13.வெண்பா இலக்கணம்(அகன் )

வெண்பா இலக்கணம் பாடம் - 13.
🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀
இதுவரை பத்து வகை வெண்பாக்களைப் பார்த்துள்ளோம்.
அடுத்து நாம் காண இருப்பது #முடுகியல்_வெண்பா ஆகும்.
முடுகு என்றால் விரைவு என்று பொருள். எனில் முடுகியல் என்றால் என்ன….?
சீர்கள் ஒரு #சீரான_சந்தத்துடன் விரைவு கொண்டு பாடப் படுவதே முடுகியல் வெண்பாவாகும்.
இந்த வகைப் பாடல் எழுத இசை அறிவு(சங்கீத ஞானம்) அவசியமாகிறது.
திரையிசை பாடல்கள் எழுத, ‘#தத்தகாரம்’ என்றொரு சொல்லைப் பயன் படுத்துவர். இதை முழுதும் விளக்க வேண்டுமென்றால் தனியாக ஒரு நூல் எழுத வேண்டும்.
#தனதன #தந்தன என்றும் #தத்தனதத்தன, #தானன, #தான்னான, #தைய்யரதைய்யா என்று சீர், பொருள் இல்லாமல் பாடுவதைக் கேட்டிருக்கிறீர்கள் அல்லவா…
இந்த இசைக்குத் தக்கபடி எழுத்துகள் அமைய எழுதுவதே #சந்தமுடுகுவெண்பாவாகும்.
ஆகவே, இங்கே என்னால் இயன்றவரை கொஞ்சம் எளிமையாகச் சொல்ல முயல்கிறேன்.
முடுகியல் வெண்பாவில் சந்தம் மட்டுமே பார்க்கப் படுவதால், வெண்டளை பார்ப்பதில்லை என்றொரு குறிப்பு காணப் படுகிறது. நாம் அவற்றைப் புறந் தள்ளுவோம்.
ஏனெனில், வெண்டளை பிறழ்ந்தால் அஃது எப்படி வெண்பாவாகும் என்றொரு வினாவும் கூடவே எழுகிறது அல்லவா...
எனவே, தத்தகாரத்தை வெண்டளைப் பிறழாமல் சரி பார்த்துக் கொண்டால் வெண்பா இலக்கணம் மீறாமல் எழுத முடியும் அல்லவா…
அதைத் தான் இங்கே சொல்லப் போகிறேன்.
வெண்பா சீர்கள், தத்தன எனத் தொடங்கினால் அடுத்து வரும் அனைத்து சீர்களும் தத்தன - (‘‘குறில் - ஒற்று - குறில் - குறில்’’) என்ற கூவிளம் சீராகவே அமைய ஈற்றுச் சீர் தத்த - (‘‘குறில் - ஒற்று - குறில்)
என்ற #காசு(#நேர்பு) வாய்பாடில் அல்லது ‘தத்’ என்ற #நாள் வாய்பாடில் முடிந்தால் அந்த வெண்பாவில் ‘‘முடுகு’’ இருக்கும். வெண்டளை இலக்கணமும் இருக்கும்.
அதே போல ‘தனத்தத்’ என்ற புளிமாச் சீரிலும் தொடங்கி எழுதலாம். ஈற்றுச் சீர் ‘தனத்த’ என்ற #பிறப்பு(#நிரைபு) வாய்பாடில் அல்லது ‘தனத்’ என்ற #மலர் வாய்பாடில் முடிய வேண்டும்.
இதில் இன்னொரு விதியும் உண்டு.
ஒற்றெழுத்து வல்லெழுத்தாயின்(க், ச், ட், த், ப், ற்) எல்லாச் சீர்களில் வரும் ஒற்றெழுத்துகளும் வல்லெழுத்தாகவும் மெல்லெழுத்தாயின்(ஞ், ங், ண், ந், ம், ன்) மெல்லெழுத்துகளாகவும், இடையெழுத்தாயின்(ய், ர், ல், வ், ழ், ள்) இடையெழுத்தாகவும் இருக்க வேண்டும்.
சில முடுகு வெண்பாக்களில் இந்த விதி மீறப் பட்டு ஒற்றெழுத்துக்கு ஒற்றெழுத்து வந்தால் போதுமானது என்ற வகையிலும் காண முடிகிறது. எனினும், விதி எனும் போது நாம் விதி மீறாமல் எழுதுவதே சிறப்பு.
முடுகியல் வெண்பா #மூன்றுவகைப்படும்.
அவை,
01. முன்முடுகு வெண்பா,
02. பின் முடுகு வெண்பா மற்றும்
03. முற்று முடுகு வெண்பாவாகும்.
அவற்றை ஒவ்வொன்றாகக் காணலாம்.
11. 01. #முன்முடுகுவெண்பா.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
வெண்பாவின் முதல் இரண்டடிகளில் #ஏழு_சீர்களில் ஒரே விதமான சந்தம் வர, தனிச் சீரும் பின்னிரண்டு அடிகளும் சந்தமின்றி இயல்பாக அமைவது முன் முடுகு வெண்பாவாகும்.
இந்த வெண்பாவில் முன்னிரண்டு அடிகளில் ‘#தத்தந்த’ என்ற சந்தம் முதல் ஏழு சீர்களிலும் வெண்டளைக் கெடாமல் வந்துள்ளது.
முதல் ஒற்று வல்லொற்று இரண்டாம் ஒற்று இடையொற்று வந்திருப்பதைக் காண்க.
கத்துங்க டற்கொந்த ளிக்கின்ற திக்கின்று
முத்தங்கு ளித்திங்கு விற்றென்ன - சத்தங்
குறையட்டும் முத்துக் குளித்திட லாமுன்
உறைவிடம் சென்றிடுவா யே.
……..- ‘’அகன்’’ @ அனுராதா கட்டபொம்மன்.
புரிதலுக்காகப் பிரித்து எழுதி இருக்கிறேன்.
கத்தும் கடல் கொந்தளிக்கின்ற திக்கு இன்று
முத்தம் குளித்து இங்கு விற்று என்ன -
என முதல் இரண்டாடிகளைப் பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும்.
11. 02. #பின்முடுகுவெண்பா.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
வெண்பாவின் முன்னிரண்டடிகளும், தனிச் சீரும் சந்தமின்றி இயல்பாக அமைந்து, பின்னிரண்டு அடிகளின் #ஏழுசீர்களில்ஒரே_விதமான சந்தம் வர, ஈற்றுச் சீர் ‘தந்து’ என்ற காசு(நேர்பு) வாய்ப்பாடில் அமைய வருவது பின் முடுகு வெண்பாவாகும்.
முத்தமிழ் கற்றவர் முன்னவர் நம்மவர்
சித்தம் தெளிந்தவர் சேருவர் - சத்துள
சிந்தைத்தெ ளிந்துப்பு தைந்துப்ப ளிங்குக்கு
வந்தக்க ளங்கத்தை வென்று.
……..- ‘‘அகன்’’ @ அனுராதா கட்டபொம்மன்.
இந்த வெண்பாவில் பின்னிரண்டு அடிகளில் ‘#தந்தத்த’ என்ற சந்தம் பின்னிரண்டு அடிகளில் உள்ள ஏழு சீர்களிலும் வெண்டளைக் கெடாமல் வந்துள்ளது.
முதல் ஒற்று மெல்லொற்று இரண்டாம் ஒற்று வல்லொற்று வந்திருப்பதைக் காண்க.
11. 03. முற்று முடுகு வெண்பா.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
வெண்பாவின் நான்கடிகளும், தனிச் சீர் உட்பட #பதினான்குசீர்களிலும்ஒரே_விதமான சந்தம் வர - #தந்தனன - ஈற்றுச் சீர் ‘தந்து’ என்ற காசு(நேர்பு) வாய்ப்பாடில் அமைய வருவது முற்று முடுகு வெண்பாவாகும்.
எந்தவொரு சந்தமினி தென்பதனை யெண்ணியுள
முந்துகிற நந்தமிழை யுண்டுவர - மந்தையினி
லந்தமறி கின்றவழி சிந்தனையி லுந்தியெழ
வந்தமொழி யெந்தமொழி இங்கு.
கொஞ்சம் புரிதலுக்காகப் பிரித்து எழுதிக் காட்டி இருக்கிறேன்.
எந்தவொரு சந்தமினிது என்பதனை யெண்ணியுள(ம்)
உந்துகிற நந்தமிழை யுண்டுவர - மந்தையினி(ல்)
அந்தமறி கின்றவழி சிந்தனையி(ல்) உந்தியெழ
வந்தமொழி யெந்தமொழி இங்கு.
……….......……….…- ‘‘அகன்’’ @ அனுராதா கட்டபொம்மன்.
இந்த வெண்பாவில் நான்கு அடிகளிலும் ‘#தந்தனன’ என்ற சந்தம் பின்னிரண்டு அடிகளில் உள்ள ஏழு சீர்களிலும் வெண்டளைக் கெடாமல் வந்துள்ளது. ஈற்றுச் சீர் ‘தந்து’ என்ற காசு(நேர்பு) வாய்ப்பாடில் அமைந்துள்ளது.
அனைத்துச் சீர்களிலும் இரண்டாம் எழுத்தாக #மெல்லொற்று வந்திருப்பதை கவனிக்க.
நல்ல சொல்வளம், இசை அறிவு கொண்ட எவர் வேண்டுமானாலும் முடுகு வெண்பாவை எளிதாக எழுதி விடலாம். முயன்று பாருங்களேன்.
Comments
Post a Comment