3.எளியமுறை தமிழ் இலக்கணம்


 எளியமுறை இலக்கணம் -03.
 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 


இலக்கணம் கற்றுக் கொள்ள ஆவலாய் இருப்பவர்கள். மிகவும் குறைவாகவே இருக்கிறார்கள்.

ஆனாலும், பேருக்கு முன்னால் #கவிஞர் என்று போட்டுக் கொள்வதில் மட்டும் அதிக ஆர்வர் காட்டுகிறார்கள்.

உடல் நோகாமல் பிள்ளை பேறு கிடையாது. பிள்ளைப் பேறு பெற்றவளே ‘’தாய்மை’’ என்ற முழுமையைப் பெறுகிறாள். பிள்ளைச் செல்வம் போன்றதொரு பேரின்பம் உலகில் கிடையாது.

ஒரு பெண் தாய்மையில் தான் முழுமை பெறுகிறாள். அது போலவே, ஒரு நல்ல படைப்பாளியாக விரும்புபவன் இலக்கணம் அறிந்து எழுதும் போது தான் ஒரு கவிஞனாக பரிணமிக்கிறான்.

#என்_பார்வையில், இலக்கணம் அறிந்து கவிதை புனைபவர்களே ‘’கவிஞர்’’ ஆக முழுமை பெறுகிறார்கள்.

அவர்கள் படைக்கும் கவிச் செல்வங்களே காலம் கடந்தும் பேசப் படும்.

புரிந்து கொள்ளுங்கள் படைப்பாளிகளே.

இலக்கணம் படியுங்கள். உங்கள் புதுக் கவிதையைக் கூட இலக்கணம் மெருகேற்றும். செய்வீர்களா?

என் எழுத்து நிறைய பேரை சென்று சேர்கிறது என்பதை உங்கள் விருப்பீடு, கருத்தீடுகள் மூலம் தான் நான் தெரிந்து கொள்ள முடியும்.

என் எழுத்துகள் நிறைய பேரைச் சென்று சேர்ந்தால் மகிழ்வேன். அது என்னை இன்னும், இன்னும் எழுதவும், சிந்திக்கவும் தூண்டும்.

01. எழுத்து அதிகாரம் - பகுதி - 02
+ + + + + + + + + + + + + + + + + + + +

எழுத்து ஒரே நாளில் இன்றிருப்பது போன்ற வடிவத்தைப் பெற்று விட வில்லை. பல நூற்றாண்டுகளாக பல மாற்றங்களைச் சந்தித்த பின்னரே இன்றைய உருவத்தை அடைந்திருக்கிறது.

நீண்ட நெடிய வரலாற்றைத் தன்னகத்தே கொண்ட எழுத்துகளைப் பற்றி இன்று பார்ப்போமா?

தமிழ் மொழி எழுத்துகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

அவை,
01. உயிர் எழுத்து
02. மெய் எழுத்து
03. உயிர்மெய் எழுத்து.

இவை அன்றி ஆய்த எழுத்து என்று ஒன்றும் உண்டு.

01. #உயிர்_எழுத்து  -  12.
- - - - - - - - - - - - - - - - - - - - -

அவை,
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள  என்பதே.

உயிர் எழுத்துகளை இரண்டு விதமாகப் பிரிக்கலாம்.

அவை,
அ. #குறில்_எழுத்துகள் மற்றும்
ஆ. #நெடில்_எழுத்துகள் ஆகும்.

அ, இ, உ, எ, ஒ - இவை ஐந்தும் குறில் எழுத்துகள். இவற்றைக் #குற்றெழுத்துகள் என்றும் கூறுவர்.

குறில் எழுத்துகளை உச்சரிக்கும் போது அதற்காகும் நேரம் #ஒரு_மாத்திரை.

மாத்திரை என்றதும் பயமாக இருக்கிறதா?

பயப்படாதீர்கள். ஒரு மாத்திரை நேரம் என்பது சற்றேறக் குறைய #ஒரு_கண்ணிமைப்_பொழுது. #கண்_சிமிட்டும்_நேரம். #ஒரு_நொடி_அளவு. புரிகிறதா?

ஆ, ஈ, ஊ, ஏ, ஓ - இவை ஐந்தும் நெடில் எழுத்துகள். இவற்றை #நெட்டெழுத்துகள் என்றும் குறிப்பிடுவர்.

கொஞ்சம் நீட்டி முழக்கி உச்சரிக்க வேண்டும். 

நெடில் எழுத்துகளை உச்சரிக்கும் போது அதற்காகும் நேரம் #இரண்டு_மாத்திரைகள்.

குறிலுக்கும் நெடிலுக்கும் உள்ள வித்தியாசம் உச்சரிக்கும் நேரத்தைப் பொறுத்தே அமைகிறது.

உயிரெழுத்தைத் தனியாக உச்சரிக்க முடியும். ‘’உயிர்’’ தனித்து இயங்கும்.

ஐ, ஒள - இவை நெடிலாகச் சொல்லப் பட்டிருக்கின்றன.

ஆனாலும், ஒரு சில இடங்களில் இந்த இரண்டு எழுத்துகளும் குறிலாகவும் செயல் படும்.

அதற்கு ஐ - கார, ஒள - காரக் குறுக்கம் என்று பெயர். அதைப் பின்னர் விளக்கமாகக் காண்போம்.

இவை இரண்டிற்கும் குறில் எழுத்து கிடையாது.

ஐ - அய் என்ற உச்சரிப்புடனும் ஒள - அவ் என்ற உச்சரிப்புடனும் வரும். அதனால், ஐ -யை அய் என்றும் ஒள - வை அவ் என்றும் எழுதுதல் மரபு ஆகாது.

சீர்திருத்தம் என்ற பெயரில் எழுதப் படுமானால் தொல்காப்பியத்தில் கூறப் பட்ட உயிரெழுத்துகள் 12 என்பது 10 ஆக மாறி விடுவது மட்டுமின்றி அந்த எழுத்துகளின் தனித் தன்மை கெட்டு விடும்.

உயிரெழுத்தை நாம் ‘’#ஆண்’’ எழுத்துகள் என்று வைத்துக் கொள்வோம்.

02. #மெய்யெழுத்து - 18.
- - - - - - - - - - - - - - - - - - - - -

அவை,
க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்பன.

உயிரில்லாமல் மெய்(உடல்) இயங்காது. அவ்வாறே மெய்யெழுத்தை உயிரெழுத்தோடு சேர்த்து தான் உச்சரிக்க முடியும். தனியாக உச்சரிக்க முடியாது.

உ - ம்.
‘’க், ச், ட், த்’’ என்பதை தனியாக உச்சரிக்க முடியாது.

‘’இக், இச், இட், இத்’’ என்று உயிரெழுத்தான ‘’இ’’யை முன்னால் போட்டு தான் உச்சரிக்க முடியும்.

அவ்வாறே, 18 மெய்யெழுத்துகளுக்கு முன்னும் ‘’இ’’ சேர்த்து தான் உச்சரிக்க முடியும்.

‘’உயிர்’’ ஐ முன்னிறுத்தி தான் ‘’மெய்’’ யை இயக்க முடியும். ‘’உயிர்’’ இல்லாமல், ‘’மெய்’’ இயங்காது என்ற நம் முன்னோர்களின் கூற்று எவ்வளவு சரியாக இருக்கிறது பார்த்தீர்களா?

மெய்யெழுத்துகளை ‘’#பெண்’’ எழுத்துகள் என்று நாம் வைத்துக் கொள்வோம்.

மெய்யெழுத்தாகிய ‘’பெண்’’ எழுத்துகள் உயிர் எழுத்தாகிய ‘’ஆண்’’ எழுத்தைச் சார்ந்தே இருக்கின்றன. இயங்குகின்றன.

கொடி கொம்பைத் தேடுவது போல மெய் உயிரைத் தேடி அதைச் சார்ந்து உயிர்மெய் எழுத்துகளை ஈன்றெடுக்கின்றன.

03. #உயிர்மெய்_எழுத்துகள்_மொத்தம் -  216.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

அதே, ‘’உயிர்’’ ‘’மெய்’’ க்குப் பின்னால் வரும் போது ‘’மெய்’’யோடு கலந்து ‘’உயிர்மெய்’’ யாக மாறி தனித்து இயங்கும் வல்லமை பெறுகிறது.

உ - ம்.
க்+அ = க. ச்+அ = ச என்றாகின்றன.

18 மெய்யெழுத்துக்களுமே 12 உயிரெழுத்துகளுடன் கலந்து 18 X 12 = 216 உயிர்மெய் எழுத்துக்களாக உருவெடுக்கின்றன..

ஆணாகிய ‘’உயிர்’’ எழுத்துக்கும், பெண்ணாகிய ‘’மெய்’’யெழுத்துக்கும் பிறந்த குழந்தை தான் ‘’உயிர்மெய்’’ எழுத்துகள்.

‘’மெய்’’க்கு - பெண்ணுக்கு - முன்னால் ‘’உயிர்’’ - ஆண் - போனால் (இ + க் = இக்) ‘’மெய்’’க்குப் பாதுகாப்பு. உயிர் உயிராகவும், மெய் மெய்யாகவும் தனித்தே இருக்கும். ஆண், பெண் நட்பு போல. உயிருள்ள நல்ல காதல் போல. ‘’மெய்’’க்கு எந்த பாதிப்பும் இருக்காது.

‘’மெய்’’க்கு - பெண்ணுக்கு - பின்னால் ‘’உயிர்’’ - ஆண் - போனால் (க் + இ) ‘’உயிர்மெய்’’ என்கிற குழந்தை பிறக்கிறது. இதற்கு நான் ஆண் - பெண் உதாரணம் சொல்ல வேண்டியதில்லை. நீங்களே புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

04. #அடுத்தது_ஆய்த_எழுத்து. ‘’ ஃ ’’
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

இது உயிரெழுத்து வரிசையில் 13 ஆவது எழுத்தாக வைக்கப் பட்டிருந்தாலும் இதுவும் மெய்யெழுத்து போல தான்.

உயிரும் இல்லாத மெய்யும் இல்லாத ‘’#திருநங்கை’’ போன்றது இந்த ‘’ஆய்த’’ எழுத்து.

இந்த ஆய்த எழுத்துக்கு காவலாக முன்னால் உயிரெழுத்து அல்லது உயிர்மெய் எழுத்தும் பின்னால் உயிர்மெய் எழுத்தும் வரும்.

இந்த எழுத்தின் உபயோகத்தை சொல் அதிகாரத்தில் சொல்லுகிறேன்.



Comments

Popular posts from this blog

விருத்தம் எழுதுவது எப்படி (இரா.மீனாட்சிசுந்தரம்)

2.ஹைக்கூ கவிதைகள் (சூழல் - இரவில் உலகம்)

1.எளியமுறை தமிழ் இலக்கணம்