5.வெண்பா இலக்கணம் (அகன்)

 வெண்பா இலக்கணம்  - 05.

🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 

ஆறாம் வகுப்பு பயிலும் மாணவர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் மிக எளிதாக எழுதி இருக்கிறேன் என்று நம்புகிறேன். நிற்க,


வெண்பா என்று சொன்னாலே அது #அளவியல்_வெண்பாவைத் தான் குறிக்கும் என்பதால் கடந்த பாடத்தில் அளவியல் வெண்பாக்களை எடுத்துக் காட்டி பாடத்தை நிறைவு செய்திருந்தேன்.


இப்போது வெண்பாக்களில் #முதன்மையான #ஐந்துவகைவெண்பாக்களைப்_பார்க்கலாம்.


அவை,

01. #குறள்_வெண்பா.

02. #சிந்தியல்_ெண்பா.

03. #அளவியல்_வெண்பா.

04. #பஃறொடை_வெண்பா மற்றும்

05. #கலி_வெண்பா ஆகும்.


மேற்காணும் ஐந்து வகை வெண்பாக்களுக்குள்ளும் நிறைய உட்பிரிவுகளும் உண்டு.


அவற்றில் எளிதானவற்றை எதிர் வரும் பாடங்களில் காணலாம்.


இஃதன்னியில் #சவலை_வெண்பா என்றொரு வகையும் உண்டு. இதைப் பற்றி கடைசியில் எழுதுகிறேன்.


#சவலைவெண்பாதற்காலத்தில்யாராலும்எழுதப்_படுவதில்லை.


01. குறள் வெண்பா.

- - - - - - - - - - - - - - - - - -

இரண்டு அடிகளால் ஆனது.


முதலடி நான்கு சீர்களை உடைய அளவடியாகவும், இரண்டாம் அடி மூன்று சீர்களை உடைய சிந்தடியாகவும் அமைந்திருக்கும்.


#திருவள்ளுவநாயனார் எழுதிய #திருக்குறள்குறள்வெண்பாவகையைச்_சார்ந்ததே.


ஒரு சிலர் சொல்வது போல் திருக்குறள் #ஒன்றேமுக்கால்அடிகளால்_ஆனதல்ல.


ஓர் அளவடி + ஒரு சிந்தடி என #இரண்டுஅடிகளால்ஆனது_திருக்குறள்.


சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் திருக்குறள் எழுதப் பட்ட பொழுது எதுகை, மோனை, இயைபு போன்றவற்றிற்கு அவ்வளவு முக்கியத்துவம் தரப் படவில்லை.


தளைகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப் பட்டிருந்தது.


#எடுத்துக்_காட்டு: #திருக்குறள்

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

#பொருட்_பால், #அதிகாரம் - 89. #உட்பகை, #குறள் - 890.


(01)உடம்பாடு (02)இலாதவர் (03)வாழ்க்கை (04)குடங்கருள்

(05)பாம்போடு (06)உடனுறைந்து (07)அற்று.


இந்தத் திருக்குறளில் முதல் சீருக்கு - #உடம்பாடு - மூன்றாம் சீர் - #வாழ்க்கை - மோனை இல்லை. உ - வா மோனையாகாது.


அதே போல, திருக்குறளில் முதலடியின் முதல் சீர் - உடம்பாடு - இரண்டாம அடியில் முதல் சீர் - பாம்போடு - எதுகை இல்லை.


இந்தச் சீர்களில் முதல் எழுத்துகள் (உ - பா) குறில். நெடிலாக முரண்பட்டு வருகின்றன.


அத்தோடு இரண்டாம் எழுத்துகளும் (ட - ம்) ஒத்து வரவில்லை. ஆக, எதுகை ஆகாது.


மொத்தத்தில், இந்தத் திருக்குறளில் எதுகை, மோனை இவை இரண்டும் இல்லை. எதுகை, மோனை, இயைபு போன்றவை #அழகியல்_பாற்பட்டது.


இவை இருந்தால் பாடல் மெருகேறி அழகு பெறும்.


இவை பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகே பெருமளவில் நடைமுறைக்கு வந்ததாகக் கருதப் படுகிறது.


சரி, இனி தளைகளைப் பார்ப்போம்.


தளையைப் பார்க்கும் முன் 

#நிலைமொழிஎன்றால்_என்ன....

#வருமொழிஎன்றால்என்ன...

என்று தெரிந்து கொள்வோம்.


(01) உடம்பாடு - நிலைமொழி என்றால்

(02) இலாதவர் -  வருமொழி ஆகும்.


(02) இலாதவர் - நிலைமொழி என்றால்

(03) வாழ்க்கை - வருமொழி ஆகும்.


(03) வாழ்க்கை - நிலைமொழி என்றால்

(04) குடங்கருள் - வருமொழி ஆகும்.


(04) குடங்கருள் - நிலைமொழி என்றால்

(05) பாம்போடு  - வருமொழி ஆகும்.


(05) பாம்போடு  - நிலைமொழி என்றால்

(06) உடனுறைந்து  - வருமொழி ஆகும்.


(06) உடனுறைந்து  - நிலைமொழி என்றால்

(07) அற்று - வருமொழி ஆகும்.


#நிலைமொழியில்சீரைப்பார்க்கவேண்டும்.


மாச் சீரா..... (தேமா, புளிமா)

விளஞ்சீரா..... (கூவிளம், கருவிளம்)

காய்ச் சீரா..... (தேமாங்காய், புளிமாங்காய்,

...........................(கூவிளங்காய்,கருவிளங்காய்)

என்று பார்க்க வேண்டும்.


#வருமொழியில்அசையைப்பார்க்க_வேண்டும்.


நேர் அசையா..... நிரை அசையா.... என்று  பார்க்க வேண்டும்.


இப்போது,

மா முன் நிரை அசையா.... அல்லது

விளம் முன்  நேர் அசையா.... என்று தெரிந்து விடும்.


மா முன்  நிரை அல்லது விளம் முன் நேர் வந்தால் அது இயல்பான வெண்டளை.


அதாவது, #இயற்சீர்_வெண்டளை ஆகும்.


காய் முன் நேர்  அசை மட்டுமே வர வேண்டும்.


அது #வெண்சீர்_வெண்டளை ஆகும்.


வெண்பாக்களில் இந்த இரண்டு #வெண்டளைகள் மட்டுமே வர வேண்டும்.


நிலைமொழியில்  மாச் சீரா அல்லது விளஞ் சீரா அல்லது காய்ச் சீரா என்று பார்க்க வேண்டும்.


வருமொழியில்  முதல் அசை நேர் அசையா அல்லது நிரை அசையா என்று பார்க்க வேண்டும்.


இதைப் புரிந்து கொண்டால்  சீர்களுக்கு இடையில் என்ன தளை வரும் என்பதை எளிதில்  புரிந்து கொள்ளலாம்.


இனி , இந்தத் திருக்குறளில் சீர்களுக்கு இடையில் இருக்கும் தளைகளைப் பார்ப்போம்.


இந்தக் குறளில் அசை பிரித்துக் காட்டி சீர்களின் பெயர்களையும் குறிப்பிட்டுக் காட்டி இருக்கிறேன்.


(01) உடம்/ பா/ டு - நிரை நேர் நேர் - புளிமாங்காய்.

(02) இலா/ தவர் - நிரை நிரை - கருவிளம்.


காய் முன் நிரை - கலித் தளை ஆயிற்றே… தளை சரியா..?


கொஞ்சம் பொறுங்கள்.


உடம்பா டு + இ லாதவர் = டு + இ புணர்ச்சி விதியின் படி ‘டி’ எனப் புணர்ந்து உடன்பா டிலாதவர் என மாறும்.


இப்போது தளை சரி பாருங்கள்.


(01) உடன்/பா - நிரை நேர் - புளிமா.

(02) டிலா தவர் - நிரை நிரை - கருவிளம்.


மா முன் நிரை - இயற்சீர் வெண்டளை. தளை சரி தானே…


(02) இலா/ தவர் - நிரை நிரை - கருவிளம்.

(03) வாழ்க்/ கை - நேர் நேர் - தேமா.


விளம் முன் நேர் - இயற்சீர் வெண்டளை.


(03) வாழ்க்/ கை - நேர் நேர் - தேமா.

(04) குடங்/ கருள் - நிரை நிரை - கருவிளம்.


மா முன் நிரை - இயற்சீர் வெண்டளை.


(04) குடங்/ கருள் - நிரை நிரை - கருவிளம்.

(05) பாம்/ போ/ டு - நேர் நேர் நேர் - தேமாங்காய்.


விளம் முன் நேர் - இயற்சீர் வெண்டளை.


(05) பாம்/ போ/ டு - நேர் நேர் நேர் - தேமாங்காய்.

(06) உட/ னுறைந்/ து - நிரை நிரை நேர் - கருவிளங்காய்.


காய் முன் நிரை - கலித் தளை ஆயிற்றே… தளை சரியா..?


மீண்டும்….. கொஞ்சம் பொறுங்கள்.


பாம்போ டு + உ டனுறைந்து = டு + உ புணர்ச்சி விதியின் படி ‘டு’ எனப் புணர்ந்து ‘பாம்போ டுடனுறைந்து’ என மாறும்.


(05) பாம்/ போ - நேர் நேர் - தேமா.

(06) டுட/ னுறைந்/ து - நிரை நிரை நேர் - கருவிளங்காய்.


இப்போது தளை சரி பாருங்கள்.


மா முன் நிரை - இயற்சீர் வெண்டளை.


(06) உட/ னுறைந்/ து - நிரை நிரை நேர் - கருவிளங்காய்.

(07) அற்/ று - நேர் நேர் - காசு(நேர்பு) எனும் வாய்பாடு.


காய் முன் நேர் - வெண்சீர் வெண்டளை  என்பது சரி தான் என்றாலும் புணர்ச்சி விதியைப் பார்ப்போம்.


உடனுறந் து + அ ற்று = து  + அ - த எனப் புணரும்.


எனில், சீர்கள்

(06) உட/ னுறைந் - நிரை நிரை - கருவிளம்.

(07) தற்/ று - நேர் நேர் - காசு(நேர்பு) எனும் வாய்பாடு.


விளம் முன்  நேர் - இயற்சீர் வெண்டளை.


#மரபுக்கவிதைகளில்சீர்புணர்ச்சிக்குப்பிறகே

#தளைபார்க்கவேண்டும்என்பதைகவனத்தில்_கொள்ளுங்கள்.


#மரபுக்கவிதைகளில்சீர்புணர்ச்சிக்குமுன்னரே

#மோனைபார்க்கவேண்டும்என்பதையும்கவனத்தில்_கொள்ளுங்கள்.


#மரபுக்கவிதைகளில்சொற்புணர்ச்சிக்குப்பிறகே

#எதுகைபார்க்கவேண்டும்என்பதையும்கவனத்தில்_கொள்ளுங்கள்.


ஆக, இந்தத் திருக்குறள் புணர்ச்சி விதிகளுக்குப் பிறகு


உடம்பா - டிலாதவர் - வாழ்க்கை - குடங்கருள்

பாம்போ டுடனுறைந் - தற்று.


என்று படிக்க வேண்டும்.


படித்தாயிற்று. திருக்குறளின் பொருள் தெரிய வேண்டுமில்லையா.


உடம்பாடு இலாதவர் வாழ்க்கை - மனப் பொருத்தம் இல்லாதவர் வாழ்க்கை.


குடங்கருள் - ஒரு குடிசைக்குள்.


பாம்போடு உடனுறைந்து அற்று - பாம்போடு வாழ்வதற்கு ஒப்பானது.


பொருள்:

- - - - - - - -

மனப் பொருத்தம் இல்லாதவர் வாழ்க்கை ஒரு குடிசைக்குள் பாம்போடு  சேர்ந்து வாழ்வதற்கு ஒப்பானது.


அதாவது, ஒவ்வொரு மணித்துளியும், திக்... திக்... திகில் வாழ்க்கை தான். நிம்மதி தொலைத்த வாழ்க்கை தான்.


நானும் இரு குறள் வெண்பாக்களை எளிமையாகப் புரியும் படி எழுதி விடுகிறேனே..


#கள்ளமனம் உள்ளவரைக் #கண்டாய்ந்(து) ஒதுக்குவதால்

#உள்ளமழ(கு) ஆகும் #உணர்.


இஃது ஒரு விகற்ப குறள் வெண்பா. எதுகை, மோனை இரண்டும் உள்ளது.


ஆம்பல் மலரழ(கு) ஆட்சிசெய்யும் பொய்கையில்

வீழும் நிழலில் நிலா.


இஃது இரு விகற்ப குறள் வெண்பா. எதுகை, மோனை இரண்டும் இல்லை.


வெண்பாவுக்குரிய வெண்டளை மட்டும் பொருந்தி வருகிறது.


இந்தக் குறள் வெண்பாக்களுக்குப் பொருள் சொல்ல வேண்டியதில்லை அல்லவா… புரிகிற மாதிரி தானே எழுதி இருக்கிறேன்.


இதுவரை பதிவு செய்யப் பட்ட 05 பாடங்களைக் #கருத்தூன்றிப்_படித்தால் உங்களுக்குக் குறள் வெண்பாக்கள் எழுதுவது எளிதானது.


முயன்று தான் பாருங்கள்.

Comments

Popular posts from this blog

விருத்தம் எழுதுவது எப்படி (இரா.மீனாட்சிசுந்தரம்)

2.ஹைக்கூ கவிதைகள் (சூழல் - இரவில் உலகம்)

16.வெண்பா இலக்கணம்(அகன்)