20.எளியமுறை தமிழ் இலக்கணம்
எளியமுறை இலக்கணம் - 20.
🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀
இனிய வணக்கம்.
#பொருளதிகாரம்.
- - - - - - - - - - - - - - - - -
தொல்காப்பியம் சொல்லும்
01. எழுத்ததிகாரம்,
02. சொல்லதிகாரம் இரண்டையும் பார்த்தோம்.
அவை இரண்டும் #தமிழ்_மொழியின்_இயல்பைக்_கூறும் அதிகாரங்கள்.
அடுத்து, மூன்றாவதாக உள்ள #பொருளதிகாரத்தைக் காண்போம்.
#பொருளதிகாரம்_தமிழ்_மக்களின்_வாழ்வியலைக்_கூறும்_அதிகாரம் ஆகும்.
பொருளதிகாரத்தை ஆழமாகப் பார்க்கப் போனால், நமது இலக்கான #யாப்பிலக்கணத்தையும், #அணி_இலக்கணத்தையும் காண #கால_தாமதம்_ஆகுமென்பதால் பொருளதிகாரத்தை மேலோட்டமாகப் பார்ப்போம்.
பொருளதிகாரத்தில் ஒன்பது இயல்கள் உள்ளன. அவை,
01. அகத்திணை இயல்,
02. புறத்திணை இயல்,
03. களவியல்,
04. கற்பியல்,
05. பொருளியல்,
06. மெய்ப்பாட்டு இயல்,
07. உவம இயல்,
08. செய்யுளியல் மற்றும்
09. மரபியல் ஆகும்.
இவை எவற்றைக் கூறுகின்றன எனப் பார்க்கலாம்.
01. & 02. #அகத்திணை_இயல் மற்றும் #புறத்திணை_இயல்.
#திணை என்றால் என்ன என்பதையும் அகத்திணை, புறத்திணை எவ்வாறு பிரிக்கப் பட்டது என்பதையும் இது விளக்குகிறது.
அகத்திணையில் உள்ள ஏழு பிரிவுகளையும் அவற்றிற்கு இணையான புறத்திணைகளையும் கூறுகிறது.
03. & 04. #களவியல்_மற்றும்_கற்பியல்.
மூன்றாவதாக உள்ள களவியலும், நான்காவதாக உள்ள கற்பியலும் அகத்திணையின் உட்பகுப்பு விளக்கங்கள் ஆகும்.
களவியல் காதலைப் பற்றியும் கற்பியல் அகவாழ்வியலைப் பற்றியும் விளக்கமாகச் சொல்கின்றன.
05. #பொருளியல்.
ஐந்தாவதாக உள்ள பொருளியல் அகப் பாடல்களுக்குப் பொருள் காணும் முறைமையைத் விளக்குகிறது.
06. #மெய்ப்பாட்டியல்.
ஆறாவதாக உள்ள மெய்ப்பாட்டியல் அகவொழுக்கத்திலும், புறவொழுக்கத்திலும் புலப்படும் மெய்ப்பாடுகளைக் கூறுகிறது.
மெய்ப்பாடு என்பது உள்ளத்து உணர்வுகள், அதனால் வெளிப்படும் உடல் மொழியால் - மெய் அசைவுகளால் வெளிப்படும் மொழி - Body Language - வெளிப்படுவது ஆகும்.
07. #உவம_இயல்.
ஏழாவதாக உள்ள உவம இயல் உள்ளக் கிடக்கையை வாய்மொழியில் தெள்ளென வெளிப்படுத்தும் பாங்கை விளக்குகிறது.
08. #செய்யுள்_இயல்.
எட்டாவதாக உள்ள செய்யுளியல் அகச் செய்திகளையும் புறச் செய்திகளையும் பண்டைய பாடல்களும், நூல்களும் எவ்வாறு புலப்படுத்தின என்பதை விளக்குகிறது.
09. #மரபியல்.
ஒன்பதாவதாக உள்ள மரபியலில் உயிரினங்களின் பாகுபாடும், அவற்றின் இளமை, ஆண், பெண் பாகுபாட்டு வழக்குப் பெயர்களும் விளக்கப்படுகின்றன.
அத்துடன் ஓரறிவு உயிர்களை மரம் என்றும், புல் என்றும் பாகுபடுத்தி அவற்றின் இலை, காய், பழம், முதலானவற்றிற்கு வழங்கப் படும் பெயர்களும் சுட்டப் படுகின்றன.
நிலம், தீ, நீர், வளி(காற்று), விசும்பு(ஆகாயம்) என்னும் வரிசையில் ஐந்து பூதப் பொருள்களும் சுட்டப் படுகின்றன.
உயிரினங்களின் இளமை, ஆண், பெண் ஆகியவற்றை விளக்கிய பின்னர், ஓரறிவு உயிரினங்களை விளக்கியிருப்பதற்கு முன்னர், இடைப் பகுதியில், மக்களை அந்தணர், அரசர், வைசியர், வேளாண் மாந்தர் என்னும் பாகுபாடு போன்றவற்றை விளக்குகிறது.
இவை, நிரல் மாறி உள்ளதால் இந்தப் பாகுபாட்டைப் பிற்கால “#இடைச்_செருகல்” என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.
மேலும் மரபியலுக்குப் புறனடையாக அமைந்துள்ள நூற்பாக்களுக்குப் பின்னர் ஓர் இணைப்பைப் போல் நூல், உரை, உத்தி பற்றிய பாகுபாடுகள் போன்றவை 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நன்னூலார் பாங்கில் அமைந்துள்ளன.
மொத்தத்தில், பொருளதிகாரம் தமிழ்மக்களின் வாழ்வியலையும், தமிழ்ப் பாடல்களின் அமைதியையும் விளக்குகிறது எனலாம்.
இனி, மிச்சம் இருப்பது
#யாப்பிலக்கணம் மற்றும் #அணி_இலக்கணம் இரண்டு மட்டுமே.
இவ்விரு இலக்கணப் பாடங்களும்
தனிப்பதிவாக பதிவிடப்படும்.
………............................…
நன்றி,,,,,

Comments
Post a Comment