லிமரைக்கூ விளக்கம் (அகன்)
லிமரைக்கூ - எளிய விளக்கம்.
☆♡☆♡☆♡☆♡☆♡☆♡☆♡☆♡☆♡
இனிய வணக்கம்.
#லிமரைக்கூ என்பது மூன்று வரிகள் கொண்ட கவிதை வடிவம்.
இது முதல் வரியிலும், மூன்றாவது வரியிலும் #இயைபுத்_தொடையுடன் அமையும் #குறும்பா ஆகும்.
இதனை #இயைபுத்_துளிப்பா என்றும் அழைப்பர்.
ஆங்கில மொழியில் ஹைக்கூ மற்றும் லிமரிக் வடிவங்களை இணைத்து ஒரு கலப்பு இனக் குறும்பா கண்டுபிடிக்கப் பட்டது.
முதன்முதலில் இதை உருவாக்கியவர் டெட் பாக்கர் (Ted Pauker) என்னும் கவிஞர்.
இவர் தம் கலப்பு இனக் குறும்பாவுக்கு லிமரைக்கூ(லிமரிக் + ஹைக்கூ) என்று பெயரிட்டார்.
பாடம் தொடங்கும் முன்னர் இயைபுத் தொடை என்றால் என்னவென்று பார்க்கலாமா…
இயைபுத் தொடை என்றால் என்ன…? சந்தேகம் வருகிறதல்லவா…!
சொல்கிறேன். இது செய்யுள் இலக்கணத்தின் பாற்பட்டது. நமக்கு இங்கே லிமரைக்கூ. வடிவம். அவ்வளவு தான்.
ஒரு லிமரைக்கூவில் ஒன்றுக்கு மேற்பட்ட அடிகளின் (நமக்கு மூன்று அடிகள் தானே) #இறுதி_எழுத்து அல்லது #இறுதிச்_சொல் ஒத்து வரும் போது அஃது இயைபுத் தொடை என்று கூறப் படுகின்றது.
01. ஒன்றுக்கு மேற்பட்ட அடிகளின் #இறுதி_எழுத்துகள்_ஒன்றி_வருதல்.
02. ஒன்றுக்கு மேற்பட்ட அடிகளின் #இறுதிச்_சொற்கள்_ஒன்றி_வருதல்.
என்பது தமிழ் இலக்கணம்.
ஆங்கிலத்தில் இதனை Ryme என்பார்கள்.
ஒத்த உச்சரிப்பே Ryme என்கிற இயைபுத் தொடை ஆகும்.
லிமரைக்கூவைப் பொறுத்தவரையில் நமக்கு #இறுதிச்_சொற்கள்_ஒன்றி_வந்தால்_அழகாக_இருக்கும்.
அதனால் இரண்டாவது விதிமுறையை மட்டும் எடுத்துக் கொள்வோம்.
முதல் விதிமுறையை இயன்றவரை லிமரைக்கூவின் சுவை கருதித் தவிர்ப்போம்.
எடுத்துக் காட்டுடன் சொன்னால் இன்னும் நன்றாக விளங்கும் அல்லவா…
படித்தான் - முடித்தான் - கடித்தான்.
நடித்தான் - வடித்தான் - பிடித்தான்.
செய்தது - பெய்தது - கொய்தது.
மொய்த்தது - பொய்த்தது - துய்த்தது.
சொல்லுகிறான் - வெல்லுகிறான் - கொல்லுகிறான்.
துள்ளுகிறான் - தள்ளுகிறான் - அள்ளுகிறான்.
போன்றவையே இயைபுத் தொடை ஆகும்.
இதே சொற்கள் பாடலின் முதல் சீராக வந்தால் அதுவே ‘’எதுகைத் தொடை’’ ஆகிறது.
பாடலின் இறுதிச் சீராக வந்தால் அதுவே ‘’இயைபுத் தொடை’’ ஆகிறது.
வந்தான் - கொடுத்தான் - செந்தேன் - நொந்தேன் - முடித்தான் என கடைசி இரண்டு எழுத்துகள் மட்டும் ஒன்றி வர லிமரைக்கூ எழுதினாலும் நன்றாகவே இருக்கும்.
சரி, இதற்கு முன்னர் #லிமரிக் - என்னும் கவிதை வடிவத்தைப் பார்த்தோம் அல்லவா.
ஐந்து அடிகளால் ஆன லிமரிக் கவிதையின் சிறப்பு 1, 2 மற்றும் 5 ஆம் அடிகளின் ஈற்றுச் சொல் #இயைபுத்_தொடை பெற்று வரும்.
அதே போல 3 மற்றும் 4 ஆம் அடிகள் மற்றச் சொற்களை விட ஒரு சொல் குறைந்து ஈற்றுச் சொல் இயைபுத் தொடை பெற்று வரும் என்று படித்தோம்.
அவ்வண்ணமே, ஹைக்கூ வடிவத்தையும் பார்த்தோம்.
மூன்றே அடிகளால் ஆன ஹைக்கூ கவிதைக்கு மட்டும் கொஞ்சம் சிக்கலான 5/ 7/ 5 அசைகள் என்பதையும் இன்னும் பல விதிமுறைகளையும் கண்டோம். அவற்றை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.
இப்போது, லிமரைக்கூ கவிதையின் எளிய இலக்கணத்தைப் பார்ப்போம்.
ஹைக்கூவைப் போலவே லிமரைக்கூவும் மூன்று அடிகளால் ஆனது.
கிட்டத் தட்ட ஹைக்கூவின் இலக்கணமான 5/ 7/ 5 அசைகள் இதற்குப் பொருந்தாவிட்டாலும் இரண்டாம் அடி சற்று நீளமாக இருப்பது கவிதைக்கு மெருகூட்டும்.
இப்படி வேண்டுமானால் சொல்லலாம்.
#கூட்டுச்_சொற்கள்_இல்லாமல்_சின்னச்_சொற்களாக
முதல் அடியில் 3 அல்லது 4 சொற்கள்
இரண்டாம் அடியில் 4 சொற்கள் சற்று நீளமாக
மூன்றாம் அடியில் 3 அல்லது 4 சொற்கள் வர எழுதலாம்.
இன்னும் எளிமையாகச் சொல்வதெனில்,
2/ 3/ 2 சொற்களிலும் எழுதலாம். ஆனால் சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொல்லச் சிரமப் பட வேண்டும்.
இந்த கவிதையின் சொல் எல்லை விதிமுறையில் சற்றுத் தளர்வு இருப்பதால் 3/ 4/ 3 சொற்கள் அல்லது 4/ 4/ 4 சொற்கள் என்று ஒரு வரையறையை வகுத்துக் கொள்ளலாம்.
படிக்கவும், கவிதை வடிக்கவும் எளிதாக இருக்கும். இசையோடும் பாடி கிண்டலடிக்கலாம்.
3/ 4/ 3 சொற்கள் அல்லது 4/ 4/ 4 சொற்களுக்கு #மிகாமல்_இருப்பது_துளிப்பாவுக்கு_அழகு_சேர்க்கும்.
குறிப்பாகச் சொல்வதென்றால் 3/ 4/ 3 சொற்கள் அமைந்த லிமரைக்கூ மிகச் சிறப்பாக இருக்கும். லிமரைக்கூவில் கண்டிப்பாகக் கூட்டுச் சொற்களைத் தவிர்க்க வேண்டும்.
முதலடியில் மூன்றாம் சொல்லும் மூன்றாம் அடியின் மூன்றாம் சொல்லும் இயைபுத் தொடை பெற்று வர வேண்டும்.
இயைபுத் தொடைக்காகச் சுத்தத் தமிழ் என்றில்லாமல் பேச்சு வழக்குச் சொற்களையும் பயன் படுத்தலாம்.
‘சென்னிமலைக் கிளியோப்பாத்ராக்கள்’ என்ற பெயரில் ஈரோடு தமிழன்பன் வெளியிட்ட நூலில் வந்த எளிமையான லிமைரைக்கூவைப் பார்ப்போம்.
ஊது வத்திச் #சின்னம்
கட்சி வென்று கோட்டை பிடித்தும்
நாற்றம் போகலை #இன்னும்.
3/ 4/ 3 சொற்கள் இருக்கின்றன.
சின்னம் - இன்னும் என இயைபுத் தொடை இருக்கிறது.
கூடுதலாக முக்கியமான இன்னொன்றும் இருக்கிறது.
அது தான் அவர் பதிவு செய்திருக்கும் உள்ளார்ந்த #நக்கலான, #நையாண்டியான_கிண்டலடிக்கும் பொருளும்,
அதில் , கவிஞனின் சமுதாய அக்கறையுடன் கூடிய தார்மீகக் கோபமும் வெளிப்படுகிறது
புரிந்தவர்களுக்கு #செவிட்டில்_அடித்தது_போல_இருக்கும்.
முதல் அடியில் #ஊதுபத்தி_மணக்கிறது.
மூன்றாம் அடியில் அரசியல்வாதிகள் வென்று ஆட்சியைப் (கோட்டையைப்)பிடித்த பின்னும் பழைய #ஊழல்_நாற்றம்_போகலை(பேச்சு வழக்குச் சொல்) என்கிறார்.
என்ன ஒரு நக்கல், நையாண்டி. கூடவே ஆட்சியாளர்களுக்குச் சவுக்கடி.
‘’#இக்கரைக்கு_அக்கரை_பச்சை’’ என்பார்கள்.
உலகில் தன் வாழ்வெல்லாம் துன்பம் என்றும், பிறர் வாழ்வெல்லாம் இன்பம் என்றும் கருதி மயங்குவோர் பலர்.
தரமாகக் கவிதை எழுதியிருந்தும், எதுகை மோனை வரம்போடு எழுதுவது தான் கவிதை என்று பிறர் கருதுவதை விரும்பியவன், யாப்புக் கற்க முயன்றதாக, இன்னொரு கவிதையில் எடுத்துரைக்கின்றார் தமிழன்பன்.
கவிதை எல்லாம் #விற்றான்
கைக்கு வந்த காசைக் கொண்டு
தேமா புளிமா #கற்றான்.
இது எப்படி இருக்கிறது….
இவ்வளவு சொன்ன பின்னர் நானும் சில லிமரைக்கூ எழுதுவது தானே முறையானது.
உலக அரசியலை #வாசித்தான்
வாசித்து முடித்துக் கிளம்பும் பொழுது
சில்லறைக் காசுக்கு #யாசித்தான்.
3/ 4/ 3 சொற்களில் எழுதி இருக்கிறேன்.
வாசித்தான் - யாசித்தான் என இயைபுத் தொடை இருக்கிறது.
உலக அரசியலை அக்கு வேறு ஆணி வேறாக அலசியவனின் பேரறிவு கடைசியில் சில்லறை காசுக்கு யாசிக்கும் நிலையில் தான் இருக்கிறது. சிரிப்பு வருகிறதா….!
படித்தவனின் நிலையைச் சொல்லும் இந்த லிமரைக்கூவில் நக்கல், நையாண்டி, கிண்டல் இவற்றுடன் பொட்டில் அடித்தது போல ஒரு கருத்தும் இருக்கிறதா…
துள்ளுகிற மாடு பொதி #சுமக்காது
என்னதான் சொன்னாலும் சுட்டுப் போட்டாலும்
சொந்தமாய்ச் சிந்திக்கும் வழக்கம் #நமக்கேது.
சுமக்காது - நமக்கேது என இயைபுத் தொடை இருக்கிறது.
இது, 4/ 4/ 4 சொற்களில் அமைந்த லிமரைக்கூ.
சாதனை செய்பவன் #போதிப்பதில்லை
சாதிக்கத் தெரியாமல் ஊரெல்லாம் சுற்றிவந்து
போதிப்பவன் எதையும் #சாதிப்பதில்லை.
போதிப்பதில்லை - சாதிப்பதில்லை என இயைபுத் தொடை இருக்கிறது.
இது, 3/ 4/ 3 சொற்களால்(சற்று பெரிய சொற்கள்) ஆன லிமரைக்கூ..
லிமரைக்கூவில் நகைச்சுவையும் இழையோட வேண்டும். சமுதாய அக்கறையுடன் கூடிய தார்மீகக் கோபமும் கொப்பளிக்க வேண்டும்.
அவ்வளவு தான்ங்க லிமரைக்கூ…. மிகவும் எளிமையான துளிப் பா வடிவம்.
எனவே, பின்னூட்டத்தில் நீங்களும் எழுதிப் பழகலாமே... பதியலாமே…
…………...................…- ‘‘அகன்’’ @ அனுராதா கட்டபொம்மன்.
Comments
Post a Comment