16.எளியமுறை தமிழ் இலக்கணம்
எளியமுறை இலக்கணம் - 16.
🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡
இனிய வணக்கம்.
போன வாரம் வினை முற்று இரு வகைப் படும் என்று பார்த்தோம் இல்லையா…
அவை,
01. முற்று வினை அல்லது வினை முற்று மற்றும்
02. எச்ச வினை ஆகும்.
01. #முற்று_வினை_அல்லது_வினை_முற்று.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
ஒரு சொற்றொடரில் நிகழும் வினை, அதாவது, செயல் ஒரு வினைச் சொல்லால் முற்று பெற்றால் அந்த வினைச் சொல் #முற்று_வினை அல்லது #வினை_முற்று எனப்படும்.
உ - ம்:
- - - - - - - -
நான் மணியைப் பார்த்தேன்.
நீ யாரைக் கேட்டாய்?
நான் இரவு ஒரு கனாக் கண்டேன்.
நீ பாடலுக்கு இசை அமைத்தாய்.
இந்த நான்கு சொற்றொடர்களில்
#பார்த்தேன் என்பது #பார்த்தல் என்ற வினையை, அதாவது, செயலைச் செய்து #முடித்து_விட்டது.
#கேட்டாய் என்பது #கேட்டல் என்ற வினையை, அதாவது, #செயலைச்_செய்து_முடித்து_விட்டது.
#கண்டேன் என்பது #காணுதல் என்ற வினையை, அதாவது, செயலைச் செய்து முடித்து விட்டது.
#அமைத்தாய் என்பது #அமைத்தல் என்ற வினையை, அதாவது, செயலைச் செய்து முடித்து விட்டது.
எனவே, இந்த வினைச் சொற்கள் - பார்த்தேன், கேட்டாய், கண்டேன், அமைத்தாய் - நான்கும் வினை முற்று ஆகும்.
இந்த வினை முற்று மூன்று காலங்களிலும் வரும்.
நான் மணியைப் பார்த்தேன் - இறந்த காலம்.
நான் மணியைப் பார்க்கிறேன் - நிகழ்காலம்.
நான் மணியைப் பார்ப்பேன் - எதிர்காலம்.
இதைப் போன்றே மற்ற வினை முற்றுகளையும் மூன்று காலங்களிலும் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம்.
அடுத்தது எச்ச வினை ஆகும்.
02. #எச்ச_வினை.
- - - - - - - - - - - - - - - -
ஒரு வினைச் சொல் முற்று பெறாமல் எஞ்சி நின்று ஒரு பெயரையோ, ஒரு வினையையோ சார்ந்து நிற்கும் போது எச்ச வினை எனப் படும். இந்த எச்ச வினை இரண்டு வகைப் படும்.
அவை,
02. 01. பெயரெச்சம் மற்றும்
02. 02. வினையெச்சம் ஆகும்.
எச்ச வினைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
02. 01. #பெயரெச்சம்.
- - - - - - - - - - - - - - - - - -
பெயர்ச் சொல்லைக் கொண்டு முடியும் எச்ச வினை பெயரெச்சம் எனப் படும்.
உ - ம்:
- - - - - - -
#ஓடிய மாடு.
#ஒலித்த பாடல்.
#கேட்ட குரல்.
#வீசிய காற்று.
#பாய்ந்த ஆறு.
இந்த சொற்றொடர்களில் வரும் ‘ஓடிய, பாடிய, கேட்ட, வீசிய, பாய்ந்த’ என்ற வினைகள் #முற்று_பெறாத வினைகள் ஆகும்.
‘மாடு, பாடல், குரல், காற்று, ஆறு’ என்ற பெயர்ச் சொற்களைக் கொண்டு முற்று பெறுகிறது.
எனவே, இந்த எச்ச வினைகள் பெயரைச் சார்ந்து இருப்பதால் பெயரெச்சங்கள் எனப் படும்.
இவையே,
மாடு #ஓடியது.
பாடல் #ஒலித்தது.
குரல் #கேட்டது.
காற்று #வீசியது.
ஆறு #பாய்ந்தது.
என்றிருந்தால் ஓடியது, ஒலித்தது, கேட்டது, வீசியது, பாய்ந்தது என்பவை வினை முற்றுகள் ஆகி விடும்.
எச்ச வினைக்கும், வினை முற்றுக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்னவென்று புரிகிறது அல்லவா...
அடுத்து வினையெச்சத்தைப் பார்ப்போம்.
02. 02. #வினையெச்சம்.
- - - - - - - - - - - - - - - - - - - - -
ஒரு சொற்றொடரில் வினைச் சொற்களைக் கொண்டு முடியும் எச்ச வினை வினையெச்சம் எனப் படும்.
உ - ம்:
- - - - - - -
ஓடி வந்தான்.
பாடிச் சென்றான்.
வாடி நின்றான்.
பார்த்துக் கொண்டான்.
சொல்லிக் கொடுத்தான்.
இதில், ‘ஓடி, பாடி, வாடி, பார்த்து, சொல்லி’ என்ற எச்ச வினைகள் ‘வந்தான், சென்றான், நின்றான், கொண்டான், கொடுத்தான்’ என்ற வினைச் சொற்களைக் கொண்டு, வினைச் சொற்களைச் சார்ந்து முற்று பெறுகின்றன.
எனவே, ‘ஓடி, பாடி, வாடி, பார்த்து, சொல்லி’ எனும் இவை அனைத்தும் வினையைச் சார்ந்த எச்ச வினை. ஆதலால், இவை வினையெச்சம் எனப் படும்.
கண்ணன் #ஓடிய_மாட்டை #விரட்டிப்_பிடித்தான்.
இந்தச் சொற்றொடரில்,
‘‘ஓடிய மாட்டை’’ என்று வருவதால், ‘‘மாடு’’ என்னும் பெயர்ச் சொல்லுக்கு முன் வரும் ‘‘ஓடிய’’ என்னும் எச்ச வினை பெயரெச்சம் ஆகும்.
‘‘விரட்டிப் பிடித்தான்’’ என்று வருவதால், பிடித்தான் என்னும் வினைச் சொல்லுக்கு முன் வரும் ‘‘விரட்டி’’ என்னும் எச்ச வினை வினையெச்சம் ஆகும்.
இதுவரை, பெயர்ச் சொல், வினைச் சொல் இரண்டையும் பார்த்திருக்கிறோம். அவற்றின் வகை அனைத்தையும் விளக்கமாகப் பார்த்தோம்.
அடுத்து, #இடைச்_சொல், #உரிச்_சொல் இரண்டையும் பார்த்து விட்டால் சொல்லதிகாரம் நிறைவு பெற்று விடும்.
அதன் பிறகு #பொருளதிகாரம் பார்க்க இருக்கிறோம்.
அது முடிந்ததும், எளிய முறையில் நான்கு வகை மரபுக் கவிதைகளை எழுதுவது எப்படி என பார்க்க இருக்கிறோம்.
மீண்டும் ஒருமுறை உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.
நான் முழு இலக்கணத்தையும் எழுதவில்லை.
புதுக் கவிதை எழுதுகிறவர்களும் மரபுக் கவிதை எழுதப் பழக வேண்டும் என்பதை நோக்கியே என் பயணத்தை வடிவமைத்து இருக்கிறேன்.
………............................…
Comments
Post a Comment