1.எளியமுறை தமிழ் இலக்கணம்



 எளியமுறை இலக்கணம் - 01.
🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 

………………..…..- காப்பு - 

…................- அறுசீர் விருத்தம் -
.................<^> - <^> - <^> - <^> - <^>

........…- அறுசீர் ஆசிரிய விருத்தம் -

முன்னை முதலே உமையவளே.
……....உருகி வணங்கித் தொடங்குகின்றேன்.
அன்பைக் குழைத்தென் அருகமர்ந்தாய்
…..…..அறிவை வளர்த்திங் குலவவிட்டாய்.
இன்பக் கலைகள் பயிற்றுவித்தாய்
…..…..இனிமை தன்னை இழையவைத்தாய்
என்னை எழுதப் பணித்தவள்நீ.
…..…..எழிலே தமிழே வணங்குகின்றேன்.

திண்ணை தனிலே கற்றவன்நான்
……....திண்ண முடனே கற்றவன்நான்.
எண்ணம் எழுத்தாய் உருபெறவே
……....எனக்குன் துணையைத் தந்தபின்னும்
கண்ணாய் எனக்குள் இருந்துநிதம்
……....கனவை நினைவாய் மாற்றுகின்ற
விண்ணை அளந்த கணபதியே
……....விழுந்தேன் எனக்குன் அருள்தருவாய்.

...................- ‘’அகன்’’ @ அனுராதா கட்டபொம்மன்.

‘’இலக்கணமே விளக்கெண்ணெய்யே என் வயிற்றைக் கலக்குறியே’’ என்ற முன்னுரையுடன் தான் எங்கள் தமிழ் ஐயாக்கள் அப்பாவு ஐயா, பக்கிரி சாமி ஐயா இருவரும் இலக்கணப் பாடத்தைத் தொடங்குவார்கள்.

இலக்கணம் அவ்வளவு கடினமானதா?  நிச்சயமாக இல்லை. புரிந்து கொண்டால் மிகவும் எளிதானது.

இலக்கணம் என்றால் என்ன?

அஃது ஓர் இலக்கு.

இலக்கு என்றால் என்ன?

அஃது ஒரு குறி. ஓர் இலட்சியம். ஒரு வரையறை, ஓர் ஒழுங்கு, ஒரு கட்டுப்பாடு.

(உ - ம்)
வீரன் எய்த அம்பு இலக்கு நோக்கி பாய்ந்தது.
எதிரிகள் நம்மைக் குறி வைக்கிறார்கள்.
இலக்கை நோக்கி குறி பார்த்து சுட்டான்.
இலக்கு என்றாலும் குறி என்றாலும் குறிக்கோள் என்றாலும் கிட்டத் தட்ட ஒன்று தான்.

பெண்களுக்கு இலக்கணம் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு. இது நாம் அனைவரும் அறிந்ததே.

ஆண்மகனுக்கு இலக்கணம் அறிவு, நிறை, ஓர்ப்பு. கடைபிடித்தல்.

ஆண்களுக்கான இலக்கணம் புதிதாக இருக்கிறதில்லையா? இதற்கான விளக்கத்தைப் பிறகு ஒருநாள் பார்ப்போம்.

இதுவரை புரிகிறதில்லையா?

இலக்கணம் எந்த இலக்கு நோக்கி வைக்கப் பட்ட குறி?

ஓர் அழகு, ஓர் ஒழுங்கு நோக்கி வைக்கப் பட்ட குறி தான் இலக்கணம்.

உயர்திணை, அஃறிணை, செயல்பாடுகள் எல்லாவற்றிற்கும் இலக்கணம் உண்டு. 

வீரத்தின் இலக்கணம் புறமுதுகு காட்டி ஓடாமல் எதிரியை எதிர்கொள்வது.

நட்புக்கு இலக்கணம் துரியோதனனும் கர்ணனும். பிசிராந்தயாரும் கோப்பெரும் சோழனும்.

துரோகத்துக்கு இலக்கணம் எட்டப்பன், புரூட்டஸ்,

நடிப்புக்கு இலக்கணம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகையர் திலகம் சாவித்திரி என்று எல்லாவற்றிலும் இலக்கணம் விரவிக் கிடக்கிறது.

அப்படி இருக்கையில், நாம் அன்றாடம் பேசும் மொழிக்கு இலக்கணம் இல்லாமல் இருக்குமா?

மொழிக்கும் இலக்கணம் உண்டு. இலக்கணத்தோடு இருப்பவையே இலக்கியம் ஆகின்றன.

மொழி இலக்கணம் என்றால் என்ன? மொழியின் ஒலி, எழுத்து, சொல், சொற்றொடர்(வாக்கியம்) முதலியவற்றின் அமைப்பை தினசரி வழக்குகளின் அடிப்படையில் விவரிக்கும் விதிகள்.

தமிழ் மொழியின் விதிகளை போதிப்பதே இலக்கண நூல்கள்.

அவற்றில் காலத்தால் முந்தியது அகத்தியம். அது நமக்குக் கிடைக்க வில்லை.

தொல்காப்பியமும், நன்னூல் காண்டிகையும் மட்டுமே இன்று பரவலாகப் பேசப் படுகின்றன.

மனிதன் சங்கேத ஒலிகள் எழுப்பிப் பேசிக் கொண்டிருந்த காலத்தில் மொழி உதயமானது.

மொழிகளில் மூத்த முதல் மொழி நம் தமிழ் மொழி என்பதில் நாம் அனைவரும் பெருமை கொள்ளலாம்.

மனிதன் தன் கருத்தை வெளிப்படுத்தவும், மற்றவர்களின் கருத்தைப் புரிந்து கொள்ளவும் முயன்ற போது மொழி உருவானது.

சொற்களை எளிதாக உச்சரிக்கவும், திருத்தமாகப் பேசவும், எழுதவும், படிக்கவும் மொழிக்கு உருவம் கொடுத்தான். வரி வடிவம் கொடுத்தான். அதுவே எழுத்தானது.

நம் தமிழ் இலக்கணம்

01. எழுத்து அதிகாரம்.

02. சொல் அதிகாரம்.

03. பொருள் அதிகாரம்.

04. யாப்பு இலக்கணம்.

05. அணி இலக்கணம்.

என ஐந்து வகையாகப் பிரிக்கப் பட்டுள்ளது. இவற்றில் முதல் மூன்றுமே மொழியின் தொடக்க நிலை ஆகும். இவை இலக்கணத்தின் அடிப்படை ஆதலால் அதிகாரம் என்று சொல்லப் பட்டன

எழுத்து, சொல், பொருள் இவை மூன்றும் இல்லாமல் பேசவோ, எழுதவோ, படிக்கவோ இயலாது.

யாப்பு, அணி இவை இரண்டும் பாடல், செய்யுள், கவிதை போன்றவற்றில் விரவி வந்தாலும்

கூடுதலாகப் பேச்சுத் தமிழில் இசைந்து வந்தால் அவர்கள் திரு.வி.க. பேரறிஞர் அண்ணாவாக மாறி விடுகின்றனர்.

எழுத்துக்கும், பேச்சுக்கும் அழகு, கவர்ச்சி இரண்டையும் கொடுப்பது யாப்பும், அணியுமே.

தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்று பிரிக்கப் பட்டு முத்தமிழ் என்று அழைக்கப் படுகிறது.

இதில், இயல் என்பது பேச்சு வழக்கு. உரைநடைத் தமிழ்.

இசை என்பது செய்யுள், கவிதை, பாடல்களில் வருவது.

நாடகம், இயலும் இசையும் கலந்து பார்வைக்கு (Visual Media) விருந்தளிக்கும் நடனம், நாட்டியம் போன்ற உடல் மொழியுடன்(Body Language) வருவது.

சரி, இனி இலக்கணத்தின் தொடக்கமான எழுத்தைப் பற்றி பார்ப்போம்.


Comments

  1. இயல்பான எளியநடையில் அண்ணன் அகனின் பயிற்சிகளால் தமிழும்
    தமிழ் கற்க விழையும்
    ஆர்வலர்களும் பயன் மிகப் பெறுவர் என்பது திண்ணம்! அரிய இப் பயிற்சியை வழங்கமுன்வந்த அரிய கடமையைச் செய்யத் துடித்துக் காரியம் ஆற்றும்
    பூஞ்சோலைக் குழுமத்திற்குத் தமிழுலகு
    என்றும் கடமைப் பட்டிருக்கும்! வாழ்க!.
    நன்றி! தென்கரை தாயுமானவன்.

    ReplyDelete
  2. அருமை, அருமை. தங்களின் இந்த அளப்பரிய சேவைக்கு நன்றியுடையோம்!

    ReplyDelete
  3. வாழ்த்துகளய்யா.

    ReplyDelete
  4. அகனார் அளித்த
    அமுத விளக்கம்
    தகைசால் சான்றோர்
    வகைக்குள் வசப்படுமே.

    ReplyDelete
  5. தெளிவான பதிவு நன்றி

    ReplyDelete
  6. அருமையான அடிப்படைக்கு தேவையான பதிவு நன்றி அனைவருக்கும் பூஞ்சோலை குழுமத்திற்கும்

    ReplyDelete
  7. அருமையான விளக்கம்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

விருத்தம் எழுதுவது எப்படி (இரா.மீனாட்சிசுந்தரம்)

2.ஹைக்கூ கவிதைகள் (சூழல் - இரவில் உலகம்)

16.வெண்பா இலக்கணம்(அகன்)