4.எளியமுறை தமிழ் இலக்கணம்


 எளியமுறை இலக்கணம்  - 04.
🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 

இனிய வணக்கம்.

இலக்கணப் பாடத்தைத் தொடர்வோமா….

‘’உயிர்’’ எழுத்தை ‘'ஆண்’’ எழுத்து என்றதும், ‘’மெய்’' எழுத்தைப் ‘’பெண்’’ எழுத்து என்றதும், ‘’உயிர்மெய்’’ எழுத்தை ‘’குழ்ந்தை’’ என்றதும் ‘’ஆய்த’’ எழுத்தை ‘திருநங்கை’’ எழுத்து என்றதும் என் சொந்த வர்ணனை.

இதனை எந்த இலக்கண நூலிலும் தேடாதீர்கள்.

இந்த இடத்தில் ஒரு பொது அறிவு விஷயத்தைப் பேசுவோமா?

ஆண் பெண் சேர்க்கையில் தான் பெண் கருவுறுகிறாள்.

முதலில் ‘’மெய்’’ ஆகிய கரு பெண்ணில் உருவாகிறது. ‘’உயிர் அணுக்கள்’’ ஆணிடம் இருக்கிறது.

‘'மெய்’’ ஆகிய கரு உருவான பிறகு அது, ‘’உயிரோடு’ சேர்ந்து ''உயிர்மெய்’’யான குழந்தை உருவாகிறது. 

தமிழ் மொழியின் எழுத்து உருவாக்கம் ஜனன இரகசியத்தோடு ஒத்துப் போவது வியப்பாகவும், விந்தையாகவும் இருக்கிறதல்லவா?

வேறு எந்த மொழியிலாவது இது போல் ‘’உயிர்மெய்’’ சேர்க்கை இருக்கிறதா என்று தெரியவில்லை.

இதைத் தான் ஆன்மிகத்தில் #சக்தி(ஆற்றல்) இல்லாமல் #சிவம்(அசைவற்ற ஜடம்) இயங்காது. 

சிவம் இல்லாமல் சக்தி வெளிப் படாது. சக்தி(உயிர் - ஆற்றல்) அழிவில்லாதது. சிவம்(அசைவற்ற ஜடம் - உடல்) அழியக் கூடியது என்று சொல்லுகிறார்கள் போலிருக்கிறது.

 எப்படி உயிரினம் தோன்றலின் ஆரம்பம், ஆதியை கணிக்க முடியவில்லையோ அப்படியே தமிழ் மொழியின் ஆதியையும் கணிக்க முடியவில்லை என்றே நான் நினைக்கிறேன்.

நம் தமிழ் மொழி மட்டும் தான் வாழ்வியலோடு ஒத்துப் போகும் மொழியாக இருக்கிறது. செம்மொழியாகத் திகழ்கிறது என்பது தமிழர்களாகிய நாம் எல்லோரும் பெருமைப் பட வேண்டிய விஷயம் அல்லவா.

இதைப் படிக்கும் போது படிப்பவர்கள் நம் தமிழ்த் தாயைப் பாராட்டி எழுந்து நின்று ஒருமுறை கைத்தட்டி விட்டு, பிறகு, அமர்ந்து மேலே படியுங்கள்.

மெய்யெழுத்துகளை #ஒற்றெழுத்து அல்லது #புள்ளி_எழுத்து என்றும் கூறுவர்.

மெய்யெழுத்துகளின் உச்சரிப்பு கால அளவு #அரை_மாத்திரை. அதாவது, #அரை_நொடி அளவு ஆகும்.

பெரும்பாலும் எழுத்து எண்ணிக்கை கணக்கிடும் போது மெய்யெழுத்துக்கு அலகு இடப் படாது. மெய்யெழுத்தை தவிர்த்து விடுவார்கள்.

மெய்யெழுத்துகளை மூன்று வகைப் படுத்தலாம்.

அவை, 01. வல்லினம், 02. மெல்லினம் மற்றும் 03. இடையினம் ஆகும்.

.01. #வல்லினம்.
இதனை வல்லினம், #வங்கணம் மற்றும் #வலி என்றும் குறிப்பிடுவர்.

இந்த எழுத்துகளின் உச்சரிப்பு வலுவான மூச்சுக் காற்று கொடுக்கும் #அழுத்தத்தால்_வலிமையாக_இருப்பதால் வல்லினம் ஆனது.

வல்லின எழுத்துகளின் பிறப்பிடம் #மார்பு ஆகும்.

க், ச், ட், த், ப், ற் - இவை ஆறு எழுத்துகளும் வல்லின எழுத்துகளாகும்.

இவையோடு 12 உயிர் எழுத்துகளும் புணர்ந்து உருவாகும் 72 எழுத்துகளும் சேர 78 எழுத்துகள் வல்லின எழுத்துகள் ஆகும்.

.02. #மெல்லினம்.
இதனை மெல்லினம், #மெங்கணம் மற்றும் #மெலி என்று குறிப்பிடுவர்.

மெல்லிய ஓசைக் கொண்ட இந்த எழுத்துகளை உச்சரிக்க #அதிக_முயற்சி_தேவையில்லை ஆதலால் மெல்லினம் ஆனது.

மெல்லின எழுத்துகளின் பிறப்பிடம் #மூக்கு ஆகும்.

ங், ஞ், ண், ந், ம், ன் - இவை ஆறு எழுத்துகளும் மெல்லின எழுத்துகளாகும்.

இவையோடு 12 உயிர் எழுத்துகளும் புணர்ந்து உருவாகும் 72 எழுத்துகளும் சேர 78 எழுத்துகள் மெல்லின எழுத்துகள் ஆகும்.

.03. #இடையினம்.
இதனை இடையினம், #இடைக்கணம் மற்றும் #இடை என்றும் குறிப்பிடுவர். 

இந்த எழுத்துகளை ஒலிக்கத் தேவையான முயற்சி நடுத்தரமாக இருக்கும். ஒலி ஓசையும் கடினமாகவோ அல்லது மென்மையாகவோ இல்லாமல் மத்திமமாக இருக்கும்.

வல்லினம் பிறக்கும் மார்புக்கும், மெல்லினம் பிறக்கும் மூக்குக்கும் இடைப்பட்ட இடமான #கழுத்தில் பிறப்பதால் இவ்வெழுத்துகள் இடையினம் ஆனது..

ய், ர், ல், வ், ழ், ள் - இவை ஆறு எழுத்துகளும் இடையின எழுத்துகளாகும்.

இவையோடு 12 உயிர் எழுத்துகளும் புணர்ந்து உருவாகும் 72 எழுத்துகளும் சேர 78 எழுத்துகள் இடையின எழுத்துகள் ஆகும்.

ஆக, உயிரெழுத்து - 12, மெய்யெழுத்து - 18 மற்றும் உயிர்மெய் எழுத்து - 216 அத்தோடு ஓர் ஆய்த எழுத்தும் சேர தமிழ் எழுத்துகள் மொத்தம் - 247 ஆகும்.

#சொல்லுக்கு_முதலில்_வராத_எழுத்துகள்:
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

ட, ண, ர, ல, ழ, ள, ற, ன என்னும் எட்டு மெய் எழுத்துகளும் மொழிக்கு முதலில் வருவதில்லை.

ஆனால் இந்த எழுத்துகளைக் குறிக்கும் போது இவை மொழிக்கு முதலில் வரும்.

‘ட’ என்னும் எழுத்து, ‘ண’ என்னும் எழுத்து என்று எழுத்தைக் குறிப்பிடும் போது இவையும் முதலில் வரும். மற்றபடி வாரா.

தமிழ்மொழி பேசும் மக்கள் பிறமொழி பேசுகிறவர்களுடன் கலந்து பழகி வாழ்கின்றனர். அவ்வாறு அவர்களுடன் பழகும்போது பிறமொழிச் சொற்களையும் பயன்படுத்துகிறார்கள்.

அப்படிப் பேச்சுவாக்கில் தமிழ் மொழியில் நுழைந்த பிற மொழிச் சொற்கள் பலவும் தமிழ் மொழியில் பயன்பாட்டில் உள்ளன. அவற்றையும் தமிழ் மக்கள் பயன்படுத்துகிறார்கள். 

அப்படிப் பட்ட பிற மொழிச் சொற்களில் ட, ண, ர, ல, ற என்னும் ஐந்து மெய்யெழுத்துகளும் முதலில் வருகின்றன.

ராமன், ரகு
 லலிதா, லதா

முதலான பிறமொழிப் பெயர்களைத் தமிழில் பயன்படுத்துகிறோம். இவ்வாறு பிற மொழிப் பெயர்களைத் தமிழ் மொழியில் பயன்படுத்தும் போது அவற்றைத் தமிழ் மொழியின் இயல்புக்கு ஏற்பவே காலங்காலமாகப் பயன்படுத்தி வருகிறோம்.

#ரகர வருக்க எழுத்துகளும், #லகர வருக்க எழுத்துகளும் தமிழ்மொழியில் சொல்லுக்கு முதலில் வருவதில்லை என்பதை அறிந்து அவற்றுக்கு முன் ‘இ’ என்னும் எழுத்தைச் சேர்த்து அப்பெயர்களை எழுதுகிறோம்.

ராணி - இராணி.
ரவி - இரவி.
ராமன் - இராமன்.
லலிதா - இலலிதா.
லாபம் - இலாபம்.
லாடம் - இலாடம்.

மேலே ‘இ’ என்னும் எழுத்தைச் சேர்த்தது போல் ‘அ’ என்னும் எழுத்தைச் சேர்த்துப் பயன்படுத்துவதும் உண்டு.

ரங்கன் - அரங்கன்.

இ, அ என்னும் எழுத்துகளைச் சேர்த்துப் பயன்படுத்துவது போல் ‘உ’ என்னும் எழுத்தைச் சேர்த்தும் பிறமொழிப் பெயர்களைப் பயன்படுத்துவது உண்டு.

ரோம் - உரோம்
ரோமம் - உரோமம்
ரொட்டி - உரொட்டி

இவ்வாறு பிற மொழியிலிருந்து பெற்றுப் #பயன்படுத்தும்_சொற்கள்_அனைத்தும்_பெயர்ச்_சொற்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளுதல் வேண்டும்.
அதே சமயம், ரகு - வை எழுதும் போது ‘இரகு’ என்று எழுதினாலும் உச்சரிக்கும் போது ‘ரகு’ என்றே உச்சரிக்க வேண்டும்.

பிற மொழிப் பெயர்களையும் நம் தமிழ் மொழியின் தன்மைக்கு ஏற்பவே அமைத்துப் பயன்படுத்துகிறோம். பிற மொழிப் பெயர்களைத் தேவை கருதிப் பயன்படுத்துவதைப் போல் #பிற_மொழி_வினைச்_சொற்களையும், #பிற_சொற்களையும்_பயன்படுத்தக்_கூடாது.

எழுத்தைப் பற்றி இதுவரை நான் சொல்லியது ஒரு சதவிகிதம் கூடக் கிடையாது. தமிழ் மொழியைப் பற்றியும், அதன் தொடக்கத்தைப் பற்றியும் பேச நமக்கு ஆயுள் போதாது. நாம் பயிலப் போகும் இலக்கணத்திற்கு இது போதும் என்று நினைக்கிறேன்.

இதற்கு மேல் ஆழமாக இலக்கணக் கடலில் இறங்கினால் அலைகள் நம்மை அடித்துக் கொண்டு போய் விடும்.

ஆகவே இத்துடன் நிறுத்திக் கொண்டு அடுத்து #சொல்லதிகாரத்தைப் பார்ப்போம்.

Comments

  1. அருமை வாசிக்க வாசிக்க ஆசையாக உள்ளது நன்றி ஐயா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

விருத்தம் எழுதுவது எப்படி (இரா.மீனாட்சிசுந்தரம்)

2.ஹைக்கூ கவிதைகள் (சூழல் - இரவில் உலகம்)

16.வெண்பா இலக்கணம்(அகன்)