எனது பார்வையில் ஹைக்கூ (வே.புகழேந்தி)
எனது பார்வையில் ஹைக்கூ
*********************************
மூன்று அடிகளில் படைக்கப்படும் ஹைக்கூகளை முழு மூச்சுடன் ஆராய்கையில் முக்கனிகளின் சுவை கிடைத்திடுமென்றால் மிகையாகாது. செம்மொழியாம் தமிழ் மொழியில் ஹைக்கூகளை புனைவதற்கென்றே சான்றோர்கள் பல விதிமுறைகளை வகுத்துள்ளனர். ஹைக்கூ கவிஞர்களும் அவற்றை வேத வாக்கியமாக ஏற்று ஹைக்கூ என்னும் மூன்று வரி காவியத்தை முனைப்புடன் இயற்றி வருகின்றனர்.
குறிப்பாக ஹைக்கூகளை தன்மையில் (First person - அதாவது, நான், நாம், எனது, எந்தன் என்று ) படைத்தல் தவறு என்பது தமிழில் ஹைக்கூ எழுதிடும் பாவலர்கள் கடைபிடித்து வரும் முக்கியமானதொரு கோட்பாடாகும். ஆனால் நமது நாட்டின் வேற்று மொழிகளில் காலம் காலமாக தன்மையில் ஆரம்பமாகும் ஹைக்கூகளை சர்வ சாதாணமாக எழுதி வருகின்றனர்
ஹைக்கூ கவிஞர்கள். பாஷோவின் முக்கிய சீடர்களில் ஒருவரான Katsushika Hokusai (கத்ஸுஷிகா ஹொகுசாய்) என்பவரின் ஹைக்கூகளை ஆராய்வோமானால் பல ஹைக்கூகளை அவர் தன்மையில் (First person) படைத்திருப்பது கண்கூடாகும். உதாரணத்திற்கு ஒன்றை இங்கு காணலாம்.
I write, erase, re-write
erase again and then
a poppy blooms
(நான்) எழுதி, அழித்து மீண்டும் எழுதுகிறேன்.
மறுபடியும் அழித்து எழுதுகிறேன்.
அடே! ஒரு அபினி பூ பூக்கிறதே!
இது போன்ற பல ஹைக்கூகள் ஆங்கிலம் மற்றும் பல்வேறு மொழிகளில் பல்வேறு கவிஞர்களால் எழுதப்பட்டுள்ளன. எழுதப்பட்டு வருகின்றன. எனவே, நாம் தமிழில் ஹைக்கூகளை படைக்கும்போது 'தன்மை' வேண்டவே வேண்டாம் என்று தள்ளி விடாமல், தேவைப்படும் இடங்களில் அதனை முன் நிறுத்தி ஹைக்கூ படைத்து தேவையற்ற இடங்களில் தவிர்ப்போம்.
ஹைக்கூகளில் 'கடந்த காலம்' குறித்து எழுதக்கூடாது என்பது ஒரு பொதுவான விதிமுறையாக இருந்து வருவதையும் நாம் அறிவோம். கடந்த காலம் என்று வரும்பொழுது இரண்டு வகை கடந்த காலங்ளை கருத்தில் கொள்ளலாம். அவை - (1) Immediate past tense எனப்படும் உடனடி, சில மணித்துளிகள், அல்லது சில வினாடிகள் முன்பே நிகழ்ந்து முடிந்த கடந்த காலம் மற்றும் ,(2) Past tense என்னும் தொலை தூர கடந்த காலமாகும். பல நாட்களுக்கு முன்னரோ, பல மாதங்கள், வருடங்களுக்கு முன்போ நிகழ்ந்தேறிய காலமும் ஆகும். உடனடி கடந்த காலத்தில் காட்சியை அமைப்பதென்பது நிகழ்கால காட்சி அமைப்பிற்கு ஒப்பாகும். கீழ்க்கண்டவாறு படைக்கப்படும் ஹைக்கூகள் குறித்து சற்று கவனிப்போம்.
தொட்டிலை ஆட்டியதும்
தவறி விழுந்தது
தாலாட்டு.
இதில் ' தவறி விழுந்தது' என்னும் சொற்றொடர் கடந்த காலத்தை குறிக்காமல் நிகழ்காலத்தையே சுட்டிக்காட்டும்படி அமைக்கப்
பட்டுள்ளதாலும் 'மேலும் தொட்டிலை ஆட்டியதும் ' என்னும் நிகழ்கால சொற்றொடரை ('தொட்டிலை ஆட்டியப்பொழுது' அல்ல) தொடர்ந்து வருவதாலும், சற்று முன்னரே தாலாட்டு தவறி விழுந்ததை போல் பொருள்
படுவதாலும் (பல மாதங்களுக்கு முன்பு அல்ல) அது நிகழ்காலத்தையே குறிப்பதை போன்றே கருத வேண்டும். அதை தவிர்த்து ஹைககூ வின் காட்சிகள் முற்றிலும் நிகழ் காலத்திலேயே இருக்க வேண்டும் என்று எண்ணி -
தொட்டிலை ஆட்டும்போது
தவறி விழுகிறது
தாலாட்டு
என்று எழுதினால் இரண்டு நிகழ்கால சம்பவங்கள் ஏக காலத்தில் நடந்தேறுவதைப் போல் அமைந்து ஹைக்கூவின் அழகை சிதைத்து விடும் என்பது திண்ணம். இதுத்தவிற உணர்வில் கலந்த சில ஹைக்கூகளை (அவசியம் இருப்பின்) தொலை தூர கடந்த காலத்தில் அமைத்திடலாம் (purely past tense)
தமிழ் தவிர்த்து ஏனைய மொழிகள் சிலவற்றில் (ஆங்கிலத்திலும்) கடந்த காலத்தை முன்னிறுத்தி ஹைக்கூ இயற்றி வருகின்றனர். (அவற்றை நான் இங்கு நியாயப்படுத்த விரும்பவில்லை).
புதைக்க இயலவில்லை
அம்மாவின் பூதவுடலுடன்
நினைவுகளை
மேற்கண்ட கவிதையில் சம்பவங்கள் முழுக்க முழுக்க கடந்த காலத்தில் நடைப்பெற்றுள்ளதால் இது தவறான ஹைக்குவாகும் என்று ஒதுக்கி தள்ளி விட இயலாது.
எனவே ஹைக்கூகள் இயற்றும்போது சரியான காட்சிகளை சரியான காலஙகளில் அமைத்து இயற்றி பழகுவோம். விதிமுறைகளை பின்பற்றாதீர்கள் என்று நான் கூறவில்லை. அவசியம் ஏற்பட்டால்
விதிமுறைகளை தளர்த்தினாலும் தவறில்லை என்பதை தெளிவு படுத்த விரும்புகிறேன்.
ஹைக்கூவின் இரண்டாம் அடியில்
நிகழ்கால நடப்புகளை அறுதியிட்டு
கூறும் நோக்கத்தில் பல ஹைக்கூ
கவிஞர்கள் ஒரே மாதிரியான (stereo type) சொற்றொடர்களை அமைத்து ஹைக்கூ எழுதி வருகின்றனர். மேலும் அத்தகைய கவிதைகளில் ஏனைய அடிகளுடன் பொருந்தி வராத, முதலிரண்டு அடிகளுக்கு சிறிதும் சம்பந்தமற்ற வார்த்தைகளை
அமைத்து ஹைக்கூகளை படைத்து முகநூல் குழுமங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உ - ம்.
உச்சி சூரியன்
நீண்டுக்கொண்டே இருக்கிறது
சிறுவனின் நிழல்.
தேன்கூடு
கொட்டிக்கொண்டே இருக்கிறது
கல்லடிப்பட்ட தேன்.
நீண்டக்கூந்தல்
வாரிக்கொண்டே இருக்கிறாள்
முறத்தில் குப்பை.
சிலேட்டில் கணிதம்
கழித்துக் கொண்டே இருக்கிறது
தூளியில் குழந்தை சிறுநீர்.
போலீஸ்கார்
பிடித்துக்கொண்டே இருக்கிறார் நழுவியோடும் கால் சட்டையை.
இப்படியெல்லாம் எழுதுதல்
நகைப்பிற்கு ஈடாகிவிடும். இவையாவும்
ஆரோக்கியமான ஹைக்கூகள் ஆகாது.
சற்று சிந்தித்து மாற்றி எழுதுங்கள். ஹைக்கூகளில் ஈற்றடி முரண் என்பது இவையல்ல. ஒரு ஹைக்கூவில் இரு சம்பவங்களை பொதுவாக இணைக்கும்போது ஒன்றுக்கொன்று பொருந்தாமல் எழுதாதீர்கள். ஈற்றடி முரணை கவிதைக்கு பொருத்தமின்றி
அமைக்காதீர்கள். மேலும் நிகழ்காலத் தொடரை ஹைக்கூகளில்
குறிப்பிடுகையில் - 'நீண்டு கொண்டே போகிறது' ' என்பதை நீள்கிறது என்றோ, நீண்ட வண்ணமுள்ளது என்றோ, நீளும் என்றோ எழுதலாமே.
ஹைக்கூ என்பது கவிஞர்களின் மூன்றடி திருக்குறள் என்பது இக்காலத்திற்கும் சாலப் பொருந்தும்.
இத்தகைய ஹைக்கூகளை குறைவான சொற்களால் முறையாக இயற்றி புகழடைவோம் வாருங்கள்.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
வாழ்த்துக்களுடன்,
வே.புகழேந்தி
சிறப்பான வழிகாட்டல் தோழர்.
ReplyDeleteகடைசியாக நீங்கள் கூறியுள்ள stereotype கவிஞர்களின் தொல்லை தாங்க முடியவில்லை.
மிக அண்மையில் வெளிவந்த ஒரு ஹைக்கூ தொகுப்பில் 24 பேரில் 15 க்கும் மேற்பட்டோர் இந்த வகையினராக படுத்தி எடுத்துள்ளனர்.
நிலவின் வெளிச்சம்
பிரகாசமாய் தெரிகிறது
அரசியல் வெற்றி.
இது போல.
அவர்களின் புரிதலை என்னவென்பது என்பதை விடவும் பங்குத் தொகை தந்துவிட்டார்கள் என்பதற்காக தொகுப்பை இப்படி நிறைத்து வைத்திருக்கும் தொகுப்பாசிரிய நண்பரை என்னவென்று சொல்வது?
அதனால் நான் இப்படி எழுதினேன்
ஹைக்கூ தொகுப்பு
படித்து முடித்ததும் எழுகிறது
ஹைக்கூமேல் வெறுப்பு.
இதையெல்லாம் படித்து எழுதுபவர்கள் குறைவுதான்.
மாறா பிறர் எழுதியவற்றைப் படித்துப் போலச் செய்பவர்கள் தான் அதிகம்.
இருப்பினும் பதிவு ஹைக்கூ மேல் உண்மையான காதலும் தேடலும் உள்ள இளையவர்குக்கு மிகவும் பயன் தரும்.
வற்றா அன்புடன்
வெற்றிப்பேரொளி
சிறப்பான வழிகாட்டல் தோழர்.
ReplyDeleteகடைசியாக நீங்கள் கூறியுள்ள stereotype கவிஞர்களின் தொல்லை தாங்க முடியவில்லை.
மிக அண்மையில் வெளிவந்த ஒரு ஹைக்கூ தொகுப்பில் 24 பேரில் 15 க்கும் மேற்பட்டோர் இந்த வகையினராக படுத்தி எடுத்துள்ளனர்.
நிலவின் வெளிச்சம்
பிரகாசமாய் தெரிகிறது
அரசியல் வெற்றி.
இது போல.
அவர்களின் புரிதலை என்னவென்பது என்பதை விடவும் பங்குத் தொகை தந்துவிட்டார்கள் என்பதற்காக தொகுப்பை இப்படி நிறைத்து வைத்திருக்கும் தொகுப்பாசிரிய நண்பரை என்னவென்று சொல்வது?
அதனால் நான் இப்படி எழுதினேன்
ஹைக்கூ தொகுப்பு
படித்து முடித்ததும் எழுகிறது
ஹைக்கூமேல் வெறுப்பு.
இதையெல்லாம் படித்து எழுதுபவர்கள் குறைவுதான்.
மாறா பிறர் எழுதியவற்றைப் படித்துப் போலச் செய்பவர்கள் தான் அதிகம்.
இருப்பினும் பதிவு ஹைக்கூ மேல் உண்மையான காதலும் தேடலும் உள்ள இளையவர்குக்கு மிகவும் பயன் தரும்.
வற்றா அன்புடன்
வெற்றிப்பேரொளி
அருமையான பதிவு. நல்வாழ்த்துகளும் நன்றியும்.
ReplyDeleteஅருமையான விளக்கம் sir...
ReplyDelete