15.எளியமுறை தமிழ் இலக்கணம்

எளியமுறை இலக்கணம் - 15.
🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀
இனிய வணக்கம்.
போன பாடத்தில் இறந்த காலத்தைப் பார்த்தோம்.
இனி, இந்த பாடத்தில் நிகழ்காலத்திற்கு வருவோம். அதாவது, இப்போது நடந்து கொண்டிருக்கிறது. Live ல் இருக்கிறது தான் நிகழ்காலம்.
உ - ம்:
- - - - - - -
நடக்கிறான், சிரிக்கிறாள், வருகிறான், சமைக்கிறாள், நடக்கிறது இவையெல்லாம் நிகழ்காலச் சொற்கள்.
இவற்றை, நடக்கின்றான், சிரிக்கின்றாள், வருகின்றான், சமைக்கின்றாள், நடக்கின்றது என்றும் சொல்லலாம்.
மேலும், நடவாநின்றான், சிரியாநின்றாள், வாராநின்றான், சமையாநின்றாள், நடவாநின்றது என்றும் சொல்லலாம்.
இந்தச் சொல்லை நடவா நின்றான் என்று பிரித்து எழுதினால் இறந்த காலத்தைப் போல ஒரு #சொல்_மயக்கத்தை_ஏற்படுத்தும்.
ஏற்கனவே, இலக்கணம் என்றால் ஓர் ஆழ்நிலை மயக்கத்துக்குப் போய் விடும் நாம் இந்த ''ஆநின்று’’வைத் தவிர்த்து விடலாம்.
மேலும், இவை இன்று வழக்கில் இல்லை.
நீங்கள் தெரிந்து கொள்வதற்காக இதை இங்கு குறிப்பிட்டிருக்கிறேன்.
இதில் வகைக்கு ஒன்றாக ஒரு சொல்லை மட்டும் பிரித்துக் காட்டுகிறேன்.
#நடக்கிறான்.
நடக்கிறான் = நட + க் + கிறு + ஆன்.
நட - பகுதி, வேர்ச் சொல்.
க் - சந்தி.
#கிறு - #நிகழ்கால_இடைநிலை.
ஆன் - விகுதி.
அடுத்த சொல் #நடக்கின்றான்.
நடக்கின்றான் = நட + க் + கின்று + ஆன்.
நட - பகுதி, வேர்ச் சொல்.
க் - சந்தி.
#கின்று - #நிகழ்கால_இடைநிலை_ஆகும்.
ஆன் - விகுதி.
அடுத்த சொல் #நடவாநின்றான்.
நடவாநின்றான் = நட + ஆநின்று + ஆன்.
நட - பகுதி, வேர்ச் சொல்.
#ஆநின்று - #இதுவும்_நிகழ்கால_இடைநிலை_ஆகும்.
ஆன் - விகுதி.
இந்தச் சொல்லைப் பார்த்தால் இறந்த காலம் காட்டும் சொல் போல இருக்கும். நடவாது நின்றான் என்றதொரு சொல் மயக்கத்தை ஏற்படுத்தும்.
இச்சொற்களின் இடையில் வரும் ‘கிறு, கின்று, ஆநின்று’ என்கிற மூன்று மட்டுமே நிகழ்கால இடைநிலைகள்.
நிகழ்காலத்தைக் குறிக்க இவைத் தவிர வேறு இடைநிலைகள் இல்லை.
‘ஆநின்று’ என்கிற இந்த நிகழ்கால இடைநிலையை நிகழ்காலத்தில் யாரும் பயன்படுத்துவதில்லை.
இதுவரை கடந்த காலம் மற்றும் நிகழ்காலம் பற்றியும் அவற்றின் இடைநிலைகளைப் பற்றியும் பார்த்தோம்.
இனி, எதிர்காலத்திற்குப் போகலாம்.
கடந்தது கடந்தவையாய் இருக்கட்டும். நிகழ்ந்ததுவும் நிகழ்ந்ததாய் இருக்கட்டும். #எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் அல்லவா?
இப்போது எதிர்காலத்திற்குப் போகப் போகிறோம்.
இனி நடக்க இருப்பது எதுவோ அது தான் எதிர்காலம் ஆகும்.
இறந்த காலம், நிகழ்காலம் இரண்டையும் குறிக்கும் இடைநிலை போலவே எதிர்காலத்தைக் குறிக்கும் இடைநிலைகள் இரண்டு இருக்கின்றன, அவற்றைப் பார்ப்போம்.
உ - ம்:
- - - - - -
பார்ப்பார், ஓடுவார் என்பவை எதிர்கால #வினைமுற்றுகள்.
வழக்கம் போல இச்சொற்களையும் பிரித்துப் பார்ப்போம்.
#பார்ப்பார்.
பார்ப்பார் = பார் + ப் + ப் + ஆர்.
பார் - பகுதி, வேர்ச் சொல்.
ப் - சந்தி.
#ப் - #எதிர்கால_இடைநிலையாகும்.
ஆர் - விகுதி.
அடுத்த சொல் #ஓடுவார்.
ஓடுவார் = ஓடு + வ் + ஆர்.
ஓடு - பகுதி, வேர்ச் சொல்.
#வ் - #எதிர்கால_இடைநிலை.
ஆர் - விகுதி.
இச்சொற்களின் இடையில் வரும் ‘ப், வ்’ என்கிற இரண்டு எழுத்துகள் மட்டுமே எதிர்கால இடைநிலைகள்.
எதிர்காலத்தைக் குறிக்க இவைத் தவிர வேறு இடைநிலைகள் இல்லை.
ஆக, வினைச் சொற்கள் காலத்தைக் காட்டும் என்பதையும், இறந்த கால, நிகழ்கால, எதிர்காலங்கள் இடைநிலைகளால் அறியப் படும் என்பதையும், அந்த இடைநிலைகளைப் பற்றியும் தெரிந்து கொண்டோம்.
வினைகளில்,
01. இறந்த காலத் தொடர் வினை,
02. நிகழ்காலத் தொடர் வினை மற்றும்
03. எதிர்காலத் தொடர் வினை என்று மூன்று வகை உண்டு.
01. இறந்த காலத் தொடர் வினை(Past Continuous Tense)
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
பார்த்தான் - இறந்த காலம்.
பார்த்துக் கொண்டு இருந்தான் - இறந்த காலத் தொடர் வினை.
02. நிகழ்காலத் தொடர் வினை(Present Continuous Tense)
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
பார்க்கிறான் - நிகழ்காலம்.
பார்த்துக் கொண்டு இருக்கிறான் - நிகழ்காலத் தொடர் வினை.
03. எதிர்காலத் தொடர் வினை(Future Continuous Tense)
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
பார்ப்பான் - எதிர்காலம்.
பார்த்துக் கொண்டு இருப்பான் - எதிர்காலத் தொடர் வினை.
#வினைச்_சொற்கள்_வேற்றுமை_உருபுகளை_ஏற்காது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்வோம்.
வினைச் சொற்கள் #நேர்மறையாக_மட்டுமின்றி_எதிர்மறையாகவும்_வரும்.
பார்க்கும் x பார்க்காது.
தேடும் x தேடாது.
கடக்கும் x கடக்காது.
என்ற வினைச் சொற்களில் இருந்து இதை அறிந்து கொள்ளலாம்.
வினைச் சொற்களிலும் இரண்டு வகை உண்டு. அவற்றை அடுத்தப் பாடத்தில் பார்ப்போம்.
………............................…
Comments
Post a Comment