9.வெண்பா இலக்கணம்(அகன் )

 


.வெண்பா இலக்கணம் பாடம்  - 09.

🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 

நேரிசை வெண்பா மற்றும் இன்னிசை வெண்பா என்ற அளவியல் வெண்பாக்களின் இரண்டு வகைகளை பார்த்தோம்.


அவற்றில், நேரிசை வெண்பாவில் ஒரு விகற்பம் மற்றும் இருவிகற்பம் என்று இரண்டு வகையைப் பார்த்தோம்.


இன்னிசை வெண்பாவில் ஒரு விகற்பம், இரு விகற்பம் மற்றும் பலவிகற்பம் என மூன்று வகையைப் பார்த்தோம்.


இந்த இரண்டு வகையிலும் பலவகை பிரிவுகள் உண்டு.


அவை,


★01. இரு குறள் நேரிசை வெண்பா.


★02. ஆசிடை இட்ட நேரிசை வெண்பா.


★03. ஒற்றெழுத்தில்லா வெண்பா.


★04. குளக வெண்பா.


★05. கலம்பக வெண்பா.


★06. சமநடை வெண்பா.


★07. சமநிலை வெண்பா.


★08. மயூரவியல் வெண்பா.


★09. சீர் நெடில் தொடங்கும் வெண்பா.


★10. கட்டளை வெண்பா.


★11. முடுகியல் வெண்பா.


★12. முற்றெதுகை வெண்பா.


★13. வழியெதுகை வெண்பா.


★14. வல்லெழுத்து வெண்பா.


★15. சிலேடை வெண்பா.


★16. இதழகல் வெண்பா.


★17. காலில்லா வெண்பா.


★18. கொம்பில்லா வெண்பா.


என இன்னும் பலவகை உண்டு.


அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.


01. #இருகுறள்நேரிசை_வெண்பா.


அ. ஒரே கருப் பொருள் கொண்ட இரண்டு குறள் வெண்பாக்களைத் தனித் தனியாக எழுதி, முதற் குறள் வெண்பாவின் இறுதியில் நான்காம் சீராக ஒரு தனிச் சீர் சேர்த்து, இரு குறள் வெண்பாக்களையும் இணைப்பது இரு குறள் நேரிசை வெண்பா ஆகும்.


 ஆ. அவ்வாறு இடப் படும் தனிச் சீர் முதற் குறள் வெண்பாவின் மூன்றாம் சீருடன் வெண்டளைப் பொருந்தி வர வேண்டும். மேலும், முதற் குறள் வெண்பாவுடன் எதுகைப் பொருத்தம் உடையதாகவும் இருக்க வேண்டும்.

 

 இ. இவ்வெண்பா ஒரு விகற்பமாகவும் வரலாம்,  இரு விகற்பமாகவும் வரலாம். அதாவது, நான்கு அடிகளும் ஒரே எதுகை பெற்று ஒரு விகற்பத்தாலும் வரலாம், முன்னிரண்டு அடி ஓர் எதுகையும், பின்னிரண்டடி வேறோர் எதுகையும் பெற்று இரு விகற்பத்தாலும் வரலாம்.


உ - ம்:

- - - - - - -

குறள் வெண்பா - 01.


பசுமை மழையழைக்கும் பண்பாடும் மேகம்

உசுப்பேற்ற நீர்மழை ஊற்று.


குறள் வெண்பா - 02.


காணும் இடங்களில் கண்ணிறைக் காட்சிகள்

பேணும் இயற்கையைப் பேசு.


முதற் குறள் வெண்பாவின் இறுதியில் #ஊற்று - க்கு அடுத்து நான்காம் சீராக ஒரு தனிச் சீர் - #விசும்பின்கீழ்க் - சேர்த்து, இரு குறள் வெண்பாக்களையும் இணைப்பது இரு குறள் நேரிசை வெண்பா ஆகும்.


இதில், முதற் குறள் வெண்பாவின் மூன்றாம் சீருடன் - ஊற்று விசும்பிங்கீழ்க் - மா முன் நிரை இயற்சீர் வெண்டளைப் பொருந்தி வருகிறது. மேலும், முதற் குறள் வெண்பாவுடன் எதுகைப் பொருத்தம் - பசு, உசு, விசு - இருக்கிறது.


இஃது, இரு விகற்ப இரு குறள் நேரிசை வெண்பா ஆகும்.


பசுமை மழையழைக்கும் பண்பாடும் மேகம்

உசுப்பேற்ற நீர்மழை ஊற்று - ★விசும்பின்கீழ்க்

காணும் இடங்களில் கண்ணிறைக் காட்சிகள்

பேணும் இயற்கையைப் பேசு.


………….- ''அகன்'' @ அனுராதா கட்டபொம்மன்.


இதே போல இன்னிசை வெண்பாவும் எழுதலாம்.


02. #ஆசிடைஇட்டநேரிசை_வெண்பா.


#ஆசு என்றால் குற்றம் என்று பொருள்.  #பற்றாசு என்றால்  பொற்கொல்லர்  நகைகளில் இணைப்புக்குப் பயன்படுத்தும் பொடி.


இங்குச் சீர்களைத் தளை, ஓசைப் பொருத்தத்துடன் இணைக்கப் பயன்படுத்தும் ஒன்று அல்லது இரண்டு அசைகளை ‘’ஆசு’’ எனக் குறிப்பிடுகிறோம்.


இரண்டு குறள் வெண்பாக்களை அடுத்தடுத்து எழுதித் தனிச் சீர் கொண்டு இணைக்கும் போது, முதற் குறட்பாவுடன் தனிச் சீருக்குத் தளைப் பொருத்தம் ஏற்படவில்லை என்றால் வெண்பாவின் ஓசைக் கெடும்.


இதனைச் சரி செய்ய முதற் குறட்பாவின் இறுதி சீரில் ஓர் அசையோ, இரண்டு அசையோ சேர்த்து வெண்டளை அமையுமாறு செப்பனிட வேண்டும்.


இவ்வாறு ஓசை பிறழாமைக்காகச் சேர்க்கப் படும் இணைப்பு அசைகளுக்கு ‘’ஆசு’’ என்று பெயர்.


ஆசு இடையிலே சேர்க்கப் பட்டு வரும் நேரிசை வெண்பா ஆசிடை இட்ட நேரிசை வெண்பா எனப் படும். இஃது ஒரு விகற்பத்தாலோ இரு விகற்பத்தாலோ வரும்.


உ -ம்:

- - - - - -

குறள் வெண்பா - 01.


காணும் இடங்களில் கண்ணிறைக் காட்சிகள்

பேணும் இயற்கையைப் பேசு.


குறள் வெண்பா - 02.


பசுமை மழையழைக்கும் பண்பாடும் மேகம்

உசுப்பேற்ற நீர்மழை ஊற்று.


முதல் குறள் வெண்பாவில் இரண்டாம் அடியில் மூன்றாம் சீர் #பேசு - உடன் #பூணும் எனும் நான்காம் சீரை இணைக்கும் போது மா முன் நேர் வருகிறது. அது பிழை.


இதனைச் சரி செய்வதற்காக பேசு - உடன் #வோம் என ஓர் அசையைச் சேர்க்க - #பேசுவோம் - விளம் முன் நேர் வர இயற்சீர் வெண்டளை ஆனது.


இப்போது ஆசிடை இட்ட பின்னர் வெண்பா இலக்கணம் பொருந்தி வருகிறது.


காணும் இடங்களில் கண்ணிறைக் காட்சிகள்

பேணும் இயற்கையைப் பேசு ★வோம் - பூணும்

பசுமை மழையழைக்கும் பண்பாடும் மேகம்

உசுப்பேற்ற நீர்மழை ஊற்று.


……………- ''அகன்'' @ அனுராதா கட்டபொம்மன்.


இஃது ஆசிடை இட்ட இரு விகற்ப நேரிசை வெண்பா ஆகும்.


இவ்வாறே ஆசிடை இட்ட இன்னிசை வெண்பாவையும் எழுதலாம்.






Comments

Popular posts from this blog

விருத்தம் எழுதுவது எப்படி (இரா.மீனாட்சிசுந்தரம்)

2.ஹைக்கூ கவிதைகள் (சூழல் - இரவில் உலகம்)

16.வெண்பா இலக்கணம்(அகன்)