லிமரிக் விளக்கம் (அகன் )


.’’லிமரிக்’’ என்னும் கவிதை வடிவம்.
<^> - <^> - <^> - <^> - <^> - <^> - <^> - <^>

சமீபத்தில் #ஹைக்கூ_கவிதையைப் பற்றி ஒரு பதிவு செய்திருந்தேன்.

அடுத்து, #லிமரைக்கூ_கவிதையைப் பற்றி எழுதலாம் என்று நினைத்தேன்.

ஆனால், லிமரைக்கூ #லிமரிக்_என்ற_தகப்பனுக்கும்_ஹைக்கூ என்ற தாய்க்கும் பிறந்த குழந்தை என்பதால் தகப்பனான லிமரிக் பற்றி எழுதி விட்டு லிமரைக்கூவை எழுதலாம் என்று நினைக்கிறேன்.

லிமரிக் என்னும் கவிதை வடிவம்.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

‘’லிமரிக்’’ என்பது ஆங்கிலத்தில் தோன்றிய ஐந்து அடிகள் கொண்ட சிறிய கவிதை வகையாகும்.

நாம் தமிழில் #இயைபுத்_தொடை’ என்று சொல்வதை ஆங்கிலத்தில் #ரைம்(Rhyme) என்று சொல்கிறார்கள்.

வானம் தனியழகு.
அதில் வலம்வரும் பூமியில் பகலிரவு.
நானே முழுநிலவு.
இன்ப நதிக்கரை யில்என் சுகக்கனவு.

இஃது, ஓர் இசைப் பாடலுக்காக நான் எழுதியப் பல்லவி.

இதில், முதல் அடியின் இறுதி சீர் #தனியழகு - ‘’உ’’கரத்தில் முடிகிறது.

அடுத்து, 2, 3 மற்றும் 4 ஆம் அடிகளின் இறுதி சீரைப் பாருங்கள் #பகலிரவு. #முழுநிலவு மற்றும் #சுகக்கனவு என இறுதி எழுத்துகள் - வு - என்று முடிகிறதா.?

இது தான் இயைபுத் தொடை. அதாவது, ரைம்(Rhyme). பாடிப் பாருங்கள், பாடச் சுகமாக இருக்கும்.

சரி, மீண்டும் ''லிமரிக்'' கவிதைக்கே வருவோம்.

‘'லிமரிக்'’ கவிதையின் தன்மை.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

லிமரிக் கவிதை #ஐந்து_அடிகளால் ஆனது.

அதில், 1, 2 மற்றும் 5 வது அடிகளில் ஒத்த ஓசையுடைய ரைம்(Rhyme) களும்,

இடைப் பட்ட 3 மற்றும் 4 வது அடிகளில் தம்முள் ஒத்த ஓசை நயமுடைய ரைம்(Rhyme) களும் வரும் வண்ணம் அமைந்திருக்கும்.

ஐந்தாவது அடியாக, பெரும்பாலும் முதல் அடியே மீண்டும் வந்திருக்கும்.

உ - ம்:
காக்காக் கடிகடிச்ச ஜவ்வு மிட்டாய்.
தின்னுட்டு விட்டாரையா கொட்டாய்.
காசுக்கு ரெண்டு, ஓசிக்கு ஒன்னு
வாங்கிக் கோ,என் சின்னக் கண்ணு.
காக்காக் கடிகடிச்ச ஜவ்வு மிட்டாய்.

இதில் 1, 2 மற்றும் 5 வது அடிகளில் #மிட்டாய், #கொட்டாய், #மிட்டாய் என்ற இயைபுத் தொடை வந்துள்ளது.

மற்ற 3, 4 வது அடிகளில் #ஒன்னு, #கண்ணு என்ற இயைபுத் தொடை வந்துள்ளது.

பொண்ணு பேரு என்னன்னு கேளு
கண்ணு ரெண்டும் பின்னுகின்ற ஆளு
எட்டிநடைப் போடுகிறாள்
கரகாட்டம் ஆடுகிறாள்
மனசுக்குள் கொட்டுதடி தேளு.

இதில் 1, 2 மற்றும் 5 வது அடிகளில் #கேளு, #ஆளு, #தேளு என்ற இயைபுத் தொடை வந்துள்ளது.

மற்ற 3, 4 வது அடிகளில் #போடுகிறாள், #ஆடுகிறாள் என்ற இயைபுத் தொடை வந்துள்ளது.

எடுத்துக் காட்டுப் பாடலுக்காக நான் எழுதிய பாடல்கள் இவை.

இது தான் ‘லிமரிக்’ கவிதை.

இதற்கு எந்த அசை கணக்குகளும் கிடையாது. சும்மா…. பாடும் பொழுது இசைக்குள் அடங்க வேண்டும். அவ்வளவு தான்.

இந்த வகை ‘லிமரிக்’ பாடல் பெரும்பாலும் மக்கள் கூடிக் களிக்கும் திருவிழாக்களிலும், விருந்துகளிலும் தான் பாடப் பட்டது.

இவை போன்ற நிகழ்ச்சிகளில் பாடுவதும், ஆடுவதும், நடிப்பதும், கிண்டல் செய்து பேசிக் கொள்வதும் மக்கள் இயல்பு.

மகிழ்வதும், மற்றவர்களை மகிழ்விப்பதும் மட்டுமே இந்தப் பாடலின் நோக்கமாக இருக்கும்.

அதனால் #நகைச்சுவை_உணர்வு_தான்_முதல்_இடத்தில்_நிற்கும்.

நாகரிகமாக, நாசூக்காகச் சுட்டும் #பால்_உணர்வும், #எள்ளி_நகையாடுவதுமானத் தன்மையும் கொண்ட ‘’லிமரிக்’’ நகைச்சுவைக்காக விருந்து, விழா நிகழ்ச்சிகளில் தவறாது இடம் பெற்றது.

லிமரிக் ஐரோப்பாவில் பல நாடுகளில் பரவி வளர்ந்தது.

நாமும் கூட மண விழாக்களில் பெண்ணையும், மாப்பிள்ளையையும் கிண்டல் செய்து இது போல பாடுவதுண்டு.

கல்யாணப் பந்தியில் மாப்பிள்ளை இருக்கைக்குக் கீழே அப்பளத்தை மறைத்து வைத்து அவர் அதன் மீது அமரும் போது ஏற்படும் ஓசையை வைத்துப் பாட்டுப் பாடி அவரைக் கிண்டல் செய்வது போன நூற்றாண்டு திருமணக் கேளிக்கைகளில் ஒன்று.

#முதல்_தொகுப்பு.
- - - - - - - - - - - - - - - -

எட்வர்டு லியர் இவ்வகை ஆங்கிலக் கவிதைகளைத் தொகுத்து 1846 - இல் #புக்_ஆஃப்_நான்சென்ஸ்(Book of Non - sense) என்ற பெயரில் வெளியிட்டார்.

பின்னர் மாரிஸ் பிஷப் என்ற அமெரிக்கக் கவிஞர் லிமரிக்கின் அமைப்பில் சில மாறுதல்களைச் செய்தார்.

அவர் தான் எதிர்பாராத முடிவையும் திடீர்த் திருப்பத்தையும் கொண்டதாகக் கவிதையின் இறுதி அடியை மாற்றி அமைத்தார்.

ஹைக்கூ கவிதையும் அவ்வாறு தான் இருக்கும்.

இதனால், பாடலின் சுவை கூடியது.

#பாடு_பொருள்.
- - - - - - - - - - - - -

வாழ்வின் எந்தப் பொருளையும், மக்களின் உள்ளப் பாங்கையும் அக்கவிதைகள் பாடின.

#புனிதமானவை என்று சமூகம் உயர்த்திப் பிடித்தவற்றைக் கேலி செய்தன.

#சொல்லும்_தகுதி_அற்றவை என்று சமூகம் ஒதுக்கி வைத்தவற்றை உரத்த குரலில் பாடின.

சமூகத்தில் உள்ள #ஆபாசங்கள், #பழங்கதைகள், #மனிதர்களின்_போலித்_தனங்கள் அனைத்தையும் சுவையோடு எள்ளி நகையாடின.

இந்த வகைப் பாடல்களுக்கு நம்ம ஊர் #கரகாட்டக்_குத்துக்_பாடல்கள், #குறவன்_குறத்திப்_பாடல்கள். #தற்போதைய_பல_திரைப்படப்_பாடல்களை என்னால் மேற்கோள் காட்ட முடியும்.

மகா கவிஞர்கள் என்று போற்றப் படும் பலரும் ‘லிமரிக்’ எழுதியுள்ளனர்.

கவர்ச்சி மிகுந்த குறுங்கவிதையாக இருப்பதால் இது உலகம் எங்கும் வரவேற்பு பெற்று மிக விரைவில் பரவியது.

இதிலிருந்து இந்தக் #குறும்_பாக்களின்_நோக்கம் சிரிக்க வைப்பது, சிந்தனையைத் தூண்டுவது, சீர்திருத்தத்தை வேண்டுவது, சுவைப்புத் திறனை, இரசனையை வளர்ப்பது என உணரலாம்.

#குறும்_பா.
.- - - - - - - - -

குறும் பா என்னும் பெயர் குறுமை + பா = சின்னஞ் சிறு கவிதை என்று அதன் சிறிய வடிவத்தைக் குறிக்கிறது.

மேலும், ‘குறும்பாகப் படைக்கப் பட்டது' என்று அதன் உள்ளடக்கத்தையும் நயமாகச் சுட்டுகிறது.

அடுத்த பதிவு லிமரிக் + ஹைக்கூ இரண்டிற்கும் பிறந்த லிமரைக்கூ பற்றியது தான்.

இந்தப் பதிவின் பின்னூட்டத்தில் நீங்களும் இது போல ‘’லிமரிக்’’ எழுதலாம். முயன்று பாருங்களேன்.

.....................அகன் @அனுராதா கட்டபொம்மன் 


Comments

Popular posts from this blog

விருத்தம் எழுதுவது எப்படி (இரா.மீனாட்சிசுந்தரம்)

2.ஹைக்கூ கவிதைகள் (சூழல் - இரவில் உலகம்)

16.வெண்பா இலக்கணம்(அகன்)