17.வெண்பா இலக்கணம்(அகன் )
.வெண்பா இலக்கணம் - 17.
🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡
அனைவருக்கும் வணக்கம்
பஃறொடை வெண்பாவைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
நான்கு அடிகளில் எழுதுவது அளவியல் வெண்பா அல்லவா…
வெண்பாவுக்கு உரிய அனைத்து இலக்கணங்களும் பொருந்தி வர
#நான்கு_அடிகளுக்கு_மேல்_பன்னிரண்டு_அடிகள்_வரை
கொண்ட வெண்பா #பஃறொடை_வெண்பா ஆகும்.
பஃறொடை வெண்பாவுக்கு அடி சிற்றெல்லை #ஐந்து_அடிகள்.
பேரெல்லை #பன்னிரண்டு_அடிகள் ஆகும்.
பல் + தொடை = பஃறொடை என்றானது. இங்கு தொடை என்பது #விகற்பத்தைக் குறிக்கும். விகற்பம் என்றால் #எதுகை என்பதை நீங்கள் அறிவீர்கள்.
பஃறொடை வெண்பாவை இரண்டு விதமாக எழுதலாம். அவை என்னென்ன என்று பார்ப்போம்.
#பஃறொடை_வெண்பா.
- - - - - - - - - - - - - - - - - - - - -
01. ஒரு விகற்ப பஃறொடை வெண்பா மற்றும்
02. பல விகற்ப பஃறொடை வெண்பா ஆகும்.
அவற்றைத் தனித் தனியாகக் காண்போம்.
01. ஒரு விகற்ப பஃறொடை வெண்பா இரண்டு வகைப் படும். அவை,
01. 01. ஒரு விகற்ப #நேரிசைப்_பஃறொடை வெண்பா மற்றும்
01. 02. ஒரு விகற்ப #இன்னிசைப்_பஃறொடை வெண்பா ஆகும்.
இந்த இரண்டு வகை வெண்பாக்களையும் எடுத்துக் காட்டு வெண்பாவுடன் பார்ப்போம்.
01. .01. #ஒரு_விகற்ப_நேரிசை_பஃறொடை_வெண்பா.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
நேரிசை வெண்பாவைப் போலவே ஒவ்வோர் இரண்டடிகளின் முதற் சீருக்கு இரண்டாம் அடியில் தனிச் சீர் பெற்று வரும்.
ஒரு விகற்பம் என்பதனால் அனைத்து அடிகளிலும் ஒரு விகற்பம் பெற்று இரண்டடிகளுக்கு ஒரு தனிச் சீர் பெறும். அந்தச் சீர்களிலும் அதே விகற்பம் பெற்று வரும்.
பல விகற்பம்(எதுகை) கொண்டது தானே பஃறொடை வெண்பா… அதில் எப்படி ஒரு விகற்பம் என்ற கேள்வி எழுகிறதில்லையா…? நியாயமான கேள்வி தான்.
அந்த சந்தேகக் கேள்வியை ஓர் ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு மேலே படியுங்கள்.
உ - ம்:
- - - - - -
......என்னை வளைத்தவளே ஏந்திழையே…
....👁☆👁☆👁☆👁☆👁👁☆👁☆👁☆👁☆👁☆👁
.- ஒரு விகற்ப நேரிசை பஃறொடை வெண்பா -
அன்பிற் கினியவளே அல்லி லினிப்பவளே
கன்னல் சுவைசேர் கனியிதழே - பொன்மகளே
என்னைத் தெரிகிறதா ஏக்கம் வடிகிறதா
பின்னும் கரத்தால் பிணிப்பதென்ன - சின்னவளே
மன்னன் மடிதவழ மண்ணில் இறங்கிவரும்
அன்னம் நிகர்த்தவள் ஆகிவரும் - தென்மொழியே
சொன்னேன் அமுதெழிலே தீயின் நிறத்தவளே
சின்னஞ் சிறுயிடை சேல்விழிகள் - மின்னலிட
என்னை வளைத்தவளே ஏந்திழையே ஏனின்னும்
கன்னம் சிவக்கின்றாய் சொல்.
….….................- ‘‘அகன்’’ @ அனுராதா கட்டபொம்மன்.
இது, பத்து அடிகளால் ஆன ஒரு விகற்ப நேரிசை பஃறொடை வெண்பா ஆகும்.
“அன்பிற் - கன்னல் - என்னைத் - பின்னும் - மன்னன் - அன்னம் - சொன்னேன் - சின்னஞ் - என்னை - கன்னம்” - என்று எல்லா அடிகளிலும் இரண்டாம் எழுத்துகள் - “ன்” ஒன்றி வர ஓர் எதுகைப் பெற்று ஒரு விகற்பமானது.
அதே போல, ஒவ்வோர் இரண்டாம் அடியிலும் தனிச் சீராக, “பொன்மகளே - சின்னவளே - தென்மொழியே - மின்னலிட” - என்று எல்லா இரண்டாமடிகளிலும் தனிச் சீர்களின் இரண்டாம் எழுத்துகள் - “ன்” ஒன்றி வர ஓர் எதுகைப் பெற்று ஒரு விகற்பமானது.
01. 02. #ஒரு_விகற்ப_இன்னிசை_பஃறொடை_வெண்பா.
அனைத்து அடிகளிலும் ஒரு விகற்பம் பெற்று இரண்டாம் அடிகளில் தனிச் சீர் இன்றி ஒரு விகற்ப அளவியல் இன்னிசை வெண்பா போலவே வெண்டளை பிறழாமல் வரும்.
உ - ம்:
- - - - - -
.............தீப்பட்டால் பஞ்செரியும் தீபங்கள்…
...........👁☆👁☆👁☆👁☆ 👁☆👁☆👁☆👁☆👁☆👁
..- ஒரு விகற்ப இன்னிசை பஃறொடை வெண்பா -
பாப்பிறக்கும் வேளையிலே பாசமுடன் தோட்டத்தில்
பூப்பறிக்கும் எண்ணமுடன் போனவரே நில்லுங்கள்
பூப்பதெல்லாம் வாசமுள்ள பூவுமில்லை கேளுங்கள்
தோப்பாகக் காண்பதெலாம் தொட்டெழுதப் போவதில்லை.
கூப்பாடு போடுமெந்தக் கூக்குரலும் உண்மையில்லை.
சீப்பட்டுப் போனவரைச் சீந்துபவர் யாருமில்லை.
சாப்பாட்டுக்(கு) ஏங்குபவர் சன்மார்க்கம் பார்ப்பதில்லை.
மூப்புக்கு மாற்றாக முன்னெழுவார் யாருமுண்டோ
தீப்பட்டால் பஞ்செரியும் தீபங்கள் அப்படியா….
நாப்பழுத்த சொற்களுக்கா நாம்…
………..............................- ‘‘அகன்’’ @ அனுராதா கட்டபொம்மன்.
பத்து அடிகளால் ஆன இந்த வெண்பா ஒரு விகற்ப இன்னிசை பஃறொடை வெண்பா ஆகும்.
இந்த பஃறொடை வெண்பாவில், “பாப்பிறக்கும் - பூப்பறிக்கும் - பூப்பதெல்லாம் - தோப்பாக - கூப்பாடு - சீப்பட்டுப் - சாப்பாட்டுக் - மூப்புக்கு - தீப்பட்டால் - நாப்பழுக்க” - என அத்தனை அடிகளிலும் முதல் சீரில் இரண்டாம் எழுத்து “ப்” என ஒன்றி வந்து ஒரு விகற்பம் (ஓரெதுகை) ஆனது.
02. பல விகற்ப பஃறொடை வெண்பா இரண்டு வகைப் படும். அவை,
02. 01. பல விகற்ப நேரிசை பஃறொடை வெண்பா மற்றும்
02. 02. பல விகற்ப இன்னிசை பஃறொடை வெண்பா ஆகும்.
அவற்றையும் ஒவ்வொன்றாகக் காண்போம்.
02. .01. #பல_விகற்ப_நேரிசை_பஃறொடை_வெண்பா.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
பல விகற்ப நேரிசை பஃறொடை வெண்பாவைப் பற்றி இரு வேறு கருத்துகள் உண்டு.
நேரிசை வெண்பா என்றாலே ஒரு விகற்பத்தாலோ அல்லது இரு விகற்பத்தாலோ மட்டுமே வரும்.
பஃறொடை எனும் போது அது பல விகற்பத்தால் அமையும் வெண்பா என்றாகி விடுகிறது.
இரண்டுக்கு மேற்பட்ட விகற்பத்தால் அமையும் வெண்பாக்கள் “#இன்னிசை_வெண்பாக்கள்” என்றே அழைக்கப் படும் என்பது ஒரு சாரார் கருத்து.
பஃறொடை வெண்பா பல விகற்பத்தால் அமைந்தாலும் ஒவ்வோர் இரண்டாம் அடியிலும் முன்னிரண்டு அடிகளின் விகற்பத்தோடு ஒன்றி வரும் தனிச் சீர் கொண்டு அமைந்தால் அந்தப் பஃறொடை வெண்பா பல விகற்ப நேரிசை பஃறொடை வெண்பா ஆகும் என்பது மற்றொரு சாரர் கருத்து.
எது எவ்வாறாயினும் நாம் இந்த இரண்டு பஃறொடை வெண்பாக்களைப் பற்றியும் இங்குக் காண்போம்.
உ - ம்:
- - - - - -
..மனத்துள் மணமாய் மணக்கும் மலரே...
👁☆👁☆👁☆👁☆ 👁☆👁☆👁☆👁☆👁☆👁☆👁
- பல விகற்ப நேரிசை பஃறொடை வெண்பா -
குளிரும் பனியே குலவும் குயிலே
ஒளிரும் பவளத் துருவே - களிப்பே
இனிப்பே இயல்பே எழிலார்ந் தவளே
கனியே கனிவின் கடலே - புனித
அழகே அழகுக்(கு) அழகேற் றுகிறாய்.
கிழக்கே கதிராய்க் கிளம்பி - வழக்கை
நடத்தும் நிலவே நலமா சுகமா
கடக்க மறுக்கும் கலையே - அடங்கா
மனத்துள் மணமாய் மணக்கும் மலரே
உனக்குள் உறங்கா உணர்வை - கனல்போல்
விழியால் திரட்டி விழுங்கா திருப்பாய்
பழிசேர்ந் திடவா பகர்.
……......….....- ‘‘அகன்’’ @ அனுராதா கட்டபொம்மன்.
இந்த வெண்பா பன்னிரண்டு அடிகளால் ஆன பல விகற்ப நேரிசை பஃறொடை வெண்பா ஆகும்.
இந்த வெண்பாவில், “குளிரும் - ஒளிரும், இனிப்பே - கனியே, அழகே - கிழக்கே, நடத்தும் - கடக்க, மனத்துள் - உனக்குள், விழியால் - பழிசேர்ந்” - என இரண்டிரண்டு அடிகளுக்கு ஒரு விகற்பமாக (வெவ்வேறு விகற்பங்கள்) வருவதைப் பாருங்கள்.
அத்தோடு, இரண்டிரண்டு அடிகளுக்குத் தனிச் சீராக, “களிப்பே, புனித, வழக்கை, அடங்கா, கனல்போல்” என முதல் இரண்டடிகளில் உள்ள விகற்பத்திற்கு அளவியல் நேரிசை வெண்பாவைப் போல ஒன்றி வருகின்றன.
எனவே, இது பல விகற்ப நேரிசை பஃறொடை வெண்பா ஆனது.
02. 02. #பல_விகற்ப_இன்னிசைப்_பஃறொடை_வெண்பா.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
இந்த வெண்பா இரண்டாம் அடிகளில் தனிச் சொல் பெற்று வராது. இரண்டிரண்டு அடிகளுக்கு ஓரெதுகை பெற்று வரும்.
உ - ம்:
- - - - - -
அன்பே உலகாள அத்தனையும் நன்றாகும்
👁☆👁☆👁☆👁☆ 👁☆👁☆👁☆👁☆👁☆👁☆👁☆👁
….- பல விகற்ப இன்னிசைப் பஃறொடை வெண்பா -
போற்றும் இலக்கணங்கள் பொங்கும் வகையினில்
ஏற்றக் கவிதைகளில் ஏற்ற இறக்கமுண்டு.
தேரோடும் வீதியெங்கும் தெய்வம் சிரிப்பதனால்
ஏரோடும் வேளாண்மை எங்கும் செழிப்பதுண்டு.
நெற்றி வியர்வையில்தான் நெல்விளையும் என்பதை
உற்றார் உணர்கையில் ஓங்கும் பயிர்வளரும்.
கொற்றம் சிறந்தொளிர கோல்வளை யாதிருக்கும்.
வெற்றி பெறவேண்டின் வேடிக்கை ஆகாது.
அன்பே உலகாள அத்தனையும் நன்றாகும்
என்பேன் இளையாளே இங்கு.
……......….............- ‘‘அகன்’’ @ அனுராதா கட்டபொம்மன்.
பத்து அடிகளால் ஆன இந்த வெண்பா பல விகற்ப இன்னிசைப் பஃறொடை வெண்பா ஆனது.
இந்த வெண்பாவில், “போற்றும் - ஏற்றக், தேரோடும் - ஏரோடும், நெற்றி - உற்றார், கொற்றம் - வெற்றி, அன்பே - என்பேன்” என இரண்டடிகளுக்கு ஒரு விகற்பம் தனித் தனியாக வருகிறது.
மேலும், இந்த வெண்பாவில் தனிச் சீர் இல்லாததால் பல விகற்ப இன்னிசை பஃறொடை வெண்பாவானது.
இனி, அடுத்த பதிவில் கலி வெண்பாவைப் பார்க்கலாம்.
Comments
Post a Comment