2.எதுகை என்றால் என்ன (அகன்)


 எதுகை என்றால் என்ன?
🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡
பாடம் - 02.
ॐॐॐॐॐॐ

அனைவருக்கும் வணக்கம்.

முந்தைய பதிவில் 01. இயல்பு எதுகை, 02. வருக்க எதுகை. 03. இரண்டடி எதுகை, 04. இன எதுகை என நான்கு வகைகளைப் பார்த்தோம்.

இங்கு 05. ஆசிடை இட்ட எதுகையைப் பார்ப்போமா…

05. #ஆசிடை_இட்ட_எதுகை.

ஆசு என்றால் பற்றுக் கோடு, குற்றம் என்று பொருள். நகை செய்யும் கொல்லர்கள் பொன், வெள்ளி நகைகளைப் பிணைக்கும் போது #இளக்கி(#Flux) என்னும் ஒரு பொருளை பயன் படுத்துவார்கள். அந்த #இளக்கி இல்லாமல் நகைகளைப் பிணைக்க முடியாது.

பற்றவைப்புப் பட்டறைகளில்(Welding Shops) இரண்டு உலோகத் துண்டுகளை ஒட்ட வைக்க இதே போல இளக்கியை(Flux) பயன் படுத்துவதைப் பார்க்கலாம்.

#ஆசிடை_இட்ட_நேரிசை_வெண்பா என்பது நேரிசை வெண்பாவின் ஓர் உட்பிரிவு.

அங்கே ஆசு என்பது பற்றாசு. உலோகத் துண்டுகளைப் பற்ற வைக்கப் பயன்படுத்தும் பொருள். அது போலச் சீர்களை இணைக்கும் ஒன்று அல்லது இரண்டு அசைகளைக் குறிக்கும்.

#ஆசிடை_இட்ட_நேரிசை_வெண்பாவையும், #ஆசிடை_இட்ட_எதுகையையும்_குழப்பிக்_கொள்ளக்_கூடாது.

இங்கு, நாம் காணவிருக்கும் #ஆசு என்பது ய், ர், ல் ழ் எனும் இடையின மெய்யெழுத்துகள் நான்கினைக் குறிக்கும்.

இந்த மெய்யெழுத்துகள் சில சமயம் பேச்சு வழக்கில் ஒலிப்பில்லாமல்(#உச்சரிப்பில்லாமல்) மறைவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.

உ - ம்:
காய்கறி - காகறி = ‘ய்’ மறைந்து ஒலிப்பு(உச்சரிப்பு) இழந்து விட்டது.
பார்த்துப் போ – பாத்துப் போ. ‘ர்’ மறைந்து ஒலிப்பு(உச்சரிப்பு) இழந்து விட்டது.
கால்கிலோ - காகிலோ. ‘ல்’ மறைந்து ஒலிப்பு(உச்சரிப்பு) இழந்து விட்டது.
வாழ்க்கைப் பட்டு - வாக்கைப் பட்டு. ‘ழ்’ மறைந்து ஒலிப்பு(உச்சரிப்பு) இழந்து விட்டது.

ஆகவே, ய், ர், ல், ழ் எனும் இந்த நான்கு மெய்யெழுத்துகள் உச்சரிப்பில் மறையக் கூடிய தன்மை உடையதால், எதுகை அமைப்பில் இவை வரும் போது, #இவற்றை_இல்லாதது_போலக்_கருதி, அடுத்து வரும் எழுத்தோடு(மூன்றாவதாக வரும் எழுத்தோடு) எதுகை ஒப்புமை கொள்கிறார்கள்.

இஃது “ஆசு எதுகை” எனப் படும்.

இயல்பான எதுகைகளுக்கு இடையில் முதல் எழுத்தை அடுத்து ய், ர், ல், ழ் என்ற எழுத்துகள் நான்கில் ஒன்று வந்தால் அஃது ஆசிடை இட்ட எதுகை எனப் படும்.

எதுகையாக வரும் எழுத்துக்கு முன் இந்த விதியின் படி,

தீமை - வாய்மை - ‘’ய்’’ இடையில் வருகிறது. தீமை - வா(ய்)மை என ஆகிறது.

மாக்கொடி - கார்க்கொடி “ர்” இடையில் வருகிறது. மாக்கொடி – கா(ர்)க்கொடி என ஆகிறது.

ஆவேறு - பால்வேறு “ல்” இடையில் வருகிறது. ஆவேறு – பா(ல்)வேறு என ஆகிறது.

போகின்ற - வாழ்கின்ற “ழ்” இடையில் வருகிறது. போகின்ற – வா(ழ்)கின்ற என ஆகிறது.

இவ்வாறாக இந்தச் சீர்கள் “ஆசிடை எதுகை” பெற்று விளங்குகின்றன.

எதுகைக்கு இடையில் ய், ர், ல், ழ் இந்த நான்கு எழுத்துகள் வந்தாலும் ஓசை கெடுவதில்லை என்பது இந்த விதியின் உட்பொருள்.

வாய்மை - தூய்மை.
வாழ்கின்ற - தாழ்கின்ற,
மாக்கொடி - பூக்கொடி (இது பூங்கொடி என்றும் வரும். ஆனால், எதுகை ஆகாது)
ஆங்கொரு – பூங்கொடி (இங்கு பூங்கொடி எதுகை ஆகும்)

இவை முதல் தரமான “இயல்பு எதுகைகள்”

ஆனால் கருத்தைச் சொல்ல, முதல் தர எதுகைகளைப் பயன்படுத்த முடியாவிட்டால், ஆசிடை இட்ட எதுகை போன்ற சிறப்பில்லா எதுகைகளைப் பயன்படுத்தலாம் என்பதே இந்த விதிகளின் பொருள்.

இன்னொரு முக்கியமான விதியையும் உள்வாங்கிக் கொள்ளுங்கள்.

#மோனைக்கு, #சொற்புணர்ச்சி_செய்வதற்கு_முன்னர்
#மோனை_சரியா_என்று_பார்க்க_வேண்டும்.

#கள்ளமனம் கொண்டார்க் #காற்றல் இருந்தென்ன. “க - கா” மோனை ஆகாது.

கள்ளமனம் கொண்டார்க்(கு) ஆற்றல் இருந்தென்ன - எனச் சொற்புணர்ச்சிக்கு முன்னர் பார்த்தால் “க - ஆ” மோனை இல்லை என்பது புரியும்.

#ஆனால், #எதுகைக்குச்_சொற்புணர்ச்சி_செய்த_பின்_தான்
#எதுகை_சரியா_என்று_பார்க்க_வேண்டும்.

மன்னவன் - பொன்தகடு எதுகை ஆகாது.
ஏனென்றால், பொன் + தகடு = பொற்றகடு என்று புணரும்.
மன்னவன் - பொற்றகடு. இரண்டாம் எழுத்து “ன் - ற்” எதுகை ஆகாது.

கல்லாதான் - சொல்பிழை எதுகை ஆகாது.
சொல் + பிழை = சொற்பிழை எனப் புணரும். “ல் - ற்” எதுகை ஆகாது.

01. #இயல்பு_எதுகையே_மிகச்_சிறப்பானது.
02. #வருக்க_எதுகை. #பரவாயில்லை. #ஏற்றுக்_கொள்ளலாம்.
03. #இரண்டடி_எதுகையில்_இயல்பு_எதுகையே_சிறப்பானது. #எனினும், #வருக்க_எதுகையை_ஏற்றுக்_கொள்ளலாம்.
04. #இன_எதுகையைத்_தவிர்த்தல்_நலம்.

இது பாடல் அழகைக் கெடுத்து விடும். வெகு சொற்ப நேரங்களில் தேவைப் படும் போது பயன் படுத்திக் கொள்ளலாம்.

05. #ஆசிடை_இட்ட_எதுகை_அரிதாகப்_பயன்படுத்தலாம்.

இவையன்றி, மேலும் சில #சிறப்பே_இல்லாத_எதுகைகளும் இருக்கின்றன.

இவற்றைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். 99.999 விழுக்காடு பின் வரும் எதுகைகளை உங்கள் கவிதைகளில் தவிர்த்து விடுங்கள்.

இவற்றில் ஓசை நயம் இருக்கும். எனினும், #முற்றிலும்_அழகில்லாத_எதுகைகள்_ஆகும்.

அவை,
01. உயிர் எதுகை.
02. இடையிட்டு எதுகை,
03. மூன்றாம் எழுத்து ஒன்றும் எதுகை மற்றும்
04. விட்டிசை வல்லொற்று எதுகை ஆகும்.

இவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம். தற்காலத்தில் இவற்றை யாரும் அறிந்திருக்க வில்லை. ஆதலால் பயன்படுத்துவதும் இல்லை.

01. #உயிர்_எதுகை.

இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது தானே எதுகை என்று படித்தோம். உயிர் எதுகை அப்படி வராது.

இரண்டாம் எழுத்து வேறு எழுத்தாய் வந்தாலும் அந்த எழுத்துடன் புணர்ந்த உயிர் எழுத்து ஒன்றி வருவது உயிர் எதுகை எனப் படும்.

உ - ம்:
தேடாத நாளிலும் தேடி வந்துன்னைப்
பேசாது செய்யும் பணம். - குறள் வெண்பா.

இந்தக் குறள் வெண்பாவில் எதுகையாய் வந்த இரண்டாம் எழுத்துகளைப் பாருங்கள்.

“டா - சா” - மேற்கண்ட எந்த எதுகையுடனும் ஒத்துப் போக வில்லை. இந்த எழுத்துகளை இரண்டாகப் பிரித்துப் பாருங்கள்.

டா = ட் + ஆ,
சா = ச் + ஆ எனப் பிரிந்து வருகிறது அல்லவா…

மெய்யெழுத்துகள் ஒன்றா விட்டாலும் உயிர் எழுத்து “ஆ” ஒன்றி வருவதால் இஃது உயிர் எதுகை ஆனது.

அதாவது,
க், ஞ், ச், ங், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், ழ், வ், ள், ற், ன் - என அனைத்து 18 மெய் எழுத்துகளும் “அ” என்னும் “உயிர் எழுத்தோடு” புணர்ந்து
க, ஞ, ச, ங, ட, ண, த, ந, ப, ம, ய, ர, ல, ழ, வ, ள, ற, ன - என ஒன்றுக்கு ஒன்று “உயிர் எதுகை” ஆகி விடும்.

அதே போல.
க், ஞ், ச், ங், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், ழ், வ், ள், ற், ன் - என அனைத்து 18 மெய் எழுத்துகளும் “ஆ” என்னும் “உயிர் எழுத்தோடு” புணர்ந்து
கா, ஞா, சா, ஙா, டா, ணா, தா, நா, பா, மா, யா, ரா, லா, ழா, வா, ளா, றா, னா - என ஒன்றுக்கு ஒன்று “உயிர் எதுகை” ஆகி விடும்.

மற்ற 10 உயிர் எழுத்துகளோடும் தனித் தனியாகப் புணரும் 18 மெய் எழுத்துகளும் ஒன்றுக்கு ஒன்று இவ்வாறே “உயிர் எதுகை” ஆகி விடும்.

தமிழ் இலக்கணம் எவ்வளவு தாராளமாகத் தளர்வுகளைத் தருகிறது பார்த்தீர்களா…

02. #இடையிட்டு_எதுகை.

ஒரு நான்கடிப் பாடல் என்றால் அந்த நான்கடிகளிலும் முதல் சீர் எதுகை பெற்று வர வேண்டும் என்பது இலக்கண விதி.

அவ்வாறு அடுத்தடுத்த அடிகளில் அமையாமல் இடையே ஓரடி விட்டு அடுத்த அடியில் எதுகை அமைவது “இடையிட்டு எதுகை” எனப்படும்.

அதாவது, நான்கடிப் பாடலில் முதல் அடியிலும் மூன்றாம் அடியிலும் எதுகை வரும். இரண்டாம் அடியிலும் நான்காம் அடியிலும் எதுகை வராது.

உ - ம்:
இரவினில் வானத்தில் நிலவுவரும்.
கதவுகள் இல்லாமல் உலவிவரும்.
சரமலர் வாசத்தில் கனவுவரும்.
இதமென உள்ளத்தில் நினைவுவரும்.

நான்கடிகளால் ஆன இந்த வஞ்சி விருத்தப் பாடலில் முதல் அடியிலும், மூன்றாம் அடியிலும் “இரவினில் - சரமலர்” என எதுகை வருகிறது. இரண்டாம் அடியிலும், நான்காம் அடியிலும் எதுகை அமையவில்லை.

ஆனால், இரண்டாம் அடிக்கு நான்காம் அடியில் “கதவுகள் – இதமென” என எதுகை வருகிறதைப் பாருங்கள்.

அப்படி வராமலும் இருக்கலாம்.

இஃது “இடையிட்டு எதுகை” வர அமைந்த பாடல்.

03. #மூன்றாம்_எழுத்து_ஒன்றி_வரும்_எதுகை.
 
இரண்டாம் எழுத்து ஒன்றாமல் மூன்றாம் எழுத்து ஒன்றி வரும் எதுகை “மூன்றாம் எழுத்து ஒன்றி வரும் எதுகை” என்பர்.

உ - ம்:
உருகும் பனியில் உறையும் குளிர்போல்
அழகும் அறிவும் அணியாய் இருந்தால்
உலகும் வியக்கும் உணர்.

இந்த சிந்தியல் இன்னிசை வெண்பாவில், “உருகும் - அழகும் - உலகும்” என்று மூன்றாவது எழுத்து ‘கு’ ஒன்றி வருவதைப் பாருங்கள். இது, “மூன்றாம் எழுத்து ஒன்றி வரும் எதுகை” ஆகும்.

04. #விட்டிசை_வல்லொற்று_எதுகை.

இது கொஞ்சம் வித்தியாசமான எதுகை ஆகும். இந்த எதுகையை நாம் முயன்று பார்ப்பது வீண்.

இப்படியும் ஒரு வகை எதுகை இருக்கிறது என்பதைத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதை இங்குக் குறிப்பிடுகிறேன்.

படித்துப் பாருங்கள். புரியவில்லை என்றால் விட்டு விடுங்கள்.

தனிக் குற்றெழுத்து சீரின் முதலில் விட்டிசைத்து வரும் போது அது நேரசை ஆகும்.

இங்கு விட்டிசைத்து வரும் எழுத்துத் தொடர்பான ஓர் இலக்கணத்தைக் காண்போம். 'அ' 'ஆ' இரண்டுக்குமிடையே உள்ள #ஓசைத்_தடையே_விட்டிசை_ஆகும்.

அஆ, இஈ, உஊ, எஏ, ஒஓ எனும் உயிரெழுத்துகளை அப்படியே பலமுறை உச்சரித்துப் பாருங்கள்.

இரண்டு எழுத்துகளின் தடைக்கு இடையில் விளக்கிச் சொல்ல முடியாத ‘க்’ போன்ற ஒரு வல்லின மெய்யெழுத்து இருப்பது போலத் தோன்றும்.

அதற்கு எழுத்து வடிவம் இல்லை. எழுத்திலக்கணம் இந்தச் சிறு வல்லின ஒலியை ஏற்பதுமில்லை.

ஆனால், ஓசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் யாப்பிலக்கணத்தார் 'அஆ' என்பவற்றுக்கிடையே ஒலிக்கும் எழுத்தற்ற வல்லின மெய்யெழுத்தை ஏற்கின்றனர்.

முதற்சீரில் விட்டிசை வந்து அடுத்த அடியிலோ முந்திய அடியிலோ முதற்சீர் இரண்டாம் எழுத்து வல்லின மெய்யானால் அவ்வல்லின மெய்க்கு விட்டிசை வல்லொற்றை எதுகையாகக் கொள்ளலாம்.

இதுவே, விட்டிசை வல்லொற்று எதுகை எனப் படும்.
 
உ - ம்:
பற்றிப் பலகாலும் பால்மறி உண்ணாமை
நொஅலையல் நின்ஆட்டை நீ.

இது யாப்பருங்கலக் காரிகை உரை மேற்கோளாகும்.

மறி = குட்டி, உண்ணாமை = உண்ண விடாமல், நொஅலையல் = துன்புறுத்தாதே என்று பொருள் தரும்.

இஃதொரு குறள் வெண்பா ஆகும்.

மேற்காட்டிய பாடலில் 'ற்' எனும் வல்லின மெய்க்கு 'நொஅ' என்பவற்றுக் கிடையுள்ள விட்டிசை வல்லொற்று ‘ற்’ எதுகையாக வந்துள்ளது. ஆகவே இது விட்டிசை வல்லொற்று எதுகை ஆனது.

அடுத்த பதிவில் எதுகையைப் பற்றி ஒரு சிறிய தொகுப்பைக் காண்போம்.

.......................................

Comments

Popular posts from this blog

விருத்தம் எழுதுவது எப்படி (இரா.மீனாட்சிசுந்தரம்)

2.ஹைக்கூ கவிதைகள் (சூழல் - இரவில் உலகம்)

16.வெண்பா இலக்கணம்(அகன்)