12.வெண்பா இலக்கணம்(அகன் )
வெண்பா இலக்கணம் பாடம் - 12.
🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀
கலம்பக வெண்பா, சமநடை வெண்பா, சமநிலை வெண்பா, மயூர வெண்பா போன்றே எழுத்துகள் எண்ணிக்கைப் பார்த்து எழுதும் இன்னொரு வகை வெண்பா கட்டளை வெண்பாவாகும்.
அளவியல் வெண்பாவின் முதல் மூன்று அடிகளில் ஒற்று நீக்கி எழுத்து எண்ணிக்கை ஒன்றி வருவது கட்டளை வெண்பாவாகும்.
பொதுவாக, முதல் மூன்று அடிகளில் ஒற்றெழுத்து நீக்கி 12 அல்லது 13 அல்லது 14 எழுத்துகள் வரும்படி பாடுதல் மரபு.
15 அல்லது 16 எழுத்துகள் வரும்படியும் எழுதலாம்.
அனைத்துச் சீர்களும் புளிமாச் சீராக அல்லது கூவிளம் சீராக இருந்தால் 12 எழுத்துகளும்,
கூவிளங்காய்ச் சீர்களாக இருந்தால் 16 எழுத்துகளும் வரும்.
மாச் சீர்களையும், விளஞ் சீர்களையும், காய்ச் சீர்களையும் கலந்து எழுதினால் 12 எழுத்துகளிலிருந்து 16 எழுத்துகள் வரை எழுத்து எண்ணிக்கை ஒன்றி வர எழுதலாம்.
ஈற்றடி சிந்தடி ஆதலால் எழுத்து எண்ணிக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை.
கட்டளை வெண்பாக்களை பலவகைகளிலும் எழுதலாம். அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
10. 01. கட்டளை வெண்பா.
இந்த வெண்பாவில் முதல் மூன்று அடிகளில் ஒற்று நீக்கி 13 எழுத்துகள் வருகின்றன.
ஆகவே, இது கட்டளை வெண்பா ஆகும்.
கூடுதலாக, ஈற்றடி ஒற்றெழுத்துடன் 13 எழுத்துகள் வருவதால் இது சற்றே வித்தியாசமான சமநிலை வெண்பாவும் ஆகும்.
காலைப் பனியுறங்கும் கற்கண்டு தித்திப்பில்
மாலைப் பொழுதுறங்கும் மண்ணுறங்கும் - வாலைக்
குமரிவந்தால் மேகமாய்க் கூடிய கூந்தல்
அமரநில வேங்குமடி ஆங்கு.
……- ‘’அகன்’’ @ அனுராதா கட்டபொம்மன்.
10. 02. சீர் நெடில் எழுத்தில் தொடங்கும் கட்டளை வெண்பா.
இந்த வெண்பாவில் கூவிளம் சீர்கள் மட்டுமே வரும்.
முதல் மூன்று அடி தோறும் 13 எழுத்துகள் வரும் கட்டளை வெண்பா இது.
ஆயிர மாயிரம் ஆழ்மன மோங்கிடும்
வாயுரம் பேசுவர் மாறிலர் - ஆயுதம்
நாவெனில் மாபெரும் ஞானியும் சூனியம்
தீவெனத் தானிவர் சீர்.
…...........…- ''அகன்’’ @ அனுராதா கட்டபொம்மன்.
10. 03. சீர் நெடில் எழுத்தில் முடியும் கட்டளை வெண்பா.
புளிமாச் சீர் மட்டும் வரும். ஒற்றெழுத்துகளை ஒதுக்கி ஈற்றெழுத்தைப் பாருங்கள். எல்லா எழுத்துகளும் நெடில் எழுத்துகளாகவே இருக்கும்.
முதல் மூன்று அடி தோறும் 12 எழுத்துகள் வரும் கட்டளை வெண்பா இது.
அறிவே விழியா(ம்) அறிவோர் பெரியோர்
குறிதான் இலக்காய்க் குவிவார் - பொறியால்
அறிவோ(ர்) அவரே அலட்டா(து) அமர்வார்
சிறியோர் சிரிப்பார் தெளி.
…..........…- ‘’அகன்’’ @ அனுராதா கட்டபொம்மன்.
10. 04. நெட்டெழுத்தால் ஆன கட்டளை வெண்பா;
ஒற்றெழுத்துத் தவிர்த்து மற்ற எல்லா எழுத்துகளும் நெடில் எழுத்துகளால் ஆன கட்டளை வெண்பா. தேமாங்காய்ச் சீர் மட்டுமே வரும்.
முதல் மூன்று அடி தோறும் 12 எழுத்துகள் வரும் கட்டளை வெண்பா இது.
பாட்டாலே தீட்டாதீர் பாயாதீர் நாவாலே
நாட்டோரே சாடாதீர் நாளேட்டால் - காட்டாதீர்
பூட்டாலே பூட்டாதீர் பூவாலே போற்றாதீர்
நாட்டாதீர் ஏட்டாலே நாள்.
…...........…- ‘’அகன்’’ @ அனுராதா கட்டபொம்மன்.
10. 05. நெட்டெழுத்தில்லாக் (குறில் எழுத்து மட்டும் உள்ள) கட்டளை வெண்பா.
புளிமாச் சீர் மட்டும் வரும். இஃது ஓர் ஒற்றில்லா வெண்பாவும் கூட.
முதல் மூன்று அடி தோறும் 12 எழுத்துகள் வரும் கட்டளை வெண்பா இது.
அழகு முருகு மதனை யடைய
மெழுகு மிளகி விலக - வெழுக
பழகு மினிய பகலு மொளிர
முழவு மறிவு தொழு.
சீர்களைப் பிரித்து எழுதிக் காட்டி இருக்கிறேன்.
அழகும் உருகும் அதனை அடைய
மெழுகும் இளகி விலக - எழுக
பழகும் இனிய பகலும் ஒளிர
முழவும் அறிவு தொழு.
…...- ‘’அகன்’’ @ அனுராதா கட்டபொம்மன்.
10. 06. தேமா கருவிளம் சீர்கள் மாறி மாறி வரும் இன்னிசைக் கட்டளை வெண்பா;
முதல் மூன்று அடி தோறும் 12 எழுத்துகள் வரும் கட்டளை வெண்பா இது.
வாணாள் பெருகிட வாழ்க்கை மகிழ்வுறும்
காணாக் கனவுகள் காதல் கவிதரும்
பேணா உறவுகள் பேதம் கலைந்திட
வீணாய் உதவுதல் வீண்.
….........…- ‘’அகன்’’ @ அனுராதா கட்டபொம்மன்.
10. 07. கருவிளம் தேமாச் சீர்கள் மாறி மாறி வரும் இன்னிசைக் கட்டளை வெண்பா;
முதல் மூன்று அடி தோறும் 12 எழுத்துகள் வரும் கட்டளை வெண்பா இது.
இளமகள் உன்னை இருதினம் காணா(து)
உளமுரு கும்நான் உலகினில் இல்லாக்
களமதில் சாய்ந்தேன் கனிமக ளேநீ
வளமுடன் வாழ்வாய் மகிழ்ந்து.
….........- ‘’அகன்’’ @ அனுராதா கட்டபொம்மன்.
17. 08. கூவிளங்காய் தேமாங்காய் மாறி மாறி வரும் கட்டளை வெண்பா;
முதல் மூன்று அடி தோறும் 14 எழுத்துகள் வரும் கட்டளை வெண்பா இது.
தேனிருக்கும் தேன்கூட்டில் தென்றலுண்டு மாந்தோப்பில்
நானிருக்கும் உள்ளத்தில் நாதமுண்டு - கூனிக்கோ
கானிருக்கும் கைகேயி கண்டெடுத்த சாபத்தில்
தானிருக்கும் கோதண்டன் தாழ்வு.
…...........…- ‘’அகன்’’ @ அனுராதா கட்டபொம்மன்.
10. 09. மாச் சீர் இரண்டு, விளஞ்சீர் இரண்டு மற்றும் காய்ச்சீர் நான்கும் என வெண்பாவுக்கான எட்டு வகைச் சீர்களும் கலந்து வரும் கட்டளை நேரிசை வெண்பா.
முதல் மூன்று அடி தோறும் 13 எழுத்துகள் வரும் கட்டளை வெண்பா இது.
வாழும் உயிர்கள் வரந்தரும் நல்லமனம்
தாழுங்கை வையகத்தில் சான்றளிக்கும் - சூழும்
புகைபோலும் கெட்டமது போக்கொழிந் தால்தான்
பகையழித்தால் பாரெழும் பார்த்து.
…..........…- ‘’அகன்’’ @ அனுராதா கட்டபொம்மன்.
இன்னும் கூட நிறைய வகைகளை உருவாக்கலாம்.
Comments
Post a Comment