14.எளியமுறை தமிழ் இலக்கணம்

 



எளியமுறை இலக்கணம் - 14.

🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 


அனைவருக்கும் இனிய வணக்கம்.


வினைச் சொல்லைப் பற்றி பார்ப்போம்.


#வினைச்_சொல்:

- - - - - - - - - - - - - - - -

வினைச் சொல் என்றால் என்ன...?


#வினை_என்றால்_செயல், #செயல்_படுவது என்று பொருள்.


#பெயர்ச்_சொற்கள்_காலத்தைக்_காட்டாது என்று படித்தோம்.


ஆனால், #வினைச்_சொற்கள்_காலத்தைக்_காட்டும். நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.


வினைச் சொற்கள் #மூன்று_காலங்களையும் காட்டும் என்று சொன்னேன் இல்லையா….


அவை, 01. #இறந்த_காலம், 02. #நிகழ்காலம் மற்றும் 03. #எதிர்காலம் ஆகும்.


இந்த மூன்று காலப் பாகுபாடு எல்லா மொழிகளிலும் உண்டு. எல்லா மொழிகளிலும் வினைச் சொற்கள் காலம் காட்டுவனவாகவே அமைந்துள்ளன.


இலக்கணத்தில் காலம் என்பது, ஒரு செயல் எப்பொழுது நடைபெறுகிறது என்பதைக் காட்டும் #இலக்கணக்_கூறு ஆகும்.


ஒரு செயல், பேசப் படும் நேரத்துக்கு #முன்னரா அல்லது #அதே_நேரத்திலா அல்லது #பின்னரா என்பதைக் குறித்துக் காட்டுவதே #காலம்_ஆகும்.


பேசும் நேரத்துக்கு முன்னர் நிகழ்ந்தவற்றைக் குறிப்பது இறந்த காலம் அல்லது கடந்த காலம் ஆகும்.


பேசும்  அதே நேரத்தில் நடந்து கொண்டு இருப்பவற்றைக் குறிப்பது நிகழ்காலம் ஆகும்.


பின்னர் நிகழ இருப்பவற்றைக் குறிப்பது எதிர்காலம் ஆகும்.


தமிழில் வினை சார்ந்த சொற்கள் காலங் காட்டும் #இடைநிலைகளை_ஏற்றுக்_காலத்தைக் காட்டுகின்றன.


காலத்தைக் காட்டும் இடைச் சொற்களைத் தொல்காப்பியர் #காலக்_கிளவி எனக் குறிப்பிடுகிறார்.


காலத்தைக் காட்டும் சொற்களாகிய காலை, மதியம், மாலை, இரவு,  இரண்டு மணி, நேற்று, நாளை போன்ற சொற்களைக் #காலப்_பெயர் என்பர்.


மூன்று காலங்களையும் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.


ஒரு வினைச் சொல் மூன்று காலத்தையும் காட்ட வேண்டுமெனில் அந்தச் சொல் கட்டமைக்கப் படும் போது #இடைநிலை_எழுத்து - #மெய்யெழுத்தாகவே_இருக்கும் - ஒன்றோ அல்லது இரண்டோ தேவை படும்.


அந்த ‘இடைநிலை எழுத்து என்ன’ என்பதை அறிந்து கொண்டால் அது எந்தக் காலத்தைக் குறிக்கிறது என்பதை எளிதாகக் கண்டு பிடித்து விடலாம்.


01. இறந்த காலம் அல்லது கடந்த காலம்.

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

வினைச் சொல்லில் இறந்த காலச் சொல் ஒன்றைப் பார்ப்போம்.


உ - ம்:

- - - - - - -

நடந்தான், நடந்தனன், சிரித்தாள், சிரித்தனள், வந்தான், வந்தனன், சமைத்தாள், சமைத்தனள், நடந்தது, நடந்தன இவையெல்லாம் இறந்த கால வினைச் சொற்கள்.


#ஒருமையில் வரும் சொற்களை மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன். இந்த சொற்களுக்கு பன்மை உண்டு.


இறந்த காலம் என்பது முடிந்து போன கடந்த காலம். ஒரு சொல்லை மட்டும் உதாரணம் காட்டுகிறேன்.


நடந்தான் - மரியாதைக் குறைவான சொல். சிறுவர்களை இவ்வாறு குறிப்பிடலாம்.


ஓரு சிறுவன் சாலையில் நடந்தான். தம்பி வீட்டுக்குள் நடந்தான் என்று சொல்லலாம்.


சாலையில் வயோதிகர் நடந்தான் என்று சொல்லக் கூடாது.


நடந்தார் - மரியாதையான சொல். ஒருமை தான். பெரியவர்களைக் குறிப்பிடும் போது இவ்வாறு குறிப்பிட வேண்டும்.


#முதியவர்_நடந்தார் என்பது சரியான பயன்பாடு.


#நடந்தார்கள் - இது பன்மை. பலபேர் நடப்பதைக் குறிக்கும். கூட்டமாக நடந்த்தார்கள் என்பதே சரி.


அதுமட்டுமில்லாமல், இந்தச் சொல் ஒருமையிலும் வருவதுண்டு. மிக மிக மரியாதையுடன் ஒருவரைக் குறிப்பிடும் போது இந்தச் சொல்லைப் பயன் படுத்தலாம்.


#அம்மா_வீட்டுக்கு_வந்தார்கள். #அப்பா_என்_கூட_வந்தார்கள் என்று நாம் அதிக மரியாதை வைத்திருப்பவர்களைக் குறிப்பிடலாம்.


இந்தச் சொல் கடந்த காலம் தான் என்று எவ்வாறு அறிவது…


வினைச் சொல்லை பிரித்துப் பார்த்தால் அந்தச் சொல்லில் வரும் ‘இடைநிலை’ எழுத்தைக் கொண்டு அது எந்த காலம் என்று கண்டு பிடித்து விடலாம்.


இதில் ஒரு சொல்லை உங்களுக்கு பிரித்து காட்டுகிறேன்.


நட + த்(ந்) + த் + ஆன் = எனப் பிரிக்க வேண்டும்.

#நட - #என்பது_வேர்ச்_சொல். இதைப் #பகுதி என்றும் சொல்லலாம்.


ஒரு சொல்லைக் கட்டமைக்க இந்த சொல் பயன்படுவதால் #வேர்_சொல் என்று சொல்லுகிறோம்.


#த்(#ந்) - #சந்தி. இந்த எழுத்து சொல்லைக் கட்டமைக்க உதவுவதால் - வேர்ச் சொல்லையும் வினைச் சொல் விகுதியையும் ‘#சந்திக்க_வைப்பதால்_சந்தி ஆனது.


அத்தோடு, புணர்ச்சியின் போது ‘த்’ விகாரப் பட்டு ‘ந்’ ஆனது.


இரண்டாவதாக வரும் #த் - #இறந்த_கால_இடைநிலை ஆகும். காலத்தைக் காட்ட, இறந்த கால வினைச் சொல் உருவாக இடையில் வருவதால் #இறந்த_கால_இடைநிலை_ஆனது.


#ஆன் - #விகுதி. இது தான் ஒரு சொல் முற்று பெற்றது என்பதை நிறுவுகின்ற விகுதி.


அதாவது, நிறைவு செய்கிற பகுதி. #இதை_விகுதி_என்கிறோம்.


இவையன்றி இன்னொரு சொல்லையும் உங்களுக்குச் சொன்னேன் இல்லையா? அது, நடந்தனன் என்கிற சொல். அதையும் பிரித்துப் பார்ப்போம்.


நட + த்(ந்) + த் + அன் + அன். இதில் வரும் #அன் + அன் - #அன்_என்கிற_சாரியையுடன் சேர்ந்த #அனன் எனும் விகுதி.


நாளை நாம் கவிதை எழுதும் போது பெரிதும் பயன்படும் சாரியையுடன் சேர்ந்த விகுதி.


இறந்த கால இடைநிலை, ‘த்’ மட்டும் தானா என்று நீங்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது. அதைத் தான் இப்போது சொல்லப் போகிறேன்.


இறந்த காலம் காட்டும் இடைநிலைகள் எவை எவை என்பதைச் சொல்லி விட்டு உங்களை நிகழ்காலத்திற்கு அழைத்து செல்கிறேன்.


உ - ம்:

- - - - - - - -

நடந்தான், கேட்டாள், கற்றார், தேடினான். இவை யாவும் இறந்த கால வினை முற்றுகள். இச் சொற்களைப் பிரித்துப் பார்ப்போம்.


நடந்தான் = நட + த்(ந்) + ☆த் + ஆன். இதில் ‘த்’ இறந்த கால இடைநிலை.


கேட்டாள் = கேள் + ட் + ☆ட் + ஆள். இதில் இரண்டாவதாக வரும் ‘ட்’ இறந்த கால இடைநிலை.


கற்றார் = கல் + ற் + ☆ற் + ஆர். இதில் இரண்டாவதாக வரும் ‘ற்’ இறந்த கால இடைநிலை.


தேடினான் = தேடு + ☆இன் + ஆன். இதில் ‘இன்’ இறந்த கால இடைநிலை.


இச்சொற்களின் இடையில் வரும் ‘த், ட், ற், இன்’ என்கிற #நான்கு_எழுத்துகள்_மட்டுமே இறந்த கால இடைநிலைகள்.


இறந்த கால இடைநிலை எழுத்துகளாக இவை நான்கைத்  தவிர வேறு எழுத்துகள் வராது.


இந்த விஷயங்களைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். ரொம்பவும் சிரமப் பட்டு மனப்பாடம் எல்லாம் செய்ய வேண்டாம். இவைத் தெரிந்திருந்தால் போதும்.


இது போலவே மற்ற சொற்களையும் பிரித்துப் பார்த்து பயிற்சி செய்து பழகுங்கள்.


தேர்வு எல்லாம் வைக்க மாட்டேன். தேர்வு என்று சொன்னால் வந்து கொண்டிருக்கும் சொற்ப பேரும் என்னைத் தாண்டிப் போய் விடுவீர்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.


ஏற்கனவே, திருவிளையாடல் திரைப் படத்தில் வரும் தருமியைப் போல படிக்க ஆளில்லாமல் தன்னந் தனியாக பாட்டெழுதிக் கொண்டிருக்கிறேன்.


இப்பொழுது, தேர்வு என்றால் என்னாகும்...?


என்னைக் கடந்து செல்பவர்கள், ‘’யார் பெத்த புள்ளையோ தெரியலை. தனியா நின்னு தனக்குத் தானே பேசி பொழம்பிகிட்டிருக்குது’’ என்று சொல்லும் நிலை ஏற்பட்டு விடும்.


அதனால் அந்த விஷப் பரிட்சையில் எல்லாம் இறங்க மாட்டேன்.


நேரம் கிடக்கும் போது பழைய பாடங்களையும் கொஞ்சம் திருப்பிப் பார்த்துக் கொள்ளுங்கள்.


கொஞ்சம் கொஞ்சமாகத் தான் எழுதுகிறேன்.


ஆறாம் வகுப்பு பிள்ளைகளும் புரிந்து கொள்ளும் வகையில் தான் நான் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று நம்புகிறேன்.


அடுத்த பாடத்தில் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றிப் பார்ப்போம்.


………............................…


Comments

Popular posts from this blog

விருத்தம் எழுதுவது எப்படி (இரா.மீனாட்சிசுந்தரம்)

2.ஹைக்கூ கவிதைகள் (சூழல் - இரவில் உலகம்)

16.வெண்பா இலக்கணம்(அகன்)