1.வெண்பா இலக்கணம் (அகன்)

வெண்பா இலக்கணம் - 01.
தனித்த, தூய இலக்கணம் கொண்டது வெண்பா.
அதனால் தான் வெண்பா #வெள்ளைப்பா, #ஒண்பா, #கன்னிப்பா மற்றும் #கற்புப்_பா என்றெல்லாம் அழைக்கப் படுகிறது.
எந்த வகை மரபுக் கவிதை எழுதுவதாக இருந்தாலும், முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டியது எழுத்து, அசை, சீர், தளை, அடி மற்றும் தொடை எனும் ஆறு அதிகாரங்களையும் தான்.
நாம் அனைவருமே - எழுத்து பற்றி அறிவோம்.
நாம் அறிந்து கொள்ள வேண்டியது மற்ற ஐந்தைப் பற்றித் தான்.
இங்கு, வெண்பாவுக்கு உரித்தான அசை, சீர், தளை, அடி மற்றும் தொடை அதிகாரங்களை மட்டும் சுருக்கமாகக் காண்போம்.
#அசை
- - - - - - -
எழுத்துகள் ஒன்று சேர்ந்து அசைவதால் அவை அசைகளாக வருகின்றன.
அவை, 01. நேர் அசை, 02. நிரை அசை என்று இரண்டு வகைப் படும்.
01. #நேர்_அசை.
- - - - - - - - - - - - - -
#ஒருகுறில்எழுத்து அல்லது #நெடில்_எழுத்து, தனியாகவோ மெய் எழுத்துடன் சேர்ந்தோ வருவது நேர் அசை எனப்படும்.
க, கல் - தனிக் குறில் அல்லது குறில் + ஒற்றெழுத்து - நேரசை ஆகும்.
தா, வேல் - தனி நெடில் அல்லது நெடில் ஒற்றெழுத்து - நேரசை ஆகும்.
சில இடங்களில் குறில், அல்லது நெடில் எழுத்தை அடுத்து இரண்டு ஒற்றெழுத்துகள் வருவதும் உண்டு.
கம'ழ்ந்'தது - பா'ர்த்'தேன்.
02. #நிரை_அசை.
- - - - - - - - - - - - - - - -
#குறில், #நெடில் ஆகிய இரண்டும் சேர்ந்து வருவதும் #இரண்டுகுறில்எழுத்துகள் சேர்ந்து வருவதும் நிரை அசை ஆகும்.
இவற்றுக்குப் பின் மெய் எழுத்து வந்தாலும் நிரை அசை ஆகும்.
படு - இரண்டு குறில் எழுத்துகள். இதனை குறிலிணை என்றும் சொல்வர் - நிரை அசை.
படும் - இரண்டு குறில் எழுத்துகள் + ஒற்றெழுத்து - நிரை அசை.
படா - குறில் நெடில் எழுத்துகள் - நிரை அசை.
படாம் - குறில் நெடில் + ஒற்றெழுத்து - நிரை அசை.
இனி, சீர் வாய்பாடைப் பார்ப்போம்.
.- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
நேர் நேர் - தேமா.
நிரை நேர் - புளிமா
இவை இரண்டும் #மாச்_சீர் எனப் படும்.
நேர் நிரை - கூவிளம்.
நிரை நிரை - கருவிளம்
இவை இரண்டும் #விளஞ்_சீர் எனப் படும்.
மாச் சீரும், விளஞ்சீரும் ஆகிய நான்கு சீர்களும் #இயற்சீர் எனப் படும்.
இனி, #சீர்கள் பற்றி பார்ப்போம்.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
நமது ஆய்வுக்கு ஒரு திருக்குறளை எடுத்துக் கொள்வோம்.
(1)கற்க - (2)கசடறக் - (3)கற்பவை - (4)கற்றபின்
(5)நிற்க - (6)அதற்குத் - (7)தக.
இரண்டு அடிகள் ஏழு சீர்களால் ஆன இந்தத் திருக்குறளை ஆய்வோம்.
இந்தத் திருக்குறளில் உள்ள #கற்க, #நிற்க எனும் இரண்டு சீர்களைப் பார்ப்போம்.
(1)கற்க - எனும் சீரில் ஒற்றெழுத்துக்கு முன்னும் பின்னும் குறில் எழுத்து வந்துள்ளது.
(5)நிற்க - எனும் சீரில் ஒற்றெழுத்துக்கு முன்னும் பின்னும் குறில் எழுத்து வந்துள்ளது.
இவற்றை அசை பிரிப்போம்.
கற்/ க - நேர் நேர் அசை. இதனைத் #தேமா என்பர்.
நிற்/ க - நேர் நேர் அசை. இதனைத் #தேமா_என்பர்.
அடுத்து, #அதற்கு எனும் சீரை அசை பிரிப்போம்.
(6)அதற்/ கு - நிரை நேர் அசை. இதனைப் #புளிமா என்பர்.
அடுத்து, #கற்பவை, #கற்றபின் எனும் சீர்களை அசை பிரிப்போம்.
(3)கற்/ பவை - நேர் நிரை அசை. இதனைக் #கூவிளம் என்பர்.
(4)கற்/ றபின் - நேர் நிரை அசை. இதனைக் #கூவிளம்_என்பர்.
அடுத்து, #கசடற எனும் சீரை அசை பிரிப்போம்.
(2)கச/ டற - நிரை நிரை அசை. இதனை #கருவிளம் என்பர்.
அடுத்து, தக எனும் சீரைப் பார்ப்போம். இது ஓரசைச் சீர்.
(7)தக - நிரை, ஓரசைச் சீர். வெண்பாவில் இதனை #மலர் என்பர்.
மாச் சீர் (தேமா, புளிமா) இரண்டும்,
விளஞ் சீர்(கூவிளம், கருவிளம்) இரண்டும் புரிகிறதா….
இந்தத் திருக்குறள்
தேமா - கருவிளம் - கூவிளம் - கூவிளம்
தேமா - புளிமா - மலர்
எனும் வாய்பாடில் அமைந்துள்ளது.
அடுத்து, #காய்ச்_சீர்கள் நான்கினைக் கண்போம். காய்ச் சீர்களை #வெண்சீர் என்று அழைப்பர்.
தேமா, புளிமா, கூவிளம் மற்றும் கருவிளம்
சீர்களுடன் ஒரு நேர் அசையைச் சேர்க்க வரும் நான்கு சீர்களும் காய்ச் சீர்கள் எனப் படும்.
நேர் நேர் - தேமா + நேர் = தேமாங்காய்.
நேர் நேர் நேர் - தேமாங்காய்.
நிரை நேர் - புளிமா + நேர் = புளிமாங்காய்.
நிரை நேர் நேர் - புளிமாங்காய்.
நேர் நிரை - கூவிளம் + நேர் = கூவிளங்காய்.
நேர் நிரை நேர் - கூவிளங்காய்.
நிரை நிரை - கருவிளம் + நேர் = கருவிளங்காய்.
நிரை நிரை நேர் - கருவிளங்காய்.
(1)தெய்வத்தான் - (2)ஆகா - (3)தெனினும் - (4)முயற்சிதன்
(5)மெய்வருத்தக் - (6)கூலி - (7)தரும்.
இந்த ஆறு சீர்களுடன் ஈற்றுச் சீரான ஏழாவது சீர் #நாள், #மலர், #காசுமற்றும்பிறப்பு எனும் நான்கு சீர்களில் மட்டுமே நிறைவு பெற வேண்டும்.
இந்தத் திருக்குறளை உங்களுக்குக் கற்பிப்பதற்காக கொஞ்சம் மாற்றிச் சீர் பிரித்திருக்கிறேன்.
(1)தெய்வத்தான் - (2)ஆகா - (3)தெனினும்மு - (4)யற்சிதன்
(5)மெய்வருத்தக் - (6)கூலி - (7)தரும்.
(2)ஆ/ கா - (6)கூ/ லி - நேர் நேர் - தேமா
(4)யற்/ சிதன் - நேர் நிரை - கூவிளம்.
(7)தரும் - நிரை - ஓரசைச் சீர் - மலர்.
(1)தெய்/ வத்/ தான் - நேர் நேர் நேர் - தேமாங்காய்.
(3)தெனி/ னும்/ மு - நிரை நேர் நேர் - புளிமாங்காய்.
(5)மெய்/ வருத்/ தக் - நேர் நிரை நேர் - கூவிளங்காய்.
இந்தத் திருக்குறள்
தேமாங்காய் - தேமா - புளிமாங்காய் - கூவிளம்
கூவிளங்காய் - தேமா - மலர்
எனும் வாய்பாடில் அமைந்துள்ளது.
இந்தத் திருக்குறளில் மூன்று காய்ச் சீர்கள் உள்ளன. கருவிளங்காய்ச் சீர் மட்டும் இல்லை.
அசைகள் மற்றும் சீர்களைப் பார்த்து விட்டோம் அடுத்த பதிவில் #தளை பற்றி பார்ப்போம்.
………………..........……………..………………..……
அகன் அண்ணனின் முழு இலக்கணப் பயிற்சிகளையும் பதிவு செய்து வைத்திருக்கிறேன்! இந்த
ReplyDeleteஅரிய முயற்சியை எடுத்த கவியுலகப் பூஞ்சோலை க்
குழுமத்திற்கு மற்றும் அண்ணன் அகன் அவர்களுக்கும் தமிழ்மக்களினல் ஒருவனாய் நன்றிகளும் வாழ்த்துகளும்!
பதிவு செய்த குறிப்புகளை எமது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். anbuthamizh1@gmail.com
Deleteசிறப்பு
ReplyDeleteசிறப்பான பயிற்சி.
ReplyDeleteமிகத் தெளிவான விளக்கம் ஐயா
ReplyDelete