13.எளியமுறை தமிழ் இலக்கணம்

 



எளியமுறை இலக்கணம் - 13.

🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 


இனிய வணக்கம்.


பெயர் சொற்களின் பத்து வகைகளில் எந்த ஐயமும் இல்லை அல்லவா?


இனி, அடுத்த நிலைக்குப் போகலாம். பெயர் சொல்லுக்கு அடுத்தது #வினைச்_சொல்லைப் பார்க்க இருக்கிறோம்.


அதற்கு முன்னால் #சாரியை என்றால் என்ன, #உடம்படுமெய் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம்.


#சாரியை:

- - - - - - - - -

சாரியை என்ற சொல்லைப் பிரித்தால் சார் + இயை = சாரியை என்று வரும்.


ஒரு வேர்ச் சொல்லைச் சார்ந்து வருவது சாரியை ஆகும்.


இஃது ஒரு வினைச் சொல்லில் #இடைநிலைக்குப்_பின்னரும், #விகுதிக்கு_முன்னரும் வரும்.


அதாவது , ஒரு சொல்லில் பகுதிக்கும்  விகுதிக்கும் இடையில் வரும்.


#சாரியைக்கு_என்று_தனிப்_பட்ட_பொருள்_எதுவும்_இல்லை.


ஒரு சொல்லின் முன்னர் #விகுதியோ, #சொல்லோ, #வேறொரு_உருபோ புணரும் போது, #ஒரு_சாரியை அல்லது #பல_சாரியைகள் வருவது உண்டு. 


#வராமல்_இருப்பதும்_உண்டு.


உ - ம்:

- - - - - - - -

01. விகுதி புணர்ச்சியில் ‘’#அன்’’ சாரியை வருவதைப் பார்ப்போம்.


கடந்தனன் - என்ற சொல்லை எடுத்துப் பிரித்துப் பார்ப்போம்.


கடந்தனன் = கட + த்(ந்) + த் + அன் + அன்.


கட - - - - - பகுதி.

த்(ந்) - - - - ‘த்’ சந்தி ‘ந்’ என விகாரப் பட்டது.

த் - - - - - - இறந்த கால இடைநிலை.

அன் - - - - சாரியை.

அன் - - - - விகுதி.


இந்தச் சொல்லில் ‘’அன்’’ சாரியை வந்து இந்தச் சொல்லுக்கு பொருள் தந்துள்ளது.


அதே கடந்தனன் என்ற சொல்லைக் #கடந்தான் என்றும் பொருள் மாறாமல் எழுதலாம்.


கடந்தான் = கட + த்(ந்) + த் + ஆன்.


கட - - - - - பகுதி.

த்(ந்) - - - - ‘த்’ சந்தி ‘ந்’ என விகாரப் பட்டது.

த் - - - - - - இறந்த கால இடைநிலை.

ஆன் - - - - விகுதி.


இந்தச் சொல்லில் ‘’அன்’’ சாரியை வரவில்லை.


02. #சொற்புணர்ச்சியில்_சாரியை


ஒரு சொல்லுடன் மற்றொரு சொல் இணைவது(புணர்வது) சொற்புணர்ச்சி ஆகும்.


புளி + காய் = புளி + அம் + காய் = புளியங்காய் - - - - - - அம் சாரியை.


கம்பு + கூழ் = கம்பு + அம் + கூழ் = கம்மங்கூழ் - - - - - - அம் சாரியை.


புளி + சாதம் = புளிச் சாதம் = சாரியைப் பெறாமல் புணர்ந்தது.


சோளம் + சோறு = சோளச் சோறு = சாரியைப் பெறாமல் புணர்ந்தது.


03. #உருபு_புணர்ச்சியில்_சாரியை.


ஒரு சொல்லுடன் ஒரு உருபு புணர்வது உருபு புணர்ச்சி ஆகும்.


அவ் + ஐ = அவ் + அற்று + ஐ = அவற்றை. ‘’அற்று’’ எனும் சாரியைப் பெற்று வருகிறது.


நலம் + ஐ = நலத்தை = நலம் + அத்து + ஐ = அத்து சாரியை.


என் + ஐ = என்னை. சாரியை பெறாமல் புணர்ந்து வருகிறது.


பூ + கு = பூவினுக்கு = பூ + இன் + உ + கு = இன், உ இரண்டும் சாரியை.


கரம் + கு = கரத்தினுக்கு = கரம் + அத்து + இன் + உ + கு = அத்து, இன், உ மூன்றும் சாரியை.


இவ்வாறு சொற்கள் மற்றும் உருபு புணர்ச்சியின் போது அவற்றை இணைக்க சாரியை பயன்படுகிறது.


இவ்வாறாக வரும் சாரியை இரண்டு வகைப் படும். அவை,


01. எழுத்துச் சாரியைகள்

02. பொதுச் சாரியைகள்.


01. #எழுத்துச்_சாரியைகள்.

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

உயிர் மற்றும் மெய் முதலான எழுத்துகளைச் சுட்டும் போது அந்த எழுத்துகளோடு சில சாரியைகளைச் சேர்த்துச் சொல்லுதல் இலக்கண மரபு.


'அ' என்ற உயிர்க் குறில் எழுத்தை #அகரம் என்று சொல்லுகிறோம். அவ்வாறே, இகரம், உகரம், எகரம், ஒகரம் என்று உயிர் குறில் எழுத்துகளைக் குறிப்பிடுகிறோம்.


'ஆ' என்ற உயிர் நெடில் எழுத்தை #ஆகாரம் என்று சொல்லுகிறோம். அவ்வாறே, ஈகாரம், ஊகாரம், ஏகாரம். ஐகாரம், ஓகாரம், ஒளகாரம் எனச் சொல்கிறோம்.


அ, ஆ என்ற எழுத்துகளைச் சுட்ட #கரம், #காரம் என்ற இரண்டு சொற்கள் பயன்படுத்தப் படுகின்றன அல்லவா… இவை எழுத்தைச் சுட்ட வந்ததால் எழுத்துச் சாரியை என்கிறோம்.


ஆய்த எழுத்தை அஃகான் அல்லது அஃகேனம் என்று #கான், #கேனம் என்ற சாரியை சேர்த்துச் சொல்கிறோம்.


மெய் எழுத்துகளை ‘’அ’’ என்ற சாரியைச் சேர்த்து க, ச, ட, த, ப, ற, ய, ர, வ, ல, ள, ழ, ஞ, ங, ண, ந, ம, ன என்று சொல்லுகிறோம். 


அத்தோடு, ககரம், சகரம் என்றும் சொல்லலாம். அப்போது, ‘’அ’’ என்னும் சாரியையுடன் ‘’கரம்’’ என்னும் சாரியையும் சேர்கிறது.


உயிர்மெய் எழுத்துகளை ‘’கரம்’’ என்ற சாரியை சேர்த்து ககரம், சகரம் எனப் பதினெட்டு எழுத்துகளுக்கும் சொல்கிறோம்.


ககரம் என்றால் க, கா, கி, கீ, கெ, கே, கை, கு, கூ, கெள எனப் பன்னிரண்டு எழுத்தையும் குறிக்கும். மற்ற உயிர்மெய் எழுத்துகளுக்கும் இந்த முறை பொருந்தும்.


இவ்வாறு எழுத்துகளைச் சுட்டுவதற்குப் பயன்படும் கரம், காரம், கான், கேனம் ஆகியவை சாரியைகள் என்று அழைக்கப் படுகின்றன.


எழுத்துகளுள் #உயிர்மெய்_நெடில்கள் சாரியை பெற்று வருவதில்லை என்பதைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.


02. #பொதுச்_சாரியைகள்.

- - - - - - - - - - - - - - - - - - - - - - - -

ஒரு சொல் விகுதியுடன் புணரும் போதோ, மற்றொரு சொல்லுடன் புணரும் போதோ, வேற்றுமை உருபுடன் புணரும் போதோ இடையே சாரியைகள் தோன்றும்.


அன், ஆன், இன், அல், அற்று, இற்று, அத்து, அம், தம், நம், நும், ஏ, அ, உ, ஐ, கு, ன் ஆகிய பதினேழும் பொதுச் சாரியைகள் என்று நன்னூல் நூற்பா - 243 குறிப்பிடுகின்றது.


அச்சூத்திரத்தில் ‘பிற’ என்று சொல்லப் பட்டிருப்பதைக் கொண்டு தன், தான், தாம், ஆம், ஆ, து என்பனவும் பொதுச் சாரியைகளாகக் காட்டப் படுகின்றன.


நலன் + ஐ புணரும் போது நலனை என்றே புணரும். சாரியை வராது.


நலன் + இல் புணரும் போது நலனில் என்றே புணரும். சாரியை வராது


நலம் + ஐ புணரும் போது #நலமை என்று புணராது. நலம் + அத்து + ஐ = #நலத்தை என்று ‘’அத்து’’ சாரியைப் பெற்றே புணரும்.


நலம் + இல் புணரும் போது #நலமில் என்று புணராது. நலம் + அத்து + இல் = #நலத்தில் என்று ‘’அத்து’’ சாரியைப் பெற்றே புணரும்.


அதே போல் வளம் + உடன் = வளமுடன் என்று பயன்பாட்டில் இருக்கிறது. உண்மையில் ’'அத்து’’ சாரியைப் பெற்று ‘'#வளத்துடன்’’ என்று புணருவதே சரி.


சாரியை புரியவில்லை என்றால் அதற்காகச் சிரம்ப் படாதீர்கள். விட்டு விடுங்கள்.


கவிதை எழுதும் போது சொற்பிழை வரக் கூடாது என்பதற்காகவே சாரியை பற்றி விளக்கிச் சொல்லி இருக்கிறேன்.


#உடம்படுமெய்:

- - - - - - - - - - - - - - -

இரண்டு சொற்கள் புணரும் பொழுது, நிலைமொழி ஈறும், வருமொழி முதலும் உயிரெழுத்துகளாக இருப்பின் அவ்விரு சொற்களும் ஒன்று படாது இடைவெளி விட்டு இசைக்கும்.


அவை சேர்ந்து இசைக்க வேண்டி, உடம்படாத அவ்விரண்டும் உடம்படுதற்கு - ஒன்று சேர்வதற்கு - அவற்றின் இடையே #யகரமும், #வகரமும் தோன்றும்.


இவ்வாறு, ஒன்று படுத்துவதற்காக வரும் மெய்களை #உடம்படுமெய்_என்பர்.


உ - ம்:

- - - - - -

மணி + அடித்தது = மண் + இ + அ டித்தது. 


நிலைமொழி ஈறும், வருமொழி முதலும் உயிரெழுத்துகளாக இருப்பதால் அவற்றை இணக்க ‘’அ’ எனும் உயிரெழுத்து யகரம் ஆனது.


மணி + அடித்தது = மணியடித்தது. (இ)


தீ + எரிந்தது = த் + ஈ + எரிந்தது = தீயெரிந்தது (ஈ)


வாழை + இலை = வாழ் + ஐ + இலை = வாழையிலை (ஐ)


நிலா + அழகு = நில் + ஆ + அழகு = நிலாவழகு (ஆ)


சே + அழகு = ச் + ஏ + அழகு = சேயழகு ; சேவழகு (ஏ)


சே என்றால் சிவப்பு, காலை என்று பொருள்.

 

 நிலைமொழியில் #இகர, #ஈகார, #ஐகார_ஈறுகள் வந்து வருமொழி முதலில் உயிர் எழுத்து வந்தால், இடையில் (ய்) #யகர உடம்படுமெய் தோன்றும்.


பிற உயிர் எழுத்துகள் அ, ஆ, உ, ஊ, எ, ஒ, ஓ இருப்பின் (வ்) வகர உடம்படுமெய் தோன்றும்.


#ஏகாரம் இருப்பின் யகரம் வகரம் ஆகிய இரண்டு உடம்படுமெய்களும் தோன்றும்.


கோ + இல் = க் + ஓ + இல் = கோவில்.


கோயில் என்பது பிழை. ஒரு சாரார் கோயில் என்பதும் சரி என்றே சொல்கின்றனர்.

 

 உடம்படுமெய் விதியென்னவெனில்,


இ, ஈ, ஐ வழி யவ்வும் ஏனை

உயிர்வழி வவ்வும் ஏ முன் இவ்விருமையும்

உயிர்வரின் உடம்படுமெய் யென்றாகும்.


அடுத்தப் பாடத்தில் வினைச் சொற்களைப் பற்றிப் பார்ப்போம்.


………............................…


Comments

Popular posts from this blog

விருத்தம் எழுதுவது எப்படி (இரா.மீனாட்சிசுந்தரம்)

2.ஹைக்கூ கவிதைகள் (சூழல் - இரவில் உலகம்)

16.வெண்பா இலக்கணம்(அகன்)