10.வெண்பா இலக்கணம்(அகன் )
வெண்பா இலக்கணம் பாடம் - 10.
🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡
இரு குறள் நேரிசை வெண்பா மற்றும் ஆசிடை இட்ட நேரிசை வெண்பா பற்றி பார்த்தோம்.
இனி, ஒற்றில்லா வெண்பாவைப் பார்ப்போம்.
03. #ஒற்றெழுத்தில்லா_வெண்பா.
வெண்பாவுக்குரிய வெண்டளை பயின்று வரும்.
பதினைந்து சீர்களிலும் ஒற்றெழுத்து - மெய்யெழுத்து - வராமல் எழுத வேண்டும்.
சீர்களைத் தனித் தனியாகப் பிரிக்கும் போது மெய்யெழுத்து இருந்தாலும் புணர்ச்சி விதிகளுக்கு உட்பட்டு சீர்கள் இணையும் போது மெய்யெழுத்து மறைந்து காணப் படும்.
சற்று சிரமமானதாக இருந்தாலும் தமிழில் அதிக அளவு சொற்கள் தெரிந்து வைத்திருந்தால் ஒற்றில்லா வெண்பா எளிதாக எழுதி விடலாம்.
கீழே ஓர் ஒற்றில்லா நேரிசை வெண்பா கொடுத்துள்ளேன். பாருங்கள்.
உ - ம்:
- - - - - - -
இமவா னருளி னினியே திருளே
நமதா யமையா நலிவு - உமையா
ளிருகை வரமு மினிதா யிணைய
வருவ தகில வழி.
ஈற்றுச் சீரைத் தவிர மற்ற அனைத்து பதினான்கு சீர்களும் புளிமாச் சீர்.
ஈற்றுச் சீர் மலர் வாய்பாடில் அமைந்துள்ளது.
ஒரு புரிதலுக்காக கீழே வெண்பாவைப் பிரித்து எழுதி காட்டி இருக்கிறேன்.
இமவா(ன்) அருளி(ன்) இனியே(து) இருளே
நமதா(ய்) அமையா நலிவு - உமையா(ள்)
இருகை வரமு(ம்) இனிதா(ய்) இணைய
வருவ(து) அகில வழி.
…............…- ‘’அகன்’’ @ அனுராதா கட்டபொம்மன்.
சீர்களுக்குள் மெய்யெழுத்து வராமல் சீர்களை அமைக்க வேண்டும்
சீர் பிரிக்கும் போது சீர்களின் கடை எழுத்தாக வரும் மெய்யெழுத்துகள் அதனை அடுத்து வரும் சீரில் உள்ள உயிர் எழுத்துகளுடன் புணர்ந்து உயிர்மெய் எழுத்தானதால் மெய்யெழுத்து மறைந்து கிடக்கிறது.
அத்தோடு, குற்றியலுகர எழுத்துகள் அடுத்து வரும் சீரில் உள்ள உயிரெழுத்துடன் புணர்ந்து இரண்டு இடங்களில் இயற்சீர் வெண்டளை ஆகிறது.
கொஞ்சம் முயற்சி செய்தால் நீங்களும் ஒற்றில்லா நேரிசை வெண்பா எழுதலாம்.
அடுத்து, குளக வெண்பாவைப் பார்ப்போம்.
04. #குளக_வெண்பா.
அ. குளக வெண்பா தனித்து வருவதில்லை.
ஆ. இரண்டும், இரண்டிற்கு மேற்பட்டும் இருக்க வேண்டும்.
இ. வெண்பா முழுவதையும் வினையெச்சத்தாலேயே அடுக்கி கடைசி வெண்பாவில் வினைமுற்று வர நிறைவு செய்ய வேண்டும்.
ஈ. சுருக்கமாகச் சொன்னால் ‘’குளக வெண்பா’’ ஒரே சொறொற்றொடராக அமைந்து ஈற்றடியில் வினைமுற்று வர நிறைவு பெற வேண்டும்.
இங்கு இரண்டு வெண்பாக்களில் ஒரு குளக வெண்பா அமைந்திருக்கிறது.
வேல்விழி யாள்சிரிக்க விண்மீன்கள் கண்சிமிட்ட
பால்வெளியில் வெண்ணிலவு பாய்விரிக்க - சேல்நிறைந்த
பொய்கை பளபளக்க பொன்னுருக்கி விட்டதுபோல்
மெய்மினுக்க மேனி மெலிந்து
நிறமிழக்க ஆடை நெகிழ்ந்துவிழ எண்ணம்
சிறகடிக்க கன்னம் சிவக்க - உறவுக்குத்
தென்றல் கொடியசைக்க தேனடையைத் தொட்டெடுத்து
#கன்னலில்சேர்த்தகனவு.
……- ‘’அகன்’’ @ அனுராதா கட்டபொம்மன்.
#ஈற்றடியை,
‘’#கன்னலில்சேர்த்தகனவு’’ என நிறைவு செய்தால்
முன்னர் எழுதிய பாடல் ‘’#கனவு’’ என்றும்,
ஈற்றடியை,
‘’#கன்னலில்சேர்த்தகளவு’’ என நிறைவு செய்தால்
பின்னது ‘’#நினைவு’’ என்றும்
#மாறுபட்டப்பொருள்தரும்.
அடுத்து, கலம்பக வெண்பாவைப் பார்க்கும் முன் வெண்பாவைப் பற்றி ஒரு கூறாய்வைப் பார்ப்போம்.
அளவியல் வெண்பாவைப் பொறுத்தவரையில் நான்காவது அடி சிந்தடி. ஆதலால், எழுத்து எண்ணிக்கைக்கு நான்காவது அடியைத் தவிர்த்து விட வேண்டும்.
ஓர் அளவடி வெண்டளையுடன் அமைய குறைந்த பட்சம் ஒற்றெழுத்து நீங்கலாக பன்னிரண்டு எழுத்துகள்(12) வேண்டும்.
அதிக பட்சமாக, ஒற்றெழுத்து நீங்கலாக பதினாறு எழுத்துகள்(16) வரை போகும்.
ஓர் அளவடி வெண்டளையுடன் பன்னிரண்டு எழுத்துகளுக்குக் குறைவாகவோ பதினாறு எழுத்துகளுக்கு அதிகமாகவோ வர வாய்ப்பில்லை.
அதே போல ஒரு சிந்தடி வெண்டளையுடன் அமைய குறைந்த பட்சம் ஒற்றெழுத்து நீங்கலாக ஏழு எழுத்துகள்(07) வேண்டும்.
அதிக பட்சமாக, ஒற்றெழுத்து நீங்கலாக பதினொன்று எழுத்துகள்(11) வரை போகும்.
ஒரு சிந்தடி வெண்டளையுடன் ஏழு எழுத்துகளுக்குக் குறைவாகவோ பதினொன்று எழுத்துகளுக்கு அதிகமாகவோ வர வாய்ப்பில்லை.
இந்த எழுத்து எண்ணிக்கை இனி நாம் காண இருக்கும் 05. கலம்பக நேரிசை வெண்பா, 06. சமநடை நேரிசை வெண்பா, 07. சமநிலை நேரிசை வெண்பா, 08. மயூரவியல் நேரசை வெண்பா மற்றும் 09. கட்டளை நேரிசை வெண்பா போன்றவற்றிற்குத் தேவை படும்
இனி, கலம்பக வெண்பாவைப் பார்ப்போம்.
05. #கலம்பக_வெண்பா.
வெண்பாவின் முதல் மூன்று அடிகளின் எழுத்துகளும் ஒற்றெழுத்து நீக்கி வெவ்வேறு எண்ணிக்கையில் அமைந்தால் அது கலம்பக வெண்பா ஆகும்.
தொட்டால் தொடருமதைத் தொட்டேன் கரமெடுத்து
விட்டால் விலகுமெனில் வீண்தானே - சுட்டால்
சுடருமொளி பட்டால் துவள்வோர்தாம் கெட்டால்
இடர்தருவர் ஏதுக் கினி.
இந்த வெண்பாவில், ஒற்றெழுத்து நீக்கி
முதல் அடியில் பதினான்கு எழுத்துகளும்
இரண்டாம் அடியில் பன்னிரண்டு எழுத்துகளும்
மூன்றாம் அடியில் பதிமூன்று எழுத்துகளும் வந்துள்ளன.
ஈற்றடி சிந்தடி ஆதலால் எழுத்து எண்ணிக்கை பார்க்க வேண்டியதில்லை.
இன்னொரு கலம்பக வெண்பாவைப் பார்ப்போம்.
இனிப்பு திகட்டுமெனில் இல்லாதோர்க் கீவோம்
நுனிப்புல் அறிவுபெற்றோர் நோவார் - பனித்துளியாய்
வெய்யோனைக் கண்டு வெருள்வாரைப் போன்றோரை
மெய்யால் அகத்தால் விலக்கு.
…............…- ‘’அகன்’’ @ அனுராதா கட்டபொம்மன்.
இந்த வெண்பாவில், ஒற்றெழுத்து நீக்கி
முதல் அடியில் பதிமூன்று (13) எழுத்துகளும்
இரண்டாம் அடியில் பதினைந்து (15) எழுத்துகளும்
மூன்றாம் அடியில் பன்னிரண்டு (12) எழுத்துகளும் வந்துள்ளன.
ஈற்றடி சிந்தடி ஆதலால் எழுத்து எண்ணிக்கை பார்க்க வேண்டியதில்லை.
Comments
Post a Comment