17.எளியமுறை தமிழ் இலக்கணம்
எளியமுறை இலக்கணம் - 17.
🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀
இனிய வணக்கம்.
இதுவரை, பெயர்ச் சொல், வினைச் சொல் இரண்டையும் பார்த்திருக்கிறோம்.
அடுத்து இடைச் சொல், உரிச் சொல் இரண்டையும் பார்த்து விட்டால் சொல்லதிகாரம் நிறைவு பெற்று விடும்.
அதன் பிறகு பொருள் அதிகாரத்தைப் பார்க்கலாம்.
03. #இடைச்_சொல்:
- - - - - - - - - - - - - - - - - -
இதற்கு பொருள் சொல்வதற்கு முன்னால் ஒரு சின்ன நிகழ்வை சொல்லுகிறேன்.
அம்மாவும், அப்பாவும் தன் பிள்ளையைக் கூட்டிக் கொண்டு ஒரு ஆயத்த ஆடையகத்துக்குப் போகிறார்கள். மூன்று பேருக்கும் சேர்த்து ஆயத்த ஆடை எடுக்கிறார்கள்.
எடுத்த ஆடைகளுக்கான இரசீது யாரிடம் கொடுப்பார்கள்?
அம்மாவிடமோ, அப்பாவிடமோ தான் கொடுப்பார்கள். கண்டிப்பாக பிள்ளையிடம் தர மாட்டார்கள். ஏன்?
பிள்ளை அம்மாவையோ, அப்பாவையோ தான் சார்ந்திருக்கிறது. பிள்ளையால் #தனித்துச்_செயல்_பட_முடியாது.
இப்போது பாடத்துக்கு வருவோம்.
அப்பா - பெயர்ச் சொல். அம்மா - வினைச் சொல். குழந்தை - இடைச் சொல்.
இடைச் சொல் பெயர்ச் சொல்லையோ, வினைச் சொல்லையோ சார்ந்து தான் வரும். இடைச்சொற்கள் தனித்துப் ''பொருள்’’ தருவதில்லை. புரிகிறதல்லவா?
இடைச் சொற்கள் எட்டு வகைப் படும். அவை,
01. வேற்றுமை உருபுகள்,
02. காலம் காட்டும் இடைநிலைகளும், விகுதிகளும்,
03. உவம உருபுகள்,
04. சாரியைகள்,
05. தத்தம் பொருளை உணர்த்தி வருபவை,
06. இசை நிறை,
07. அசை நிலை மற்றும்
08. குறிப்பால் பொருள் உணர்த்துபவை ஆகும்.
03. 01. வேற்றுமை உருபுகள்.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
வேற்றுமை உருபுகள் எட்டு வகைப் படுமென்றும்,
முதலாம் வேற்றுமைக்கும், எட்டாம் வேற்றுமைக்கும் உருபு கிடையாது என்றும்,
இரண்டாம் வேற்றுமையில் இருந்து ஏழாம் வேற்றுமை வரை முறையே ஐ, ஆல், கு, இன், அது, கண் என்கிற வேற்றுமை உருபுகள் வரும் என்றும்,
அவற்றின் பயன்பாடுகளைப் பற்றியும் முன்னர் வகுப்புகளிலேயே பார்த்து விட்டோம்.
மீண்டும் ஒருமுறை இங்கு விளக்க வேண்டியதில்லை. ஒருமுறை அவற்றை திரும்பப் படித்து நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.
03. 02. #காலம்_காட்டும்_இடைநிலைகளும்_விகுதிகளும்.
இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றையும்
அதன் இடை நிலைகளையும் முந்தைய பாடங்களில் விரிவாக விளக்கமாக பார்த்து விட்டோம்.
அதையும் கூட ஒருமுறை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.
03. 03. #உவம_உருபுகள்
- - - - - - - - - - - - - - - - - - - - - -
உவமை என்றால் என்ன...?
ஒரு நபரையோ, ஒரு பொருளையோ மற்றொன்றுடன் ஒப்பிட்டு சொல்லுவது உவமை ஆகும்.
சில நேரங்களில், அறியாத பொருளை அறிந்த பொருள் மூலம் அடையாளம் காட்டவும் இந்த உவமை பயன்படுகிறது.
உவமையை இரண்டாகப் பிரிக்க வேண்டும். அவை,
01. உவமை அல்லது உவமம் அல்லது உவமானம் மற்றும்
02. உவமேயம் ஆகும்.
ஒன்றோடு ஒன்றை ஒப்பிடப் பயன்படும் பொருள் #உவமை அல்லது #உவமம் அல்லது #உவமானம் எனப் படும்.
ஒப்பிடப் படும் பொருள் அதாவது, உவமையின் மூலம் சிறப்பிக்கப் படும் பொருள் #உவமேயம் ஆகும்.
உவமானத்தையும், உவமேயத்தையும் இணைக்கப் பயன்படும் சொற்களே #உவம_உருபுகள் எனப் படும். புரிகிறதா?
மேலே போகலாம் இல்லையா? சரி.
உவம உருபுகள் என்னென்ன...? அவை,
போல், போல, போன்ற, புரைய, ஒப்ப, உறழ, மான, கடுப்ப, இயைய, ஏய்ப்ப, நேர, நிகர, அன்ன, இன்ன போன்ற சொற்கள் ஆகும்.
இவற்றுடன் அனைய, எதிர, சிவண, பொருவ, ஏற்ப என்பனவும் உவம உருபுகளாக பண்டைய இலக்கியங்களில் காணக் கிடக்கின்றன.
இவற்றில் பல #தற்காலத்தில்_பயன்பாட்டில்_இல்லை.
இவை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டும் இங்கு குறிப்பிடுகின்றேன்.
உ - ம்:
- - - - - - -
பால் நிலவு = பால் + நிலவு = பால் - போன்ற - நிலவு. #பால்_போன்ற_நிலவு என்று பொருள்.
நாம் இங்கு குறிப்பிட வருவது நிலவைத் தான். அதனால், ‘’#நிலவு’’ உவமேயம் ஆகும்.
நிலவை எதனோடு ஒப்பிடுகிறோம்?
''#பால்’’ என்ற பொருளோடு. ஆகவே, ‘’பால்’’ உவமானம்.
உவமானத்தையும், உவமேயத்தையும் இணைக்கும் ‘’#போன்ற’’ என்ற சொல் இடையில் இருக்கிறதா… இல்லை.
கண்ணுக்குத் தெரியாத, கருத்தால் மட்டும் உணரக் கூடிய ‘’#போன்ற’’ என்கிற உவம உருபு இடையில் மறைந்து கிடக்கிறது, அதை உணரத் தான் முடியும்.
இதில், பால் - உவமானம். நிலவு - உவமேயம். போன்ற - உவம உருபு.
முகத் தாமரை = முகம் + தாமரை = முகம் - போன்ற - தாமரை = இது சரியா? சரியில்லை.
இங்கு நான் எதைக் குறிப்பிட வருகிறோம்...?
‘’#முகம்’’ என்கிற பொருளைத் தானே...
ஆகவே, ‘’முகம்’’ உவமேயம். ‘’தாமரை’’ உவமானம்.
தாமரைப் போன்ற மலர்ந்த முகம் என்று மாற்றிப் பொருள் கொள்ள வேண்டும்.
இதையே, #தாமரை_முகம் என்றும் சொல்லலாம்.
அடுத்த விளக்கத்தைப் பாருங்கள்.
#உவமையும், #உருவகமும்.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
#உவமானம்_முன்பும், #உவமேயம்_பின்பும் வந்தால் #அஃது_உவமை.
தாமரை முகம் = தாமரை(உவமானம்) + போன்ற + முகம்(உவமேயம்) = இஃது உவமை.
தாமரையை முகத்தோடு ஒப்பிடுவதால் இஃது உவமை ஆனது.
#உவமேயம்_முன்பும், #உவமானம்_பின்பும் வந்தால் #அஃது_உருவகம்.
முகத் தாமரை = முகம்(உவமேயம்) + ஆகிய + தாமரை(உவமானம்) = இஃது உருவகம்.
முகத்தைத் தாமரையாக #உருவகித்ததால் இஃது உருவகம்.
மொத்தத்தில், உவமையை அப்படியே திருப்பிப் போட்டால் அஃது உருவகம்.
தாமரை முகம் = உவமை.
முகத் தாமரை = உருவகம்.
உவமையையும், உருவகத்தையும் எப்படி பிரித்துப் பார்ப்பது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டீர்கள் அல்லவா?
03. 04. சாரியை.
- - - - - - - - - - - - - -
சாரியை என்பது ஒரு சிலச் சொற்களைச் சேர்த்து சொல்லும் போது உச்சரிப்பதற்கு சற்று எளிமையாக இருக்கும் விதமாக இடையே இடப் படும் எழுத்துகள் அல்லது சொற்கள் சாரியை எனப் படும்.
சாரியைப் பற்றியும் முன்பே விளக்கமாகப் பார்த்திருக்கிறோம்.
மீண்டும் ஒருமுறை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.
உங்கள் நினைவூட்டுக்கு சில உதாரணங்கள் கீழே…
உ - ம்:
- - - - - - -
கரம் என்னும் சொல்லோடு இரண்டாம் வேற்றுமை உருபான ‘’ஐ’’ சேரும் போது இடையே ‘’அத்து’’ எனும் சொல்லை இட வேண்டும். இந்த ‘’அத்து’’ எனும் சொல் தான் சாரியை ஆகும்.
கரம் + ஐ = கரம் + அத்து + ஐ = கரத்தை என்று வரும். ‘’அத்து’’ சாரியை.
படம் + ஐ = படம் + அத்து + ஐ = படத்தை என்று வரும். ‘’அத்து’’ சாரியை.
ஆல் + காடு = ஆல் + அம் + காடு = ஆலங்காடு என்று வரும். ‘’அம்’’ சாரியை.
பல + ஐ = பல + வற்று + ஐ = பலவற்றை என்று வரும். ‘’வற்று’’ சாரியை.
இது ஒரு உதாரணம் தான். இது போல நிறைய சாரியைகள் உண்டு, அதை முன்பே கண்டோம்.
இந்த இலக்கணம் எல்லாம் நாம் நாள்தோறும் பயன் படுத்தி வருபவை தான். அதைத் தான் நான் இங்கே உங்களுக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கிறேன். அவ்வளவு தான்.
இடைச் சொற்களில் இன்னும் நான்கு வகைகள் மிச்சம் இருக்கிறது.
அவற்றை அடுத்தடுத்துப் பார்க்கலாம்.
………............................…
Comments
Post a Comment