எனது பார்வையில் ஹைக்கூ (ரேணுகா ஸ்டாலின்)

 

#என்_பார்வையில்_ஹைக்கூ(ரேணுகா ஸ்டாலின்)


புல்மேல் பனித்துளியாய் வெயில் பட்டதும் கரைந்து ஆவியாகும் நீரல்ல ஹைக்கூ. ஆலம் விழுதென கிளை பரப்பி புதுப்பொலிவுடன் புத்துணர்வூட்டும் சக்தியும், யுக்தியும் கொண்டது ஹைக்கூவும் அதன் கிளை வடிவங்களுமே.


14ம் நூற்றாண்டில் மலர்ந்து 19ம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ்நாட்டினுள் கால் பதித்து தன் கவிவடிவத்தால் தன்னிகரில்லா வளர்ச்சியடைந்த கற்பக விருட்சம் ஹைக்கூ.


வாசிப்பை நேசிக்கும் வாசகனையும் படைப்பாளியாக்கி தன்பால் மயக்கும் மாயவிந்தை ஹைக்கூ அதன் எளிய கவிவடிவத்தாலும் மரபு, உவமை மற்றும் கற்பனை போன்ற இலக்கிய வரம்புகளை தகர்த்தெறிந்து நிகழ்காலமே நிதர்சனம் எனும் உலக நியதியை விளக்கும் விதமாக உள்ளதை உள்ளபடி உணர்த்தி ரசிக்கத் தூண்டும் பாங்கு போன்றவற்றாலும் கவி உலகில் கடைநிலை மாணவியான என்னையும் கவர்ந்திழுத்து தன்பால் கட்டிப்போட்டது.


மனக்கிடங்கின் எண்ணங்களை மூவரியில் அடக்கி அழகிய காட்சியாக்கி ரசிக்கச் செய்வதோடு ஒரு நிமிட குறும்படமாக மனக்கண்களில் விரிந்து மணம் பரப்புவதே காலத்தை வென்ற ஹைக்கூவாக நிலைத்திருக்கும் என்பதில் ஐயமேதுமில்லை.


பலரின் ஹைக்கூ விளக்கங்களையும் , பல ஹைக்கூவாளர்களின் ஹைக்கூக்களையும் வாசித்து வாசித்தே ஹைக்கூவை நேசித்து சுவாசிக்கத் தொடங்கினேன்.மெல்ல மெல்ல ஹைக்கூ ஒரு போதை அதிலும் ராஜபோதை என்பதை உணர்ந்தேன்.  மூவடியில் உலகளந்தான் வாமனன் மூவரியில் உலகாளும் மாயவன் ஹைக்கூ என்ற சிறு தெளிவு மட்டுமே ஹைக்கூவில் என் புரிதலாகவுள்ளது இன்றளவும் என்பதே நிதர்சனம்.


இருப்பினும் ஹைக்கூவும்_நானும் ஆழ்ந்த அகழ்வாராய்ச்சியில் புதைபொருள் தேடுபவரைப் போல் தேடலுடன் உலா வருகிறோம். தேங்கி நிற்கும் எண்ணம் என்னிடமில்லை. ஹைக்கூ என்னும் ஆழ்கடலில் முத்தெடுக்கும் முனைப்புடன் 

மூச்சுள்ள வரை தேடல் தொடரும். என் மனவோட்டத்தை தங்களுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த தொகுப்பாசிரியர் அன்பு அண்ணன் ஒரத்தநாடு நெப்போலியன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

தமிழை நேசிப்போம்!

தமிழையே சுவாசிப்போம்!


வணக்கங்களுடன்,

    *ரேணுகா ஸ்டாலின்*

Comments

Popular posts from this blog

விருத்தம் எழுதுவது எப்படி (இரா.மீனாட்சிசுந்தரம்)

2.ஹைக்கூ கவிதைகள் (சூழல் - இரவில் உலகம்)

16.வெண்பா இலக்கணம்(அகன்)