எனது பார்வையில் ஹைக்கூ (கா.ந.கல்யாணசுந்தரம்)

 

எனது பார்வையில் ஹைக்கூ 


ஞாலம் கருதினும் கைகூடும் காலம் 

கருதி இடத்தான் செயின்


வள்ளுவர் கூறிய வாய்மொழிக்கு ஏற்ப காலம் மனிதனின் வாழ்நிலையை நிர்ணயம் செய்கிறது. காலத்தே வாய்ப்புகளை நழுவவிடாது ஏற்ப செயல்படவேண்டும்.. அதே போல இப்போதெல்லாம் நேரம் கிடைப்பதே மிக மிகக் கடினமான சூழல் மானுடத்துக்கு ஏற்பட்டுள்ளது. 


நேரம் கருதியே வாசிப்புத் தன்மையும் மாறி வருகிறது. குறுகிய நேரத்தில் வாசித்து ஆழ்ந்த சிந்தனையும் சிறப்பான செய்திகளையும் சுருங்கக் கூறுதல் இப்போதுள்ள ஹைக்கூ கவிதைகளுக்கு மட்டுமே உள்ளது. 


ஹைக்கூ என்பது வெறுமனே எழுதக்கூடிய மூன்று வரிகள் அல்ல. 


5/7/5 என்ற மரபு ஹைக்கூக்களைத் துறந்து தமிழ் தற்போது மாறுபட்ட ஹைக்கூ வடிவத்தினை அரவணைத்துக் கொண்டுள்ளது. 


எளிய சொற்கள் மட்டுமே ஹைக்கூ ஆகாது. முதல் இரண்டு வரிகளில் ஒரு செய்தியை, நிகழ்வை, காட்சியை மிகைப்படுத்தல் கூறுதல் வேண்டும். அலங்காரச் சொற்கள் தவிர்த்தல் அவசியமாகிறது.


நிகழ் காலத்தைக் கையிலெடுத்துக் கொண்டு மனதில் காட்சியை நிலைபெறச்செய்தல் கூடுதல் சிறப்பு. மூன்றாவது வரி மின்னலென அற்புதமான முதலிரண்டு வரிகளுக்கு தொடர்புடைய “ அட “ என வியக்கவைக்கும் கருத்தாக இருத்தல் அவசியம். 


இவையெல்லாம் பலர் ஹைக்கூ எழுதுவது எப்படி என கூறியுள்ளவைதான். கீழே உள்ள ஒரு ஹைக்கூவை நிதானமாக படியுங்கள்….


“ விட்டுக் கொடுக்கும் 

பண்பை வளர்க்கின்றன 

ஒற்றையடிப் பாதைகள்  “

-- கா.ந.கல்யாணசுந்தரம்  ( எனது ஹைக்கூவையே ஒரு உதாரணமாக முன்வைப்பதில் மகிழ்கிறேன் )


இந்த ஹைக்கூவில் முதலிரண்டு வரிகள் உளவியல் அணுகுமுறையை எளிமையாகச் சொல்லக்கூடிய வரிகள். மேலும் மானுட இனத்துக்கு அத்தியாவசியமான ஒன்று. ஆனால் மூன்றாம் வரி என்ன சொல்கிறது ….பாருங்கள்.  கிராமிய சூழலில் உள்ள ஒற்றையடிப்பாதைகள் என்ற வழித்தடம் நமது கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தப்படுகிறது. ஹைக்கூ இங்கே மனித இனத்துக்கு ஒரு வழிகாட்டலை ஏற்படுத்தி செல்கிறது.


இயற்கை மனிதத்துக்கு கற்றுத்தரும் பாடமாக ஒரு கோணத்தை மட்டும் சொல்லவில்லை. மற்றுமொரு கோணத்தில்…..ஒற்றையடிப் பாதை எதிரெதிரே இருவர் வர நேரிட்டால் ஒருவர் ஒதுங்கி அல்லது இறங்கி மற்றவருக்கு அனிச்சையாய் வழிவிடல் ஏற்படுகிறது. இச்செயல் நாம் உணரவேண்டிய மற்றோரு கோணமாகும். விட்டுக்கொடுத்து வாழும் உளவியலை அற்புதமாக சொல்லக்கூடிய தன்மையை அறிகிறோம்.


இப்படி பல கோணத்தில் சொல்லக்கூடிய காட்சி, திருப்புமுனை, சொற்கள் கொண்டு தமிழில் ஹைக்கூ கவிதைகள் எழுதினால் காலம் கடந்தும் பேசப்படும் என்பது உண்மை. 


ஜென் என்பது ஜப்பானிய மொழியில் இயற்கையை ஈடுபடுத்தி எழுதப்பட்ட ஹைக்கூக்கள் பெரும்பாலும் போற்றப்பட்டன. அதே போல் தமிழ் பாரம்பரியம், இயற்கை அமைப்பு, கிராமிய சூழல்கள், மரபு சார்ந்த வாழ்க்கை, கலாச்சாரம் தொடர்புடைய தமிழ் ஹைக்கூ கவிதைகள் எப்போதும் நம்மோடு வெற்றிநடை போடும் என்பது உறுதி.


நல்லதொரு வாய்ப்பு அளித்த கவியுலகப் பூஞ்சோலை குழுமத்துக்கு மனமார்ந்த நன்றி. 


கா.ந.கல்யாணசுந்தரம் 

நிறுவனர், 

உலகத் தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம் 

சென்னை.

Comments

  1. மிக்க நன்றியுடன்...கவியுலகப் பூஞ்சோலையில் சேவை இமயமென உயர்கிறது.

    ReplyDelete
  2. மிகவும் சிறப்பான பதிவு. ஒரு சிறிய ஹைக்கூ எத்தனை பெரிய செய்திகளைச் சொல்லுகின்றன என்பதை மிக அழகாக எடுத்துரைக்கும் கட்டுரை. கவிஞருக்கு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. மிக அருமை அய்யா
    இன்னும் விரிவாக சொல்லியிருக்கலாம்

    ReplyDelete
  4. மிக அருமை அய்யா
    இன்னும் விரிவாக சொல்லியிருக்கலாம்

    ReplyDelete
  5. நீட்டி வளர்க்காமல் , ஏதேதோ சொல்லி மிரட்டாமல் , "நச்செ"சொல்லி முடித்நிருப்பதற்கு ஒரு பாராட்டு " இச்" தோழர்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

விருத்தம் எழுதுவது எப்படி (இரா.மீனாட்சிசுந்தரம்)

2.ஹைக்கூ கவிதைகள் (சூழல் - இரவில் உலகம்)

16.வெண்பா இலக்கணம்(அகன்)