எனது பார்வையில் ஹைக்கூ (த.யாசகன்)
எனது பார்வையில் ஹைக்கூ - த.யாசகன்
✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍
அனைவருக்கும் இனிய வணக்கங்கள்
இன்று கவிஞர்களின் விருப்பத்திற்கு உரியதும், திறமை இதுவே என வியக்க வைத்ததுமான ஹைக்கூவை சிறியவனான எனது பார்வையில் எனக்கேயான தனித்துவத்தோடு நோக்குகிறேன்..
ஹைக்கூ என்பது யப்பான் மொழியில் இருந்து வந்திருப்பினும் தமிழ்ச் சுவையாலே அதிகம் கவரப்பட்டு
உள்ளதென்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. காரணம் தமிழ் மொழிக் கவிஞர்கள் பலர் இவற்றை ஆராய்ந்து வேகமாகத் தமிழில் சரளமாக எழுதும் ஆற்றலை வளர்த்துள்ளமையே ஆகும்.
அப்படி தமிழில் நான் இரசித்து ஹைக்கூ கவியின்பக்கம் என்னைத் திருப்பிய கவிதையாக
எச்சில் இலை /
மேல் நோக்கிப் பறக்கிறது /
பசியாறிய காகம் /
தனா சர்மா.
ஈழம்.
என்ற ஹைக்கூவைக் குறிப்பிடுவேன்
அதுபோல இன்று பல கவிஞர்களின் சிறந்த பல ஹைக்கூக்களால் கவரப்பட்டு அவர்களின் திறமைகண்டு வியக்கும் மாணவனாக உள்ளேன். இனி விடயத்தை நோக்குவோம்.
ஹைக்கூ நாம் கண்ட காட்சியைச் சுருக்கமாக மற்றவர்க்கு விளங்கும் வகையில் உவமை மற்றும் கற்பனைகள் இன்றி கரு ,கோணம்,
பொருள் இவைகள் அடங்கலாக ஒன்றுக்கு மேற்பட்ட காட்சியை உண்மைத் தன்மையுடன் அமைக்கும் மூன்றுவரிக் கவிதையாகும். மூன்று வரி என்பதால் உடனடியாகக் கவிதை முடிந்தாலும் அதன் தனித்துவமும் சிறப்பும் சிந்திக்கும்போது நாள் முழுக்க அதன் சூழலோடு எம்மை இணைத்திருக்கும் வகையில் அமையும் ஹைக்கூவிற்கெனத் தனியான இலக்கணங்கள் இருப்பினும் நவீனத்தால் அவ்விலக்கணங்கள் மருகும் நிலை இப்போது காணக் கூடியதாக உள்ளது பொதுவாக முதல்வரி கருவை உள்வாங்கியும் இரண்டாவது வரி கோணத்தை ஏற்றும்
மூன்றாவது வரியில் கவிதையின் பொருளுமாக ஹைக்கூ அமைகிறது இதில் மூன்றாம் வரி முதல் இரண்டு வரிகளுக்கும் ஒத்ததாகவும் அல்லது முரணாகவும் அமைகிறது இந்த முரணானதும் சூழலுக்கு அமைவாக அமைவதே சிறப்புமாகும். அனால் மேற்கூறிய நவீனத்தால் முரணானது சூழலில் இருந்து மாறுபட்டு எழுதப்படுவது தற்காலத்தில் ஒரு வரைமுறையாக மாற்றப்படுவது தவறான விடயமாகும்.
மேலும் சூழலின் உணர்வுகளை ஆழ உள்வாங்காது சூழலின் தலைப்பினை எடுத்து முதல் வரியாகக் கொண்டு எழுதுகின்ற தன்மை இப்போது எமக்குள் பரவும்நிலை காணப்படுகிறது இந்நிலை மாற்றப்பட வேண்டும்
எமக்குத் தெரிந்த அல்லது நாம் அனுபவித்த ஒரு நிகழ்வை இன்னும் ஒருவருக்கு நாம் கூறும்போது அக்காட்சியானது கேட்பவர் மனதிலே ஆழமாகப் பதியவேண்டும் அத்தோடு சுருக்கமாகவும் கூறவேண்டும் அதுவே ஹைக்கூ கவிஞரின் பணி
அப்பணியை நாம் சிறப்பாக செய்கின்றோமா ?
ஒருசிலரைத் தவிர ஏனையோரின் பதில்கள் இல்லை என்பதே இதற்கும் காரணங்கள் பல உண்டு
முதலாவதாக
நாங்கள் ஹைக்கூக்களை போட்டிக்காக எழுதுவதற்காக தயார்படுத்தி அதற்கேற்றாற் போல் கற்பனை வளத்தினை மட்டுப்படுத்தி உள்ளதும் போட்டியிலே வெற்றிபெற்ற பிற கவிஞர்களின் ஹைக்கூக்களின் சாயலை நாமும் பின்பற்றுவதுமாகும்
அடுத்து நாம் யார்மூலம் கவிதையைக் கற்றோமோ அல்லது யாருடைய ஹைக்கூவினால் கவரப்பட்டோமோ அவரின் சாயலை எல்லாக் ஹைக்கூக்களிலும் விதைப்பது
அடுத்து ஒரு சில சொற்களே நிகழ்காலத்தைக் காட்டும் என்ற தவறான எண்ணத்தை மனதிலிருத்தி அதற்கேற்ற சொற்களைத் திரும்பத் திரும்ப எல்லாக் ஹைக்கூக்களிலும் பயன்படுத்துவது
அடுத்து சூழலை ஆழச் சிந்தியாது அதிலுள்ள சிறிய உயிரினங்களையும் சிறப்பித்துப் பாட மறந்தும் ஆங்காங்கே ஒருசில சூழல் சார்ந்த விடயங்களை மட்டும் தொடர்ந்து பாடுவதும் ஆகும்.
அடுத்து எமது படைப்பினை தவறான விமர்சகர்களுக்கு ஏற்ற வகையில் மாற்றுவதும் தவறே
அதேபோல் நடுவர்களின் மனோபாவமும் எங்களது மனோபாவமும் மாறுபட்டதே இதனால் எமது பார்வைக்கோணமும் நடுவரின் பார்வைக் கோணமும் மாறுபட்டு போட்டிகளில் எமது கவிதை ஏற்காமல் போகலாம் இதனால் எமது ஹைக்கூக்கள் தரமற்றவை என்று அர்த்தமில்லை இது நடுவர்களின் தவறுமில்லை நாம் இன்னும் அடுத்தவர்கள் இலகுவாகப் புரியக்கூடிய வகையில் கவிபடைக்க வேண்டும் என்பதே அர்த்தமாகும் இதற்கான வழியில் முயல வேண்டுமே தவிர எனது படைப்பே சிறந்தது என்றும் நடுவரோ,விமர்சகரோ தங்களை நிராகரிப்பதாக அர்த்தம் கொள்வதும் ஆரோக்கியமான செயற்பாடல்ல
இவற்றை நாம் விரைந்து தவிர்த்து பரந்த சூழலில் சிறந்த விடயங்களை ஆழமாகவும் சிறப்பித்தும் எமக்குரிய பாணியின் தனித்துவத்தை நிலைநிறுத்தி இனிமையான ஹைக்கூக்களைப் பாடத் தலைப்படுவோமாக
நன்றி.
இவண்
த.யாசகன்
எது ஹைக்கூ
ReplyDeleteபடித்து படித்து ரசிக்கிறேன்
யாசகனின் கட்டுரை