19.வெண்பா இலக்கணம்(அகன் )

 

வெண்பா இலக்கணம் - 19.

🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 

இனிய வணக்கம்.


இதுவரை வெண்பாவின் வகைகளான 

01. குறள் வெண்பா,

02. சிந்தியல் வெண்பா,

03. அளவியல் வெண்பா,

04. பஃறொடை வெண்பா மற்றும்

05. கலி வெண்பாக்களையும்

அவற்றின் உட்பிரிவுகளையும் பார்த்தோம்.


இவை எல்லாவற்றிலும் பொதுவான ஒரு நிலையை உங்களுக்குத் தொகுத்துத் தருகிறேன்.


01. #குறள் வெண்பா #இரண்டடிகளால் ஆனது.

02. #சிந்தியல் வெண்பா #மூன்றடிகளால் ஆனது.

03. #அளவியல் வெண்பா #நான்கடிகளால் ஆனது.

04. #பஃறொடை வெண்பா #ஐந்தடி_தொடங்கி #பன்னிரண்டு_அடிகளால் ஆனது

05. #கலி_வெண்பா_பதின்மூன்று_அடி_தொடங்கி #பேரெல்லை_கவிஞரின்_விருப்பம்_போல அமையும்.

06. அனைத்து அடிகளிலும் #இயற்சீர்_வெண்டளை மற்றும் #வெண்சீர்_வெண்டளை மட்டுமே வரும்.

07. எல்லா வகை வெண்பாக்களிலும் ஈற்றடி தவிர மற்ற அடிகள் அளவடியாகவும் (நான்கு சீர்கள்) ஈற்றடி மட்டும் சிந்தடியாகவும் (மூன்று சீர்கள்) அமையும்.

08. எல்லா வகை வெண்பாவிலும் ஈற்றடி #நாள், #மலர், #காசு மற்றும் #பிறப்பு என்னும் வாய்பாடிலேயே நிறைவடைகிறது.


ஆகவே, அடிப்படை இலக்கணம் தெரிந்தால் போதும்.


கூடுதலாக நல்ல சொல் வளம், கற்பனைத் திறன் இருக்க வேண்டும்.


பிறகென்ன…, அனைத்து வகை வெண்பாக்களிலும் புகுந்து விளையாடலாம் அல்லவா…


#கலி_வெண்பாவும், #வெண்_கலிப்_பாவும்.

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

இந்த இரண்டு பா வகைகளுக்கும் பார்வைக்கு ஒன்று போலவே இருந்தாலும் இரண்டும் வெவ்வேறானவை.


இவற்றுக்குள் என்ன வித்தியாசம் என்பதைப் பார்க்கலாம்.


#கலி_வெண்பா:

- - - - - - - - - - - - - - -

வெண்பா வகைகளில் ஒன்று என்பதையும், அஃது எவ்வண்ணம் இருக்கும் என்பதையும் கடந்த பதிவில் தெளிவாகப் பார்த்தோம்.


இயற்சீர் வெண்டளை மற்றும் வெண்சீர் வெண்டளை மட்டுமே வரும். பதின்மூன்று அடிகளுக்கு மேல் வரும்.


எனவே, இங்கு வெண்கலிப் பாவைப் பற்றிக் காண்போம்.


கலிவெண்பாட்டைக் #காரிகை_இலக்கண_நூல் வெண்கலிப் பா எனக் குறிப்பிடுகிறது.


அடிகள் #வெண்பாவைப்_போல நாற்சீர் அடிகளாகவும்,

#ஈற்றடி வெண்பாவைப் போல முச்சீர் அடியாகவும்,

#ஈற்றுச்_சீர் வெண்பாவைப் போல நாள், மலர், காசு, பிறப்பு வாய்பாடைக் கொண்டிருப்பதாலும் கலிப் பா வகைகளில் ஒன்றான வெண்கலிப் பாவுடன் #வெண்மை ஒட்டிக் கொண்டது போலும்.


#கலிவெண்_பாட்டு_அல்லது_வெண்கலிப்_பா.

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

வெண்கலிப் பா வெண்பா வகை அல்ல.

இதைக் கலிப் பாவின் வகைகளில் ஒன்றாகவே கருதலாம்.


01. #சிற்றெல்லை நான்கடிகள் கொண்டிருத்தல் வேண்டும்.

02. #பேரெல்லை எழுதுகிறவர் விருப்பம் போல.

03. அனைத்து அடிகளிலும் #ஒரே_எதுகை அல்லது #இரண்டிரண்டு_அடிகளுக்கு_ஓர்_எதுகை வர வேண்டும்.

04. அனைத்து அடிகளிலும் முதல் சீருக்கு மூன்றாம் சீர் #மோனை பெற்று வர வேண்டும்.

05. ஈற்றடி தவிர்த்த பிற அடிகள் #அளவடியாக (நான்கு சீர்கள்) இருக்க வேண்டும்.

06. #ஈற்றடி_சிந்தடியாக(மூன்று சீர்கள்) இருக்க வேண்டும்.

07. ஈற்றடி வெண்பாவைப் போல #நாள், #மலர், #காசு, #பிறப்பு எனும் வாய்பாடில் அமைய வேண்டும்.

08. அளவடிகளில் #மாச்_சீரும், #விளங்கனிச்_சீரும்_வருதல்_கூடாது.

09. #ஈற்றடி_விதிவிலக்கு. #ஈற்றடியில்_மாச்_சீரும், #விளங்கனிச்_சீரும்_வரலாம்.

10. #கலித்_தளை(#காய்_முன்_நிரை) #மிகுந்து_வருதல்_சிறப்பு.

11. #அத்தோடு, #வெண்டளையும், #ஆசிரியத்_தளையும்_விரவி_வரலாம்.


உ - ம்:

- - - - - - - -

....................ஆய்ந்தறிந்தால் அமைதிவரும்.

..................👁☆👁☆👁☆👁☆👁☆👁☆👁☆👁☆👁


...................................- வெண்கலிப் பா -


காய்ப்பழுத்தால் கனியாகும் காரெழுந்தால் மழையாகும்.

நோய்ப்பழுத்தால் சுகவீனம் நோதலின்றி மகிழ்வில்லை.

பாய்விரித்துப் படுத்தவரும் பாவவிமோச் சனம்தேடி

வாய்பிளந்(து) அலைபவரும் மாநிலத்தில் குறையவில்லை.

ஓய்தலின்றி உழைப்பவர்கள் உச்சத்தை அடைகின்றார்

சேய்தழுவும் அன்னையைப்போல் ஜெகம்புகழ வலம்வரினும்

தேய்பிறையும் வளர்பிறையும் சேதமில்லா குறைநிறையே

ஆய்ந்தறிந்தால் அமைதிவரும் ஆங்கு.

.……............................- ‘‘அகன்’’ @ அனுராதா கட்டபொம்மன்.


இந்த வெண்கலிப்பாவை உற்று நோக்குங்கள். இந்தப் பாவில் மாச் சீரோ, விளங்கனிச் சீரோ வரவில்லை.


மேற்கண்ட வெண்கலிப் பா எட்டு அடிகள் வர ஒரு விகற்பத்தால் ஆனது. கலித் தளை மற்றும் வெண்டளை விரவி வந்துள்ளது.


பல விகற்பத்தாலும் வெண்கலிப் பா எழுதலாம்.


பல விகற்பம் என்றால் இரண்டிரண்டு அடிகளுக்கு ஓரெதுகை வரத் தொடுக்கும் வெண்கலிப் பா ஆகும்.


உ - ம்:

- - - - - -

…........................சூழும் அனைத்தும் சுகம்.

............................👁☆👁☆👁☆👁☆👁☆👁☆👁


...................................- வெண்கலிப் பா -


காலமகள் சுழற்சியினால் கலைவளர்க்கும் மனிதரினம்

ஆலவிழு தினைப்போல அருகெனவே பரவுதல்போல்

நாளுமிங்கு வளர்ந்துவரும் நகலெல்லாம் அசலாகும்

ஆளுகின்ற அரசுவரும் அசரவைக்கும் #முனிவர்களால்

வாழுகின்ற உயிர்கட்கு வகைவகையாய் வளர்ச்சிதரும்.

சூழும் அனைத்தும் சுகம்.

.……............................- ‘‘அகன்’’ @ அனுராதா கட்டபொம்மன்.


மேற்கண்ட வெண்கலிப் பா ஆறு அடிகள் வர பல விகற்பத்தால் ஆனது.


இந்த வெண்கலிப் பாவை உற்று நோக்குங்கள். இந்தப் பாவில் மாச் சீரோ, விளங்கனிச் சீரோ வரவில்லை.


ஈற்றடி மாச் சீருக்கு விலக்கு பெறுவதால் #சூழும், #அனைத்தும் எனத் தேமாச் சீரும், புளிமாச் சீரும் வருகின்றன.


அளவடிகளில் விளஞ்சீர்களான கூவிளஞ்சீரும், கருவிளஞ்சீரும் வரலாம்.


முனிவர்களால் – முனி/ வர்/ களால் – புளிமாங்கனிச் சீர் வர ஒன்றா வஞ்சித் தளை அரிதாக வருகிறது.


மேலும், சீரிடை வரும் “ய், ர், ல், ழ்” எழுத்துகள் அலகு பெறாது என்ற விதிகளுக்கொப்ப இந்தச் சீரிடை வரும் ‘ர்’ அலகு பெறாது. இதை ஆசிடை இட்ட எதுகையில் விளக்கி இருக்கிறேன்.


ஆதலால், இந்தச் சீருக்கு அலகிடும் போது ‘முனிவ(ர்)களால் – முனிவகளால் என்றாகி முனி/ வக/ ளால் – நிரை நிரை நேர் - கருவிளங்காய்ச் சீராகும். எனில் அங்கு வரும் தளை கலித் தளையாகும்.

வெண்கலிப்பா இலக்கணத்தை “#கலிப்_பா” இலக்கணத்தில் மீண்டும் ஒருமுறை காண்போம்.


அடுத்த பதிவில் வெண்பாவின் இனங்களான துறை, தாழிசை மற்றும் விருத்தங்களையும் அவற்றின் வகைகளையும் தொகைகளையும் காண்போம்.


.……............................


Comments

Popular posts from this blog

விருத்தம் எழுதுவது எப்படி (இரா.மீனாட்சிசுந்தரம்)

2.ஹைக்கூ கவிதைகள் (சூழல் - இரவில் உலகம்)

16.வெண்பா இலக்கணம்(அகன்)