15.வெண்பா இலக்கணம்(அகன் )
வெண்பா இலக்கணம் பாடம் - 15.
🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡
#இதழகல்_வெண்பாவைப் பார்ப்போமா…?
ஆமாம்… இதழகல் வெண்பா என்றால் என்ன…?
நாம் பேசும் போதும் ஒரு சில எழுத்துகளை உச்சரிக்கும் போதும் நம் உதடுகள் இரண்டும் ஒட்டும்.
உதாரணமாக அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ போன்ற உயிர் எழுத்துகளை உச்சரித்துப் பாருங்கள். உதடுகள் ஒட்டாது.
உ, ஊ, ஒ, ஓ, ஒள போன்ற உயிர் எழுத்துகளை உச்சரிக்கும் போது உதடுகள் குவிந்து ஒன்றோடு ஒன்று ஒட்டும்.
அதே போல மெய்யெழுத்துகளில் க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ய், ர், ல், ழ், ள், ற், ன் என பதினைந்து எழுத்துகளை உச்சரிக்கும் போது உதடுகள் ஒட்டாது.
ப், ம், வ் ஆகிய மூன்று எழுத்துகளை உச்சரிக்கும் போது உதடுகள் ஒட்டும்.
தமிழில் ஆய்த எழுத்து தவிர்த்து மொத்த எழுத்துகள் 246.
இவற்றில் நாம் பயன்படுத்த உகந்த உயிரெழுத்துகள் ஏழு. மெய்யெழுத்துகள் பதினைந்து. இவை இரண்டும் புணர்ந்து உருவாகும் உயிர்மெய் எழுத்துகள் 7 X 15 = 105 எழுத்துகள் மட்டுமே.
இங்கு, 105 மெய் எழுத்துகளையும் எழுதிக் காட்ட இயலாது. உதாரணத்திற்கு க், ச் - இரண்டு எழுத்துகளை மட்டும் எழுதிக் காட்டுகிறேன்.
க் + அ = க, கா, கி, கீ, கெ, கே, கை - ஏழு எழுத்துகளைப் பயன்படுத்தலாம்.
ச் + அ = ச, சா, சி, சீ, செ, சே சை - ஏழு எழுத்துகளைப் பயன்படுத்தலாம்.
அதேபோல,
க் + உ = கு, கூ, கொ, கோ, கெள - ஐந்து எழுத்துகளைப் பயன்படுத்தலாகா.
ச் + உ = சு, சூ, சொ, சோ, செள - ஐந்து எழுத்துகளைப் பயன்படுத்தலாகா.
இவ்வாறே மற்ற 13 மெய்யெழுத்துகளுக்கும் பார்த்துக் கொள்ளுங்கள்.
ப் + அ = ப, பா, பி, பீ, பெ, பே, பை, பொ, போ, பெள - பன்னிரண்டு எழுத்துகளைப் பயன்படுத்தலாகா.
ம் + அ = ம, மா, மி, மீ, மெ, மே, மை, மொ, மோ, மெள - பன்னிரண்டு எழுத்துகளைப் பயன்படுத்தலாகா.
வ் + அ = வ, வா, வி, வீ, வெ, வே, வை, வொ, வோ, வெள - பன்னிரண்டு எழுத்துகளைப் பயன்படுத்தலாகா.
உதடு ஒட்டாத உயிர் எழுத்துகளில் ஏழு எழுத்துகள், மெய்யெழுத்துகளில் பதினைந்து எழுத்துகள், உயிர்மெய் எழுத்துகளில் நூற்றி ஐந்து எழுத்துகள் ( 7 + 15 + 105 = 127) என நூற்றி இருபத்தியேழு எழுத்துகளை மட்டும் பயன்படுத்தி வெண்பா எழுத வேண்டும்.
உதடு ஒட்டும் உயிர் எழுத்துகளில் ஐந்து எழுத்துகள், மெய்யெழுத்துகளில் மூன்று எழுத்துகள், உயிர்மெய் எழுத்துகளில் நூற்றி பதினொன்று (5 + 3 * 111 = 119) என நூற்றிப் பத்தொன்பது எழுத்துகளைப் பயன்படுத்தலாகா.
இப்போது நாம் உதடுகள் ஒட்டாத எழுத்துகளை மட்டும் பயன்படுத்தி வெண்பா எழுத வேண்டும்.
கொஞ்சம் சவாலான முயற்சி தான்.
அப்படி 127 எழுத்துகளை மட்டும் பயன்படுத்தி நான் எழுதிய சில வெண்பாக்களைக் கீழே கொடுத்திருக்கிறேன். படித்துப் பாருங்கள்.
இதழ்கள் ஒட்டாது. இவையே ''இதழகல் வெண்பா'' எனப் படும்.
#இதழகல்குறள்வெண்பா.
கண்ணே, கனியே,கற் கண்டே அழகே,என்
எண்ணத்தி லேகலந் தாய்.
எண்ணக் கனாக்கண்டேன், ஏந்திழையாள் என்னிதயந்
தன்னில் இனித்திருந் தாள்.
#இதழகல்நேரிசைவெண்பா.
சித்தங் கலங்கிச் சிதறாநல் லெண்ணங்கள்
நத்தி நலஞ்சேர்த்தல் நன்றேகாண் - நித்திரையில்
காணாக் கனாக்களென் கண்கள் தனையாள
நானாகி நீயான தேன்.
அங்கையற் கண்ணாள் அடியளந்தாள், ஆணையிட்டாள்.
சிங்கநிகர் ஆத்தாளை சிந்தித்தேன் - நங்காய்,
எனைத்தேடி நீயடைந்தாய். என்னாலே ஆன
தனைத்தானே செய்கின்றேன் நான்.
நீயாரென் றேயறியேன். நீயறி யாயென்னை.
சேயாயென் காலடியில் சேர்ந்தாயே - தேயா
நிலாநீயென் கிள்ளையின் நேரானாய் என்னில்
இலாதநீ நீயில்லை யே.
#இதழகல்இன்னிசைவெண்பா.
இனிதாய்ச் சிரித்தாய், எழிலாய் நடந்தாய்,
கனியாய் இனித்தாய், கனலாய் எரித்தாய்
எனையேன் நினைத்தாய்? எதற்காய் அழைத்தாய்?
தனித்தே கிடந்தனன் நான்.
…………..- ‘’அகன்’’ @ அனுராதா கட்டபொம்மன்.
அடுத்தது சிலேடை வெண்பா ஆகும்.
பெரும்பாலும் சிலேடை வெண்பாக்கள் இரு பொருள் பட எழுதப் பட்டிருக்கும். சிலேடை வெண்பாவுக்குப் பெயர் போனவர் கவி காளமேகம்.
அவரன்னியில், இரட்டைப் புலவர்கள் என்ற மாற்றுத் திறனாளிப் புலவர்களான #இளஞ்சூரியர் மற்றும் #முதுசூரியர் சிலேடையாகப் பாடுவதில் வல்லவர்கள்.
இவர்களில் கால் இல்லாதவரை பார்வை இழந்தவர் தனது தோள்களில் சுமந்து நடப்பார் என்றும், கால் இல்லாதவர் அவரை வழி நடத்திச் செல்வார் என்றும் பண்டைய காலச் சுவடுகள் தெரிவிக்கின்றன.
நான் சில சிலேடை வெண்பாக்கள் எழுதி இருந்த போதும் இங்கே நான் மிகவும் மதிக்கும் கவி காளமேகத்தின் வெண்பாவையே எடுத்துக் காட்டாகக் காட்ட விழைகிறேன்.
16. #சிலேடை_வெண்பா.
வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை - மங்காத
சீரகத்தைத் தந்தீரேல் வேண்டேன் பெருங்காயம்
வேரகத்துச் செட்டியா ரே.
……………………………..……..- #காளமேக_புலவர்.
#சமையலறைச்சரக்குகளை வைத்தே ஓர் அருமையான ஆன்மிக #சிலேடைப்பாடலை எழுதி இருக்கிறார். சிலேடைப் பாடல்கள் இரு பொருள் தரும்.
#வெங்காயம் - வெறும் காயம் - வெங்காயத்தை இறுதி வரை உரித்தாலும் எதுவும் இருக்காது.
அவ்வாறே இவ்வுடலையும் இறுதி வரை உரித்துப் பார்த்தாலும் உள்ளே யாரும் இருக்க மாட்டார்கள்.
#சுக்கானால் - காய்ந்து சாரமற்ற இஞ்சி போன்று உயிர் பிரிந்த உடல் (காயம்).
#வெந்தயத்தால்_ஆவதென்ன - உயிர் பிரிந்த உடலை எரிப்பதால் கிடைப்பதென்ன? வெறும் சாம்பல் மட்டுமே.
#இங்கார்சுமந்திருப்பார்இச்சரக்கை - இந்த உலகில் யார் இறந்த உடலை வைத்துக்கொள்ள விரும்புவர்?
#மங்காதசீரகத்தைத்தந்தீரேல் - சீரகம் - சீரான அகம் - அலை பாயாத மனம் – சஞ்சலமற்ற அறிவு - நிலை பேறு. நிலை பேற்றைக் கொடுத்தீர்களேயானால்…
#வேண்டேன்_பெருங்காயம் - பெரும் காயம் - பெருமைக்குரிய உடல்.
மனித பிறவியே கிடைத்தற்கரிய பிறவியாதலால், இங்கு பெருங்காயம் மனித உடலைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.
கவன ஆற்றலை நான் என்னும் தன்மையுணர்வின் மீது திருப்புவது என்பது மனிதப் பிறவியால் மட்டுமே முடியும்.
ஏனைய பிறவிகளுக்கு ஊழ்வினையில் கொடுப்பினை இருந்தால் மட்டுமே சாத்தியம்.
பெருங்காயமோ, சிறுகாயமோ, உன்னை என்றும் மறவாதிருக்க வேண்டும் என்று கேட்டுவிட்டார்.
#வேரகத்துச்_செட்டியாரே - வேரகம் - #திருவேரகம் - #சுவாமிமலை.
செட்டியார் - இங்கு பலசரக்கு வாணிபம் செய்பவர். இவ்வண்டத்திலுள்ள அனைத்து சரக்குகளையும் வைத்து, அவற்றை உயிர்கள் அனுபவிக்க உழைப்பு என்னும் குடியிறையைப் பெற்றுக் கொண்டு வாணிபம் நடத்தும் சுவாமி மலையில் உள்ள பெருமான் - #தகப்பன்_சுவாமி - முருகன்.
என்ன, பிரமிப்பாக இருக்கிறதா….? என்ன ஒரு சொல்லாடல் பாருங்கள்.
Comments
Post a Comment