18.வெண்பா இலக்கணம்(அகன் )

 



வெண்பா இலக்கணம்  - 18.

🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 

 இனிய வணக்கம்.


அடுத்தது, நாம் பார்க்க இருப்பது வெண்பா வகைகளில் ஐந்தாவது வகையான #கலி_வெண்பா ஆகும்.


முழுக்க முழுக்க வெண்டளைகளைக் கொண்ட இந்தப் பாவுக்கு ஏன் கலி வெண்பா என்ற பெயர் வந்ததென்று அறிய முடியவில்லை.


வெண்பா வகைமையைச் சேர்ந்த இந்த வெண்பாவிற்கு கலி வெண்பா என்ற பெயர் வந்தது போலவே வெண்பா இலக்கணத்துக்குள் அடங்காத, வெண்பாவின் சாயலில் உள்ள ஒரு பாடல் வகைமைக்கு “#வெண்_கலிப்பா” என்று பெயரிட்டு அழைக்கின்றனர். அதை அடுத்த பதிவில்  காண்போம்.


#கலி_வெண்பா.

- - - - - - - - - - - - - - -

வெண்பாவுக்கு உரிய அனைத்து இலக்கணங்களும் பொருந்தி வர பன்னிரண்டு அடிகளுக்கு மேல் பதின்மூன்று அடிகளில் தொடங்கி எத்தனை அடிகள் வேண்டுமானாலும் கலி வெண்பாவில் வரலாம்.


கலி வெண்பாவுக்கு அடி சிற்றெல்லை பதின்மூன்று. பேரெல்லை கவிஞரின் மனம் போல எல்லை கிடையாது. இங்கு இருபது அடிகளால் ஆன ஒரு விகற்ப நேரிசை கலி வெண்பாவைக் காணலாம்.


கலி வெண்பாவிலும் பஃறொடை வெண்பாவைப் போலவே நான்கு வகை உள்ளன. அவை,


01. ஒரு விகற்ப நேரிசை கலி வெண்பா,

02. ஒரு விகற்ப இன்னிசை கலி வெண்பா,

03. பல விகற்ப நேரிசை கலி வெண்பா மற்றும்

04. பல விகற்ப இன்னிசை கலி வெண்பா ஆகும்.


அவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம்.


01. #ஒரு_விகற்ப_நேரிசை_கலி_வெண்பா.

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

அனைத்து அடிகளின் முதல் சீர்கள் ஒரே எதுகை பெற்று வரும். ஓரடி விட்டு ஓரடி என இரண்டிரண்டு அடிகளுக்கு ஒரு தனிச் சீர் பெற்று முன்னடிகளின் ஒத்த விகற்பம் பெற்று வரும்.


உ - ம்:

- - - - - -

..எல்லாம் நம் எண்ணச் சுழற்சியில் தான்.

..☆♡☆♡☆♡☆♡☆♡☆♡☆♡☆♡☆♡☆♡☆♡☆♡☆♡☆♡☆


....- ஒரு விகற்ப நேரிசை கலி வெண்பா -


விண்ணைத் தொடுவதும் மின்னி மறைவதும்

எண்ணச் சுழற்சியில் தானடி - கண்ணம்மா

மண்ணில் நிலைப்பதும் வண்ணம் பெறுவதும்

எண்ணச் சுழற்சியில் தானடி - கண்ணம்மா

பண்கள் இசைப்பதும் கண்கள் சிரிப்பதும்

எண்ணச் சுழற்சியில் தானடி - கண்ணம்மா

உண்மை உறைவதும் உன்னில் எனிலதும்

எண்ணச் சுழற்சியில் தானடி - கண்ணம்மா

எண்கள் எழுத்துகள் ஏற்றம் தருவதும்

எண்ணச் சுழற்சியில் தானடி - கண்ணம்மா

பெண்டிர் பெருமைகள் பேசும் உரிமைகள்

எண்ணச் சுழற்சியில் தானடி - கண்ணம்மா

செண்டாய் உளமுறைச் செந்தேன் இனிப்பதும்

எண்ணச் சுழற்சியில் தானடி - கண்ணம்மா

கொண்டாய் நறுமணம் கொள்வாய்ப் பெருங்குணம்

எண்ணச் சுழற்சியில் தானடி - கண்ணம்மா

தொண்டில் கரைவதும் தோகை விரிப்பதும்

எண்ணச் சுழற்சியில் தானடி - கண்ணம்மா

எண்ணம் சுழன்றிட எண்ணம் வளம்பெறத்

திண்ணம் உயர்வது காண்.

...................- ‘‘அகன்'' @ அனுராதா கட்டபொம்மன்.


இந்தக் கலி வெண்பாவில், “விண்ணைத் - எண்ணச் - மண்ணில் - எண்ணச் - பண்கள் - எண்ணச் - உண்மை - எண்ணச் - எண்கள் - எண்ணச் - பெண்டிர் - எண்ணச் - செண்டாய் - எண்ணச் - கொண்டாய் - எண்ணச் - தொண்டில் - எண்ணச் - எண்ணம் - திண்ணம்” - என அனைத்து இருபது அடிகளிலும் அடிகளின் முதற் சீரில் இரண்டாம் எழுத்தாக “ண்” வந்துள்ளது.

மேலும், இரண்டடிகளுக்கு ஒரு தனிச் சீர் “கண்ணம்மா” என இரண்டாம் எழுத்து “ண்” ஒன்றி வந்திருக்கிறது. எனவே, இஃது ஒரு விகற்ப நேரிசை கலி வெண்பா ஆனது.


02. #ஒரு_விகற்ப_இன்னிசை_கலி_வெண்பா,

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

அனைத்து அடிகளிலும் ஒரே விகற்பம் வர இரண்டாம் அடிகளில் தனிச் சீர் இராது.


உ - ம்:

- - - - - - 

................புண்ணில் சுகம் காண்பார் போக்கு.

...............👁☆👁☆👁☆👁☆👁☆👁☆👁☆👁☆👁☆👁


............- ஒரு விகற்ப இன்னிசை கலி வெண்பா -


வண்ண உடையுடுத்தி வாழுமிடம் தாண்டுகிறார்.

வண்டு மலர்தேடும் வாழ்க்கையினை வாழுகின்றார்

திண்ணை தனைத்தேடித் திண்டாடி மாய்கின்றார்.

உண்ண உணவிருக்க ஊர்மேயப் பார்க்கின்றார்.

உண்டிச் சுவையறியா(து) உல்லாசம் தேடுகிறார்.

பெண்டாளும் பத்தினியைப் பேண மறக்கின்றார்.

வெண்ணெய் கரத்திருந்தும் வீணாக நெய்க்கலைவார்.

பண்ணைப் பசுவிருந்தும் பாலுக் கலைகின்றார்.

கண்ணில் ஒளியிருந்தும் காதல் கலைமறந்தார்.

விண்ணில் நிலவுவரும் வேடிக்கைப் பார்க்கின்றார்.

கண்டும் கடந்திதனைக் காணாது போகமனம்

உண்டெனில் செல்பவர்கள் உண்மை மனிதரில்லை.

மண்ணில் மலர்ந்தென்ன மாறாய் மடிந்தென்ன

புண்ணில் சுகம்காண்பார் போக்கு.

……….................…....- ‘‘அகன்’’ @ அனுராதா கட்டபொம்மன்.


இந்த வெண்பாவில், “வண்ண - வண்டு - திண்ணை - உண்ண - உண்டிச் - பெண்டாளும் - வெண்ணெய் - பண்ணைப் - கண்ணில் - விண்ணில் - கண்டும் - உண்டெனில் - மண்ணில் - புண்ணில்” என அனைத்து அடிகளில்லும் முதல் சீர்களில் “ண்” என்ற எழுத்து ஒன்றி வர ஒரே எதுகையானது.


ஆகவே, இந்தக் கலி வெண்பா ஒரு விகற்ப இன்னிசைக் கலி வெண்பா ஆனது.


03. #பல_விகற்ப_நேரிசை_கலி_வெண்பா.

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

பதினான்கு அடிகள் கொண்ட இந்தக் கலி வெண்பாவில் இரண்டடிகளுக்கு ஓர் எதுகை (விகற்பம்) வருவதாலும், இரண்டாம் அடிகளில் தனிச் சீர் பெற்று வருவதாலும் இந்தக் கலி வெண்பா பல விகற்ப நேரிசை கலி வெண்பா ஆனது.


உ - ம்:

- - - - - - 

..................வெம்பியழு வார்வாழ்வு வீண்.

...............👁☆👁☆👁☆👁☆👁☆👁☆👁☆👁☆👁


..........- பல விகற்ப நேரிசை கலி வெண்பா -


பண்பால் பணிவுவரும் பண்போல் தகுதிவரும்

விண்போல் உயரவழி வேண்டுமெனில் - மண்ணிதில்

நிற்கும் பதரொதுக்கி நில்லா மணிகளைத்தான்

விற்பனைக்கு வைப்பார்நல் வித்தகர் - கற்றறியா(து)

ஒன்றுக்கு மாகா உதவாக் கரைகளெல்லாம்

நின்றெழுந் தாடும் நிலைகண்டேன் - அன்புமட்டும்

அங்கில்லை இல்லை அனுபவங்கள் பாவமவர்

தங்கள் முதுகினைத் தட்டுகிறார் - சிங்கமென

எண்ணிச் சிறுநரிபோல் எட்டி முழங்குகிறார்

கண்ணியம் இல்லை கனிவில்லை - திண்ணிய

ஊளைக் குரல்மாறா துண்மை அறிகிலார்

தோளை உயர்த்துவதால் தொல்லைதான் - நாளையவர்

நம்புகின்ற கூட்டம் நடைமறந்து போனால்பின்

வெம்பியழு வார்வாழ்வு வீண்.

………...........…....- ‘‘அகன்’’ @ அனுராதா கட்டபொம்மன்.


இந்தக் கலி வெண்பாவில், “பண்பால் - விண்போல், நிற்கும் - விற்பனைக்கு, ஒன்றுக்கு - நின்றெழுந், அங்கில்லை - தங்கள், எண்ணிச் - கண்ணியம், ஊளைக் - தோளை, நம்புகின்ற - வெம்பியழு” - என இரண்டிரண்டு அடிகளுக்கு ஓரெதுகை(விகற்பம்)யும்,


இரண்டடிகளுக்கு ஒரு தனிச் சீராக, “மண்ணிதில், கற்றறியா, அன்புமட்டும், சிங்கமென, திண்ணிய, நாளையவர்” என முன்னிரண்டு அடிகளுக்கு விகற்பம் பெற்று வருவதால் இந்தக் கலி வெண்பா பல விகற்ப நேரிசை கலி வெண்பா ஆனது.


04. #பல_விகற்ப_இன்னிசை_கலி_வெண்பா.

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

இந்த வெண்பாவில் ஒற்றெழுத்து நீக்கி ஒவ்வோர் அடியிலும் பன்னிரண்டு எழுத்துகள் வருவது சிறப்பு.


உ - ம்:

- - - - - -

...............நல்லோர் வழியில் நட.

.............👁☆👁☆👁☆👁☆👁☆👁☆👁


- பல விகற்ப இன்னிசைக் கலி வெண்பா -


காலைப் பனியில் கதிரின் ஒளியினில்

சோலை மலர்களைச் சூடும் அழகினில்

கூவும் குயில்கள் குதிக்கும் அருவியின்

தாவும் அலைநீர் தடங்கள் சலசல

ஓசை எழுப்ப உதிரும் இலைகளின்

ஆசை அறுக்கும் அகிலத் துலாவரும்

சான்றோர் மனம்போல் சகலமும் மாறிடில்

தேன்தான் வளம்தான் திருவளர் நாட்டினில்

சாதி மதங்கள் சழக்குகள் ஓய்ந்திட

நீதி நிலைக்கும் நிழல்கள் களைகளும்

நீசர் சழக்கரும் நில்லா தொளிந்திட

நாசக் கயவர் நடத்தை நலம்பெறா(து)

இல்லா தொழிந்திட இத்தரை மீதினில்

நல்லோர் வழியில் நட.

…...........- ‘‘அகன்’’ @ அனுராதா கட்டபொம்மன்.


இந்த வெண்பாவில், “காலைப் - சோலை, கூவும் - தாவும், ஓசை - ஆசை, சான்றோர் - தேன்தான், சாதி - நீதி, நீசர் - நாசக், இல்லா - நல்லோர்” என இரண்டடிகளுக்கு ஈரெதுகை வந்துள்ளது. இரண்டாம் அடிகளில் தனிச் சீர் வரவில்லை.


ஆகவே, இந்தக் கலி வெண்பா பல விகற்ப இன்னிசைக் கலி வெண்பா ஆனது.


வெண் கலிப்பாவைப் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.


……............……


Comments

Popular posts from this blog

விருத்தம் எழுதுவது எப்படி (இரா.மீனாட்சிசுந்தரம்)

2.ஹைக்கூ கவிதைகள் (சூழல் - இரவில் உலகம்)

16.வெண்பா இலக்கணம்(அகன்)