11.எளியமுறை தமிழ் இலக்கணம்

எளியமுறை இலக்கணம் - 11.
🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀
அனைவருக்கும் இனிய வணக்கம்.
இது வரை 01. #பொருள்_பெயர், 02. #இடத்தின்_பெயர், 03. #காலத்தின்_பெயர், 04. #சினைப்_பெயர் மற்றும் 05. #பண்புப்_பெயர், அவற்றின் ஐந்து வகைகளான அ. #நிறம், ஆ. #அளவு, இ. #வடிவம், ஈ. #சுவை மற்றும் உ. #குணம் போன்றவற்றைப் பார்த்தோம்.
இனி, அடுத்தடுத்த பெயர்களைப் பார்ப்போம்.
06. #தொழில்_பெயர்:
இது #தொழில், #இயக்கம் போன்றவற்றைச் சொல்ல பயன்படும் பெயர்ச் சொல்லாகும்.
இதில்,
06. அ. #தொழிற்_பெயர்,
06. ஆ. #முதனிலைத்_தொழிற்_பெயர்_மற்றும்
06. இ. #முதனிலைத்_திரிந்த_தொழிற்_பெயர் என மூன்று வகை உண்டு.
06. அ. தொழிற் பெயர்.
உ - ம்:
- - - - - - -
நடத்தல், குதித்தல், ஓட்டுதல், கொடுத்தல், பெறுதல், உறங்குதல், உண்ணுதல், கற்றல், சுற்றல் போன்றவை #தொழிலை அல்லது #இயக்கத்தைக்(வினை அல்லது செயலைக்) குறிக்கும் தொழிற் பெயர்ச் சொற்களாகும்.
#தொழிற்_பெயர்ச்_சொற்கள் எண்ணிக்கை, இடம், காலம், பாலினம் ஆகியவற்றை உணர்த்தாது என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
நட, குதி, படி, உண், பாடு, தேடு, ஓடு, ஆடு, நாடு, கொல், கவல், நில், செய், பற்று, ஒப்பு போன்ற இன்னும் பல வினைச் சொற்கள் பெயர்ச் சொற்களாக மாறும்.
அவ்வாறு வினைச் சொற்கள் பெயர்ச் சொற்களாக மாறும் போது ஈற்றில் #தல், #அல், #அம், #ஐ மற்றும் #கை போன்றவற்றில் ஏதாவது ஒன்றை #விகுதியாகப் பெற்று தொழிலை உணர்த்தும் பெயர்ச் சொற்களாக மாறும்.
உ - ம்:
- - - - - - -
நட - நட + தல் = நடத்தல்.
குதி - குதி + தல் = குதித்தல்.
படி - படி + தல் = படித்தல்.
உண் - உண் + அல் = உண்ணல்.
பாடு - பாடு + அல் = பாடல்.
வளை - வளை + அல் = வளையல்
ஓடு - ஓடு + அம் = ஓட்டம்.
ஆடு - ஆடு + அம் = ஆட்டம்.
நாடு - நாடு + அம் = நாட்டம்.
கொல் - கொல் + ஐ = கொலை.
கவல் - கவல் + ஐ = கவலை.
நில் - நில் + ஐ = நிலை.
செய் - செய் + கை = செய்கை.
பற்று - பற்று + கை = பற்றுகை.
ஒப்பு - ஒப்பு + கை = ஒப்புகை.
06. ஆ. முதனிலைத் தொழிற் பெயர்.
உ - ம்:
- - - - - - - -
அப்பா பொய் சொன்ன மகனுக்கு உதை கொடுத்தார்.
இந்தச் சொற்றொடரில் #உதைத்தல் என்னும் தொழிற் பெயர், #தல் விகுதி பெறாது, #உதை என்னும் முதனிலை மட்டும் பெற்று தொழிற் பெயருக்கு உரிய பொருளை உணர்த்தியது.
இவ்வாறு, விகுதியின்றி #முதனிலை_மட்டும்_தொழிலை_உணர்த்துவது முதனிலைத் தொழிற் பெயர் ஆகும்.
06. இ. முதனிலைத் திரிந்த தொழிற் பெயர்.
கேடுவான் கேடு நினைப்பான்.
இந்தச் சொற்றொடரில் #கெடுதல் என்னும் தொழிற் பெயரின் முதனிலை #கெடு என்பது #கேடு எனத் திரிந்து வந்திருக்கிறது. இவ்வாறு திரிந்து வருவது முதனிலைத் திரிந்த தொழிற் பெயர் ஆகும்.
07. #மாற்றுப்_பெயர்ச்_சொல்.
ஒரு பெயர்ச் சொல்லுக்கு மாற்றாக பயன்படுத்தக் கூடியது மாற்றுப் பெயர்ச் சொல் ஆகும். இதை ஆங்கிலத்தில் Pronoun என்று சொல்வர்.
நான், நீ, அவன், எவர், எவரோ, எவராவது போன்ற சொற்கள் மாற்றுப் பெயர்ச் சொற்களாகும்.
இவற்றை,
07. 01. #மூவிடப்_பெயர்கள்.
07. 02. #மூவிடப்_பெயர்கள்_அல்லாத_மாற்றுப்_பெயர்கள்.
என இரண்டாகப் பிரிக்கலாம்.
07. 01. மூவிடப் பெயர்ச் சொற்கள்.
அ. தன்மை, ஆ. முன்னிலை மற்றும் இ. படர்க்கைப் பெயர்கள் மூவிடப் பெயர்கள் ஆகும்.
எந்த ஒரு உரையாடலிலும் பேசுபவர், கேட்பவர் மற்றும் பேசப் படும் பொருள் என்ற மூன்று நிலைகள் உண்டு.
பேசுகிறவரைத் #தன்மை என்றும்,
கேட்பவரை #முன்னிலை என்றும்,
பேசப் படும் பொருளை அல்லது பேசப் படுபவரைச் சுட்டும் பெயர் #படர்க்கை என்றும் சொல்வோம்.
07. 01. அ. தன்மைப் பெயர்.
தற்போது நாம் பயன்படுத்தும் தமிழில் #நான், நாம் மற்றும் நாங்கள் ஆகியவை தன்மைப் பெயர்கள். பழந்தமிழில் #யான், #யாம் மற்றும் #யாங்கள் ஆகியவை இருந்தன.
#திருவிளையாடல் திரைப்படத்தில் நக்கீரனோடு வாதிடும் போது ‘‘#அனைத்தும்_யாம்_அறிவோம்’’ என்பார் முக்கண் முதல்வர் சிவ பெருமான்.
நான் - - - - - - - - - - - தன்மை ஒருமை.
நாம், நாங்கள் - - - தன்மைப் பன்மை.
#நாம் மற்றும் #நாங்கள் இரண்டையும் #தன்மைப்_பன்மை என்று பொதுவாகக் சொன்னாலும் இவை இரண்டிற்கும் துல்லியமான வேறுபாடு உண்டு.
நாம் - என்பது முன்னிலையில் இருப்பவரையும் சேர்த்தே பொருள் தரும்.
இதனை, #உளப்பாட்டுத்_தன்மைப்_பன்மை என்பர்.
நாங்கள் - என்பது முன்னிலையில் இருப்பவரைச் சேர்க்காமல் பொருள் தரும்.
இதனை, #உளப்படுத்தாத்_தன்மைப்_பன்மை என்பர்.
தன்மைப் பெயர்ச் சொற்கள் இரண்டாம் வேற்றுமை உருபான ‘ஐ’ யை ஏற்கும் போது இவை முறையே #என், #நம், #எம் மற்றும் #எங்கள் என மாற்றமடைகின்றன.
நான் + ஐ - - - - - - - - - - = என்னை.
நாம் + ஐ - - - - - - - - - - -= நம்மை, எம்மை.
நாங்கள் + ஐ - - - - - - - = எங்களை.
என மாற்றமடையும்.
07. 01. ஆ. முன்னிலைப் பெயர்ச் சொல்.
நிகழ்காலத் தமிழில் #நீ மற்றும் #நீங்கள் என இரண்டு முன்னிலைப் பெயர்கள் உள்ளன.
பழந்தமிழில் #நீர், #நீவிர் மற்றும் #நீயிர் போன்ற முன்னிலைப் பெயர்கள் இருந்தன.
நீ - என்பது ஒருமைப் பெயர் சொல்லாகப் பயன்படுத்தப் படுகிறது.
நீங்கள் - என்பது பன்மைப் பெயர்ச் சொல்லாகவும், மரியாதை நிமித்தமாக ஒருமைப் பெயர்ச் சொல்லாகவும் பயன்படுத்தப் படுகிறது.
முன்னிலைப் பெயர்களில் #உயர்திணை, #அஃறிணை வேறுபாடு கிடையாது.
07. 01. இ. படர்க்கைப் பெயர்ச் சொல்.
படர்க்கைப் பெயர்ச் சொற்களில் அ மற்றும் இ ஆகிய சுட்டல் அடியாகப் பிறக்கின்றன.
படர்க்கைப் பெயர்ச் சொற்களில் உயர்திணை, அஃறிணை வேறுபாடு உண்டு.
தன்மை, முன்னிலைப் பெயர்ச் சொற்களில் ஆண்பால், பெண்பால் வேறுபாடு கிடையாது.
படர்க்கைப் பெயர்ச் சொற்களில் ஆண்பால், பெண்பால் வேறுபாடு உண்டு.
முன்னிலைப் பெயர்கள் போலப் படர்க்கை பெயர்களிலும் மரியாதை உணர்த்தும் பெயர், மரியாதை உணர்த்தாப் பெயர் என வேறுபாடு உண்டு.
#உயர்திணை:
ஆண்பால்: அருகில் இருந்தால் #இவன்
என்றும் தொலைவில் இருந்தால் #அவன் என்றும் சொல்கிறோம்.
பெண்பால்: அருகில் இருந்தால் #இவள் என்றும் தொலைவில் இருந்தால் #அவள் என்றும் சொல்கிறோம்.
இருபாலரையும் மரியாதை ஒருமையில் அருகில் இருந்தால் #இவர் என்றும் தொலைவில் இருந்தால் #அவர் என்றும் சொல்கிறோம்.
இருபாலரையும் மரியாதைப் பன்மையில் அருகில் இருந்தால் #இவர்கள் என்றும் தொலைவில் இருந்தால் #அவர்கள் என்றும் சொல்கிறோம்.
#அஃறிணை:
அஃறிணையில் பெரும்பாலும் பாலினம் பார்ப்பதில்லை.
#ஒருமையில் அருகில் இருந்தால் #இது என்றும் தொலைவில் இருந்தால் #அது என்றும் சொல்கிறோம்.
#பன்மையில் அருகில் இருந்தால் #இவை என்றும் தொலைவில் இருந்தால் #அவை என்றும் சொல்கிறோம்.
சிலர் பன்மையில் அருகில் இருந்தால் #இவைகள் என்றும் தொலைவில் இருந்தால் #அவைகள் என்றும் சொல்கிறார்கள். அவை #பிழையான_பயன்பாடு_என_அறிக.
இவர், அவர் - ஆகிய படர்க்கைப் பெயர்ச் சொற்கள் நிகழ்காலத்தில் மரியாதைப் பொருளில் ஒருமையில் மட்டுமே வழங்குகின்றன.
இவை எழுத்துத் தமிழில் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானவை ஆகும்.
அடுத்தப் பாடத்தில் மூவிடப் பெயர்கள் அல்லாத மாற்றுப் பெயர்ச் சொற்களைப் பார்ப்போம்.
……….......................
Comments
Post a Comment