9.எளியமுறை தமிழ் இலக்கணம்

 

எளியமுறை இலக்கணம் - 09.
🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 

இனிய வணக்கம்.

இரண்டாம் வேற்றுமையில் இருந்து ஏழாம் வேற்றுமை வரை #உருபு உண்டு.

உருபு என்றால் என்ன….. அதைத் தான் பார்க்கப் போகிறோம்.

02. இரண்டாம் வேற்றுமை - செயப்படு பொருள் வேற்றுமை என்றும் சொல்வர்.

பெயர்ச் சொல் ‘’ஐ’’ என்ற உருபு பெற்று அமையும் போது அது இரண்டாம் வேற்றுமை எனப்படும்.

‘’ஐ’’ - இரண்டாம் வேற்றுமை உருபு #யாரை அல்லது #எதை என்னும் கேள்விக்கு விடையாக அமைவது தான் செயற்படு பொருள்.

இரண்டாம் வேற்றுமை செயற்படு பொருளை உணர்த்துவதால், இதைச் செயப்படு பொருள் வேற்றுமை என்றும் சொல்கிறோம்.

எடுத்துக் காட்டு:
01. மாதவன் (வழக்கை) உரைத்தான்.

மாதவன் எதை உரைத்தான்….? வழக்கு + ஐ = வழக்கை உரைத்தான்.

இங்கு வரும் ‘’ஐ’’ தான் இரண்டாம் வேற்றுமை உருபு.

02. இராமன் வந்தான் - இந்த வாக்கியத்தில், இராமனையும் வந்தானையும் இணைக்க வேண்டியதில்லை. இது முதலாம் வேற்றுமை - எழுவாய் வேற்றுமை - உருபு இல்லை.

அதுவே, இராமனைக் கூப்பிட வேண்டுமென்றால் எப்படி சொல்வது?

இராமன் கூப்பிடு - என்று சொல்ல முடியுமா? முடியாது.

அப்போது இந்த இரண்டு சொற்களையும் சேர்க்க இடையில் ஒரு தரகர் தேவை. அந்தத் தரகரின் பெயர் தான் உருபு. புரிகிறதா? 

இப்போது பாருங்கள்.

இராமன் + ஐ + கூப்பிடு = இராமனைக் கூப்பிடு என்று வர வேண்டும். இடைத் தரகர் - அது தான் உருபு - ‘’ஐ’’ இருக்கிறார் இல்லையா?

இவருக்குப் பெயர் ‘’இரண்டாம் வேற்றுமை’’ உருபு.

03. மூன்றாம் வேற்றுமை - கருவி/ துணை வேற்றுமை என்றும் சொல்வர்.

ஆல், ஆன். ஒடு, ஓடு, உடன், கொண்டு ஆகிய உருபுகள் மூன்றாம் வேற்றுமை உருபுகள்.

எடுத்துக் காட்டு:
01. கண்ணால்(கண் + ஆல்) காண்பதும் பொய், காதால்(காது + ஆல்) கேட்பதும் பொய்.

02. நள்ளியோடு(நள்ளி + ஓடு) போ.

03. கந்தன் அழகனுடன்(ஆழகன் + உடன்) வந்தான்.

04. ஒரு வேலை இருக்கிறது. அதை யாராவது செய்ய வேண்டும். இராமனைக் கூப்பிடுவோம். அந்த வேலையைச் செய்ய இராமன் + ஆல் + முடியும் = இராமனால் முடியும்.

இங்கே இடைத் தரகர், ‘’ஆல்’’ இருக்கிறார். இவருக்குப் பெயர் ‘’மூன்றாம் வேற்றுமை’’ உருபு.

‘’ஆல்’’ என்பது மட்டுமின்றி ‘’ஒடு, ஆன், ஒடு, ஓடு, உடன், கொண்டு’’ போன்றவையும் ஒரு சில இடங்களில் ‘’மூன்றாம் வேற்றுமை’’ உருபாகச் சொல்லியிருக்கிறார்கள்.

இராமன் + ஒடு + போய் வாருங்கள் = இராமனொடு போய் வாருங்கள் என்றும் வரும். 

இதையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

04. நான்காம் வேற்றுமை.

'கு' என்பது நான்காம் வேற்றுமையின் உருபு.

எடுத்துக் காட்டு:
01. கூழுக்கு(கூழ் + கு)ப் பாடினாள் ஒளவை. பொன்னுக்கு(பொன் + கு)ப் பாடினான் கம்பன்.

02. இப்பொழுது இராமன் தண்ணீர் குடிக்க வேண்டும். அதை நான் சொல்ல வேண்டும். எப்படிச் சொல்வது?

இராமன் + கு + தண்ணீர் வேண்டும் = இராமனுக்குத் தண்ணீர் வேண்டும்.

இங்கே இடைத் தரகர், ‘’கு’’ இருக்கிறார். இவருக்குப் பெயர் ‘’நான்காம் வேற்றுமை’’ உருபு.

05. ஐந்தாம் வேற்றுமை.

ஐந்தாம் வேற்றுமை - உருபு - இல், இன்

01. புத்தகம் பையில்(பை + இல்) இருக்கிறது.

02. எனக்குப் பக்கத்தில் ஒரு புத்தகம் இருக்கிறது. அது யாருடைய புத்தகம்? அது இராமன் + இன் + புத்தகம் = இராமனின் புத்தகம்.

இங்கே இடைத் தரகர், ‘’இன்’’ இருக்கிறார்.

இவருக்குப் பெயர் ‘’ஐந்தாம் வேற்றுமை’’ உருபு.

06. ஆறாம் வேற்றுமை.

ஆறாம் வேற்றுமை - உருபு - அது.

நம்முடைய அண்ணாச்சி வைத்திருக்கும் மருந்துக் கடையின் வாடிக்கைதாரர் இராமன்.

அதனால், மருந்து தேவைப் படும் போதெல்லாம் அண்ணாச்சி கடையில் மருந்து வாங்கிக் கொண்டு கணக்கு எழுதிக் கொள்ளச் சொல்வார்.

ஜூலை மாதம் பிறக்கப் போகிறது. மருந்து கணக்கு எவ்வளவு ஆயிற்று என்று பார்க்க அண்ணாச்சிக் கடைக்குப் போய் கேட்டார்.

கடைப் பையனிடம் கணக்குப் பார்க்கச் சொன்னார் அண்ணாச்சி. எப்படி சொல்லியிருப்பார்? ‘’பையா, இராமன் + அது + கணக்கைப் பார் = இராமனது கணக்கைப் பார்’’ என்றார்.

இங்கே இடைத் தரகர், ‘’அது’’ இருக்கிறார். இவருக்குப் பெயர் ‘’ ஆறாம் வேற்றுமை’’ உருபு.

07. ஏழாம் வேற்றுமை.

ஏழாம் வேற்றுமை - உருபு - இல், கண், இடம்.

இன்னும் மிச்சம் இருப்பது ‘’ஏழாம் வேற்றுமை’’ உருபு மட்டுமே.

01. அப்பா மாடியில்(மாடி + இல்) இருக்கிறார்.

இது பேச்சு வழக்கில் பயன்படுவதில்லை. இலக்கியங்களில் இருக்கிறது. கவிதைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

02. அந்தப் புத்தகம் யாரிடம் இருக்கிறது? என்று கேட்டால் இராமன் + கண் + இருக்கிறது = இராமன்கண் இருக்கிறது என்று சொல்ல வேண்டும்.

இங்கே இடைத் தரகர், ‘’கண்’’ இருக்கிறார். இவருக்குப் பெயர் ‘’ஏழாம் வேற்றுமை’’ உருபு.

‘’கண்’’ என்பது ‘’இடம்’’ என்ற பொருளில் வருவதால் பேச்சின் எளிமைக் கருதி இராமன்கண் இருக்கிறது என்பதை இராமனிடம் இருக்கிறது என்று சொல்லி விடுகிறோம்.

08. எட்டாம் வேற்றுமை.

எட்டாம் வேற்றுமை - உருபு - விளிப் பொருளில் வரும்.

எட்டாம் வேற்றுமை எனப் பெயரிடப்பட்டுள்ள இதனை விளி வேற்றுமை என இதன் செயல்பாட்டு நோக்கிலும் பெயரிட்டு வழங்கி வந்தனர்.

எழுவாய் வேற்றுமையில் வினையாற்றும் பெயர் அழைக்கப் பட்டு விளி கொள்ளும்போது எட்டாம் வேற்றுமையாக மாறும்.

#விளி என்றால் #விளித்தல். #அழைத்தல் என்று பொருள். ‘’தம்பி’’யை அழைக்கும் போது, ‘’தம்பீ’’ என்று அழைக்கிறோம் அல்லவா?

அது போலவே,

நம்பி - நம்பீ என்றும், தங்கை - தங்காய் என்றும், நங்கை - நங்காய் என்றும் விளிக்கப் படும் போது ஏற்படும் மாற்றமே எட்டாம் வேற்றுமை ஆகும்.

இடத்துக்குத் தகுந்தாற் போல் இது மாறுவதால் இதற்கு தனியாக உருபு இல்லை.

ஆக, இன்று நாம் என்ன கற்றுக் கொண்டோம்?

பெயர்ச் சொல் என்றால் என்ன? பெயர்ச் சொல் காலம் காட்டாது. அதே சமயம் பெயர்ச் சொல் வேற்றுமை உருபுகளை ஏற்கும் என்ற மூன்று பாடங்களைக் கற்றுக் கொண்டோம்.

இவற்றில் ஏதாவது சந்தேகம் இருக்கிறதா உங்களுக்கு? நன்றாகப் புரிகிறது தானே?

அப்ப சரி. அடுத்த பாடம் என்ன? ஒன்றும் பெரிதாக இல்லை.

பெயர்ச் சொற்கள் பத்து வகைப் படும். அவை என்னென்ன? என்பதை அடுத்தப்  பார்க்கலாம்.

……….........................…

Comments

Popular posts from this blog

விருத்தம் எழுதுவது எப்படி (இரா.மீனாட்சிசுந்தரம்)

2.ஹைக்கூ கவிதைகள் (சூழல் - இரவில் உலகம்)

16.வெண்பா இலக்கணம்(அகன்)