சீர் அடிகள் நான்கு ஒரே எதுகை அமைப்பில் வருவது. பாரதிதாசன் போன்றோர் எண்சீர் விருத்தத்தால் முழுக் காவியங்கள் (பாண்டியன்பரிசு) பாடியுள்ளனர். 


மிகுந்த பெருவழக்குடைய எண்சீர் விருத்தத்தில் இருவகைச் சந்தங்கள் சிறப்பானவை.

காய் காய் மா தேமா காய் காய் மா தேமா எனவருவது ஒருவகை #எண்சீர்_விருத்தம்.

சான்று:


காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்

 …    கடற்பரப்பில் ஒளிப்புனலில் கண்டேன் அந்தச்


சோலையிலே மலர்களிலே தளிர்கள் தம்மில்

…     தொட்டவிடம் எலாம்கண்ணில் தட்டுப் பட்டாள்


மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற

…     மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் ஆலஞ்


சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டம்

 …    தனிலந்த அழகென்பாள் கவிதை தந்தாள்.


- பாரதிதாசன் அழகின் சிரிப்பு


காய் காய் காய் மா காய் காய் காய் மா’ என வருவது மற்றொரு வகை #எண்சீர்_விருத்தம். 


 சான்று:


கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த

 …    குளிர்தருவே தருநிழலே நிழல் கனிந்த கனியே!


ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே

…    உகந்த தண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே!


மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே

 …    மென்காற்றில் விளைசுகமே சுகத்திலுறும் பயனே!


ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்

…     ஆடுகின்ற அரசேஎன் அலங்கலணிந் தருளே!


- திருவருட்பா (4091)


இன் தமிழில் விருத்தங்களே கடவுளர் வாழ்த்துகளில் சிறப்புற உள்ளது என்றால் மிகையாகாது!!!

பாவினங்களுள் விருத்த வகைகளே தமிழ் இலக்கியத்தில் மிகுந்து காணப்படுவன.  

கம்பராமாயணம், சீவகசிந்தாமணி,  பெரியபுராணம்,     திருவிளையாடற் புராணம்,  சீறாப்புராணம் போன்ற பெருங் காப்பியங்களில் மிகப் பெரும்பான்மையாக அமைந்திருப்பவை விருத்தங்களே.

 சிலப்பதிகாரத்தில்  இசைப்பாடல்களாக வருபவற்றுள் ஆசிரிய விருத்தங்கள் பல உள்ளன. அக்காலத்தில் அவற்றுக்கு இப்பெயர் இல்லை. 

தேவாரம், திவ்வியப்பிரபந்தம் ஆகியவற்றிலும் ஆசிரிய விருத்தங்கள் உள்ளன. பாரதிதாசனின் பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, தமிழியக்கம் போன்ற நூல்கள் ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்தவையே. 

இந்த அளவுக்கு இவை புலவர்களிடையேயும், படிப்போரிடையேயும் சிறப்புப் பெறுவதற்குக் காரணம் இவற்றின் இனிய சந்த ஓசை அமைப்புகளே ஆகும்.

#####    #####    #####


-இரா. மீனாட்சி சுந்தரம், B.Sc., LL.B., CAIIB.,

(கைபேசி எண் 94442-92446)

வழக்கறிஞர்,

9, நான்காவது குறுக்குத் தெரு

திருவள்ளுவர் நகர்

பாரதியார் பல்கலைக்கழகம் (அஞ்சல்)

கோயமுத்தூர் – 641046

***** ***** *****

Comments

  1. மிகத் தெளிவு நன்றி ஐயா !
    வாழ்த்துகள் !

    ReplyDelete
  2. நண்பரே....மகிழ்ந்தேன்
    படித்தேன் .. சில இடங்கள் புரியவில்லை.. தொடர்ந்து முயற்சி செய்து விரைவில் எழுதுவேன் .. மிக்க நன்றி

    ReplyDelete
  3. மிக்க மகிழ்ச்சி. மேற்கோள் காட்டிய "வெய்யிற் கேற்ற நிழலுண்டு;
    வீசும் தென்றல் காற்றுண்டு;" பாடல் கவிமணியின் மொழிபெயர்ப்பு - கள்வனின் காதலி என்ற படத்தின் பாடல் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

    ReplyDelete
  4. ஐயா வாழி. மிகச்சிறந்த சேவை. மெனக்கெட்டு யாப்பினை புத்தகம் வாயிலாக அறிந்துள்ளோம். ஓரளவு பரிச்சயம். இப்போது வேறு கோணத்தில் தாங்கள் தருவது சிறப்பு. மீள்பார்வையாகிறது. வாழி. யாமும் 2009க்குப் பிறகு பணி ஓய்வில் பிஏ எம் ஏ னு தமிழ் பயின்றோம். இன்று எழுதுகிறோம். வாழி. கவியுலகப் பூஞ்சோலைக்குப் பாராட்டு.

    ReplyDelete
  5. அருமையான பதிவு ஐயா

    ReplyDelete
  6. சிறப்பு அய்யா. பயனுள்ளதாக இருந்தது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

2.ஹைக்கூ கவிதைகள் (சூழல் - இரவில் உலகம்)

16.வெண்பா இலக்கணம்(அகன்)