10.எளியமுறை தமிழ் இலக்கணம்

எளியமுறை இலக்கணம் - 10.
🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀
இனிய வணக்கம்.
இப்பாடத்தில் பெயர்ச் சொற்களையும் அவற்றின் வகை என்னென்ன என்பதையும் பார்க்கப் போகிறோம்.
பெயர்ச் சொற்கள் தானே… நமக்குத் தெரியாத பெயர்ச் சொற்களா… என்ற எண்ணம் நம்மில் பலருக்கு ஏற்படக் கூடும்.
நமக்குத் தெரிந்தது தான்… ஆனாலும், அவை ஒவ்வொன்றும் #எந்த_வகைப்_பெயர்ச்_சொல்_என்று_நமக்குத்_தெரியாதில்லையா…
அதைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம்.
இனி, பெயர்ச் சொற்களின் வகைகளைப் பார்க்கலாம்.
#பெயர்ச்_சொற்களைப்_பத்து_வகையாகப்_பிரிக்கலாம். #அவை,
01. பொருட் பெயர்,
02. இடப் பெயர்,
03. காலப் பெயர்,
04. சினைப் பெயர்,
05. பண்புப் பெயர் அல்லது குணப் பெயர்,
06. தொழிற்பெயர்,
07. மாற்றுப்பெயர்,
08. ஆக்கப்பெயர்,
09. கூட்டுப்பெயர் மற்றும்
10. வினையால் அணையும் பெயர் ஆகும்.
இனி, அவற்றைத் தனித் தனியாக விளக்கமாய்ப் பார்க்கலாமா?
01. #பொருள்_பெயர்:
உயர்திணை, அஃறிணைப் பெயர்களைச் சொல்லலாம்.
உ - ம்:
- - - - - - -
மரம், ஆடு, மாடு, புலி, சிங்கம், கட்டில், நாற்காலி, மாதவன், பொன்னன், மல்லிகா, அழகி, ஆண், பெண் போன்றவை.
இவ்வாறு ஒரு பொருளைக் குறிக்கும் பெயர்ச் சொற்கள் பொருள் பெயர் ஆகும்.
02. #இடத்தின்_பெயர்:
ஒரு இடத்தைக் குறிக்க பயன் படுத்தும் பெயர்ச் சொல் இடத்தின் பெயர் ஆகும்.
உ - ம்:
- - - - - - - -
ஊர், மும்பை, கொல்கத்தா, தில்லி, மேடு, பள்ளம், வயல், காடு, தோப்பு, ஆறு, குளம் போன்ற, இடங்களைக் குறிக்கும் பெயர்கள் இடப் பெயர் ஆகும்.
03. #காலத்தின்_பெயர்:
இது இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்று காலங்களையும் குறிக்கும்.
உ - ம்:
- - - - - - -
ஆண்டு, மாதம், வாரம், நாள், மார்ச், வைகாசி, புதன் கிழமை, காலை, மதியம், மாலை, இரவு, பகல் போன்றவை.
இவை கால்த்தைக் குறிப்பதால் காலப் பெயர் ஆகும்.
04. #சினைப்_பெயர்:
சினைப் பெயர் என்றவுடன் என்னமோ, ஏதோ என்று அஞ்ச வேண்டாம். #சினை_என்றால்_உறுப்புகள் என்று பொருள்.
உ - ம்:
- - - - - - - -
கை, கால், காது, மூக்கு, முதுகு, மார்பு, வால், கிளை, வேர், பிடரி, முடி, நகம், சக்கரம் போன்றவை.
இவை ஒரு பொருளின் உறுப்புகளைக் - ஏதாவதொரு பகுதியைக் - குறிப்பதால் சினைப் பெயர் ஆகும்.
05. #பண்புப்_பெயர்_அல்லது_குணத்தின்_பெயர்:
ஒரு பொருளின் குணத்தைச் சொல்ல பயன்படுத்தும் பெயர்.
உ - ம்:
- - - - - - - -
நன்மை, தீமை, வெண்மை, சிகப்பு, பச்சை, குளிர்ச்சி, சூடு, வாசம், நாற்றம், வட்டம், சதுரம். முக்கோணம் போன்றவை.
கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம்.
உலகில் உள்ள அனைத்துப் பொருள்களுக்கும் பண்புகள் - குணங்கள் - உண்டு. அவற்றிற்கு உரிய பண்புகளை
அ. நிறம்,
ஆ. அளவு,
இ. வடிவம்,
ஈ. சுவை,
உ. குணம் என வகைப் பிரிக்கலாம்.
அவற்றை ஒவ்வொன்றாய் இங்கு உதாரணங்களுடன் பார்க்கலாம்.
அ. #நிறம்.
உ - ம்:
- - - - - - -
வெண்பட்டு, கருங்குரங்கு, பசுஞ்சோலை மற்றும் நிறப்பிரிகை போன்றவை நிறத்தைக் குறிக்கும் பண்புப் பெயர்கள் ஆகும்.
வெண்பட்டு - - - - - - - வெண்மை + பட்டு.
செந்தாமரை - - - - - - சிவப்பு + தாமரை.
கருங்குரங்கு - - - - - - கருமை + குரங்கு.
பசுஞ்சோலை - - - - - பசுமை + சோலை.
நிறப்பிரிகை - - - - - - நிறம் + பிரிகை.
நீலவானம் - - - - - - - நீலம் + வானம்.
இவற்றுள் வெண்மை, சிவப்பு, கருமை, பசுமை(பச்சை), நிறம், நீலம் போன்றவை நிறப் பண்பைக் குறிக்கும்.
ஆ. #அளவு.
உ - ம்:
- - - - - - -
நான்மறை, முப்பால், குறுந்தொகை, நாலடியார், அறுகோணம் போன்றவை அளவைக் குறிக்கும் பண்புப் பெயர்கள் ஆகும்.
நான்மறை - - - - - - - - நான்கு + மறை.
முப்பால் - - - - - - - - - - மூன்று + பால்.
குறுந்தொகை - - - - - குறுமை + தொகை.
ஐநூறு - - - - - - - - - - - - ஐந்து + நூறு.
அறுகோணம் - - - - - - ஆறு + கோணம்.
எண்குணத்தான் - - - எட்டு + குணத்தான்.
இவற்றுள் நான்கு, மூன்று, குறுமை, ஐந்து, ஆறு, எட்டு போன்றவை அளவுப் பண்பைக் குறிக்கும்.
இ. #வடிவம்
உ - ம்:
- - - - - - -
வட்டக் கல், சதுரப் பலகை, செவ்வக நிலம், குண்டுப் பையன், சந்துத் தெரு, பெட்டிக் கடை போன்றவை வடிவத்தைக் குறிக்கும் பண்புப் பெயர்கள் ஆகும்.
வட்டக் கல் - - - - - - - - - வட்டம் + கல்.
சதுரப் பலகை - - - - - - சதுரம் + பலகை.
செவ்வக நிலம் - - - - - செவ்வகம் + நிலம்.
குண்டுப் பையன் - - - - குண்டு(பருமன்) + பையன்.
சந்துத் தெரு - - - - - - - சந்து(குறுகலான) + தெரு.
பெட்டிக் கடை - - - - -- பெட்டி + கடை.
வட்டம், சதுரம், செவ்வகம், குண்டு)பருமன்), சந்து(குறுகலான), பெட்டி போன்றவை வடிவப் பண்பைக் குறிக்கும்.
ஈ. #சுவை.
உ - ம்:
- - - - - - -
இன்சுவை, புளிச்சாதம், கார வடை, துவர்பாக்கு, கசப்பு மருந்து, உப்பு ரொட்டி போன்றவை சுவையைக் குறிக்கும் பண்புப் பெயர்கள் ஆகும்.
இன்சுவை - - - - - - - - - - - - இனிப்பு + சுவை.
புளிச்சாதம் - - - - - - - - - - - புளிப்பு + சாதம்.
காரவடை - - - - - - - - - - - - காரம் + வடை.
துவர்பாக்கு - - - - - - - - - - - துவர்ப்பு + பாக்கு.
கசப்பு மருந்து - - - - - - - - - கசப்பு + மருந்து.
உப்பு ரொட்டி - - - - - - - - - உப்பு(உவர்ப்பு) + ரொட்டி.
இனிப்பு, புளிப்பு, காரம், துவர்ப்பு, கசப்பு, உப்பு(ஊவர்ப்பு) போன்றவை சுவைப் பண்பைக் குறிக்கும்
உ. #குணம்.
அன்பில்லம், ஈகையுணர்வு, வீர மல்லன், ஈரமனம், அஞ்சாநெஞ்சன், பாவச் செயல் போன்றவை குணத்தைக் குறிக்கும் பண்புப் பெயர்கள் ஆகும்.
அன்பில்லம் - - - - - - - - - - அன்பு + இல்லம்.
ஈகையுணர்வு - - - - - - - - - ஈகை + உணர்வு.
வீர மல்லன் - - - - - - - - - - வீரம் + மல்லன்.
ஈரமனம் - - - - - - - - - - - - - ஈரம்(இளகிய) + மனம்.
அஞ்சாநெஞ்சன் - - - - - - அஞ்சாத(அச்சமில்லா) + நெஞ்சன்.
பாவச் செயல் - - - - - - - - - பாவம் + செயல்.
அன்பு, ஈகை, வீரம், ஈரம்(இளகிய), அஞ்சாத(அச்சமில்லா), பாவம் போன்றவை குணப் பண்பைக் குறிக்கும்
இவ்வாறு, நிறம், அளவு, வடிவம், சுவை, குணம் ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்டு வரும் பெயர் பண்புப் பெயர் ஆகும்.
இதுவரை ஐந்து வகையான பெயர்ச் சொற்களைப் பார்த்தோம்.
இனி, அடுத்தப் பாடத்தில் மீதமுள்ள ஐந்து வகைப் பெயர்ச் சொற்களை விரிவாகப் பார்க்கலாம்.
……….........................…
Comments
Post a Comment