11.வெண்பா இலக்கணம்(அகன் )
வெண்பா இலக்கணம் பாடம் - 11.
🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀
அளவியல் வெண்பாக்களின் உள்வகைகளான 01. இரு குறள் நேரிசை வெண்பா, 02. ஆசிடை இட்ட நேரிசை வெண்பா, 03. ஒற்றெழுத்தில்லா வெண்பா, 04. குளக வெண்பா மற்றும் 05. கலம்பக வெண்பா என்னும் ஐந்து வகைகளைப் பார்த்தோம்.
இனி, சமநடை வெண்பா என்றால் என்னவென்று பார்ப்போம்.
06. #சமநடை_வெண்பா.
பொதுவாக, வெண்பாக்களில் எழுத்தெண்ணிக்கையைக் கணக்கிடும் போது #ஒற்றெழுத்துநீக்கித்தான்_கணக்கிடுவார்கள்.
ஆனால், சமநடை வெண்பாவின் முதல் மூன்று அடிகளிலும் #ஒற்றெழுத்துஉட்படஎழுத்துகளின்எண்ணிக்கைசமமாகஅமைந்தால்அதுசமநடைவெண்பா_ஆகும்.
இந்த நேரிசை வெண்பாவைப் பாருங்கள்.
உ - ம்:
- - - - - - - -
......- இரு விகற்ப நேரிசை வெண்பா -
கார்முகிழ்ந் தோடநற் காலைப் புலர்ந்தது(ம்)
ஊர்ச்செழிக் கும்படி ஊற்றுது - நேர்வரும்
மாதங்கள் வேளாண்மை மங்கா தொளிர்ந்திடக்
கோதகற் றாதோ குளம்.
….....................- ‘‘அகன்’’ @ அனுராதா கட்டபொம்மன்.
இந்த நேரிசை வெண்பாவில் #ஈற்றடிதவிரஅனைத்து_அடிகளிலும்
#ஒற்றோடு19எழுத்துகளும், #ஒற்றுநீக்கி_12எழுத்துகள்_உள்ளன.
இந்த வெண்பாவின் முதல் மூன்று அடிகளில் ஒற்றெழுத்துடன் எழுத்துகளின் எண்ணிக்கை 19 வந்திருப்பதால் இஃதொரு சமநடை வெண்பாவாகும்.
கூடுதலாக, முதல் மூன்று அடிகளில் ஒற்றெழுத்து நீக்கி எழுத்துகள் சம எண்ணிக்கையில் (12 எழுத்துகள்) வந்திருப்பதால் இஃதொரு #கட்டளை_வெண்பாவும் ஆகும்.
அடுத்து, சமநிலை வெண்பாவைக் காண்போம்.
07. #சமநிலைநேரிசைவெண்பா.
#ஈற்றடியின்ஒற்றோடுகூடியஎழுத்துகளின்எண்ணிக்கையுடன்ஏனையமூன்றுஅடிகளுள்ஏதேனும் ஓர் அடியிலோ அல்லது இரண்டு அடிகளிலோ #ஒற்றுநீக்கிஎழுத்துஎண்ணிக்கைஒத்திருக்குமானால்அதுசமநிலை_வெண்பா ஆகும்.
உ - ம்:
- - - - - - - -
….- இரு விகற்ப நேரிசை வெண்பா -
தண்டம்கை யேந்தித் தணிகை அமர்ந்திருக்கும்
சண்முகனே உன்னைச் சரணடைந்தேன் - மண்ணி(ல் )
இனிதான வாழ்க்கை இயல்பாக வாழ்வேன்
கனிமுகம் சிந்துமொளி கண்டு.
…...........…- ‘’அகன்’’ @ அனுராதா கட்டபொம்மன்.
இந்த நேரிசை வெண்பாவைப் பாருங்கள்.
ஈற்றடியில் ஒற்றெழுத்தும் சேர்த்து 13 எழுத்துகள் உள்ளன.
முதலாம், இரண்டாம் அடிகளில் ஒற்றெழுத்து நீக்கி 13 எழுத்துகள் உள்ளன.
ஆகவே, இது சமநிலை வெண்பா ஆனது.
அடுத்து, மயூரவியல் வெண்பாவைப் பார்ப்போம்.
08. #மயூரவியல்நேரிசைவெண்பா.
நான்கு அடிகளில் #ஒற்றுநீக்காமல்ஈற்றடியின்எழுத்துஎண்ணிக்கை ஏனைய அடிகளில் #ஒற்றுநீக்கியஎழுத்து_எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தால் அது மயூரவியல் வெண்பா ஆகும்.
உ - ம்:
- - - - - - -
..- இரு விகற்ப நேரிசை வெண்பா -
பணிவும் கனிவும் பயிலும் உளமே
துணிவை வலிவை உடையா(ய்) - அணியு(ம்)
அறிவாய் மனிதா அகிலம் புகழும்
அறிவிதுதான் வாழ்பவர்தம் மாண்பு.
…........…- ‘’அகன்’’ @ அனுராதா கட்டபொம்மன்.
ஈற்றடியில் ஒற்றெழுத்தும் சேர்த்து 16 எழுத்துகள் உள்ளன.
முதலாம் அடியில் ஒற்றெழுத்து நீக்கி 12 எழுத்துகள் உள்ளன. ஒற்றெழுத்துடன் சேர்த்துப் பார்த்தாலும் 15 எழுத்துகளே உள்ளன.
இரண்டாம் அடியில் ஒற்றெழுத்து நீக்கி 12 எழுத்துகள் உள்ளன. இந்த அடியில் ஒற்றெழுத்துகளே இல்லை. ஆதலால் மொத்த எழுத்துகளை 12 தான்.
மூன்றாம் அடியில் ஒற்றெழுத்து நீக்கி 12 எழுத்துகள் உள்ளன. ஒற்றெழுத்துடன் சேர்த்துப் பார்த்தாலும் 15 எழுத்துகளே உள்ளன.
நான்காம் அடியில் #ஒற்றெழுத்துடன் 16 எழுத்துகள் உள்ளன. முதல் மூன்று அடிகளில் ஒற்றெழுத்துடன் 15, 12, 15 எழுத்துகளும் ஒற்றெழுத்து நீக்கி 12 எழுத்துகளும் என நான்காம் அடியிலுள்ள 16 எழுத்துகளை விட குறைவாகவே உள்ளன.
எனவே, இந்த வெண்பா மயூரவியல் வெண்பா ஆனது.
முதல் மூன்றடிகளில் ஒற்று நீக்கி 12 எழுத்துகள் கொண்ட இஃதொரு கட்டளை வெண்பாவும் கூட.
09. #சீர்நெடில்எழுத்தில்தொடங்கும்வெண்பா.
ஒரு வெண்பா எழுத 15 சீர்கள் வேண்டும். அந்த 15 சீர்களும் நெடில் எழுத்தில் தொடங்கும் வண்ணம் அமைத்து எழுதுவது சீர் நெடில் எழுத்தில் தொடங்கும் வெண்பா ஆகும்.
உ - ம்:
- - - - - - - - - -
.- ஒரு விகற்ப நேரிசை வெண்பா -
தேடாமல் வாராது சேராமல் பாயாது
பாடாமல் சூடாது பாதங்கள் - நாடாமல்
கூடாத கூட்டங்கள் கோணாத நாட்டங்கள்
வாடாத பூப்பூக்கும் வா.
…...........…- ‘’அகன்’’ @ அனுராதா கட்டபொம்மன்.
இஃது ஒரு விகற்ப நேரிசை வெண்பா.
இந்த வெண்பாவில் 15 சீர்களின் முதல் எழுத்துகளும் நெடில் எழுத்துகளாக இருப்பதைப் பாருங்கள். கூடுதலாக, இந்த வெண்பாவில் ஒரு உயிரெழுத்து கூட இல்லை என்பதையும் பாருங்கள்.
இதுவரை ஒன்பது வகையான வெண்பாக்களைப் பார்த்திருக்கிறோம்.
Comments
Post a Comment