12.எளியமுறை தமிழ் இலக்கணம்

 

எளியமுறை இலக்கணம் - 12.

🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 


அனைவருக்கும் இனிய வணக்கம்.


07. 02. #மூவிடப்_பெயர்கள்_அல்லாத_மாற்றுப்_பெயர்ச்_சொற்கள்.


அ. படர்க்கைத் தற்சுட்டுப் பெயர்ச் சொல், ஆ. வினாப் பெயர்ச் சொல் மற்றும் இ. அளவுப் பெயர்ச் சொல் என்று இங்கும் மூன்று உட்பிரிவுகள் உண்டு.


அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

07. 02. அ. #படர்க்கைத்_தற்சுட்டுப்_பெயர்ச்_சொல்.


படர்க்கையில் தன்னைத் தானே சுட்டிக் கொள்ளும் பெயர்ச் சொல்லாகும் இது.


தான், தாம் மற்றும் தாங்கள் ஆகிய மாற்றுப் பெயர்கள் நிகழ்காலத் தமிழ்ச் சொற்றொடரில் #எழுவாய்ப்_பெயரைச்_சுட்டப் பயன்படுத்தப் படுகின்றன.


இவை, படர்க்கையில் மட்டுமே வருகின்றன.


இவை, வேற்றுமை உருபு ஏற்கும் பொழுது #தன், #தம் மற்றும் #தங்கள் என தன் வடிவத்தில் மாற்றம் அடைகின்றன.


உ - ம்:

- - - - - - -

தான் + ஐ - - - - - - - - தன் + ஐ - - - = தன்னை.

தாம் + ஐ - - - - - - - - தம் + ஐ - - - - = தம்மை.

தாங்கள் + ஐ - - - - -தங்கள் + ஐ = தங்களை.


இவை, திணை, பால் வேறுபாடின்றி உயர் திணை, அஃறிணை மற்றும் ஆண் பால், பெண்பால் எல்லாவற்றிற்கும் பொதுவாகவே வழங்கி வருகின்றன.


நிகழ்காலத்தில், உயர் மரியாதைக்கு உரியவர்களைச் சுட்டும் முன்னிலைப் பெயராகவும் #தாங்கள் என்ற சொல் பயன்படுத்தப் படுகின்றது.


07. 02. ஆ. #வினைப்_பெயர்ச்_சொல்.


வினாப் பெயர்ச் சொல்லில் உயர் திணை வினாப் பெயர்கள், அஃறிணை வினாப் பெயர்கள் என்று இரண்டு வகை உண்டு.


உயர் திணையில் #யார் என்பது அஃறிணையில் #என்ன என்று மாறும்.


உ - ம்:

- - - - - - - -

அவர் யார் - - - அது என்ன, அது எது என மாறும்.


அவ்வாறே,


எவன் - எது என்றும்,

எவர் - எத்தனை என்றும்.

எவர்கள் - எவ்வளவு என்றும் மாறும்.


‘யான்’ என்னும் பெயரைத் தவிர ஏனைய வினாப் பெயர்கள் ‘எ’ என்னும் வினா அடியாகப் பிறந்தவை.


‘என்ன’, ‘எவை’ என்னும் வினாப் பெயர்களைத் தவிர ஏனையவை வேற்றுமை உருபு ஏற்கும் போது வடிவம் மாறுவதில்லை.


உ - ம்:

- - - - - - -

யார் + ஐ = யாரை

எவன் + ஐ = எவனை

எவள் + ஐ = எவளை

எவர் + ஐ = எவரை

எவர்கள் + ஐ = எவர்களை.


இவை, #சாரியை ஏற்பதில்லை.

பத்து வகைப் பெயர்ச் சொற்களையும் விளக்கிய பின்னர் #சாரியைப்_பற்றி எழுதி விட்டு அடுத்தப் பகுதிக்குப் போகலாம் என்றிருக்கிறேன்.


இவை தவிர எவை, எவற்றை, எவற்றால், யாது, யாவை போன்ற வினாப் பெயர்களும் பயன்பாட்டில் உள்ளன.


வினாப் பெயரை அடிப்படையாகக் கொண்டு பிறக்கும் வேறு மாற்றுப் பெயர்களும் உள்ளன.


வினாப் பெயரோடு ‘ஓ’ என்னும் விகுதியைச் சேர்ப்பதால் யாரோ, எவனோ, எவளோ, எவரோ, எவர்களோ, என்னவோ, எதுவோ, எவையோ, எத்தனையோ, எவ்வளவோ ஆகிய வினாப் பெயர்கள் உருவாகின்றன.


வினாப் பெயரோடு ‘ஆவது’ என்னும் விகுதியைச் சேர்ப்பதால் யாராவது, எவனாவது, எவராவது, எவர்களாவது, எவ்வளவாவது, என்னவாவது, எதுவாவது, ஏதாவது, எவையாவது, எத்தனையாவது ஆகிய பெயர்கள் உருவாகின்றன.


07. 02. இ. #அளவுப்_பெயர்ச்_சொற்கள்.


சிலர், பலர் என்னும் உயர் திணை அளவுப் பெயர்களும் சில, பல, கொஞ்சம் போன்ற அஃறிணை அளவுப் பெயர்களும் உள்ளன.


பல, சில ஆகியவை வேற்றுமை உருபு ஏற்கும் போது #அற்றுச்_சாரியை பெற்று வரும்.


புணர்ச்சியில் #வகர_உடம்படு_மெய் தோன்றும்.


உ - ம்:

- - - - - - -

சில + ஐ = சில + #வ் + #அற்று + ஐ = சிலவற்றை.

சில + ஆல் = சில + வ் + அற்று + ஆல் = சிலவற்றால்.


இதில், ‘வ்’ வகர உடம்படு மெய் ஆகும்.


‘அற்று’ சாரியை ஆகும்.


‘ஐ, ஆல்’ இரண்டும் முறையே இரண்டாம், மூன்றாம் வேற்றுமை உருபுகள்.


சாரியை பற்றி எழுதும் போது #உடம்படு_மெய் என்றால் என்ன என்பதையும் விளக்குகிறேன்.


08. #ஆக்கப்_பெயர்ச்_சொல்.

தொழில், முதல், நோய், கடன் மற்றும் உளவு போன்றவை பெயர்ச் சொற்கள்.


இந்தப் பெயர்ச் சொற்களுடன் #ஆளி என்ற விகுதியைச் சேர்ப்பதால் உருவாகும் பெயர்ச் சொற்களே ஆக்கப் பெயர்ச் சொற்களாகும்.


உ - ம்:

- - - - - - -

தொழில் + ஆளி = தொழிலாளி.

முதல் + ஆளி = முதலாளி.

கடன் + ஆளி = கடனாளி.

உளவு + ஆளி = உளவாளி.


அடுத்து, படி, நடி, வெறு, துடி, வெடி, மதி போன்றவை வினைச் சொற்கள்.


இவற்றுடன் ‘#ப்பு’ என்னும் விகுதியைச் சேர்த்து படிப்பு, நடிப்பு, வெறுப்பு, துடிப்பு, வெடிப்பு, மதிப்பு முதலிய பெயர்ச் சொற்களை உருவாக்கிக் கொள்கிறோம்.


இவ்வாறு பெயர் அல்லது வினைச் சொற்களுடன் விகுதிகளைச் சேர்த்து ஆக்கப் படும் பெயர்ச் சொற்கள் ஆக்கப் பெயர்கள் - Derivative Noun - எனப் படும்.


09. #கூட்டுப்_பெயர்ச்_சொற்கள்.


இரண்டு அல்லது பல சொற்களை இணைத்து உருவாக்கப் படும் பெயர்ச் சொற்கள் கூட்டுப் பெயர்கள் - Compound Noun - எனப் படும்.


வான் + ஒலி = வானொலி.

காண் + ஒளி = காணொளி.

நீர் + வீழ்ச்சி = நீர்வீழ்ச்சி.

மின் + சாரம் = மின்சாரம்.

முதல் + அமைச்சர் = முதலமைச்சர்.


இவை இரண்டு சொற்களால் ஆன கூட்டுப் பெயர்ச் சொற்கள்.


இவை, ஒரு சொல்லாகவே கருதப் படும். இவை போன்று பல சொற்கள் உருவாகியுள்ளன.


இரண்டு சொற்கள் மட்டுமல்லாது மூன்று சொற்கள் சேர்ந்து வரும் கூட்டுச் சொற்களும் நம் மொழியில் வழங்கி வருகின்றன.


இவ்வகையில் பல் + கலை + கழகம் = பல்கலைக்கழகம் என்னும் சொல் அடங்கும். 


இவை #அரிதாகவே காணப் படும்.


10. #வினையால்_அணையும்_பெயர்ச்_சொற்கள்.


வினையை அடிப்படையாகக் கொண்டு பிறந்து, வினையையும், காலத்தையும், வினை புரியும் கர்த்தாவையும், உணர்த்தும் பெயர்ச் சொல் வினையால் அணையும் பெயர்ச் சொல் - Participle Noun - எனப் படும்.


வந்தவன், வந்தவள், வந்தவர்கள், வந்தது, வந்தவை - முதலிய சொற்கள் வருதல் என்னும் வினையையும் இறந்த காலத்தையும் அந்த வினையைப் புரிந்த கர்த்தாவையும் சுட்டுகின்றன.


இவை வினையால் அணையும் பெயர்ச் சொற்களுக்கு எடுத்துக் காட்டாகும்.


இவ்வாறு வினையால் அணையும் பெயர் வேற்றுமை உருபுகளை ஏற்கும். இவை வாக்கியங்களின் இணைப்பினாலேயே பிறக்கின்றன.


வந்தவன் + ஐ = வந்தவனை.

வந்தவள் + ஆல் = வந்தவளால்.

வந்தவன் + கு = வந்தவனுக்கு.

வந்தவள் + ஓடு = வந்தவளோடு.


என்ற வகையில் வினையால் அணையும் பெயர் வேற்றுமை உருபுகளை ஏற்கும்.


செய்யாதவன், செய்யாதவள், செய்யாதவர்கள், செய்யாதவர், செய்யாதது, செய்யாதவை - போன்ற எதிர்மறை வினையால் அணையும் பெயர்ச் சொற்களும் உள்ளன.


வினையை அடிப்படையாகக் கொண்டு ஆக்கப் பெயர்ச் சொல், தொழிற் பெயர்ச் சொல், வினையால் அணையும் பெயர்ச் சொல் ஆகிய வெவ்வேறு வகையான பெயர்ச் சொற்கள் உருவாக்கப் படுகின்றன என்பதைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.


இனி, அடுத்த பாடத்தில் பார்ப்போம்.


……….........................…


Comments

Popular posts from this blog

விருத்தம் எழுதுவது எப்படி (இரா.மீனாட்சிசுந்தரம்)

2.ஹைக்கூ கவிதைகள் (சூழல் - இரவில் உலகம்)

16.வெண்பா இலக்கணம்(அகன்)