6.எளியமுறை தமிழ் இலக்கணம்
எளியமுறை இலக்கணம் - 06.
🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀
இனிய வணக்கம்.
#திணைகளைப் பற்றிக் காண்போம்.
சொற்களில் இரு திணைகள் உண்டு.
ஒன்று #உயர்திணை.
இதில் மக்கள், தேவர், நரகர் ஆகியோர் அடங்குவர்.
மற்றொன்று #அஃறிணை.
மக்கள், தேவர், நரகர் ஆகியோரைத் தவிர்த்து உலகில் இருக்கும் உயிர் உள்ளவை, உயிர் அற்றவை யாவும் அஃறிணை எனப்படும்.
அடுத்தது பால்.
- - - - - - - - - - - - - -
ஆவின் பால், ஆரோக்யா பால், அமலா பால், அப்பு பால் என்றோ, பொருட்பால், அறத்துப் பால், இன்பத்துப் பால் என்றோ நினைத்துக் கொள்ளக் கூடாது.
இது வேறு #பால். இந்தப் பால் #உயர்திணை மற்றும் #அஃறிணையைக் குறிக்க மட்டுமே பயன்படும் பால் ஆகும்.
#ஆண்பால், #பெண்பால், #பலர்பால் ஆகிய மூன்று பால்களும் உயர்திணை ஆகும்.
அவன், அவள், அவர், அவர்கள் போன்றவை.
#ஒன்றன்பால், #பலவின்பால் ஆகிய இரண்டு பால்களும் அஃறிணை ஆகும்.
அது, இது, எது, அவை, இவை, எவை போன்றவை.
அதற்கடுத்து எண்ணிக்கை.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
ஒன்று என்கிற எண்ணைக் குறிப்பது #ஒருமை ஆகும்.
இரண்டும் இரண்டுக்கு மேற்பட்ட அனைத்தும் #பன்மை ஆகும்.
இவற்றைப் பின்வருமாறு காட்டலாம்.
கந்தன் வந்தான் - உயர்திணை. ஆண்பால். ஒருமை.
மங்கை வந்தாள் - உயர்திணை. பெண்பால். ஒருமை.
தேவர்கள் வந்தனர் - உயர்திணை. பலர்பால். பன்மை.
குதிரை ஓடியது - அஃறிணை, ஒன்றன்பால், ஒருமை.
குதிரைகள் ஓடியது - என எழுதக் கூடாது. #ஓடின என்பதே சரி.
பூக்கள் மலர்ந்தன - அஃறிணை, பலவின்பால், பன்மை.
பூ மலர்ந்தன - என எழுதக் கூடாது. #மலர்ந்தது என்பதே சரி.
ஒருமை, பன்மையை வினைச் சொற்களும் வித்தியாசப் படுத்திக் காட்டும்.
அடுத்தது இடம்.
- - - - - - - - - - - - - -
இடம் மூன்று வகைப் படும். அவை, தன்மை, முன்னிலை, படர்க்கை என்பன.
01. #தன்மை:
பேசுகிறவர் தன்னைக் குறிப்பிட்டுக் கொள்வது #தன்மை ஆகும்.
இதிலும் ஒருமை, பன்மை உண்டு.
உ - ம்:
நான் - ஒருமை, நாம், நாங்கள் - பன்மை
02. #முன்னிலை:
பேசுகிறவர் தன் முன்னால் நிற்பவரைக் குறிப்பிடுவது முன்னிலை ஆகும்.
இதிலும் ஒருமை, பன்மை உண்டு.
உ - ம்:
நீ - ஒருமை, நீங்கள் - பன்மை,
நீர் - இலக்கணப் படி பன்மையாகவே கருதப் படுகிறது.
எனினும், பேச்சு வழக்கில்
நீர் - இது ஒருமைக்கும், பன்மைக்கும் இடைப் பட்ட ஒன்றாகக் கருதப் படுகிறது. சரியாகச் சொல்வதென்றால் சற்றே மரியாதைக் குறைவான பன்மையாகத் தற்காலத்தில் எண்ணப் படுகிறது.
திருநெல்வேலித் தமிழில், ‘’நீர், ஓய்…’’ போன்ற சொற்கள் பிரபலம்.
பாஞ்சாலங்குறிச்சி மன்னனான வீரபாண்டிய கட்டபொம்மனை, #நீர் தான் வீரபாண்டிய கட்டபொம்மன் என்பவரோ…?’’ என்று ஜாக்ஸன் துரை கேட்டதாக வரலாறு உண்டு.
03. #படர்க்கை:
பேசுகிறவர் தன்னையோ, தன் முன்னால் உள்ளவரையோ குறிப்பிடாமல் அருகில் அல்லது தொலைவில் உள்ளவரைக் குறிப்பிடுவது படர்க்கை ஆகும்.
உ - ம்:
இவன், இவள், இவர்கள், இது, இவை. அவன், அவள், அவர்கள், அது, அவை போன்றவை.
இவை எல்லாம் உங்களுக்குத் தெரிந்தவை தான். இதுவரை நான் உங்களுடன் பகிர்ந்து கொண்டவை #ஒரு_நினைவூட்டல்_தான்.
அஸ்திவாரம் முடிந்தது. இனிமேல் தான் கவிதை, உரைநடை போன்றவற்றை எழுதத் தேவையான இலக்கணத்தைப் படிக்கப் போகிறோம்.
நகைச்சுவை நடிகர் வடிவேலு Building strong. Basement weak என்று சொல்வதைப் போல
#Basement(#இலக்கணம்) #weak ஆக இருந்தால் #Building(#கவிதை) #strong ஆக இருக்காது.
கவிதைகளின், குறிப்பாக மரபுக் கவிதைகளின் Basement - அஸ்திவாரமே இலக்கணம் தான்.
இன்றைக்கு மரபுக் கவிதை எழுதுபவர்கள் வெகு குறைவு. அதிலும், கவித்துவத்துடன் எழுதுபவர்கள் வெகுவெகுக் குறைவு.
புதுக் கவிதைகள் பற்றி எந்தக் கருத்தும் சொல்ல விரும்பவில்லை.
அவற்றுக்குமான இலக்கணத்தைத் தனியாக எழுதலாம் என்று இருக்கிறேன்.
Comments
Post a Comment