3.எதுகை என்றால் என்ன (அகன்)


எதுகை என்றால் என்ன?
🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡
பாடம் - 03.
ॐॐॐॐॐॐ

அனைவருக்கும் வணக்கம்.

இதுவரை சிறப்பான எதுகை என்பது எழுத்துக்கு எழுத்தென ஒரே எழுத்தை இயல்பாக கொண்ட எதுகை எதுவோ அதுவே எனக் கண்டோம்.

இனி,
நிறைவாக, இதுவரை நாம் பார்த்த அத்தனை எதுகைகளையும் மூன்று பிரிவுகளுக்குள் அடக்கலாம்.

அவை,
01. தலையாகு எதுகை.
02. இடையாகு எதுகை மற்றும்
03. கடையாகு எதுகை ஆகும்.

01. #தலையாகு_எதுகை.

சீர்களின் இரண்டாம் எழுத்து மட்டுமின்றிச் சீர் முழுவதும் ஒன்றி வருவது தலையாகு எதுகை ஆகும். இது மிக மிகச் சிறப்பான எதுகை ஆகும்.

உ - ம்:
#எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
#கண்ணென்ப வாழும் உயிர்க்கு. - குறள். 392.

#விண்ணுக்_கழகாகும் வெண்ணிலவு வேந்தர்தம்
#மண்ணுக்_கழகாகும் மாண்பு. - குறள் வெண்பா.

மேற்கண்ட குறட்பாக்களில் இரண்டாம் எழுத்தாகிய 'ண்' என்பது மட்டுமின்றிச் சீரின் மற்ற எழுத்துகளும் ஒன்றி வந்துள்ளதைப் பாருங்கள்.

இரண்டாவது குறள் வெண்பாவில் முதல் சீர்கள் மட்டுமின்றி இரண்டாம் சீர்களும் ஒத்து வந்திருப்பது  இன்னும் பேரழகு அல்லவா.

எனவே, இவை தலையாகு எதுகை ஆகும்.

கற்க - நிற்க,
கண்ணுடையர் - புண்ணுடையர்,
நல்லார்கண் - கல்லார்கண்,
தலைப்பட்டார் - வலைப்பட்டார்,
பொய்யாமை - செய்யாமை
என்பன போலப் பல இடங்களில் திருக்குறளில் “தலையாகு எதுகை” வந்துள்ளதைப் படித்துப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

02. #இடையாகு_எதுகை.

எதுகை இலக்கணத்தில் சொல்லப் பட்டபடி, இரண்டாம் எழுத்து மட்டும் ஒன்றிச் சீரின் பிற எழுத்துகள் ஒன்றாது வருவது இடையாகு எதுகை ஆகும்.

உ - ம்:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. - குறள் - 01.

கடலில் மழையாக காட்டில் நிலவாய்க்
கடப்பாரைக் கண்டு கழி. – குறள் வெண்பா.

மேற்காட்டிய குறட்பாக்களில் இரண்டாம் எழுத்து மட்டுமே ஒன்றி வந்திருப்பதால் இது இடையாகு எதுகை என்றானது.
.
03. #கடையாகு_எதுகை.

இரண்டாம் எழுத்து ஒன்றாமல், நாம் முன்பு கண்ட வருக்க, நெடில், இன எழுத்து எதுகையாக வருவன கடையாகு எதுகை ஆகும். அதாவது, வருக்க எதுகை, நெடில் எதுகை, இன எதுகை ஆகியன சிறப்பில்லாத, கடையாகு எதுகைகளாகும்.

உ - ம்:
தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும். - திருக்குறள் - 114.

பட்டங்கள் வானில் பறக்கின்ற பேரழகில்
சொக்கும் கவிபிறக்கும் சொல். - குறள் வெண்பா.

மேற்காட்டிய குறட் பாக்களில் க் - ச், ட் - க் என வல்லின எழுத்துகளே ஒன்றுக்கொன்று எதுகையாக வருகின்றன.

இது வல்லின எதுகை ஆகும். இது போலவே இடையின, மெல்லின எதுகைகளும் வருவதுண்டு. ஆகவே, இது கடையாகு எதுகை ஆனது.

பொதுவாக எதுகை மரபுக் கவிதையில் அடிகளைப் பிரிக்க உதவும்.

கவிதை அடிகளுக்குள் பொதுவாக மோனை, எதுகை நயம் இருக்கும். ஓசை அழகிற்காக, படிக்காதவர்களும் கூட மோனையை, எதுகையை கையாள்வதைப் பார்க்கலாம்.

எதுகை - மோனை = எகனை - மொகனை.
ஆட்டம் - பாட்டு = ஆட்டம் - பாட்டம் என்பது பாமர மக்களின் பேச்சு வழக்கு.

விதையொன்று போட்டால் சுரையொன்று முளைக்குமா என்பதில் உள்ள விதை - சுரை என்பது வெரை - சொரை என்று மாறி, வெரை ஒன்னு போட்டா சொரை ஒன்னு காய்க்குமா என்பது பாமர மக்களின் பேச்சு வழக்கு.

இந்த விளக்கம் எதுகையைப் பற்றி ஒரு தெளிவை உங்களுக்குக் கொடுக்கும் என நம்புகிறேன்.

#ஒரு_பாடல் அல்லது #கவிதையின்_சீர்களிலோ, #அடிகளிலோ_இரண்டாம்_எழுத்து_ஒன்றி_வருவது_எதுகை என்றும் அந்த #எதுகை_வகைகளைப் பற்றியும் பார்த்தோம்.

இனி, பாடல்களில் வரும் எதுகை வகைகளைப் பார்ப்போம்.

#பாடல்களில்_எதுகை_பயின்று_வரும்_போது_அதனை_இரண்டு_வகைப்_படுத்துவர்.

#அவை,
01. அடி எதுகை மற்றும்
02. சீர் எதுகை எனப் படும்.

ஒவ்வொன்றையும் தனித் தனியாகக் காண்போம்.

01. #அடி_எதுகை.

அடிதோறும் #முதல்_சீரில் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது #அடி_எதுகை_ஆகும்.

சிகரம் தொடவும் சிறப்பைப் பெறவும்
அகரம் பயில்தல் அறம். - குறள் வெண்பா.

இந்தக் குறள் வெண்பாவில் “சிகரம் - அகரம்” என இரண்டு அடிகளிலும் முதல் சீரில் இரண்டாம் எழுத்து ‘க’ ஒன்றி வருவதால் இஃது அடி எதுகை ஆனது.

அது மட்டுமின்றி, “சிகரம் – அகரம்” என்று முதல் எழுத்து தவிர மற்ற எழுத்துகள் ஒன்றி வருவதால் இந்தக் குறள் வெண்பாவை தலையாகு எதுகை வர யாத்த வெண்பாவாகவும் கொள்ளலாம்.

02. #சீர்_எதுகை.

#சீர்_எதுகை_சீர்_மோனையைப்_போலவே_எட்டு_வகைப்_படும்.

#அவை,
02. 01. இணை எதுகை. (01 – 02 சீர்களில் எதுகை வருதல்)
02. 02. பொழிப்பு எதுகை. (01 – 03 சீர்களில் எதுகை வருதல்)
02. 03. ஒரூஉ எதுகை. (01 – 04 சீர்களில் எதுகை வருதல்)
02. 04. கூழை எதுகை. (01 – 02 – 03 சீர்களில் எதுகை வருதல்)
02. 05. கீழ்க்கதுவாய் எதுகை. (01 - 02 – 04 சீர்களில் எதுகை வருதல்)
02. 06. மேற்கதுவாய் எதுகை. (01 – 03 – 04 சீர்களில் எதுகை வருதல்)
02. 07. முற்று எதுகை (01 - 02 – 03 – 04 சீர்களில் எதுகை வருதல்) மற்றும்
02. 08. வழி எதுகை (அனைத்து அடிகளில் உள்ள அனைத்துச் சீர்களிலும் எதுகை வருதல்) ஆகும்.

இனி, அவற்றை ஒவ்வொன்றாகக் காணலாம்.

02. 01. #இணை_எதுகை(01, 02 ஆம் சீர்கள்)
ஒன்றாம் சீரிலும், இரண்டாம் சீரிலும் எதுகை வரத் தொடுப்பது.

உ - ம்:
#கற்றாரைக் #கற்றாரே காமுறுவர் அல்லாரை
உற்றவரும் பேணார் உணர்ந்து. – குறள் வெண்பா.

முதல் அடியில் முதல் சீரிலும், இரண்டாம் சீரிலும் – கற்றாரைக் கற்றாரே -  என எதுகை வருகிறது. எனவே இஃது இணை எதுகை உள்ள குறள் வெண்பா ஆகும்.

02. 02. #பொழிப்பு_எதுகை(01, 03 ஆம் சீர்கள்)
ஒன்றாம் சீரிலும், மூன்றாம் சீரிலும் எதுகை வரத் தொடுப்பது.

உ - ம்:
#கவிதை எழுதும் #கவிஞர்க் கழகு
புவியை உணர்தல் புரி. – குறள் வெண்பா.

முதல் அடியில், முதல் சீரும், மூன்றாம் சீரும் – கவிதை, கவிஞர்க் – என எதுகை பெற்று வந்ததால் இது பொழிப்பு எதுகை உள்ள குறள் வெண்பா ஆகும்.

02. 03. #ஒரூஉ_எதுகை(01, 04 ஆம் சீர்கள்)
ஒன்றாம் சீரிலும், நான்காம் சீரிலும் எதுகை வரத் தொடுப்பது.

உ - ம்:
#சொல்லில் சிறந்தசொல் துன்பமிலாச் #சொல்லென்பேன்
வல்லவர்க்கே வாழ்வுதரும் வாய். – குறள் வெண்பா.

முதல் அடியில், முதல் சீரும் நான்காம் சீரும் – சொல்லில், சொல்லென்பேன் – என எதுகை பெற்று வந்ததால் இது ஒரூஉ எதுகை உள்ள குறள் வெண்பா ஆகும்.

02. 04. #கூழை_எதுகை(01, 02, 03 ஆம் சீர்கள்)
ஒன்றாம் சீரிலும், இரண்டாம் சீரிலும், மூன்றாம் சீரிலும் எதுகை வரத் தொடுப்பது.

உ - ம்:
#மண்ணிலும் #விண்ணிலும் #வண்ணமயக் கோலமிடும்
வெண்ணிலவைப் பாட விரும்பு. – குறள் வெண்பா.

முதல் அடியில், முதல் சீரும் இரண்டாம் சீரும், மூன்றாம் சீரும் – மண்ணிலும், விண்ணிலும், வண்ணமயக் – என எதுகை பெற்று வந்ததால் இது கூழை எதுகை உள்ள குறள் வெண்பா ஆகும்.

02. 05. #கீழ்க்கதுவாய்_எதுகை(01, 02, 04 ஆம் சீர்கள்)
ஒன்றாம் சீரிலும், இரண்டாம் சீரிலும், நான்காம் சீரிலும் எதுகை வரத் தொடுப்பது.

உ - ம்:
#ஒழுக்கம்_விழுப்பம் தரலான் #ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும். - திருக்குறள் - 131.

முதல் அடியில், முதல் சீரும் இரண்டாம் சீரும், நான்காம் சீரும் – ஒழுக்கம், விழுப்பம், ஒழுக்கம் – என எதுகை பெற்று வந்ததால் இது கீழ்க்கதுவாய் எதுகை உள்ள குறள் வெண்பா ஆகும்.

02. 06. #மேற்கதுவாய்_எதுகை(01, 03, 04 ஆம் சீர்கள்)
ஒன்றாம் சீரிலும், மூன்றாம் சீரிலும் நான்காம் சீரிலும் எதுகை வரத் தொடுப்பது.

உ - ம்:
#நாற்றிசை எங்கணும் #நாற்றுகளே #காற்றிசைக்க
சேற்றில் உயிர்க்கும்நம் சீர். – குறள் வெண்பா.

முதல் அடியில், முதல் சீரும், மூன்றாம் சீரும், நான்காம் சீரும் – நாற்றிசை, நாற்றுகளே, காற்றிசைக்க – என எதுகை பெற்று வந்ததால் இது மேற்கதுவாய் எதுகை உள்ள குறள் வெண்பா ஆகும்.

02. 07. #முற்று_எதுகை(01, 02, 03, 04 ஆம் சீர்கள்)
ஒன்றாம் சீரிலும், இரண்டாம் சீரிலும், மூன்றாம் சீரிலும் நான்காம் சீரிலும் என அடியில் உள்ள நான்கு சீர்களிலும் எதுகை வரத் தொடுப்பது முற்று எதுகை ஆகும்.

உ - ம்:
#அல்லிருக்கும் #நல்லிருட்டில் #அல்லனவாய்ச் #சொல்லிருக்கும்
#புல்லிருக்கும் வெண்பனியாய்ப் பூவிருக்கும் - #வில்லிருக்கும்
அம்பெனவே சேர்ந்திருக்கும் ஆங்காங்கு நச்சரவம்
நம்பிநட வாதிருத்தல் நன்று.

முதல் அடியில், முதல் சீரும், இரண்டாம் சீரும், மூன்றாம் சீரும், நான்காம் சீரும் – அல்லிருக்கும், நல்லிருட்டில், அல்லனவாய்ச், சொல்லிருக்கும் – என எதுகை பெற்று வந்ததால் இது முற்று எதுகை உள்ள நேரிசை வெண்பா ஆகும்.

இந்த வெண்பாவின் இரண்டாம் அடியில் முதல் சீரும், நான்காம் சீரும் – புல்லிருக்கும், வில்லிருக்கும் - என எதுகை பெற்று வந்ததால் இஃது ஒரூஉ எதுகையும் உள்ள நேரிசை வெண்பா ஆகும்.

02. 08. #வழி_எதுகை(அனைத்துச் சீர்களிலும்)
பாடலின் அனைத்து சீர்களிலும் எதுகை வரத் தொடுப்பது. வெண்பா எனில் 15 சீர்களிலும் எதுகை வரத் தொடுப்பது வழி எதுகை ஆகும்.

உ – ம்:
முத்தமிது முத்தமென முத்தமிட்டு முத்தெடுத்த
முத்துரத முத்தெழிலை முத்திவர - முத்தழகு
முத்தியது முத்தமிழை முத்தமிட்டு முத்தமிட
முத்தமழை முத்துதடி முத்து.

இந்த வெண்பாவின் அனைத்து பதினைந்து சீர்களும் எதுகை பெற்று வந்ததால் இது வழி எதுகை உள்ள நேரிசை வெண்பா ஆகும்.

இந்த வெண்பாவின் #இன்னொரு_சிறப்பு அனைத்து பதினைந்து சீர்களும் ஒரே மோனை பெற்று வந்துள்ளதால் இது வழி மோனை உள்ள நேரிசை வெண்பாவும் கூட.

இந்த மூன்று பதிவுகளும் எதுகையைப் பற்றி உங்களுக்கு ஒரு தெளிவைத் தரும் என்று நம்புகிறேன்.

அடுத்த பதிவில் இயைபு பற்றி காணலாம்.

.......................................

Comments

Popular posts from this blog

விருத்தம் எழுதுவது எப்படி (இரா.மீனாட்சிசுந்தரம்)

2.ஹைக்கூ கவிதைகள் (சூழல் - இரவில் உலகம்)

16.வெண்பா இலக்கணம்(அகன்)