7.எளியமுறை தமிழ் இலக்கணம்


எளியமுறை இலக்கணம் - 07.
🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 

இனிய வணக்கம்.

இதுவரை நாம் சொற்களின் அடிப்படை வகைகளைப் பார்த்தோம். இனி செய்யுளில், இலக்கியங்களில், கவிதைகளில் வரும் சொற்களைப் பற்றிப் பார்க்கலாம்.

சொல்லதிகாரம் - 02.
- - - - - - - - - - - - - - - - - - -
இலக்கியங்களில் வரும் சொற்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

அவை,
01. #இயற்சொல்
02 #திரிசொல்
03. #திசைச்_சொல் மற்றும்
04. #வடசொல் எனப் படும்.

01. இயற்சொல்.
- - - - - - - - - - - - - -
தமிழ்நாட்டில், எல்லோருக்கும் சாதாரணமாக, இயல்பாக பொருள் விளங்கிக் கொள்ளும் படியாக உள்ள சொற்கள் ‘’இயற்சொற்கள்’’ எனப்படும்.

உ - ம்:
அவன், எவன், நான், மரம், காற்று, தீ, புயல் போன்றவை.

இயற்சொல்லை மட்டும் தெரிந்து கொண்டு சிறப்பான கவிதைகளைப் படைத்திடலாம்.

இருந்தாலும், திரிசொல்லையும், திசைச் சொல்லையும், வடசொல்லையும் தெரிந்து வைத்துக் கொண்டால் ‘’#கவிதைச்_சிலம்பம்’’ ஆடலாம்.

அதற்காகவே, திரிசொல், திசைச் சொல், வடசொல் பற்றி சொல்ல இருக்கிறேன். பயப்பட வேண்டாம். இவைத் தெரியாவிட்டாலும் சிறப்பாக கவிதை எழுத முடியும்.

02. திரிசொல்
- - - - - - - - - - - - -
#ஒரே_பொருளைத்_தரும்_பல_சொற்கள் அல்லது
#பல_பொருளைத்_தரும்_ஒரே_சொல்.

இவற்றைப் புரிந்து கொள்ள நிறைய இலக்கியங்கள் படிக்க வேண்டும். இந்த மாதிரியான சொற்களைத் தான் ‘’திரிசொற்கள்’’ என்று கூறுகிறோம்.

இவை தான் கவிதைகளில் எதுகை, மோனை மற்றும் இயைபு பயின்று வரக் கைக் கொடுக்கும்.

''#இரட்டுற_மொழிதல்'' என்கிற இலக்கியத்தில் திரிசொற்கள் அதிகம் காணப்படும்.

யோசித்துப் பார்த்தால் நாம் தினசரி உபயோகிக்கும் சொற்களிலேயே திரிசொற்கள் கலந்து கிடப்பதைக் காண முடியும்.

உ - ம்:
#ஒரு_பொருள்_தரும்_பல_சொற்கள்.

குஞ்சரம், களிறு, கரி, வேழம், களபம், மாதங்கம் என்று #யானையைக் குறிக்கும் தூயத் தமிழ் சொற்கள் மட்டும் சுமார் 60 இருக்கின்றன.

இன்னும் சில ஒரு பொருள் தரும் பல சொற்கள்.

கடல் - - - - - - - பரவை, முந்நீர், சமுத்திரம்.
கிளி - - - - - - - - தத்தை, சுகம், கிள்ளை.
குழந்தை  - - - மகவு, குழவி, சேய்.
சூரியன் - - - -  ஞாயிறு, கதிரவன், பகலோன், பரிதி, 
..........................கதிர், வெய்யோன், ஆதவன்
செய்யுள்  - - - பா, கவிதை, யாப்பு, பாடல்.
சொல்   - - - - - பதம், மொழி, கிளவி, வார்த்தை.
தவறு - - - - - - மாசு, குற்றம், பிழை.
நெருப்பு  - - - - தீ, அனல், கனல்.
பெண்  - - - - - -நங்கை, வனிதை, மங்கை.
வயல்  - - - - - கழனி, பழனம், செய்.

#பல_பொருள்_தரும்_ஒரு_சொல்.

தமிழில் #வாரணம் என்னும் சொல் யானை, வாழை, சங்கு, கடல், தடை, கவசம், பன்றி, நிவாரணம் ஆகிய பொருட்களைத் தரும்.

‘’#வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து நாரண நம்பி நடக்கின்றான்’’ என்பது நாச்சியார் திருமொழி.

இன்னும் சில ஒரு பொருள் தரும் பல சொற்கள்.

#ஆவி - இச்சொல்லுக்கு உயிர், பேய், மெல்லிய புகை முதலான பல பொருள்கள் உள்ளன.

ஆவி என்பது #பெயர்ச்_சொல்.

எனவே, இதைப் பல பொருள் குறித்த #ஒரு_பெயர்த்_திரிசொல் என்கிறோம்.

#வீசு - இச்சொல்லுக்கு எறி, சிதறு, பரவச் செய், ஆட்டு முதலான பல பொருள்கள் உள்ளன.

வீசு என்பது #வினைச்_சொல்.

எனவே, இதைப் #பல_பொருள்_குறித்த_ஒரு_வினைத்_திரிசொல் என்கிறோம்.

இவ்வாறு எளிதில் பொருள் புரிந்து கொள்ள முடியாத சொற்களைத் தான் திரிசொல் என்கிறோம்.

"ஒரு பொருள் குறித்த பல சொல் ஆகியும்
 பல பொருள் குறித்த ஒரு சொல் ஆகியும்
 அரிது உணர் பொருளன திரிசொல் ஆகும்"
................................................................- நன்னூல்: 272.
 
 ஒரு பொருளைக் குறிக்கும் பல சொற்களாகவும், பல பொருள்களைக் குறிக்கும் ஒரு சொல் ஆகவும் கற்றோர் மட்டுமே பொருளை உணரும் வகையில் வருவன திரிசொல் ஆகும் என்பது இதன் பொருள்.

03. திசைச் சொல்
- - - - - - - - - - - - - - - -
நம் தமிழ் நாட்டில் எத்தனை விதமான தமிழ் இருக்கிறது தெரியுமா? சென்னைத் தமிழ், மதுரைத் தமிழ், திருநெல்வேலி, நாகர்கோயில் தமிழ், திருச்சித் தமிழ், கோவைத் தமிழ் என்று பலவித தமிழ் இன்றும் இருக்கின்றன.

அது போலத் தான், ஆதி நாட்களில் தமிழ் நாடு நிர்வாக வசதி கருதி பல பிரிவுகளாக பிரிந்து இருந்தது.

குட்ட நாடு, குடநாடு, அருவா நாடு, சீதநாடு, கொங்கு நாடு, நாஞ்சில் நாடு, தொண்டை மண்டலம் என்று பல பிரிவுகள் இருந்தன.

ஒவ்வொரு இடத்திலும் தமிழை ஒவ்வொரு விதமாகப் பேசுவர். உச்சரிப்புகள் மாறி இருக்கும்.

மரியாதையே இல்லாத தமிழ் சென்னைத் தமிழ்.

மரியாதைக்குப் பெயர் போனது கோவைத் தமிழ்.

கொஞ்சம் ராகத்தோடு பேசுவது கரூர், ஈரோடு கொங்கு தமிழ்.

நடுத்தரமானது திருச்சி தமிழ்.

இவற்றில் பேச்சு வழக்கில் பல சொற்கள் புதிதாகக் காணப் படும். இப்படி வந்தச் சொற்களை திசைச் சொற்கள் என்று சொல்கிறோம்.

உ - ம்.
குட்ட நாட்டில் தாயை ‘’தள்ளை’’ என்பார்கள்.
குடநாட்டில் தந்தையை ‘’அச்சன்’’ என்பார்கள்.
அருவா நாட்டில் கிணறை ‘கேணி’’ என்பார்கள்.
சீத நாட்டில் தோழனை ‘’எலுவன்’’ என்பார்கள்.

கவிதை புனையும் போது தேவைக்கேற்ப இந்தச் சொற்களையும் உபயோகிப்பதுண்டு. இவையே திசைச் சொற்கள் ஆகும்.

04. வடசொல்.
- - - - - - - - - - - - -
இந்த வடசொல் என்பதில் எனக்கு நிறைய சந்தேகங்கள் உண்டு.

பெரும்பாலும், அவை தமிழ்ச் சொற்களாகத் தான் இருக்கும் என்பது என் கருத்து.

வடமொழி உருவாவதற்கு முன்னரே உருவான நம் தமிழில் பின்னர் தோன்றிய வடமொழிச் சொல் கலப்பு இருக்கிறது என்பதில் எனக்கு சம்மதமில்லை.

ஆனாலும், இன்று பெரும்பாலானவர்களின் நம்பிக்கையை நாம் ஒப்புக்காகவேனும் ஏற்றுக் கொள்வோம்.

சமஸ்கிருத மொழியை வடமொழி என்று குறிப்பிடுகிறோம். வடமொழியில் இருந்து வந்து தமிழில் கலந்து வழங்கும் சொற்களே வடசொற்கள் ஆகும்.

உ - ம்:
சுகந்தம், சுதேசி, ஞானம், வீரம், புராணம், சந்தோசம் போன்ற சொற்கள்.

இலக்கணத்தில் வரும் இந்த நான்கு சொற்கள் தவிர ஐந்தாவதாக இன்னொரு சொல்லும் உண்டு. அது மொழிக் கலப்பில் உருவான சொற்கள்.

தமிழில் இருந்து தெலுங்குக்குப் போய் பிறகு தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்த சொற்கள்.

உ - ம்:
அங்காடி, தாரம்.

அங்காடி என்றால் கடை, கடை வீதி. தமிழில் #நாளங்காடி என்று தினசரி உள்ள பகல் கடையையும்,சந்தையையும் #அல்லாங்காடி என்று இரவு நேரக் கடையை, சந்தையையும் இலக்கியங்கள் மட்டும் பேசுகின்றன.

நாம் உபயோகிப்பதில்லை. அங்காடி இன்னமும் கடையைக் குறிக்கும் சொல்லாக, சற்றே சிறு மாறுதலுடன், #அங்கிடி என்று  தெலுங்கில் உபயோகத்தில் உள்ளது.

#தாரம் என்றால் தமிழில் மனைவி. தமிழ் அகராதி அனைத்திலும் தாரம் என்றால் மனைவி என்றே பொருள் சொல்லப் பட்டிருக்கிறது. இதை வடசொல் என்றும் கூறுகின்றனர்.

#காட்சி என்கிற தமிழ் சொல் #காக்ஷி என்று வடசொல்லில் மாறியது போலவே இந்த தாரமும் வடசொல்லாகி மீண்டும் தமிழுக்கு வந்திருக்க வேண்டும்.

தாரத்தின் தமிழ் வேர்ச் சொல் தரு - கொடு என்ற பொருளில் கணவன் மனைவிக்கு, ''தன்னில் பாதி இவள் என்ற உறவு பந்தம் கொடுப்பதால்'' தாரம் என்றானது என்றும் சொல்கிறார்கள்.

ஆனால், தெலுங்கில், தாரம் என்றால் #கயிறு என்று பொருள் படும்.

தாலிக் கயிறு கட்டி, அதனால் ஏற்பட்ட பந்தத்தால் உருவான உறவே தாரமாயிற்று என்று நினைக்கிறேன். இது மொழி ஆராய்ச்சியாளர்கள் கவனிக்க வேண்டிய ஒன்று.

இன்னொரு தகவலும் சொல்கிறேன்.

எகிப்து நாட்டில் உள்ள #பிரமிடு என்ற சொல் #பெரிய_மேடு என்ற தமிழ்ச் சொல்லின் மரூஉ. 

பெரிய மேடு என்பதே பிரமிடு என்றானது என்ற ஒரு கருத்தும் உண்டு. பல நாட்டு மொழிகளில் நம் தமிழ் மொழியின் தாக்கம் இருப்பதாக மொழி ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

இதே போல ஆங்கில மொழிக் கலப்பும் நிறையவே உள்ளது.

#மாங்காய் என்கிற தமிழ்ச் சொல்லே Mango ஆனது. #அரிசி - ரிசி - யாகி ரைஸ்(Rice) ஆனதாக ஒரு கருத்தும் உண்டு.

இப்படி தமிழில் இருந்து ஆங்கிலத்துக்குப் போனச் சொற்கள் அதிகம்.

இதுவரை சொற்களைப் பற்றிப் பார்த்தோம். இந்த சொற்களில் நான்கு வகைகள் உண்டு.

இனி சொல்லின் வகைகளைப் பார்ப்போம்.

இலக்கண அமைப்பின் படி சொற்களை
01. #பெயர்ச்_சொல்,
02. #வினைச்_சொல்,
03. #இடைச்_சொல் மற்றும்
04. #உரிச்_சொல்

என்று நான்காகப் பிரிகிறோம். அவற்றைப் பற்றி அடுத்த பாடத்தில் பார்ப்போம்.



Comments

Popular posts from this blog

விருத்தம் எழுதுவது எப்படி (இரா.மீனாட்சிசுந்தரம்)

2.ஹைக்கூ கவிதைகள் (சூழல் - இரவில் உலகம்)

16.வெண்பா இலக்கணம்(அகன்)