2.வெண்பா இலக்கணம் (அகன்)

 வெண்பா இலக்கணம்  - 02.

🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 

முதல் பதிவில்,

#மாச்_சீர்கள்(#தேமா, #புளிமா) இரண்டு,

#விளஞ்_சீர்கள்(#கூவிளம், #கருவிளம்) இரண்டு மற்றும்

#காய்ச்_சீர்கள்(#தேமாங்காய், #புளிமாங்காய், #கூவிளங்காய், #கருவிளங்காய்) நான்கு என மொத்தம் எட்டு சீர்களைப் பற்றிப் படித்தோம்.


இவையன்றி, வெண்பாவில் மட்டுமே வரும் #ஓரசைச்_சீர்கள் நான்கு உண்டு.


அவை,

01. #நாள். 02. #மலர், 03. #காசு மற்றும் 04. #பிறப்பு என்பனவாகும்.

இந்த ஓரசைச் சீர் ஆசிரியப் பா, வஞ்சிப் பா, கலிப் பா முதலிய பாக்களில் வாரா.


வெண்பாவில் மட்டும் #இறுதிச்_சீராக நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்பாட்டில் அமைந்து வரும்.

காசு, பிறப்பு இரண்டிலும் குற்றியலுகரம் இறுதியில் இருப்பதால், அந்தக் #குற்றியலுகரமும், ‘பிறப்பு’ சீரில் உள்ள பகர மெய்யும் கணக்கில் கொள்ளப் படா (#அலகு_பெறா).


#குற்றியலுகரம் - கு, சு, டு, து, பு, று என முடியும் வல்லின எழுத்துகளை இறுதியில் கொண்ட ஈரசைச் சீர்கள்.

வெண்பாவைப் பொறுத்தவரை இவற்றை ஓரசைச் சீர்கள் என்றே சொல்வர்.


குற்றியலுகர எழுத்துகளின் அலகு அவற்றின் உச்சரிப்புக் குறுக்கத்தால், #அரை_மாத்திரை அளவே ஒலிப்பதால், அதாவது #மெய்யெழுத்து போலவே பாவிக்கப் படுவதால் காசு, பிறப்பு எனும் இரு வாய்பாடுகளும் ஓரசைச் சீர்களாகவே கொள்ளப் படுகின்றன.


சிறப்பு விதி விலக்கு: நு, ணு, மு, னு, யு, ரு, லு, வு, ளு, ழு. இந்தப் பத்து எழுத்துகளில் ‘வு’ தவிர மற்ற எழுத்துகள் அருகியே வரும், வராமலும் போகலாம்  என்பதை அறிக.

வரும்ம்ம்ம்… ஆனா, வராது போல் இருக்கிறது அல்லவா…


ஆகவே,

நாள் – நேர், மலர் – நிரை, காசு – நேர்(நேர்பு), பிறப்பு – நிரை(நிரைபு) என்ற நான்கும்

 ஓரசைச் சீர்கள் ஆகும்.


இந்தச் சீர்களை ஒன்றோடொன்று கட்டுவதே தளை ஆகும்.


#தளைகள்.

- - - - - - - - - -

தளை என்றால் #கட்டுதல், #பிணித்தல் என்று பொருள்.


தளைகள் ஏழு வகைப் படும்.


01. நேர் ஒன்றிய ஆசிரியத் தளை.

மா முன் நேர் வருவது நேர் ஒன்றிய ஆசிரியத் தளை.


02. நிரை ஒன்றிய ஆசிரியத் தளை.

விளம் முன் நிரை வருவது நிரை ஒன்றிய ஆசிரியத் தளை.


03. இயற்சீர் வெண்டளை.

மா முன் நிரை அல்லது விளம் முன் நேர் வருவது இயற்சீர் வெண்டளை.


இயற்சீர் வெண்டளையை #ஒன்றா_ஆசிரியத்தளை என்றும் கூறுவர்.


04. வெண்சீர் வெண்டளை.

காய் முன் நேர் வருவது வெண்சீர் வெண்டளை.


05. ஒன்றிய வஞ்சித் தளை.

கனி முன் நிரை வருவது ஒன்றிய வஞ்சித் தளை.


06. ஒன்றா வஞ்சித் தளை.

கனி முன் நேர் வருவது ஒன்றா வஞ்சித் தளை.


07. கலித் தளை.

காய் முன் நிரை வருவது கலித் தளை.

என ஏழு வகை தளைகள் உண்டு.


இவை அனைத்தையும் ‘’அகனார் எளிய இலக்கணத்தில்’’ தெளிவாகப் படிக்கலாம்.


வெண்பாவைப் பொறுத்தவரை #வெண்டளையால் மட்டுமே சீர்களைப் பிணிக்க வேண்டும்.


வெண்டளை இரண்டு வகைப் படும். அவை,


01. இயற்சீர் வெண்டளை மற்றும்

02. வெண்சீர் வெண்டளை ஆகும்.


அவற்றைப் பற்றி மட்டும் இங்கு காண்போம்.


01. இயற்சீர் வெண்டளை.

- - - - - - - - - - - - - - - - - - - - - - - 

மா(நேர் அசை) முன் நிரை அசை அல்லது விளம்(நிரை அசை) முன் நேர் அசை வந்தால் அது இயற்சீர் வெண்டளை ஆகும்.


02. வெண்சீர் வெண்டளை.

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

காய்(மாங்காய் அல்லது விளங்காய்ச் சீர்) முன் நேர் அசை வந்தால் அது வெண்சீர் வெண்டளை ஆகும்.


இங்கு ஒரு திருக்குறளை அலகு பிரித்து வாய்பாடைப் பார்ப்போம்.


கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.


தேமா - கருவிளம் - கூவிளம் - கூவிளம்

தேமா - புளிமா - மலர்.


இப்போது இந்தக் குறளின் சீர்களுக்கு இடையில் ஆன தளையைப் பார்ப்போம்.


தேமா - நிரை நிரை(கருவிளம்) = மா முன் நிரை- இயற்சீர் வெண்டளை.


கருவிளம் - நேர் நிரை(கூவிளம்) = விளம் முன் நேர் - இயற்சீர் வெண்டளை.


கூவிளம் - நேர் நிரை(கூவிளம்) = விளம் முன் நேர் - இயற்சீர் வெண்டளை.


கூவிளம் - நேர் நேர்(தேமா) = விளம் முன் நேர் - இயற்சீர் வெண்டளை.


தேமா - நிரை நேர்(புளிமா) = மா முன் நிரை- இயற்சீர் வெண்டளை.


புளிமா - நிரை(மலர்) = மா முன் நிரை- இயற்சீர் வெண்டளை.


ஈற்றுச் சீர் - மலர் எனும் வாய்பாடில் முடிந்திருக்கிறது.


ஈரசைச் சீர்கள் - இயற்சீர்கள் - மட்டுமே வந்ததால் இயற்சீர் வெண்டளை மட்டுமே இந்தக் குறள் வெண்பாவில் பயின்று வந்திருக்கிறது. குறள் வெண்பா சரியாக இருக்கிறது.


இரண்டாவது திருக்குறள் வாய்பாடைப் பார்ப்போம்.


தெய்வத்தான் ஆகா தெனினும்மு யற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்.


தேமாங்காய் - தேமா - புளிமாங்காய் - கூவிளம்

கூவிளங்காய் - தேமா - மலர்.


தேமாங்காய் - நேர் நேர்(தேமா) = காய் முன் நேர் - வெண்சீர் வெண்டளை.


தேமா - நிரைநேர்நேர்(புளிமாங்காய்) = மா முன் நிரை - இயற்சீர் வெண்டளை.


புளிமாங்காய் - நேர் நிரை(கூவிளம்) = காய் முன் நேர் - வெண்சீர் வெண்டளை.


கூவிளம் - நேர் நிரை நேர்(கூவிளங்காய்) = விளம் முன் நேர் - இயற்சீர் வெண்டளை.


கூவிளங்காய் - நேர் நேர்(தேமா) = காய் முன் நேர் - வெண்சீர் வெண்டளை.


தேமா - நிரை(மலர்) = மா முன் நிரை - இயற்சீர் வெண்டளை.


இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் கலந்து வந்தக் குறள் வெண்பா இது. குறள் வெண்பா சரியாக இருக்கிறது.


இந்தத் திருக்குறள்களில் வெண்டளை தவிர வேறு தளைகள் வரவில்லை.


தளை மாறி வந்தால், அதனைத் “”#தளைத்_தட்டுகிறது’’ என்பர். அது வெண்பா ஆகாது. அதனை #வெண்டுறை என்பர்.


இந்த இலக்கணம் எல்லா வெண்பாக்களுக்கும் பொருந்தும்.


அடுத்த பதிவில் #அடி என்றால் என்னவென்றும், #வெண்பாக்களின்_வகைகளையும் காணலாம்.

Comments

Popular posts from this blog

விருத்தம் எழுதுவது எப்படி (இரா.மீனாட்சிசுந்தரம்)

2.ஹைக்கூ கவிதைகள் (சூழல் - இரவில் உலகம்)

16.வெண்பா இலக்கணம்(அகன்)