5.எளியமுறை தமிழ் இலக்கணம்
எளியமுறை இலக்கணம் - 05.
🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀
இனிய வணக்கம்.
இங்கு நான் முழு இலக்கணத்தையும் எழுதவில்லை.
அப்படி எழுதினால் இதைப் படிக்கும் சொற்பமானவர்களும் இந்தப் பதிவைத் தவிர்க்கக் கூடும் என்பதால் நிறைய வடிகட்டுதலுடன் தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
நல்ல மரபுக் கவிதைகளை நமது கவி சொந்தங்கள் வடிக்க வேண்டும் என்ற #பேராசையின் காரணத்தினாலேயே இந்தத் தொடரை எழுதுகிறேன்.
இதில் தவறிருக்கலாம். #எழுத்துப்_பிழை, #கருத்துப்_பிழைகள்_கூட_இருக்கலாம்.
அவை உங்கள் கண்ணில் பட்டால் #நாகரிகமாக, #கண்ணியத்துடன் சுட்டிக் காட்டுங்கள்.
திருத்திக் கொள்கிறேன். பாடங்களை பொறுமையாகப் படித்துப் பார்த்து புரிந்து கொள்ளுங்கள்.
‘’#பல்லு_போனால்_சொல்லு_போச்சு’’ என்பது பழமொழி.
சொல் உச்சரிப்புக்குப் பல்லே முக்கிய பங்களிப்பைத் தருகிறது.
அது போலவே, #மொழிக்குச்_சொல் தன் பங்களிப்பைத் தருகிறது. #கவிதை_எழுதத்_தேவையான_அளவுக்கு மட்டும் சொல்லதிகாரத்தைப் பார்ப்போமா?
சொல்லதிகாரம் - 01
- - - - - - - - - - - - - - - - - -
எழுத்துகளால் ஆனது சொல். சொல்லின் இலக்கணம் இருவகைப் படும். அவை,
01. சொல் எழுத்துகளால் உருவாக்கப் பட்டிருக்க வேண்டும்.
.- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
எழுத்திலக்கணத்தில் சொல்லப் பட்ட உயிர், மெய், உயிர்மெய், ஆய்த எழுத்துகளால் சொல் கட்டமைக்கப் பட்டிருக்க வேண்டும். எழுத்துகள் அன்றி #வேறு_ஓசைகள்_சொல்_ஆவதில்லை.
உ - ம்:
தொண்டையைக் கனைத்தல், குறட்டை விடுதல், சீழ்க்கை ஒலி, முணகுதல், முக்குதல் போன்றவை சொல் ஆகாது.
02. சொல் பொருள் தருவதாக இருக்க வேண்டும்.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
எழுத்துகளால் உருவாக்கப் பட்டிருந்தாலும், பொருள் தருவதாக அமையாவிட்டால் அது சொல் ஆகாது.
உ - ம்:
‘’கௌஓய்மொவா’’ என்றோ, ‘’டொலாக்கு டோல் டப்பிமா’’ என்றோ, ‘’உய்யலாலா’’ என்றோ, ‘’ஆலுமா… டோலுமா…’’ ‘’ஜிஞ்சின் நாக்கடி…’’ என்றோ எழுத்துகளால் கட்டமைத்து விட்டு #இது_சொல்_தானே என்று வாதம் செய்யக் கூடாது.
சரி, சொற்கள் ஓரெழுத்தில் தொடங்கி பல எழுத்துகளின் சேர்க்கை வரை இருக்கின்றன.
உ - ம்:
பூ. வா, போ, தா, கா, ஆ, ஈ இவை போன்று பல ஓரெழுத்துச் சொற்கள் உள்ளன.
பூ - மலர்.
வா - அழைத்தல்.
போ - துரத்துதல்.
தா - தரச் சொல்லிக் கேட்பது.
கா - சோலை.
ஆ - பசு.
ஈ - கொடு, ஒருவகை சிற்றுயிர்.
மா - பெரிய, மாவு
து - உணவு, பறவை இறகு.
ப - நூறு.
ம - சந்திரன், எமன்.
ய - தமிழ் எழுத்து என்பதன் வடிவம்.
ஓரெழுத்துச் சொற்கள் உயிரெழுத்து அல்லது உயிர்மெய்யெழுத்தில் குறில் அல்லது நெடில் எழுத்தால் ஆனதாக மட்டுமே இருக்கும்.
குறில் ஓரெழுத்துச் சொற்கள் பெரும்பாலும் உபயோகப் படுத்துவதில்லை.
ஈரெழுத்துச் சொற்கள்: கண், காண், கனி, காணி, வாய், செவி, பண், கவி, கால், தேன், மானே, வானே, கிடா, விடா போன்றவை.
இந்த ஈரெழுத்து ஒரு சொல்லில் இவற்றை கவனியுங்கள்.
கண் - குறில் + ஒற்றெழுத்து.
காண் - நெடில் + ஒற்றெழுத்து.
கனி - குறில் + குறில் எழுத்து. இதனைக் #குறில்_இணை_எழுத்து என்றும் சொல்வர்.
காணி - நெடில் + குறில் எழுத்து.
கிடா - குறில் + நெடில் எழுத்து.
மானே - நெடில் + நெடில் எழுத்து.
இதைப் பார்த்தாலே இதன் கட்டமைப்பை நீங்கள் புரிந்து கொள்ளலாம். இவ்வாறே மூன்றெழுத்து, நான்கெழுத்து, ஐந்தெழுத்துச் சொற்கள் என சொற்கள் கட்டமைக்கப் படுகின்றன.
#பெரும்பாலும், அதிக பட்சமாக, ஒரு சொல் #ஒற்றெழுத்தும்_சேர்த்து_ஆறெழுத்துகளுக்கு_மேல்_இருப்பதில்லை.
சரி, அடுத்த பாடத்தில் #திணை என்றால் என்னவென்று பார்க்கலாம்.

Comments
Post a Comment