1.எதுகை என்றால் என்ன (அகன்)


எதுகை என்றால் என்ன?
🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 

…….................................பாடம் - 01.
……….....................…..ॐॐॐॐॐॐ

எதுகைத் தொடையைப் பற்றி மூன்று பாடங்களில் என்னால் இயன்ற அளவு எளிமையாக விளக்க முயன்றிருக்கிறேன்.

சீர்களைத் தொடுக்க அல்லது இணைக்கத் தேவையானது #தொடை எனப் படும்.

சீர்களைத் தொடுப்பதால் இது தொடை ஆனது.

மனித உடலில் இரண்டு கால்களை இடுப்போடு இணைக்கும் பகுதியே தொடை ஆனது.

ஒரு கவிதை அழகாக இருக்க வேண்டுமென்றால் அந்தக் கவிதைக்குத் தேவை தொடை ஆகும்.

தொடை என்பது யாப்பிலக்கணத்தில் கவிதை அல்லது செய்யுளில் வரும் ஒரு வகையாகும்.

தொடை செய்யுளின் ஓசை நயத்துக்கும், இனிமைக்கும் காரணமாகிறது.

தொடைகள் #எட்டு_வகைப்_படும். அவை,

01. மோனைத் தொடை,

02. எதுகைத் தொடை,

03. இயைபுத் தொடை,

04. முரண் தொடை,

05. அளபெடைத் தொடை,

06. அந்தாதித் தொடை,

07. இரட்டைத் தொடை மற்றும்

08. செந்தொடை ஆகும்.

இவற்றில் மோனைத் தொடையைப் பற்றி ஏற்கனவே தனிப் பதிவு ஒன்று போட்டிருக்கிறேன்.

இந்தப் பதிவில் எதுகையைப் பற்றிப் பார்ப்போம்.

எதுகை என்றால் என்ன…?

எதுகை என்பது இரு சீர்களின் இரண்டாம் எழுத்து ஒன்றுவது எனச் சொல்லலாம்.

ஒரு சில எதுகைகளில் இரண்டாம், மூன்றாம், நான்காம் எழுத்துகள் கூட ஒன்றி வருவதுண்டு.

உ - ம்:
- - - - - - - -
ஆதவன் - பாதகம்.
நாடகம் - தேடலில்.
காதல் - பாதம்.
வேடன் - பாடம்.
காலம் - பாலன்.
கூடல் - கூடம்.

இந்தச் சொற்களில் இரண்டாம் எழுத்துகள் ஒன்றி வருகின்றன. மூன்றாம் எழுத்துகள் வேறுபடுகின்றன.

நேற்று - காற்று.
சற்று - முற்று
ஆடல் - பாடல்
தாயும் - சேயும்
கண்ணே - பெண்ணே
விழியே - வழியே

இந்தச் சொற்களில் இரண்டு மற்றும் மூன்றாம் எழுத்துகள் ஒன்றி வருகின்றன.

கண்ணன் - வண்ணன்
கன்னல் - மின்னல்
மண்ணில் - விண்ணில்
கணக்கு - பிணக்கு
மருந்து - பருந்து
வட்டில் - தொட்டில்

இந்தச் சொற்களில் இரண்டு, மூன்று மற்றும் நான்காம் எழுத்துகள் ஒன்றி வருகின்றன.

சொல்லாமலே - கொல்லாமலே
பார்க்கிறேன் - வேர்க்கிறேன்
அடிக்கிறேன் - படிக்கிறேன்.
குதிக்கின்றான் - பதிக்கின்றான்.

இந்தச் சொற்களில் முதல் எழுத்து தவிர மற்ற அனைத்து எழுத்துகளும் ஒன்றி வருகின்றன.

இப்படி முதல் எழுத்து தவிர மற்ற எழுத்துகள் ஒன்றி வருவதே எதுகை எனப் படும்.

சரி, அவ்வளவு தானா என்றால் அது தான் இல்லை.

எதுகைக்கு இரண்டாம் எழுத்து ஒன்றினால் மட்டும் போதாது. முதல் எழுத்துகளும் அளவில் ஒத்துப் போக வேண்டும்.

அதாவது, இரண்டாவது எழுத்து ஒன்றி வருவதுடன் முதல் எழுத்து குறிலானால், எதுகைச் சீரிலும் முதல் எழுத்துக் குறிலாகவே வர வேண்டும்.

முதல் எழுத்து நெடிலாக இருப்பின், எதுகைச் சீரிலும் முதல் எழுத்து நெடிலாகவே இருக்க வேண்டும்.

இது தெரியாமல் குறிலையும், நெடிலையும் மாற்றி மாற்றிப் போட்டு சிலர் குழப்பிக் கொள்கிறார்கள்.

உ - ம்:
- - - - - - -
சத்து - வித்து - முத்து - சொத்து -கொத்து. இவை தாம் எதுகை.

சத்து - வாத்து. கொட்டம் - ஆட்டம், செம்பு - கோம்பை. சங்கு - தாங்கு

இவை எதுகை அல்ல.

இரண்டாம் எழுத்து ஒன்றி வந்தாலும் முதல் எழுத்து #குறிலுக்கு பதிலாக #நெடில் வந்திருப்பதைப் பாருங்கள். எனவே, இவை எதுகை ஆகா.

சத்து - வாத்து.

முதல் எழுத்தைப் பாருங்கள். முதல் சீரில் குறிலும் - ச - அடுத்த சீரில்  நெடிலும் - வா - வந்தால் அஃது எதுகை அல்ல.

சில சமயம், மூன்றாம் எழுத்தும் ஒன்றி வந்தால் தான் ஒத்த ஓசை கிடைக்கும்.

உ - ம்:
- - - - - -
கண்டேன் - பெண்ணை.
தென்றல் - பின்னல்.

மேலே உள்ள சீர்களைக் கவனியுங்கள். இவை எதுகை தான். ஆனால், இதில் ஓசை நயமோ, இனிமையோ இல்லை.

உ - ம்:
- - - - - -
கண்டேன் - உண்டேன்.
கொண்டேன் - பண்டைய.
வண்டு - செண்டு.

மூன்றாம் எழுத்தும் ஒன்றி வரும் போது ஓசை நயம் கூடி விடுகிறது. இது #சிறப்பான, மற்றும் #இயல்பான_எதுகை ஆகும்.

அதனால், முதல் எழுத்து அளவில் ஒன்றி(குறிலுக்குக் குறில், நெடிலுக்கு நெடில்) முடிந்தவரை இரண்டாம், மூன்றாம் எழுத்துகள் ஒன்றி வருவது சிறப்பு.

குறைந்த பட்சம் இரண்டாவது எழுத்தாவது ஒன்றி வர வேண்டும். அது தான் எதுகை எனப் படும். இவையே #இயல்பான_எதுகை ஆகும்.

இது வரை புரிகிறது அல்லவா….?

இவையன்றி சில சிறப்பு இல்லாத எதுகைகளும் உண்டு. இவற்றில் முக்கியமானவை நான்கு. அவை,

01. வருக்க எதுகை.
02. இரண்டடி எதுகை,
03. இன எதுகை மற்றும்
04. ஆசிடை இட்ட எதுகை ஆகும்.

இப்போதைய பாடல்களில் பெரும்பாலும் இவற்றை யாரும் பயன் படுத்துவதில்லை.

தேவையைப்  பொறுத்து பயன் படுத்துவது உண்டு. இருந்தாலும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இங்கே எழுதி இருக்கிறேன்.

01. #வருக்க_எதுகை.

அழியா உயிரும் அழியும் உடலும்
அழையா நோயும் அகிலம் தோயும்
பழியாம் ஊழும் பார்ப்போம் நாளும்
பிழையா இவைசொல் பேதம் தானே.

மேலே 'ழி'- க்கு 'ழை' - எதுகையாக வந்திருக்கிறது.

இப்படியே, “ழ, ழி, ழு, ழெ, ழொ” இவையும் வரலாம்.

‘ழி’ - குறில் ஆதலால் குறிலாகவே வருதல் சிறப்பு.

நெடில் “ழா, ழீ, ழூ, ழே, ழோ” வந்தால் அவை எதுகையாகா.

‘ழை’ - நெடில் ஆனாலும், ழய் என்பது போலவே குறிலாக ஒலிக்கிறதல்லவா? அதனால், சீரிடை வரும் ஐகாரம் குறிலாகவே எண்ணப் படும்.

‘ழ’ - விற்கு அதன் வருக்க எழுத்துகளில் ஒன்று(ழ, ழி, ழு, ழெ, ழொ) எதுகையாக வருவது வருக்க எதுகை ஆகும்.

இது அனைத்து மெய்யெழுத்துகளுக்கும் பொருந்தும்.

02. #இரண்டடி_எதுகை.

முன்னிரண்டு அடிகள் ஓர் எதுகையாகவும் பின்னிரண்டு அடிகள் மற்றோர் எதுகையாகவும் வருவது இரண்டடி எதுகை ஆகும்.

உ - ம்:
- - - - - -
இலக்கணம் கற்ப தெளிதே முயன்றால்
இலக்கியம் ஆங்கே இருக்கும் - சிலரிதைக்
கல்லா தெழுதி கவிதைப் பெயரினைப்
பல்லால் கடிப்பதைப் பார்.

முன்னிரண்டு அடிகளில் “இலக்கணம் - இலக்கியம்” என்று ஓர் எதுகையும், பின்னிரண்டு அடிகளில் “கல்லா - பல்லால்” என்று ஓர் எதுகையும் வந்து “இரண்டடி எதுகை” ஆனது.

நான்கு அடிகளால் ஆன நேரிசை, இன்னிசை வெண்பாக்களில் இத்தகைய அமைப்பைப் பார்த்திருப்பீர்கள். இவற்றை இரு விகற்பம் என்கிறது இலக்கணம்.

பல அடிகளாய் நீளும் பஃறொடை வெண்பாவிலும், கலி வெண்பாவிலும் இரண்டிரண்டு அடிகளாக எதுகை ஒன்றி வருவதைக் காணலாம்.

#நான்கு_வகை_ஆசிரியப்_பாக்களிலும்_இரண்டடி_எதுகையைக்_காணலாம்.

03. #இன_எதுகை.

இரண்டாம் எழுத்துகள் #ஒரே_இனமாக இருப்பது "இன எதுகை" எனப் படும்.

உ - ம்:
- - - - - - 
வல்லின எதுகை - க, ச, ட, த, ப, ற இவற்றில் ஏதாவது ஒன்று இரண்டாவது எழுத்தாக எதுகைக்கு மாற்றாக வருவது.

கத்தும் அலைகடல் கண்டு மகிழ்வதில்
நட்டம் இலையென்று நம்பு. - குறள் வெண்பா.

‘த்’ - க்கு அதே இன வல்லின எழுத்து ‘ட்’ - இன எதுகையானது.

சித்தம் - மிச்சம், பட்டம் - கப்பம், சாத்தன் - சீற்றம் முதலியவை வல்லின எதுகை ஆகும்.

அதே போல மெல்லின எதுகை - ஞ, ங, ண, ந, ம, ன இவற்றில் ஏதாவது ஒன்று இரண்டாவது எழுத்தாக வருவது.

கண்ணன் குழலோசை காற்றில் நடனமிடக்
கன்னம் சிவந்தவளைக் காண். - குறள் வெண்பா.

‘ண்’ - க்கு அதே மெல்லின  எழுத்து ‘ன்’ - இன எதுகையானது.

அன்பு - நண்பு, கனவு - நமது, அங்கு - மஞ்சள் முதலியவை மெல்லின எதுகை ஆகும்.

மற்றும் இடையின எதுகை - ய, ர, ல, வ, ழ, ள இவற்றில் ஏதாவது ஒன்று இரண்டாவது எழுத்தாக வருவது.

நிலவின் ஒளியில் நிலவும் அமைதி
அழகெனும் காதல் அணி. - குறள் வெண்பா.

‘ல’ - க்கு அதே  இடையின எழுத்து ‘ழ’ - இன எதுகையானது.

அயலார் - தவமாய், மரமும் - குளமும், நிலமும் - அழகும் போன்றவை இடையின எதுகை ஆகும்.

வரவு - செலவு, அழகு - விலகு, பள்ளம் - சொல்லில் இவை இடையின எதுகை ஆகும்.

இது வரை புரிகிறது அல்லவா…

அடுத்த பதிவில் ஆசிடை இட்ட எதுகையைப் பார்க்கலாம்.

.......................................

 

Comments

Popular posts from this blog

விருத்தம் எழுதுவது எப்படி (இரா.மீனாட்சிசுந்தரம்)

2.ஹைக்கூ கவிதைகள் (சூழல் - இரவில் உலகம்)

1.எளியமுறை தமிழ் இலக்கணம்