14.வெண்பா இலக்கணம்(அகன் )

 வெண்பா இலக்கணம் பாடம்  - 14.

🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 

 #அடியெதுகைஅல்லதுமுற்றெதுகைவெண்பாவைப்பார்ப்போம்.


இஃது அடிதோறும் உள்ள நான்கு சீர்களிலும் எதுகைப் பெற்று வரும் வெண்பா ஆகும்.


நான்கு சீர்களிலும் எதுகை என்பதால் #பொழிப்புமோனை பார்க்க வேண்டியதில்லை. எனினும், #பொழிப்புமோனையும்அமைந்தால்மிகச்_சிறப்பு.


★12. #அடியெதுகைஅல்லதுமுற்றெதுகை_வெண்பா.


சித்தமெல்லாம் சத்தியத்தால் தித்திக்கத் தித்திக்கச்

சித்திக்கும் புத்திளமை சித்திவரம் - எத்திசையும்

நல்லவர்கள் இல்லையெனில் நல்லுணர்வும் கல்லறையில்

சில்லறைக்குச் சொல்லெதற்குச் சொல்.


………..............…- ‘‘அகன்’’ @ அனுராதா கட்டபொம்மன்.


முதல் இரண்டடிகளில் எட்டு சீர்களிலும் இரண்டாவது எழுத்தாக ‘த்’ வர அடியெதுகை ஆனது.


பின் இரண்டடிகளில் ஏழு சீர்களிலும் இரண்டாவது எழுத்தாக ‘ல்’ வர அடியெதுகை ஆனது.


இந்த இரு விகற்ப நேரிசை வெண்பாவில் பொழிப்பு மோனையும் வந்திருப்பதை கவனியுங்கள்.


ஒவ்வொரு அடியிலும் தனித் தனி அடியெதுகை வர பல விகற்ப வெண்பாவும் எழுதலாம்.


★13. #வழியெதுகை_வெண்பா.


வெண்பாவின் அனைத்து 15 சீர்களிலும் ஒரே எதுகை வரத் தொடுக்கும் வெண்பா.


முத்தமிது முத்தமென முத்தமிட்டு முத்தெடுத்த

முத்துரத முத்தெழிலை முத்திவர - முத்தழகு

முத்தியது முத்தமிழை முத்தமிட்டு முத்தமிட

முத்தமழை முத்துதடி முத்து.


………............- ‘‘அகன்’’ @ அனுராதா கட்டபொம்மன்.


இந்த வெண்பாவின் 15 சீர்களிலும் இரண்டாவது எழுத்து ‘த்’ வர அனைத்து சீர்களும் எதுகை பெறுகிறது.


அத்தோடு, அனைத்துச் சீர்களிலும் முதல் எழுத்து ‘மு’ வர இஃதொரு முற்று மோனை வெண்பாவும் ஆகும்.


★14. #வல்லெழுத்து_வெண்பா.


வெண்பாவில் வல்லெழுத்துகளான க், ச், ட், த், ப், ற் ஆகிய ஆறெழுத்தும் அந்த ஆறெழுத்துகளின் உயிர்மெய் எழுத்துகள் வர எழுதப் பட்ட வெண்பா இவை.


எழுதியவர் #கவிகாளமேகபுலவர். இந்த வெண்பா ஒரு திரைப்படப் பாடலிலும் பயன்படுத்தப் பட்டதாக நினைவு.


தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி

துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி

தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த

தெத்தாதோ தித்தித்த தாது.


இந்தப் பாடலை எனக்குத் தெரிந்தவரையில் பிரித்து எழுதி இருக்கிறேன்.


தத்தித் தாது ஊதுதி தாது ஊதி தத்துதி

துத்தித் துதைதி துதைந்து அத்தாது ஊதுதி

தித்த தித்த தித்தித்த தாது எது தித்தித்தது

எத்தாதோ தித்தித்த தாது.


பூவுக்கு பூ மாறி மாறி பயணம் செய்யும் ஒரு வண்டைப் பார்த்துக் காளமேகப் புலவர் பாடிய பாடல் தான் இது.


#அருஞ்_சொற்பொருள்:

- - - - - - - - - - - - - - - - - - - - - -

தத்தல் - பாய்தல்.

தாது - மகரந்தம், பூ, பூவிதழ், பூந்தாது.


பொருள் தெரிய வேண்டிய வார்த்தைகள் இவை தான் . பொருளை பார்ப்போம்.


(வண்டே) தத்தி தாது ஊதுதி - பாய்ந்து மகரந்தத்தை ஊதுகின்றாய்.


தாது ஊதி தத்துதி - மகரந்தம் ஊதி பின் பாய்கின்றாய்.


துத்தித் துதைதி - து… தி… எனக் கத்திக் கொண்டு பூவை நெருங்குகின்றாய்.


துதைந்து அத்தாது ஊதுதி - நெருங்கி அந்த பூவின் தாதுவையும் ஊதுகின்றாய்.


தித்த தித்த தித்தித்த தாது எது - அவற்றில் மிகவும் இனிமையான பூ எது…?


தித்தித்தது எத்தாதோ - தித்தித்த தாது - இனிமையானது எந்த பூவின் மகரந்தம்...? எப்பூவின் அழகிய இதழ்.


இரண்டு மூன்று வார்த்தைகளை வைத்துக் கொண்டு எவ்வளவு அழகாய் விளையாடி இருக்கிறார் பார்த்தீர்களா கவி காளமேகம்…?


#பொருள்:

- - - - - - - - -

தத்தி தாவி பூவிலிருக்கும் தாதுவாகிய மகரந்தத் தூளை திண்ணும் வண்டே, ஒரு பூவினுள் உள்ள தாதுவை உண்ட பின் மீண்டும் ஒரு பூவினுக்குள் சென்று தாதெடுத்து உண்ணுகிறாய், உனக்கு (எத்தாது) எந்தப் பூவிலுள்ள தேன் (இனித்தது) தித்தித்தது…?


கவி காளமேகம் #ககர_வல்லெழுத்தில் பாடி அருளிய இன்னொரு சிந்தியல் வெண்பாவைப் பார்ப்போமா...


காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை

கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்

காக்கைக்குக் கைக்கைக்கா கா.


புரிதலுக்காகப் பிரித்து எழுதி இருக்கிறேன்.


காக்கைக்கு ஆகா கூகை கூகைக்கு ஆகா காக்கை

கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கு ஒக்க - கைக்கைக்குக்

காக்கைக்குக் கைக்கு ஐக்கு ஆகா.


#பொருள்:

- - - - - - - - - -

கூகை - ஆந்தை. காக்கையானது பகலில் கூகையை (ஆந்தையை) வென்று விடும். ஆந்தையை விட காக்கைக்கு #பகலில் வலு அதிகம்.


கூகையானது(ஆந்தை) இரவில் காக்கையை வென்று விடும். ஆந்தைக்கு இரவில் வலு அதிகம்.


கோ எனும் அரசன் பகைவரிடத்திலிருந்து தம் நாட்டை இரவில் ஆந்தையைப் போலவும், பகலில் காக்கையைப் போலவும் காக்க வேண்டும்.


எதிரியின் பலவீனம் அறிந்து, கொக்கு காத்திருப்பது போலத் தக்க நேரம் வரும் வரைக் காத்திருந்து தாக்க வேண்டும்.


தகுதியற்ற காலம் எனில் தகுதியான அரசனும் கூட (கைக்கு ஐக்கு ஆகா) கையாலாகாதவனாகி விடக் கூடும்.


என்ன… தலை சுற்றுகிறதா….?


இப்படிப் பட்ட தமிழ் மேதைகள் பெயருக்கு முன்னால் #கவி என்று போட்டுக் கொள்வதில் ஒரு ஞாயமிருக்கிறது.


என்னைப் போன்ற #கத்துக்குட்டிகள் எல்லாம் கவிஞர் என்று பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்வது #கலைமகளைஅவமதிப்பது போலாகும் என்பதாலேயே நான் ‘’#கவிஞர்’’ என்று பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்வதில்லை.


#வல்லெழுத்து மட்டும் வர இந்தக் கத்துக் குட்டி எழுதிய வெண்பாவை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.


வல்லெழுத்து வெண்பா. க, ச, ட, த, ப, ற கலந்து வர எழுதிய ஒரு விகற்ப இன்னிசை வெண்பா.


கற்பகப் பூப்பூத்துக் காதோடு பாப்பேசச்

சற்றே சடசடத்த சாகசச் சாதகத்தைப்

பற்றிப் பதறாது பாட்டு சிதறாது

கற்றுக் கதைக்கின்ற பேச்சு.




Comments

Popular posts from this blog

விருத்தம் எழுதுவது எப்படி (இரா.மீனாட்சிசுந்தரம்)

2.ஹைக்கூ கவிதைகள் (சூழல் - இரவில் உலகம்)

16.வெண்பா இலக்கணம்(அகன்)