18.எளியமுறை தமிழ் இலக்கணம்
எளியமுறை இலக்கணம் - 18.
🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀
இனிய வணக்கம்.
கடந்த பதிவின் தொடர்ச்சியைக் காண்போம்.
05. #தத்தம்_பொருளை_உணர்த்தி_வருபவை.
ஏ, ஓ, உம், மன், கொல், என, என்று, மற்று - போன்றவை தத்தம் பொருளை உணர்த்த வரும் இடைச் சொற்கள் ஆகும்.
இவை பெயர் அல்லது வினைச் சொற்களின் #பின்னால்_வந்து
01. பிரிநிலை,
02. வினா,
03. எச்சம்,
04. எண் மற்றும்
05. தேற்றம் போன்ற பல பொருள்களை உணர்த்தும்.
உ - ம்:
- - - - - -
கந்தன் பாடினான் - கந்தன் பாடினான் எனப் பொருள் தரும்.
05. 01. #பிரிநிலை.
கந்தனே பாடினான் - என்பதில் வரும் #ஏகார_இடைச்_சொல் கந்தன் மட்டுமே பாடினான் என்று பலரில் இருந்து #அவனைத்_தனியே_பிரித்துக்_காட்டியதால் பிரிநிலை ஆனது.
05. 02. #வினா.
கந்தனோ பாடினான் - என்பதில் வரும் #ஓகார_இடைச்_சொல் பாடியது கந்தனா என்ற வினாவை உள்ளடக்கி நிற்பதால் வினா ஆனது.
05. 03. #எச்சம்.
கந்தனும் பாடினான் - என்பதில் வரும் #உம்_எனும்_இடைச்_சொல் கந்தன் மட்டுமின்றி மற்று ஒருவரோ பலரோ பாடினர் என்ற #எச்சப்_பொருள்_தொக்கி_நிற்க பொருள் தருகிறது.
05. 04. #எண்.
அறமே, பொருளே, இன்பமே, வீடே - எனப் பொருள் நான்கு. இதில், அறமும், பொருளும், இன்பமும், வீடும் என எண்ணி எண்ணிக்கையைச் சொல்வதால் இங்கு வரும் #ஏகாரம்_எண்ணுப்_பொருளை உணர்த்துகிறது.
05. 05. #தேற்றம் (#உறுதிப்_படுத்துதல்)
கந்தன் பாடவே செய்தான் - இதில் வரும் ஏகாரம் கந்தன் பாடுவதை உறுதிப் படுத்துவதால் #தேற்றம்_ஆனது.
இவ்வாறு இடைச் சொற்கள் தாம் சார்ந்து வரும் பெயரையோ, வினையையோ சார்ந்து தத்தம் பொருளை உணர்த்தி வருகின்றன.
இவை தனித்து வந்து பொருள் உணர்த்துவதில்லை.
06. #இசை_நிறை.
ஓ… ஓ… அவனா இவன் - என்பதில் ஓ… ஓ… என்ற சொல்லுக்கு எந்தப் பொருளும் இல்லை.
ஆனால், பின் வரும் பெயர்ச் சொல்லுக்கு முன் #இசையோடு_ஒலித்து_இசை_நிறையாக வருகிறது.
07. #அசை_நிலை.
மன், மற்று, கொல், அந்தில், ஆங்கு, அம்ம போன்றவை அசை நிலைக்கு உதாரனமாகச் சொல்லலாம்.
மன் - அது மன் கொண்கன் தேரே.
மற்று - மற்று என்ன ஆகும்.
கொல் - கற்றதனால் ஆய பயன் என்கொல்.
அந்தில் - அந்தில் கழலினன் கச்சினன்.
ஆங்கு - ஆங்கு அத்திறனால்.
அம்ம - உண்டால் அம்ம இவ்வுலகம்.
மேற்காணும் அனைத்துச் சொற்களும் #பொருளின்றி_வந்த_அசை_நிலைகள் ஆகும்.
08. #குறிப்பால்_பொருள்_உணர்த்துபவை.
பொள்ளென, கதும்என, சரேல்என இவற்றில் வரும் #என என்பது குறிப்புப் பொருள் உணர்த்தும் இடைச்சொல் ஆகும்.
மேலே காட்டியவாறு இடைச் சொல் எட்டு வகைகளில் அமைந்துள்ளது.
இனி, உரிச் சொல் என்றால் என்ன என்று காண்போம்.
04. #உரிச்_சொல்.
பெயர்ச் சொல், வினைச் சொல், இடைச் சொல், உரிச் சொல் என்ற நான்கு வகைச் சொற்களின் வரிசையில் "உரிச்சொல்" இறுதியாக வருகிறது.
உரிச் சொல்லானது, பெயர்ச் சொற்களையும் வினைச் சொற்களையும் விட்டு நீங்காதனவாய் வரும்.
பெயருக்கு அல்லது வினைக்கு உரிய பான்மையை உணர்த்தும்.
அதாவது, பொருளுக்குரிய பண்புகளைக் குறிப்பதாகும்.
‘உரி’ என்னும் அடைமொழியைச் ‘சொல்’ என்பதனோடு சேர்த்து ‘உரிச் சொல்’ என்றானது.
உரிச் சொல் என்பது, ஒன்றுக்கு ஒன்று உரிமை உடையதாக விளங்கும் சொல்லாகும்.
#ஒரு_சொல்லானது_பல_பொருள்களை_உணர்த்தி_நிற்கும்_போதும்,
#பல_சொற்கள்_ஒரு_பொருளை_உணர்த்தி_நிற்கும்_போதும்
அந்தச் சொல்லோ, சொற்களோ உரிச் சொல் நிலையினைப் பெறுகின்றன.
இவை பெயர்ச் சொல்லாகவோ, வினைச் சொல்லாகவோ, பெயருக்கு அடைமொழியாகவோ, வினைக்கு அடைமொழியாகவோ, பெயருக்கும் வினைக்கும் பொதுவானதாகவோ இருக்கும்.
உரிச் சொல்லின் இலக்கணத்தைப் பார்ப்போம்.
04. 01. உரிச் சொல் பலவகைப் பட்ட பண்புகளையும்(குணங்களையும்) உணர்த்தி வரும்.
04. 02. பெயர்ச் சொல்லையும், வினைச் சொல்லையும் சார்ந்தே வரும்.
04. 03. ஒரு சொல் ஒரு பொருள் உணர்த்துவதாகவும், ஒரு சொல் பல பொருள் உணர்த்துவதாகவும் வரும்.
04. 04. பெரிதும் செய்யுள், கவிதைகளில் பயன்படும்.
இனி, இவற்றைத் தனித் தனியாக விளக்கமாகப் பார்ப்போம்.
04. 01. பலவகைப் பட்ட பண்புகள்(குணங்கள்) உணர்த்தும் உரிச் சொல்.
இது,
04. 01. 01. ஒரு குணம் தழுவிய உரிச் சொல் மற்றும்
04. 01. 02. பல குணம் தழுவிய உரிச் சொல்
என இரண்டு வகைப் படும்.
04. 01. 01. ஒரு குணம் தழுவிய உரிச் சொல்.
இவை, ஒரு பொருள் தரும் பல சொற்களைக் குறிக்கும்.
உ - ம்:
சால, உறு, தவ, நனி, கூர், கழி ஆகிய சொற்கள் மிகுதி என்ற ஒரே பொருள் தரும்.
#சாலச் சிறந்த - மிகவும் சிறந்த.
#உறு புகழ் - பெரும் புகழ்.
#தவ உயர்ந்தவை - மிகவும் உயர்ந்தவை.
#நனி நன்றி - மிகுந்த நன்றி.
#கூர் மதியன் - அறிவிற் சிறந்தவன்.
#கழி நெடிலடி - நெடிலடியினும் மிகுந்தது
என அனைத்தையும் மிகைப் படுத்திக் கூற இந்த உரிச் சொற்கள் பயன்படுவதால் இவற்றை ஒரு குணம் தழுவிய உரிச் சொல் எனலாம்.
04. 01. 02. பல குணம் தழுவிய உரிச் சொல்.
பல பொருள்களைத் தரும் ஒரு சொல்லைப் பல குணம் தழுவிய உரிச்சொல் என்று கூறுவர்.
உ - ம்:
#கடி என்ற சொல் காப்பு(காவல்), கூர்மை, மிகுதி, விரைவு, அச்சம், சிறப்பு முதலிய பல பொருள்களைத் தரும்.
கடி மனை - #காவல் நிறைந்த மனை.
கடி வாள் - #கூர்மை மிகுந்த வாள்.
கடிமிளகு - கரிப்புச் சுவை #மிகுந்த மிளகு.
கடி நடை - #விரைவான நடை.
கடி மலர் - #சிறப்பு வாய்ந்த மலர்.
இவ்வைந்திலும் வரும் ‘கடி’ என்னும் உரிச் சொல் காவல், கூர்மை, மிகுதி, விரைவு, சிறப்பு முதலிய பல பொருள்களை உணர்த்துகிறது.
எனவே, இதைப் பல குணம் தழுவிய உரிச் சொல் எனலாம்.
சில உரிச் சொற்களைத் தவிர பெரும்பாலான உரிச் சொற்கள் தற்காலத்தில் யாரும் கவிதைகளில் கூட பயன் படுத்துவதில்லை.
அடுத்த பதிவிலும் உரிச் சொற்களைப் பற்றியே பார்ப்போம்.
………...............................…

Comments
Post a Comment