8.எளியமுறை தமிழ் இலக்கணம்

எளியமுறை இலக்கணம் - 08.
🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡
இனிய வணக்கம்.
போன வகுப்பில் சொற்களைப் பற்றிப் பார்த்தோம்.
இந்த சொற்களில் நான்கு வகைகள் உண்டு.
இனி சொல்லின் வகைகளைப் பார்ப்போம்.
இலக்கண அமைப்பின் படி சொற்களை
01. பெயர்ச் சொல்
02. வினைச் சொல்
03. இடைச் சொல்
04 உரிச் சொல்
என்று நான்காகப் பிரிகிறோம். முதலில் பெயர்ச் சொல்லைப் பற்றிப் பார்ப்போம்.
01. பெயர்ச் சொல்:
ஒன்றின் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வதே பெயர்ச் சொல் ஆகும்.
உ - ம்:
- - - - - - - -
வீடு, விளக்கு, கட்டில், இராமன், மாலதி, பசு, மரம், விடுதி போன்றவை பெயர் சொற்களாகும். பெயர் சொற்களுக்கு இரண்டு வகையான விளக்கம் (இலக்கணம்) சொல்லப் படுகின்றன.
01. பெயர்ச் சொல் #காலம்_காட்டாது.
உ - ம்:
- - - - - -
குதிரை என்பது பெயர்ச் சொல்.
இஃது, இறந்த காலமா? நிகழ்காலமா? எதிர்காலமா? தெரியாது. இதைப் போலவே நீங்கள் எல்லாப் பெயர்ச் சொற்களையும் சொல்லிப் பார்த்துக் கொள்ளலாம்.
இப்படித் தான், பெயர்ச் சொல் காலம் காட்டாது என்று ஒரு வகுப்பில் நான் சொன்ன போது ஒரு மாணவன் எழுந்து நின்றான்.
நான் அவனிடம், ''என்ன சந்தேகமா?’’ என்று கேட்டேன்.
‘’அமாம் ஐயா…..’’ என்று இழுத்தான்.
‘’சந்தேகத்தைக் கேள்’’ என்றேன்.
‘’சரித்திரப் புருஷர்கள் ‘அலெக்ஸாந்தர், நெப்போலியன்’ இரண்டும் பெயர்ச் சொற்கள் தானே ஐயா?’’ என்றான்.
நானும் யதார்த்தமாய், ‘’ஆமாம்’’ என்றேன்.
‘’அவர்கள் எந்த காலம் ஐயா?’’ என்று கேட்டான்.
‘’கடந்த காலமப்பா’’ என்றேன் நான்.
‘’கடந்த காலம் என்றால் இறந்த காலம் தானே ஐயா?’’ என்று பணிவாகக் கேட்டான்.
அவன் எங்கே வருகிறான் என்று எனக்குப் புரிந்து போயிற்று. ‘அலெக்ஸாந்தர், நெப்போலியன்’ என்கிற இரண்டு பெயர்ச் சொற்கள் காலத்தைக் காட்டுகின்றன என்பது அவன் வாதம்.
‘’தம்பி, அலெக்ஸாந்தர், நெப்போலியன் என்கிற #பெயர்களைத்_தாங்கியவர்களின் #காலத்தைப்_பெயர்ச்_சொற்களின்_காலமாக_எடுத்துக்_கொள்ளக்_கூடாது.
இந்த இரண்டு பெயர்களை வைத்துக் கொண்டிருப்பவர்கள் இன்றும் இருக்கின்றனர்.
வீரபாண்டிய கட்டபொம்மன் என்கிற சரித்திரப் புருஷனின் காலம் கடந்த காலம்.
அந்தப் பெயரைத் தான் என் பெற்றோர் எனக்கு வைத்தனர்.
என் பெயர் வீரபாண்டிய கட்டபொம்மன்.
இப்போது சொல். வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற பெயர்ச் சொல் எந்த காலத்தைக் காட்டும்?
நான் நிகழ்காலம் தானே? ஆக, பெயர்ச் சொல் காலத்தைக் காட்டாது. அந்த பெயரைத் தாங்கியவர்கள் வேண்டுமானால் காலத்தைக் காட்டலாம். உன் சந்தேகம் தீர்ந்ததா? என்று கேட்டு அந்த மாணவனை அமரச் சொன்னேன்.
நான் என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்?
ம்ம்ம்ம்…. பெயர்ச் சொல் காலம் காட்டாது.
இதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து பெயர்ச் சொல்லின் இரண்டாம் வகையைப் பார்ப்போம்.
02. பெயர்ச் சொல் #வேற்றுமையை_ஏற்கும்.
வேற்றுமை என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளாமல் மேற்கொண்டு படிக்க முடியாது.
ஆகவே, வேற்றுமையைப் பற்றி சொல்லி விடுகிறேன்.
#வேற்றுமை_எட்டு_வகைப்_படும்.
அவை வேற்றுமை உருபுகளைப் பெற்றிருக்கும்.
முதல், மற்றும் எட்டாம் வேற்றுமைக்கு உருபுகள் இல்லை.
எல்லா இலக்கண ஆசிரியர்களும் முதல் வேற்றுமைக்கு ‘’உருபு’’ இல்லை என்று சொல்லி முடித்து விடுவார்கள்.
‘’உருபு’’ இல்லாமல் எதற்கு ஒரு வேற்றுமைக்குப் பெயர் கொடுக்க வேண்டும்…?
நாம் முதலாம் வேற்றுமையைப் பற்றி சற்றே விரிவாகப் பார்ப்போமா…
01. முதலாம் வேற்றுமை - எழுவாய் வேற்றுமை என்றும் சொல்வர்.
பெயர்ச் சொல் எந்த மாற்றமும் அடையாமல் ஒரு சொற்றொடரில் நிற்கும் பொழுது எழுவாய் எனப் படும்.
எந்த #உருபும் சேராமல் இவ்வாறு எழுவாயாய் அமையும் பெயர்ச் சொல் எழுவாய் வேற்றுமை எனப்படும்.
எடுத்துக் காட்டு:
#மாதவன் வழக்கை உரைத்தான்.
எழுவாய் ஆன மாதவன்(பெயர்ச் சொல்) எந்த மாற்றமும் அடையவில்லை.
இதையே கொஞ்சம் விளக்கமாகப் பார்க்கலாமா…. குழம்பினால் விட்டு விடுங்கள்.
முதலாம் வேற்றுமையை எழுவாய் வேற்றுமை என்றும் குறிப்பிடலாம்.
எழுவாய் வேற்றுமை என்றால் என்ன?
எழுவாய் வேற்றுமை என்பது வேற்றுமை உருபுகளை ஏற்காமல் இயல்பாக நிற்கின்ற பெயர் ஆகும். இதை #எழுவாய்_வேற்றுமை, #முதல்_வேற்றுமை, #பெயர்_வேற்றுமை என்றும் இலக்கண நூல்களில் குறிப்பிடுகிறார்கள்.
இது, வினாவையும், பெயரையும், வினையையும் பயனிலையாகக் கொண்டு முடியும்.
இதனை ஆறு விதமாகப் பிரித்து சொல்லலாம்.
01. #பொருண்மைச்_சுட்டல்
ஒருபொருளின் இருக்கும் தன்மையைச் சுட்டிச் சொல்தல் பொருண்மைச் சுட்டல் ஆகும்.
மாடு உண்டு - உண்டு என்பது மாட்டின் இருப்பைச்(Availability) சுட்டல் ஆகும்.
மனிதர் உண்டு, ஆறுகள் உண்டு, மலைகள் உண்டு போன்றவை.
02. #வியங்கொள_வருதல்.
#வியம் என்பதற்கு #ஏவல் அல்லது #கட்டளை என்று பொருள். வியத்தை, அதாவது, ஏவுதலைச் சொல்வது ஆகையால் இச்சொல் #வியங்கோள் எனப் பட்டது.
#வியங்கோள்_வினை_முற்று மிகப் பழங்காலத்தில் இருந்தே வழக்கில் இருந்து வருகிறது. இஃது எந்தெந்தப் பொருள்களில் வரும், இதற்குரிய விகுதிகள் யாவை என்பன குறித்து இனி இங்கு காண்போம்.
நிறைவாக, வியங்கோளுக்கும், ஏவல் வினைக்கும் உள்ள வேறுபாடுகளையும் தெரிந்து கொள்ளலாம்.
வியங்கோள் பொருள்கள்:
வியங்கோள் வினை பெரும்பாலும் #நான்கு_பொருள்களில்_பயன்படுத்தப்_பெறுகிறது. அவை,
அ வாழ்த்தல்,
ஆ. வைதல்(திட்டுதல்),
இ. வேண்டல் மற்றும்
ஈ. விதித்தல்
ஆகியவை ஆகும்.
இச்சொல் இரு திணை(உயர் திணை மற்றும் அஃறிணை) ஐம்பால்(ஆண் பால், பெண் பால், பலர் பால், ஒன்றன் பால் மற்றும் பலவின் பால்) மூவிடங்களுக்கும்(தன்னிலை, முன்னிலை, படர்க்கை) உரியதாகப் பயன்படுத்தப் படுகிறது.
வெல்க, வாழ்க, வளர்க - - - - - - - - - - - - வாழ்த்தல் பொருள்.
வீழ்க, ஒழிக, நலிக, அழிக - - - - - - - - - - வைதல் பொருள்.
வருக, உண்க, ஏற்க, கொள்க - - - - - - - - விதித்தல் பொருள்.
அருள்க, கருணை புரிக, ஆசி வழங்குக - வேண்டல் பொருள்.
இவற்றை முன் குறிப்பிட்டவாறு வாழ்க நான், வாழ்க நீ, வாழ்க அவன் என்பன போன்று ஐம்பால் மூவிடத்திற்கும் பயன்படுத்தலாம்.
#வியங்கோள்_வினை_முற்று_விகுதிகள்.
க, ய - என்கிற இரு உயிர்மெய் எழுத்துகளும் 'ரகர' ஒற்றை இறுதியில் பெற்ற இய, இயர் என்பன போன்ற விகுதிகளும் வியங்கோளில் மிகுதியும் வரும்.
வருக, வாழிய, வாழியர் என்பன அதற்குச் சான்றுகள்.
எதிர்மறை வியங்கோள்.
உடன்பாட்டுப் பொருளில் வியங்கோள் வருவது போன்று எதிர்மறைப் பொருளிலும் இது கையாளப் படுவது உண்டு.
வாரற்க, கூறற்க, செல்லற்க.
வாரேல், செல்லேல், பகரேல்.
என்பன போன்று இச்சொற்கள் அமையும்.
இச்சொற்களை நாம் இன்று வராதே, வாராதே, கூறாதே, செல்லாதே, பகராதே என்று பேச்சு வழக்கில் பயன் படுத்தி வருகிறோம்.
இந்நிலையில் ஏவலுக்கும் வியங்கோளுக்கும் உள்ள வேறுபாடுகளை அறிந்து கொள்ள வேண்டும்.
இல்லையேல் இரண்டும் ஒன்று போல் உள்ளதால் குழப்பமும், மயக்கமும் ஏற்படும்.
#ஏவல் - #வியங்கோள்_வேறுபாடுகள்.
#ஏவல் - கட்டளைப் பொருளில் மட்டும் வரும். முன்னிலைக்கு மட்டும் உரியது. ஒருமை, பன்மை வேறுபாடு உண்டு.
#வியங்கோள் - வாழ்த்தல், வைதல், விதித்தல், வேண்டல், என்னும் பொருள்களில் வரும்.
தன்மை, முன்னிலை, படர்க்கை எனும் மூவிடங்களுக்கும் உரியது. ஒருமை, பன்மை வேறுபாடு இல்லை.
03. #வினை_நிலை_உரைத்தல்
தெரிநிலை வினையானது பயனிலையாக வருதல் வினை நிலை உரைத்தல் ஆகும்.
மரம் கிடந்தது - #கிடந்தது என்பது வினை நிலை.
04. #வினாவிற்_கேற்றல்,
வினாச் சொல் பயனிலையாக வருதல். வினாவிற் கேற்றல் ஆகும்.
அவன் யார்? - #யார் என்பது பெயர் தழுவிய வினா.
05. #பண்பு_கொள_வருதல்,
பண்பு அடியாகத் தோன்றும் குறிப்பு வினை பயனிலையாக வருதல் பண்பு கொள வருதல் ஆகும்.
கண்ணன் கரியன் - #கரியன் என்பது நிறப் பண்பு.
06. #பெயர்_கொள_வருதல்:
பெயர்ச் சொல் பயனிலையாக வருதல் ஆகும்.
பெயர் கொள வருதல் - ஆனந்தன் பொறியாளர் - #பொறியாளர் என்பது பெயர் கொள வருகிறது.
இதை இதற்கு மேலும் விளக்கமாக எழுதப் போனால் குழப்பம் அதிகரிக்கும். எனவே இத்தோடு நிறுத்திக் கொள்வோம்.
அடுத்த பாடத்தில் இரண்டாம் வேற்றுமை உருபு தொடங்கி எட்டாம் வேற்றுமை வரை பார்க்கலாம்.
……….........................…
Comments
Post a Comment