2.எளியமுறை தமிழ் இலக்கணம்


 எளியமுறை இலக்கணம் - 02.
 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 

 இப்பாடத்தில் எழுத்து அதிகாரம் பற்றிப் பார்க்கலாம் ….

01. எழுத்து அதிகாரம் பகுதி - 01
+ + + + + + + + + + + + + + + + + + +

எழுத்தின் தொடக்கம்:
- - - - - - - - - - - - - - - - - - -

என் இலக்கண வகுப்புகளில் தவறுகள் வரக் கூடும். தமிழறிந்தவர்கள் அவற்றைச் சுட்டிக் காட்டினால் அடுத்தடுத்த வகுப்புகளில் அந்த குறைகளைக் களைந்து தக்க விளக்கத்திற்குப் பிறகு தொடர்ந்து எழுதுவேன்.

இது முழு இலக்கணமல்ல. நமது வாசகர்கள் அடிப்படை இலக்கணத்தைப் புரிந்து கொண்டு மரபுக் கவிதைகள் புனைய வேண்டும் என்ற ஆவலால் அவர்களுக்குப் புரியும் வண்ணம் எளிமையாக தேவையானவற்றை மட்டும் எடுத்தெழுதும் வகுப்பு என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்.

‘’அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு’’

என்று உலகப் பொதுமறையை ‘’அ’’கரத்தில் - முதல் உயிரெழுத்தில் - தொடங்கி,

‘’ஊடுதல் காமத்திற் கின்பம், அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்’’

என்று ‘’ன்’’ என்று - கடைசி மெய்யெழுத்தில் - முடித்திருக்கும் அழகைப் பாருங்கள். இடையில் தான் எத்தனை எத்தனை உயிர்மெய் எழுத்துகள்.

தமிழில் மட்டுமில்லை. இந்திய மொழிகள் அனைத்திலும் முதல் எழுத்து ‘’அ’’ என்றே நம்புகிறேன். தெரிந்தவர்கள் எனக்கும் சொல்லுங்கள்.

‘’உயிர்’’ ஓட்டத்துடன் தொடங்கிய உலகப் பொதுமறை ‘’மெய்’’யில் முடிவது அது மெய்யானது என்று சொல்லாமல் சொல்லும் அழகை சற்று நேரம் இரசித்து விட்டு பாடத்துக்குள் நுழைவோமா?

எழுத்து தோன்றுவதற்கு முன்பாக ஒலி தோன்றியது.

மூங்கில் காட்டுக்குள் நுழைந்த காற்று நாதமாக வெளிப்படுகிறது.

இடியோசை அச்சத்தை ஏற்படுத்துகிறது.

மேலிருந்து கீழ் நோக்கிப் பாயும் நீர் ஒலி எழுப்புகிறது. கைத் தட்டல், ஒன்றோடு ஒன்று மோதும் கற்கள், உலோகங்கள் என்று முதன்முதலில் ஒலி தான் தோன்றியது.

இன்றும் கூட ஒரு சில ஒலிகள் மூலம் நம் உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம். அந்த ஒலிகளுக்கு வரி வடிவம் கொடுக்க முடியாது.

ஒலியை காதால் உணர முடியும். ஒலி அதிர்வை உடலால் உணர முடியும். சுவையை நாக்கால் உணர முடியும். நறுமணத்தை நாசியால்(மூக்கால்) உணர முடியும்.

இப்படி ஐம்புலங்களால் உணரக் கூடிய அறிவு ஐந்தறிவுகள் ஆனது.

மனிதனின் ஆறாவது அறிவுக்கு அச்சாரம் போட்டது #எழுத்து என்றால் அது மிகையாகாது.

எழுத்துக்கான அவசியம் ஏற்பட்டது. ஒலி வடிவத்தை எழுத்து வடிவமாக மாற்ற முயன்றான் மனிதன். எழுத்துக்கான வித்து விதைக்கப் பட்டது.

எழுத்து எப்படி தோன்றியது?

நேருக்கு நேராகப் பார்க்கும் போது நம் எண்ணங்களை சைகைகளின் மூலமாக உணர்த்தி விடலாம். கூச்சல் மூலம் ஒலியெழுப்பி தெரியப் படுத்தி விடலாம்.

பரஸ்பரம் எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ளலாம். அப்படி இல்லாத போது நம் எண்ணங்களை இன்னொருவருக்கு எப்படி தெரியப் படுத்துவது?

‘’தேவை தான் கண்டுபிடிப்புகளின் தாய்’’ (Necessity is the mother of Invention) என்றொரு ஆங்கிலப் பழமொழி உண்டு.

தேவை ஏற்பட்ட பின்னால் எழுத்து தோன்றியது.

இப்போது இருப்பது போலவா? இல்லை.

மரத்தைக் குறிக்க மரத்தைச் சித்திரம் வரைந்தான். மிருகங்களைக் குறிக்க அந்தந்த மிருகங்களைச் சித்திரம் வரைந்தான்.

எந்தப் பொருளைக் குறிக்க வேண்டி இருந்தாலும் அதைப் பார்வை பிம்பம்(Visual image) ஆக வரைந்து காட்ட முதன் முதலாக உருவானது #சித்திர_எழுத்து.

எழுத்து தான் ஒரு மொழியின் அடிப்படைக் கூறு. மொழிக்கு வடிவம் கொடுப்பது எழுத்து. ஒலி வடிவத்துக்கு வரி வடிவம் கொடுப்பதும் எழுத்து தான்.

எழுதப் பயன்படுவதால் வரி வடிவம் எழுத்து என்று அழைக்கப் பட்டது. இன்று போல் அன்று தாள்களோ, எழுதுகோல்களோ இல்லை. தன் எண்ணங்களைக் கற்களில் கீறி எழுத்துக்குப் பிள்ளையார் சுழி போட்டான் மனிதன்.

அவ்வாறான தமிழ் எழுத்துகள் படிப்படியாக நூற்றாண்டுகள் தோறும் சில மாறுதல்களைப் பெற்று இன்றைய எழுத்து மொழியாக உரு பெற்றிருக்கின்றது.

நான் இப்போது சொல்லப் போவது நீங்கள் தெரிந்து கொள்வதற்காக மட்டுமே. குழப்பமாக இருந்தால் வருந்த வேண்டாம். விட்டு விடுங்கள். இது நம் பாடத்துக்கு அதி முக்கியமானது அல்ல.

முதலில் தொன்றிய சித்திர எழுத்து நான்கு பரிமாணங்களில் வளர்ச்சி பெற்றது.

அவை,
01. சித்திர எழுத்து.
02. தன்மை எழுத்து.
03. உணர்வு எழுத்து.
04. ஒலி எழுத்து

என நான்கு கட்டங்களாக வளர்ச்சி பெற்றது.

01. சித்திர எழுத்து:
பார்க்கும் பொருளை அப்படியே சித்திரமாக வரைந்து புரிய வைப்பது.

உ - ம்:
இன்று நமக்குக் கிடைக்கும் நதிக்கரையோர நாகரிகங்கள் சித்திர எழுத்தைத் தான் நமக்கு விட்டுச் சென்றிருக்கின்றன.

அவற்றில் ஒரு சிலவற்றை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. பலவற்றைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.

02. தன்மை எழுத்து:
ஒரு பொருளின் தன்மையை அதே போன்ற தன்மையுள்ள பொருளுடன் ஒப்பிட்டு புரிய வைப்பது.

உ - ம்:
நீல வண்ணம் உள்ள ஒரு பொருளை வானின் நீல நிறத்துடன் ஒப்பிட்டுப் புரிய வைப்பது.

பாலை வெண்மை நிறமுள்ள ஒரு பொருளைக் காட்டி புரிய வைப்பது.

இதுவே, பின்னாட்களில் #உவமைப் பொருளாக வளர்ச்சி பெற்றது. இன்று நாம் #பூமுகம் என்றும், #பால்நிலா என்றும் உவமை சொல்வது ஆதிகால நினைவின் எச்சங்கள் தான்.

03. உணர்வு எழுத்து:
கோபத்தை கண்களை உருட்டுவது போல வரைந்து புரிய வைப்பது. 

சிரிப்பை வாய் அகட்டி சிரிப்பது போல படம் வரைந்து புரிய வைப்பது.

நம் முகநூலிலேயே அந்தக் குறியீடுகளை இன்றும் காணலாம். நாகரிகங்கள் வளர்ந்த போதும் நம் தலைமுறை நினைவுகள் நம்மை விட்டு மறையவில்லை.

சின்ன வகுப்புகளில் இன்றும் கூட ‘’படம் பார்த்து கதை சொல்’’ என்று ஒரு பகுதி இருப்பது இங்கு நினைவு கூரத் தக்கது.

அதே போலப் பத்திரிகைகளில் வரும் படக் கதைகளும் நம் பழைய நினைவுகளின் தொடர்ச்சியே என்றால் மிகையாகாது.

04. ஒலி எழுத்து:
இது தான் நாம் இப்போது பயன்படுத்திக் கொண்டிருப்பது. 

குரல்வளையையும் நாக்கையும் பயன்படுத்தி நாபி கமலத்திலிருக்கும் காற்றை பிரயோகித்துப் பலவிதமான ஒலிகளை எழுப்பிப் பேசுகிறோம்.

இவை மட்டும் இல்லாமல் எழுத்துகளில் இன்னும் பலவகை உண்டு. அவை நமக்குத் தேவை இல்லை.

சுமார் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து சமவெளி நாகரிகம் நம் தமிழர் நாகரிகம் என்று ஒரு சில ஆராய்ச்சிகள் தெளிவு படுத்துகின்றன. 

இதிலிருந்தே நம் தமிழர் நாகரிகம் எவ்வளவு தொன்மையானது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

வடமொழி என்று நாம் வெறுக்கும் சமஸ்கிருதம் கூட நம் தமிழ் மொழியில் இருந்து தோன்றிய மொழியாகத் தான் இருக்கக் கூடும் என்பது என் அடிமன எண்ணம்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் எழுத்துகளுடன் ஒத்துப் போகின்றன சமஸ்கிருத எழுத்துகள். ஆகவே, வடமொழிச் சொற்கள் தமிழில் கலந்திருக்கின்றன என்ற கூற்றில் எனக்கு சம்மதமில்லை.

வடமொழியில் தான் தமிழ் சொற்கள் கலந்திருக்கின்றன என்று ஆழமாக நம்புகிறேன்.

வருங்காலத்தில் தோன்றும் மொழி ஆராய்ச்சியாளர்கள் என் கருத்தைத் தக்க சான்றுகளுடன் நிறுவினால் நான் மகிழ்வேன்.

சரி, பொதுவில் என்ன பேசிக் கொள்கிறார்கள்?

வடமொழி சொற்கள் சமீப காலங்களில் தான் தமிழில் கலந்தன என எண்ண வேண்டாம். 

தொல்காப்பியர் காலத்திலேயே தமிழ் வடமொழி கலப்பு இருந்ததைத் தொல்காப்பியம் பேசுகிறது.

உ - ம்:
பரவாயில்லை என்பதில் பாதி வடமொழி. பர்வா நஹீங் என்கிற வடமொழி சொல்லே பரவாயில்லை ஆனது.

இப்படி பல வடமொழி சொற்கலப்பு தமிழ் மொழியில் உள்ளது. அவை அச்சு அசலாக தமிழ் மொழியாகவே ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது.

இந்த ஆராய்ச்சியை இத்தோடு நிறுத்திக் கொண்டு நிகழ்கால தமிழ் எழுத்துகளுக்கு வருவோம்.

இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள். உங்களோடு சேர்ந்து நானும் தெளிவு பெறுகிறேன்.

தவறு இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன். சர்ச்சை ஆக்காதீர்கள்.

இந்தத் தொடர் புரிந்து கொள்வதற்காகவும், பரஸ்பர புரிதலுக்காகவுமே எழுதுகிறேன்.

எழுத்துகளைப் பற்றி அடுத்த பாடத்தில்  சற்று விரிவாகப் பார்க்கலாம்.

Comments

  1. அருமை இவ்வளவுகாலம் தாய்மொழியை சரியான வழியில் கற்க முடியாமை எமது கொடுமை நல்ல தகவல்கள் மிக்க நன்றியும் பாராட்டும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

விருத்தம் எழுதுவது எப்படி (இரா.மீனாட்சிசுந்தரம்)

2.ஹைக்கூ கவிதைகள் (சூழல் - இரவில் உலகம்)

16.வெண்பா இலக்கணம்(அகன்)